மத்திய பாஜக அரசின் மூன்று அடிப்படை சர்ச்சைகள்

5
மத்திய பாஜக அரசின் மூன்று கட்டணச் சர்ச்சைகள்

த்திய பாஜக அரசு பல நலத்திட்ட உதவிகளை, புதிய மாற்றங்களைச் செய்து வந்தாலும், மூன்று விலை / கட்டண உயர்வால் விமர்சனங்களையே பெற்று வருகிறது.

அவை முறையே எரிபொருள் (பெட்ரோல் டீசல்), எரிவாயு (Gas) & சுங்கச்சாவடி (Tollgate) கட்டணங்கள். இவையே அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துபவை. Image Credit

இணையத்தில் உள்ள தகவல்களையும், இயல்பாகத் தோன்றும் கேள்விகளையும் வைத்துச் சராசரி பொதுஜனத்தின் பார்வையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

எரிபொருள் (பெட்ரோல் டீசல்)

எரிபொருள் கட்டண உயர்வு அனைவருக்கும் மிகப்பெரிய சுமையாக உள்ளது.

இதற்குக் காரணமாகக் காங் அரசு வைத்துவிட்டுச்சென்ற கடன் பத்திரங்களை மத்திய பாஜக அரசு கூறி வருகிறது.

கடன் பத்திரம் உண்மையா?

ஆம்.

கடன் பத்திர தொகையுடன் வட்டியும் சேர்த்து இரண்டு இலட்சம் கோடிக்கும் அதிகமாக 2026 ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியதாக உள்ளது.

ஆனால், எரிபொருள் விலை உயர்வு மூலமாகத் தற்போது பன் மடங்கு மத்திய அரசு பெற்று விட்டது.

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் கடந்த வருடங்களில் எவ்வாறு எரிபொருள் விலை உயர்வு இருந்துள்ளது என்பது புரியும்.

இடது புறம் உள்ளது டாலரில் உள்ள விலை நிர்ணயம். Image Credit

காங் ஆட்சி காலத்தில் எரிபொருள் விலை அதிகபட்சம் $130 வரை சென்றது. 2010 முதல் 2014 வரை சராசரியாக $90$100 டாலர் இருந்தது.

கடந்த மத்திய பாஜக அரசில் 6 ஆண்டுகளில் (2015 – 2021) சராசரியாக $60 இருந்துள்ளது.

2014 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015 முதல் எரிபொருள் விலை குறைய ஆரம்பித்தது, இதற்குக் காரணமாக பல நாடுகள் புதியதாக உற்பத்தியைத் துவங்கியது கூறப்பட்டது.

2021 ஜூலை முதல் இரு வாரங்களில் அதிகபட்சமாக $75 டாலரும் மூன்றாவது வாரமான தற்போது $65 – $70 டாலருக்கும் வந்துள்ளது.

இடையில் கொரோனா முதல் அலையில் ஊரடங்கில் தேவை குறைவு காரணமாகச் சில நாட்கள் $0 டாலருக்கும் குறைவாக எரிபொருள் விலை சரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வளைகுடா நாடுகள், எரிபொருள் உற்பத்தியைக் குறைத்ததன் மூலம், தேவை உருவாகி விலை உயர ஆரம்பித்தது.

இடையில் ரஷ்யா போன்ற நாடுகள் உற்பத்தியை அதிகப்படுத்தியதும் விலை குறைவுக்குக் காரணமாக இருந்தது.

இவ்வாறு விலை குறைந்தாலும் மத்திய பாஜக அரசு எரிபொருள் விலையைக் குறைக்கவில்லை, அதற்குப் பதிலாக வரியை உயர்த்தி அதே விலையைத் தொடர்ந்தது.

எதனால் விலை குறைக்கப்படவில்லை?

மத்திய பாஜக அரசு, பதவி ஏற்ற பிறகு காங் அரசால் ஏற்பட்ட பல நிதி சுமைகளை, நிர்வாக இழப்புகளை எதிர்கொண்டது, அதில் எரிபொருள் கடன் பத்திரமும் ஒன்று.

அதோடு 2020 – 2021 ல் கொரோனா ஊரடங்கு காரணமாக வரி வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் எரிபொருள் மீதான வருவாய் தான் தாமதம் இல்லாமல் உடனடியாகக் கிடைப்பது.

எனவே தான் அரசுகள் எரிபொருள் வரியைக் குறைப்பதில்லை.

ஊரடங்கு காரணமாக வரி வருவாய், ஏற்றுமதி குறைந்ததோடு, செலவுகளும் அதிகரித்தது.

காரணம், மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உணவுப்பொருட்கள், மருத்துவ உதவிகளின் செலவு, தடுப்பூசி செலவு அதிகரித்தது.

தடுப்பூசி செலவு மட்டுமே தோராயமாக இரண்டு லட்சம் கோடியைத் தொடும். இவையல்லாமல் மற்ற மருத்துவச் செலவுகள் தனி.

எனவே, இது போன்ற காரணங்களாலும் எரிபொருள் விலை (வரி) குறைக்கப்படாமல், அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போது (ஜூலை மூன்றாம் வாரம்) கச்சா எண்ணெய் விலை ($65 – $70) குறைந்ததால் இங்கே எரிபொருள் விலை குறையலாம் அல்லது உயராமல் நிலையாக இருக்கலாம்.

வரும் காலத்தில் $85 வரை உயரலாம் என்று கணித்துள்ளார்கள் (Forecast).

மின்சார வாகனங்கள்

மக்களை மின்சார வாகனங்களுக்கு நகர்த்த வேண்டியும் இது போல எரிபொருள் விலை உயர்த்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

காரணம், இந்தியா தனது வருவாயில் பெரும்பங்கை எரிபொருள் இறக்குமதிக்கே செலவு செய்கிறது.

இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்ய முடியாது, அமெரிக்க டாலரில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். இதுவும் நமக்கு நட்டம் ஆகிறது.

டாலரில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று வளைகுடா நாடுகளோடு அமெரிக்க அதிபர் முந்தைய காலத்தில் போட்ட ஒப்பந்தம் இன்றும் தொடர்கிறது.

இதுவும் அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாமல் இருக்க முக்கியக் காரணமாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.

எனவே, மின்சார வாகனங்கள், எத்தனால் பயன்படுத்தி, பிற நாடுகளை இந்தியா சார்ந்து இருக்கும் நிலையைத் தவிர்க்க மத்திய பாஜக அரசு முயல்கிறது.

மின்சார வாகனத்துக்கு மாறினால் பிரச்சனையில்லையா என்றால், கிடையாது.

பேட்டரி கனிம பொருட்களுக்கு (லித்தியம்) ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்து உள்ளோம்.

இப்பிரச்சனையை தவிர்க்க 2030 க்குள் தன்னிறைவு அடைய இதற்கான மாற்று ஏற்பாடுகளை இந்தியா முயற்சித்து வருகிறது.

எரிபொருள் விலை உயர்வால் என்ன பிரச்சனை?

மத்திய பாஜக அரசு மேற்கூறிய காரணங்களுக்காக எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை (அதோடு அதிகரிக்கப்படுகிறது) என்று கூறுகிறது.

எரிபொருள் விலை உயர்வு என்பது ஒரு பொருள் விலையைச் சார்ந்தது அல்ல. இது ஒரு சங்கிலி தொடர் போல.

எரிபொருள் விலை உயர்ந்தால், அதைச் சார்ந்து உள்ள அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

விலை உயர்ந்தால், லாரி வாடகை உயரும், இதனால் காய்கறி விலை உயரும், உணவகத்தில் உணவுப் பொருட்களின் விலை உயரும்.

ஆட்டோ, கார் வாடகை உயர்ந்தால், இதில் பயணிப்பவர்கள் அதிகக் கட்டணம் கொடுக்க வேண்டியது இருக்கும்.

இது போல ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

மிகப்பெரிய பிரச்சனை என்ன?

எரிபொருள் விலை உயர்வால் மேற்கூறியபடி விலைகள் உயருகின்றன ஆனால், எரிபொருள் விலை குறைந்தால், ஏறிய விலைகள் குறைக்கப்படுமா? கிடையாது.

ஒரு முறை விலை உயர்ந்தால் உயர்ந்தது தான், குறைக்க மாட்டார்கள்.

காய்கறி மட்டுமே தேவை குறைந்தால் விலை குறையும் காரணம், இதைச் சேமித்து வைக்க முடியாது ஆனால், உணவகங்கள் உணவின் விலையைக் குறைக்காது.

இது போல விலை, கட்டணங்கள் குறையாது. இவையே நாளடைவில் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

லாஜிக்காக யோசித்தால் கடனை அரசு பெற்று விலையை உயர்த்தாமல் அதே விலையைத் தொடரலாம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் முந்தைய எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய், மற்ற வருவாய்களை வைத்து முன்பு வாங்கிய கடனைக் கட்டி, அவசியமற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம்.

சுருக்கமாகக் கடனை எப்படியும் கட்டி விடலாம் ஆனால், உயர்ந்த பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது.

பாராளுமன்ற விவாதத்தில் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி,

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், மற்ற பொருட்கள் விலை குறையாது” என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு

கச்சா எண்ணெய் உயரும் போது எரிவாயு விலையும் உயர்கிறது.

எரிபொருள் விலை போல எரிவாயு விலையும் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. மாதாந்திர பட்ஜெட்டில் இதன் செலவு அதிகரிக்கிறது.

அதே சம்பளம் ஆனால், விலைகள் உயர்வு எனும் போது அனைவரையும் நேரடியாகப் பாதிக்கும்.

பொதுமக்கள் சமையல் எரிவாயு கட்டணத்தை அரசு குறைத்தால், மக்களுக்கு நேரடி பயன் கிடைக்கும்.

ஏனென்றால், இவ்விலை உயர்வு / குறைவு ஒரு சாராரை மட்டுமே பாதிக்கும்.

ஆனால், வணிக ரீதியான எரிவாயு (Commercial Gas) விலையைக் கூட்டி குறைத்தால், மற்ற பொருட்கள் விலை குறையாது.

எடுத்துக்காட்டுக்கு வணிக ரீதியான எரிவாயு விலையை உயர்த்தினால், உணவு பொருட்களின் விலை உயரும்.

எரிவாயு விலையை அரசு குறைத்தால், ஏறிய உணவுப் பொருட்கள் விலையைக் குறைக்க மாட்டார்கள். அப்படியே குறைத்தாலும், மிகக் குறைந்த அளவே குறைப்பார்கள்.

சுங்கக்கட்டணம்

மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி சுங்க கட்டணத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்.

இக்கட்டணத்தின் மூலமே தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகின்றன, மேம்படுத்தப்படுகின்றன என்று கூறுகிறார்.

மறுக்க முடியாத உண்மை. மத்திய அரசில் உள்ள மிகச்சிறந்த அமைச்சர்களில் நிதின் கட்காரி முக்கியமானவர்.

இவர் சுங்கக்கட்டண பணத்தை வீணடிக்கவில்லை, மக்களுக்கே பயன்படுத்துகிறார் ஆனால், அதற்காக உயர்த்திக்கொண்டே செல்வது எப்படி நியாயமாகும்?

இதெல்லாம் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கிறது.

திரும்ப லாரி வாடகை என்று மேற்கூறிய எடுத்துக்காட்டுகளைப் போல மறைமுக விலை உயர்வுக்குக் காரணமாகிறது.

முன்பு (2020 வரை) மாதத்துக்கு ₹75 கோடி சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது, FasTag வந்த பிறகு மாதத்துக்கு ₹ 115 வரை கோடி வசூலாகிறது.

காரணம், முன்பு ஊழல் செய்ய முடிந்தது தற்போது செய்ய முடியவில்லை அல்லது மிக மிகக்குறைவு.

எனவே, இக்கூடுதல் வருமானத்தைக் கருத்தில் கொண்டு சுங்கக்கட்டணத்தை மேலும் உயர்த்த கூடாது.

தரமான சாலை, கூடுதல் தேசிய நெடுஞ்சாலை, சாலை விரிவாக்கம் தேவை தான் ஆனால், அதற்காக மக்களைக் கசக்கி பிழிவது சரியல்ல.

எனவே, வரியை மட்டுமே வருமானம் தரும் வாய்ப்பாகக் கருதாமல், மற்ற வழிகளிலும் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்.

மேற்கூறியவை மத்திய பாஜக அரசு மீது எனக்குள்ள அதிருப்திகள். இதில் விடுபட்ட / தவறான தகவல்கள் இருப்பின் சுட்டிக்காட்டலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Drug Mafia | உலக மருந்து அரசியல் | COVID-19

களையிழந்த OMR உணவகங்கள்

சுங்கச்சாவடிக் கட்டணம் என்ற பகல் கொள்ளை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. “கடன் பத்திர தொகையுடன் வட்டியும் சேர்த்து இரண்டு இலட்சம் கோடிக்கும் அதிகமாக 2026 ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியதாக உள்ளது.

    ஆனால், எரிபொருள் விலை உயர்வு மூலமாகத் தற்போது மூன்று இலட்சம் கோடிகள் வரை மத்திய அரசு பெற்று விட்டது”

    SOFOR GOVT COLLECTS 30 LAKHS CRORE. PLEASE DONT JUSTIFY THIS LOOT.

    A simple google search as “how much amount collect by government from fuel tax” will give you the req. results.

    https://www.hindustantimes.com/india-news/central-government-s-tax-collection-on-petrol-diesel-jumps-300-in-6-years-101616412359082.html

    Central government’s tax collection on petrol, diesel jumps 300% in 6 years
    The collections on petrol and diesel rose to ₹2.94 lakh crore in the first 10 months of the current fiscal (2020-21), according to information furnished by Minister of State Anurag Singh Thakur in a written reply to a question in the Lok Sabha.

  2. மன்னிக்க அண்ணா,கைபுண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

  3. விடை தெரியாத பல கேள்விகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, இதை படிக்கும் போது மேலும் சில வினாக்கள் எழுந்துள்ளது?????…நன்றி கிரி..

  4. @செந்தில்

    “SOFOR GOVT COLLECTS 30 LAKHS CRORE.”

    வரி உயர்வால் மட்டும் 30 லட்சம் கோடி பெற்றதாக எங்கே கூறப்பட்டுள்ளது என்பதை கூறவும், நீங்கள் கொடுத்த சுட்டியில் காண முடியவில்லை.

    “PLEASE DONT JUSTIFY THIS LOOT.””

    கட்டுரையில் எந்த இடத்தில் நியாயப்படுத்தி உள்ளேன் என்பதை தெளிவுபடுத்தவும். நான் குறிப்பிட்டது தற்போதைய சூழ்நிலை.

    “A simple google search as “how much amount collect by government from fuel tax” will give you the req. results.”

    நான் செய்தியில் படித்தது கடந்த 10 மாதங்களுக்கான வரி வசூலாக இருக்கலாம், இக்கால கட்டத்தில் எரிபொருள் விலை கடந்த 7 வருடங்களில் தொடர்ச்சியாக அதிகம் அதிகரித்தது.

    கூகுள் விவரங்கள் தரும் என்பது உண்மை தான் ஆனால், தரும் விவரங்கள் அனைத்தும் சரியாக / தெளிவாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

    இக்கட்டுரை எழுதுவதற்காக பல விவரங்களைத் திரட்டியே எழுதியுள்ளேன், உங்களுக்கு மற்ற விவரங்கள் பார்வையில் படவில்லை போல.

    என்னை கூகுளில் தேடி பார்க்கச் சொன்ன நீங்கள், இக்கட்டுரையின் கீழே குறிப்பிட்டு இருந்ததை கவனிக்க தவறியதேனோ!

    தவறு என்று இருந்தால் ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதே போல எனக்குத் தெரியாத செய்திகளை இங்கே எழுதுவதும் இல்லை.

    கடந்த 7 வருடங்களில் வரி வசூல் அதிகரித்தது 2014 ல் இருந்த வாகனங்களை வைத்து மட்டுமல்ல, அதன் பிறகு 7 வருடங்களில் லட்சக்கணக்கில் வாகனங்கள் உற்பத்தியாகியுள்ளது.

    அந்த வாகனங்கள் பயன்படுத்தும் எரிபொருள் காரணமாகவும் வசூல் உயர்ந்து இருக்கலாம். அதோடு இடைப்பட்ட கொரோனா ஊரடங்கு காலத்தில் போக்குவரத்தே இல்லை.

    போக்குவரத்து இல்லை என்றால், வரி வசூலும் இல்லை.

    அதோடு இவ்வரி வசூல் விசயத்தில் எனக்குக் குழப்பங்கள் உள்ளது. எனவே, உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் இல்லை.

    இது குறித்து மேலும் சரியான நபரிடம் விவாதித்து, திருப்தியான பதில் கிடைத்தால், இதை பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

    கருத்திடுவதற்கு முன் முழு கட்டுரையையும் படித்துப் பின் கருத்திடவும். முழுவதும் படித்தால் தான் ஒரு கட்டுரை எப்படி எழுதப்பட்டுள்ளது என்பது புரியும்.

    இல்லையென்றால், ஒரு வரியை வைத்துக்கொண்டு இது போலத்தான் கருத்திட முடியும்.

  5. @Adhichelvam குறைகள் உள்ள இடத்தில் நிறைகளும் அதிகம் உள்ளது. அவை பற்றி பின்னர் எழுதுகிறேன்.

    @யாசின் “இதை படிக்கும் போது மேலும் சில வினாக்கள் எழுந்துள்ளது”

    கேளுங்க யாசின்.. விடை தெரிந்தால் கூறுகிறேன் அல்லது விசாரித்துக் கூற முயற்சிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here