தற்கொலை அரசியல்

5
தற்கொலை அரசியல் why-indian-media-is-so-negative

ந்த முறை நீட் தேர்வு முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போலத் தேர்ச்சி விகிதம் கூடி இருந்தது ஆனால், ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தற்கொலை அரசியல் செய்து கொண்டுள்ளன. Image Credit

கூடிய தேர்ச்சி விகிதம்

நீட் தேர்ச்சி சதவீதம் கடந்த மூன்று ஆண்டுகளில்

2017 – 38 % பேர் தேர்ச்சி

2018 – 39.55 % பேர் தேர்ச்சி

2019 – 48.57% பேர் தேர்ச்சி

இந்த (2019) வருடம் 9.1 % தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. அடுத்த வருடம் இதைவிடக் கூடுதலான மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

2018 – 2019 கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்புக்குப் புதிய பாடத்திட்டம், தற்போது 2019 – 2020 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் இருந்து 80% நீட் கேள்விகள் வந்து இருந்ததாகச் செய்திகளில் வந்தன.

எனவே, இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து 2020 நீட் தேர்வு எழுதுபவர்களுக்குத் தேர்வு எளிதாக இருக்கும், இருக்க வேண்டும்.

ஏனென்றால், இரு வருடங்களாக நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு 2020 நீட் தேர்வு மற்ற எந்த வருட மாணவர்களையும் விட எளிதாக இருக்கும்.

இதுவரை நடந்த சம்பவங்கள், கிடைத்த அனுபவங்கள் மாணவர்களைப் பக்குவப்படுத்தி இருக்கும். எனவே, அடுத்த வருட நீட் தேர்வு மிக முக்கியமானதாக உள்ளது.

புதிய பாடதிட்டத்துக்கு மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் ஓரளவு புரிதலுக்கு இந்த வருடம் வந்து இருப்பார்கள்.

தற்கொலை தீர்வல்ல

நீட் தேர்வுக்குத் தமிழகத்துக்கு விலக்குக் கிடையாது என்பது உறுதி.

இதை நன்கு தெரிந்தும் அரசியல்வாதிகள், அவர்களின் ஊடகங்கள் திரும்ப இது பற்றி எதிர்மறை எண்ணங்களை மக்களிடையே மாணவர்களிடையே விதைத்து வருகிறார்கள்.

மிக மிக மிகக் கேவலமான செயல்.

ஏற்கனவே, வேறு பாடம் படிக்கப்போவதாகக் கூறி வந்த மாணவி அனிதாக்கு கொடுத்த மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்தார்.

அதை வைத்து நடந்த அரசியல் அனைவரும் அறிந்தது.

மதிப்பெண்கள் குறைவு

தற்போது வரை மூன்று மாணவிகள் 2019 ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். இதில் திருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி 600 க்கு 490 மதிப்பெண் எடுத்தவர்.

இவர் நீட் தேர்வு இல்லையென்றாலும், மருத்துவப் படிப்புக்குத் தேர்வாக முடியாது. தற்கொலையால் என்ன பயன்?

மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் நல்ல எண்ணங்களைக் கொடுக்க வேண்டும். சரியான வழிகாட்டுதல், ஆலோசனைகள் இல்லாததால் மன அழுத்தத்தில் இது போல முடிவை எடுக்கிறார்கள்.

மாணவியின் இறப்புக்கு வருந்துகிறேன் ஆனால், இது தவறான முடிவு.

490 மதிப்பெண்ணுக்கு மருத்துவர் ஆக முடியாது என்றாலும், நீட் தேர்வு இவருக்கு வாய்ப்புத் தருகிறது. அதை முயற்சிக்காமல், புறக்கணித்துத் தற்கொலை செய்வதை என்ன செய்வது?

விழுப்புரம் மாவட்டத்தில் தூக்குபோட்டுக்கொண்ட பெண்ணும் 12 வகுப்பு தேர்விலேயே குறைவான மதிப்பெண், நீட் இல்லையென்றாலும் இவரால் மருத்துவராக முடியாது.

பட்டுக்கோட்டையில் ஒரு மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்துள்ளார்.

எனக்குப் புரியாத புதிர் என்னவென்றால், தீக்குளிக்க எவ்வளவு மன தைரியம் வேண்டும்?

சிறு அளவில் ‘தீ’ பட்டாலே துடித்து விடுகிறோம் என்றால், உடல் முழுவதும் பற்ற வைத்துத் தற்கொலை செய்ய எவ்வளவு மன தைரியம் வேண்டும்?

அந்த மன தைரியத்தை ஏன் மாணவிகள் படிப்பில் காட்ட மாட்டேன் என்கிறார்கள்?!!

என்ன ஆச்சு இப்ப? இந்தத் தேர்வு போனால் என்ன? அடுத்தத் தேர்வில் நாம் கடுமையாக உழைத்துத் தேர்வாகிக் காட்டுவோம் என்ற எண்ணம் / தைரியம் ஏன் வரவில்லை? அதை ஏன் சமூகம் கொடுக்கத் தவறுகிறது?

இது போல தற்கொலை செய்பவர்கள் அழிப்பது அவர்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, தேர்வில் வெற்றி பெறுவோம் என்று இருக்கும் எதிர்கால மாணவர்களின் நம்பிக்கையையும் சேர்த்து அழிக்கிறார்கள்.

தேவையற்ற பயத்தை உருவாக்குகிறார்கள்.

எதிர்மறை ஊடகங்கள்

ஊடகத்தைப் பாருங்க… ஒருத்தனாவது நேர்மறையான, நம்பிக்கை தரும் செய்திகளைச் சொல்றானா? மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுறீங்களேடா.. நல்லா இருப்பீங்களா!

இந்த ஆண்டுக் கிட்டத்தட்ட 10% மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது, அடுத்து வரும் வருடங்களில் புதிய பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஸ்ருதி “கடினமாக உழைத்ததால், தேர்வு எளிதாக இருந்தது” என்று கூறுகிறார்.

தேசிய அளவில் 5 ம் இடத்தைப் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவன் கார் வண்ணன்,

நீட் தேர்வுக்குத் தனியார் சிறப்புப் பயிற்சி வகுப்புக்கு எல்லாம் செல்லவில்லை.

என்னால் சாதிக்க முடிந்தது என்றால், என்னைப் போன்ற மற்ற மாணவர்களாலும் இதைக் கட்டாயம் சாதித்துக் காட்ட முடியும்.

தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர்கள் தற்கொலை என்ற செய்திகளை என் பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. முயற்சியை கைவீடாதீர்கள் ஃப்ரண்ட்ஸ் அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே” என்று கூறியுள்ளார்.

இதைப் பற்றி எவனாவது பேசுறானா விவாதிக்கறானா பாருங்க!

எதிர்மறை எண்ணங்கள்

தற்கொலையை வைத்து என்ன செய்யலாம்? மக்களின் உணர்ச்சிகளை எப்படித் தூண்டலாம்? இதை வைத்து எப்படி விவாதம் செய்து அனைவரையும் குழப்பலாம்? இதே எண்ணம் தான்.

நல்லதே உங்க கண்ணுக்கெல்லாம் தெரியாதா! எப்ப பாரு எதிர்மறை செய்திகளையே சொல்லிட்டு இருக்கீங்களே.. என்னதான்டா உங்க பிரச்சனை… ச்சை.

யாரு சாவா.. அதை வைத்து எப்படிப் பிழைப்பை நடத்தலாம்.. இது தானே உங்க எண்ணம். இந்தப் பிழைப்பு பிழைக்குறதுக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாம்.

மாணவர்களை விட்டு விடுங்கள்.. உங்களுக்குச் சம்பாதிக்க எவ்வளவோ வழி இருக்கு, மாணவர்களின் படிப்பில் அரசியல் செய்யாதீர்கள்.

SRM கல்லூரியில் நடந்த தற்கொலைகள்

SRM கல்லூரியில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்தார்கள்.

அது பற்றி எத்தனை பேர் பேசுனீங்க? எத்தனை விவாதம் நடத்துனீங்க? தொடர்ச்சியா தற்கொலை நடந்தும் ஒருத்தனும் வாயைத் திறக்கவில்லை.

ஒருவாரம் கழித்துப் பாலிமர் செய்தி சொன்னார்கள். அதன் பிறகு சில நாட்கள் கழித்துப் பச்சைமுத்துக்கு வலிக்கும்னு தடவி கொடுத்த மாதிரி ஒரு செய்தியை விகடன் எழுதுகிறது.

நீட் தேர்வுத் தற்கொலை என்றால், அடுத்த நிமிட பரபரப்பு செய்தி ஆனால், உங்கள் ஊடகத்துறை முதலாளி சம்பந்தப்பட்ட செய்தி என்றால், மூன்று வாரம் ஆனாலும் மூச்சு விட மாட்டீங்க.

சுயநல அரசியல்வாதிகள்

எடப்பாடி ஆட்சி முடியப்போகிறது என்று ஸ்டாலின் சொல்லிட்டே இருக்கிற மாதிரி, நீட் தேர்வை நிறுத்துவோம்னு வருடாவருடம் சொல்லிட்டு இருக்காரு.

ஸ்டாலின் மட்டுமல்ல அன்புமணி, சீமான், திருமுருகன் காந்தி உட்பட அனைத்து அரசியல்வாதிகளும்.

இப்படிப் பேசி பேசியே அனைவரையும் சாகடிங்க. எவனும் நல்லா இருக்கக் கூடாது, எல்லோரும் அடிச்சுட்டு இருக்கணும் அதை வைத்து அரசியல் நடத்தணும்.

12 ம் வகுப்புத் தேர்வு முடிந்தால் கூடத்தான் யாராவது தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் 12 வகுப்பு தேர்வையும் நிறுத்தி விடலாமா?

உச்சநீதிமன்றமே கூறிய பிறகு எதை நிறுத்தப்போகிறீர்கள்?

ஒருத்தராவது நம்பிக்கை, நேர்மறை எண்ணங்களைத் தரும் பேச்சுக்களைப் பேசுகிறீர்களா? பேசுறது முழுக்க எதிர்மறை பேச்சுக்களே! எப்படிய்யா நம்ம மாநிலம் முன்னுக்கு வரும்?!

தமிழக அரசியல்வாதிகள் அரசியலுக்காகக் கோமாளிகள் போல நடந்து கொண்டுள்ளார்கள். எனக்குப் பிடிக்கவே பிடிக்காத வட மாநிலத்தவன் எல்லாம் நம்மை நக்கல் அடிக்கிறான்.

தமிழ்நாடு என்றால் கெத்தாக இருந்த நிலை மாறி, முட்டாள்கள் நிறைந்த, அனைத்துக்கும் உணர்ச்சிவசப்படும் மாநிலமாக மாறி வருகிறது.

உண்மையிலேயே அவமானமாக இருக்கிறது 🙁 .

ஒரே ஆறுதல்

இந்த முறை சமூகத்தளங்களில் நீட் தேர்வு முடிவுக்குப் பரவலாக வரவேற்பு காணப்படுகிறது. பலரும் தற்கொலையைத் தவறு என்று விமர்சித்துள்ளார்கள்.

அதே சமயம் மாணவர்களின் கூடுதல் தேர்ச்சி விகிதத்தைப் பாராட்டியுள்ளார்கள். இதை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை விமர்சித்து வருகிறார்கள்.

மாணவர்களே! பெற்றோர்களே!!

ஊடகங்கள், அரசியல்வாதிகள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் படிப்பை, வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

நீட் தேர்வு என்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது, இதில் மாற்றமில்லை. எனவே, இதைப் பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது.

எனவே, இதில் நாம் எப்படிப் படிப்பது? என்ன வழிமுறையைப் பின்பற்றுவது? யாரிடம் ஆலோசனையைக் கேட்பது? நேர்மறை எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது?

உற்சாகம் தரும் நபர்களை எப்படிக் கண்டறிவது? என்பதில் உங்கள் எண்ணத்தைக் கொண்டு செல்லுங்கள்.

நீட் தேர்வில் வெற்றி பெற படிப்பு சம்பந்தமில்லாத சில வழிகளைக் கூறுகிறேன்.

முதலில் அனைத்துச் சமூகத்தளங்களில் (WhatsApp உட்பட) இருந்தும் விலகி விடுங்கள், தொலைக்காட்சி பார்க்காதீர்கள், குறிப்பாகச் செய்திகள், விவாதங்கள் பக்கமே செல்லாதீர்கள்.

உங்களுக்கு நம்பிக்கை தருபவர்களை மட்டுமே நட்பாகக் கொள்ளுங்கள், நம்மால் சாதிக்க முடியும் என்பதை உறுதியாகத் திடமாக நம்புங்கள்.

நம்பிக்கை மட்டுமே போதாது அதை அடைவதற்குண்டான சரியான வழி முறைகளையும் பின்பற்ற வேண்டும். Hard Work என்பதை விட Smart Work என்பதே உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வரும்.

கடினப்பட்டு உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்காது, எப்படி உழைத்தால், வெற்றி கிடைக்கும் என்பதை இது குறித்துத் தெரிந்தவர்களின் அறிவுரையைக் கேட்டு அதைப் பின்பற்றுங்கள்.

முடியாது, கடினம், சாத்தியமில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களை அருகில் கூடச் சேர்க்காதீர்கள்.

பலரும் நினைப்பது போல நீட் ஒன்றும் கடினமான தேர்வல்ல.

நம்மை விடப் பல மடங்கு பின்தங்கியுள்ள மாநில மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெறும் போது, திறமையான, புத்திக்கூர்மையுள்ள நீங்கள் பெற முடியாதா?!

ஊடகங்கள், அரசியல்வாதிகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காதீர்கள். இவர்கள் செய்வது அனைத்தும் அரசியல். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களால் கண்டிப்பாக முடியும். உங்களுக்குத் தேவை மன தைரியம் மட்டுமே! இது இருந்தால் போதும், நீட் தேர்வு என்ன.. இதை விடப் பெரிய தேர்வை எல்லாம் ஊதித்தள்ளி விடலாம்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்து, கடின உழைப்பையும், சரியான வழிகாட்டுதலையும் பின்பற்றுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. மிகச் சரியான வார்த்தைகள் கிரி! இனிமேலாவது மாணவர்கள் திருந்தட்டும்… தற்கொலை தீர்வல்ல எந்த ஒரு செயலுக்கும்… Never Give UP!!! Keep try your best and you will definitely get good results at the end. Our Karma always with us.

    “Your wish is my comment” – The Secret.

  2. மிகவும் சரியான தேவையான பதிவு கிரி.
    திராவிட கட்சிகளில் இருந்து, அன்புமணி சீமான் அன்டு கோ வரை, தமிழகத்தில் அவநம்பிக்கைகளை உருவாக்கி மக்களை போராடவைத்து அதனால் மக்களை துன்பங்களை அனுபவிக்க வைத்து அதைவைத்து தங்களது அரசியலை கொண்டு செல்ல விரும்புகிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.மக்களும் கண்மூடிக்கொண்டு உணர்ச்சிவசப்படுபவர்களா இருப்பது மிகவும் வேதனையானது.உணர்ச்சிவசப்படும் விஷயங்களை சொல்லியே தமிழர்களை மிகவும் சுலபமாக ஏமாற்ற முடியும் என்கின்ற நிலை இருப்பது வேதனையானது.

  3. தற்கொலை சிறுமிகளின் தவறுமட்டுமல்ல. அவர்களின் பெற்றோரின். சுற்றத்தாரின் தவறுதான். மருத்துவர் என்ற பிம்பத்தை உருவாக்கி அவர்களால் அது முடியாமல் போகும்போது மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.
    விஸ்வாசம் படத்தின் பின் அரை வாசி இதனைத்தான் பூதாகரமாக , திரைப்படத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த காட்சிகளின் அடி நாதமும் இந்த தற்கொலைகளும் ஒன்றுதான். என்னை பொறுத்தவரை மருத்துவர் அனிதா என்று இன்று சொல்லப்படுவது கூட அந்த சிறு பெண்ணிற்கு களங்கம்தான். மருத்துவம் படித்தால் மட்டும்தான் நல்லாக இருக்கலாம்/ பிறருக்கு உதவிசெய்யலாம் என்று அந்த சிறு பெண்ணிற்கு முன்னமே மூளையில் பதியும் அளவிற்கு சொல்லப்படாவிட்டால், அந்த பெண் இன்னமும் சில காலத்தில் வேறு படிப்பில் சாதனை படைத்திருக்கலாம்.

  4. கோட் அணியவைத்து டெதஸ்கோப்புடன் படம் வரைந்து மருத்துவர் அனிதா என்று அரசியல் செய்கிறார்கள்.

  5. @சுரேஷ் பழனி உண்மை தாங்க.. படிப்பில் தேர்வாகவில்லை என்றால் தற்கொலை செய்தால்.. ஒவ்வொருத்தரும் எத்தனை முறை தற்கொலை செய்வது?

    @வேகநரி நீங்க கூறிய ஒரு வார்த்தை மிக மிக முக்கியமானது.

    அவநம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கிறார்கள் 🙁 இது பற்றி ஒரு கட்டுரை எழுதும் அளவும் என்னிடம் விஷயம் உள்ளது. விரைவில் எழுதுகிறேன், கண்டிப்பாக எழுத வேண்டும்.

    இங்குள்ள கட்சிகள் அனைத்தும் மக்களை குழப்பி, பயமுறுத்தி, அவ நம்பிக்கையை விதைத்து மூளை சலவை செய்து வருகின்றன.

    “உணர்ச்சிவசப்படும் விஷயங்களை சொல்லியே தமிழர்களை மிகவும் சுலபமாக ஏமாற்ற முடியும் என்கின்ற நிலை இருப்பது வேதனையானது.”

    மறுக்க முடியாத உண்மை.

    @ப்ரியா

    பெற்றோரும் சமூகமும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதே இங்கே பிரச்சனை. இது மாற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!