பல்வேறு ஊகங்கள், சர்ச்சைகளுக்குப் பிறகு அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி
கொங்கு பகுதியைச் சார்ந்தவனாக இருந்தாலும், ‘ஜெ‘ காலமான பிறகே எடப்பாடி பழனிச்சாமி என்பவர் ஒருவர் அதிமுக வில் பொறுப்பில் இருப்பதே தெரியும்.
முதல்வர் பொறுப்புக்குப் பழனிச்சாமி வந்தது பெருமையளிக்கும் வகையில் இல்லையென்றாலும், அதன் பிறகு தன்னை நிலை நிறுத்தி மீதி இருந்த நான்கு+ வருடங்களையும் கிட்டத்தட்ட கடந்து விட்டார்.
ஆறு மாதத்தில் கட்சி கலகலத்து விடும், ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பெரும்பாலானவர்கள் கருதினார்கள்.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி சர்ச்சைகள் இருந்தாலும், ஆட்சியை நிறைவு செய்யப்போகிறார். Image Credit
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி எனும் ஒருவர் முதல்வராவார் என்பதை பலர் முற்றிலும் எதிர்பார்க்கவில்லையென்றாலும், தற்போது முதல்வர் வேட்பாளராக இவரே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்த்தார்கள்.
அதே போல இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் சமரசம் ஆகி, பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.
இதன் பின்னே மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தும் தெரியாமலும் உள்ள உண்மை.
இந்த அறிவிப்பு மிகச்சிறப்பானது என்று எனக்குத் தோன்றும் இரு காரணிகள்.
- நல்லதோ கெட்டதோ தாமதம் செய்யாமல் அறிவிப்பை முன்னரே வெளியிட்டது சரியான நடவடிக்கை.
காலத் தாமதம் செய்வது கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.
- சசிகலா ஜனவரியில் விடுதலையாகிறார். அவர் வரும் முன்பே சிலதை தெளிவுபடுத்தி விடுவது இவர்கள் இருவருக்குமே நல்லது.
தாமதமான முடிவுகள் இவர்களுக்குப் பெரும் சிக்கலையே கொண்டு வரும்.
எனவே, இது சரியான நேரத்தில் வெளியான அறிவிப்பு. இதன் பிறகு எப்படிப் போகிறது என்பது அவரவர் சாமர்த்தியம்.
ஸ்டாலின்
10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல், இந்த முறை எப்படியும் முதல்வர் பதவியை அடைந்தே தீர்வது என்ற உறுதியான முடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பது அவருடைய Aggressive வான நடவடிக்கைகளைப் பார்த்தாலே புரியும்.
வாரத்துக்கு ஓரிரு அறிக்கைகளாக இருந்தவை, தற்போது தின அறிக்கைகளாக மாறி விட்டன. போராட்டங்களும், கடுமையான விமர்சனங்களும் அதிகரித்து விட்டன.
அதிமுக வில் முதல்வர் வேட்பாளர் பிரச்சனை இல்லாமல் சுமூகமாக முடிந்தது திமுக வுக்கு ஏமாற்றம் அளித்து இருக்க வேண்டும்.
பிரச்சனையாகி இருந்தால், கூட்டணி கட்சிகளின் அவசியம் இருந்து இருக்காது.
தற்போதைய சூழ்நிலையில், ஸ்டாலின் முதல்வராவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நேர மாற்றங்களைப் பொறுத்து வெற்றிகளும் மாறும்.
ஆனால், ஸ்டாலினுக்கு இத்தேர்தல் Do or Die என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ரஜினி
2021 தேர்தலில் போட்டியிடுவேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார் ஆனால், கொரோனா இவரின் திட்டங்களைத் தாமதம் செய்து வருகிறது.
மாநாடு நடத்துவதன் மூலமே, மக்களின் ஆதரவை வெளிப்படையாக அறிய முடியும்.
ஆனால், மக்கள் மிகப்பெரிய அளவில் கூடுவது என்பது வரும் காலத்தில் சாத்தியமாகும் சூழ்நிலையில்லை.
எனவே, எப்படி இதைக் கடந்து வரப்போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஊடகங்கள் ஆளாளுக்குக் கொரோனா காரணமாக ரஜினி வரமாட்டார் என்று கூறி வந்தாலும், ரஜினியே கூறாதவரை எதுவும் உறுதியில்லை.
தற்போதைக்கு அதிமுக திமுக போட்டி கடுமையாகியுள்ளது.
சமூகத்தளங்களில் பாஜக வையே அதிகம் விமரிசித்து வந்த திமுக, தற்போது அதிமுக பக்கம் கவனம் திருப்பியுள்ளது. இதற்குச் சமீப சுவரொட்டி சண்டைகளைக் கூறலாம்.
தேர்தல் வருவதற்குள் பல அரசியல் திருப்பங்களைக் காண முடியும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நடிகர் சிவாஜி அய்யா கூறியதாக எங்கேயோ இணையத்தில் படித்தது, பணத்தை சம்பாரிப்பது மிக எளிது, அது எல்லோராலும் செய்ய முடியும்.. ஆனால் அதை சேமிப்பது மிக, மிக கடினம், அது எல்லோராலும் இயலாத ஒன்று.. (சிவாஜி அய்யா எனக்காகவே சொன்னது போல் இருக்கிறது).
அது போல பதவிக்கு எப்படியோ வந்த போதும், நான்கு ஆண்டுகளுக்கு மேல் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கட்சி பிளவுபடாமல் அதை காப்பற்றி வருவதில் முதல்வரின் பங்கு அதிகம்.. அந்த வகையில் என் பார்வையில் முதல்வர் சிறந்த அரசியல்வாதியாக தெரிகிறார்.. OPS பிரச்சனையையும் சுமூகமாக முடித்தது, சூழலை அதிமுகவிற்கு சாதகமாக்கி உள்ளது..நான் வெளிநாட்டில் இருப்பதால் இவரின் நிர்வாகத்தை பற்றி எனக்கு நேரிடையாக தெரியவில்லை..
ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் Do or Die என்று நீங்கள் குறிப்பிட்டதை, நான் சற்று மாற்றி Die for Do என படிக்கிறேன். கடுமையான போட்டிக்கு பின் தான் திமுக வெல்ல வாய்ப்பு உண்டு.. தற்போதைய சூழலை பார்க்கும் போது அதிமுகவிற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.. கால ஓட்டத்தில் எது வேண்டுமானாலும் மாறலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
“பணத்தை சம்பாரிப்பது மிக எளிது, அது எல்லோராலும் செய்ய முடியும்.. ஆனால் அதை சேமிப்பது மிக, மிக கடினம், அது எல்லோராலும் இயலாத ஒன்று.”
உண்மையே. இன்னொன்று.. கையில் பணம் இருந்தால், அதற்கென்றே புதிதாக செலவுகள் அனுமதி இல்லாமல் வந்து கொண்டு இருக்கும் 🙂 .
எடப்பாடி 4+ வருடங்களை ஓட்டியது உண்மையிலேயே பெரிய விஷயம் தான், அதுவும் பிரச்னைகள் இல்லாமல்.
தேர்தல் முடிவுகள் தேர்தல் சமயத்தில் நடக்கும் சம்பவங்களைப் பொறுத்து மாற்றம் அடையும்.
பாப்போம்… 🙂