Relax. Think. Act.

12
Relax, Think. Act.

ரியான நேரத்தில் முடிவு எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே போலத் தவறான நேரத்தில் முடிவு எடுக்காததும் முக்கியம்.

இதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது Relax. Think. Act.

Relax

முடிவு தவறாகச் செல்வதற்குக் காரணமே தெளிவான மனநிலையில் முடிவை எடுக்காததே. அந்த நேரத்தில் உள்ள கோபம், அவசரம், பதட்டம், கவலை, நெருக்கடி ஆகிய காரணங்களால் முடிவை எடுக்கிறோம்.

இது போல ஒரு சூழ்நிலையில் எடுக்கப்படும் 90% முடிவுகள் தவறாகவே முடியும்.

எனவே, இப்பிரச்சனையைத் தவிர்க்கச் செய்ய வேண்டியது, அமைதியாக இருப்பது. தெளிவான மனநிலையில் இல்லாத போது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

எனவே, ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டால், பொறுமையாக, அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு உடனே எதிர்வினையாற்றக் கூடாது.

பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் கூட எடுத்துக்கலாம்.

சில பிரச்சனைகளின் முடிவைக் கூற அதிக நேரம் எடுத்துக்க முடியாது.

எடுத்துக்காட்டுக்கு அலுவலகப் பிரச்சனைகளுக்கு அதிக காலம் எடுத்துக்க முடியாது. எனவே, உடனே கூறுவதை முடிந்தால் ஒரு மணி நேரம் தள்ளிப்போடலாம்.

குடும்பப் பிரச்சனைகளுக்கு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் இடைப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட பிரச்சனை தானாகவே சரியாகி இருக்கலாம்.

யாருடன் பிரச்சனையோ அவரின் கோபத்தையும் இந்த இடைவெளி நீர்த்துப்போகச் செய்யலாம்.

குறிப்பாக ஒரு இரவு தூக்கம், காலையில் உங்கள் மனதை தெளிவாக்கும்.

Think

பதட்டமான, கோபமான மன நிலையில் இருக்கும் போது எந்தச் சரியான முடிவுகளையும் எடுக்க நம் மூளை ஒத்துழைக்காது.

அமைதியாகும் போதே மூளை சரியாகச் சிந்திக்கும்.

இவ்வாறு சிந்திக்கும் போது சிறப்பான யோசனைகள் நம்மை வந்தடையும். சில நேரங்களில் கால இடைவெளி ‘எதிர்வினையாற்றுவதே பயனற்றது‘ என்று நினைக்க வைக்கலாம்.

அதாவது கோபம் குறைந்து, இதற்கெல்லாம் எதற்குப் பதில் அளிக்க வேண்டும்?! புறக்கணித்து விடலாம் என்று தோன்றும்.

முன்னர் பூதாகரமாகத் தோன்றிய விஷயங்கள் தற்போது கோபம் குறைந்து இதெல்லாம் ஒரு விஷயமா என்ற எண்ணத்தைக் கொண்டு வரும்.

இல்லையென்றால், பதிலடி கொடுக்க மேலும் பல புதிய யோசனைகள், தரவுகள் கிடைத்து இருக்கும்.

Act

மேற்கூறிய அனைத்தையும் சரியான இடைவெளியில் பின்பற்றி உள்ளீர்கள் என்று கருதினால், உங்கள் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

எளிதாகப் புரியும்படி கூறுவதென்றால், பரபரப்பான சர்ச்சையில் சமூகத்தளங்களில் அவசரப்பட்டுக் கருத்திட்டு பின்னர் அது அவ்வாறு இல்லையெனப் பின்னர் அறியப்படும் போது அவசரப்பட்டுட்டோமே என்று தோன்றும்.

இதைக் கடக்காதவர் மிகக்குறைவாகவே இருப்பர். அவசரப்பட்டுக் கருத்தை இட்டுப் பின்னர் அழிப்பது கூட இவ்வகை தான்.

மேற்கூறிய தவறை செய்து விட்டோமே என்று வருத்தப்படுவதை விட இனி இது போல அவசரப்படக் கூடாது என்று முடிவு செய்து அதைப் பின்பற்றுவதே சிறப்பு.

இதைப்பின்பற்றினால் பிரச்சனைகள் குறைந்து கொண்டு வருவதை உங்களால் உணர முடியும். எனக்கு நடப்பதால் 100% உறுதியாகக் கூறுகிறேன் 🙂 .

முன்பு அவசரப்பட்டு, யோசிக்காமல் எடுத்த முடிவுகளால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். தற்போது நிதானமாக கையாள்வதால் ஏராளமான பலன்களைப் பெற்று வருகிறேன், இழப்புகளை பெருமளவு குறைத்துள்ளேன்.

எனவே, இனி இது போலச் சிக்கலான நேரங்களில் மறக்காமல் நினைவு கொள்ள வேண்டியது Relax. Think. Act.

தொடர்புடைய கட்டுரைகள்

கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது

மன அமைதியை அடைவது எப்படி?

பயம் பதட்டம் ஏன் ஏற்படுகிறது?

மன அழுத்தம் எப்படி இருக்கும்?!

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. அருமை . அனுபவமே ஆசானாக இருக்கிறது. காலத்தை மாற்ற முடியாது ஆனால் கடந்தகால தவறுகளை திரும்ப நடைபெறாமல் தவிர்க்கலாம். தங்கள் பதிவிற்கு நன்றி. இதுபோன்ற வாழ்க்கைக்கு உதவும் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.Linux பற்றியும் அதைப் பயன்படுத்தி பழைய கணினிகளை உயிர் கொடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பது பற்றி தங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன். உங்களிடமிருந்து அனுபவம் மற்றும் தொழில்நுட்ப பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

 2. கிரி, ஒரு நல்ல தரமான கட்டுரை.. ஏன் கூறுகிறேன் என்றால் ” இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட விஷியங்கள் எல்லோருடைய வாழ்விலும் நடந்து இருக்கும்” எல்லோரும் கடந்து வந்து தான் ஆக வேண்டும்”.. என்னை பொறுத்தவரை மிகவும் பொறுமை சாலி.. கோபமே வராது (இப்ப வருது)..

  ஏதோ குறிப்பிட்ட எனக்கு பிடிக்காத செயலை வேண்டுமென்றே என்னை வெறுப்பேற்ற வேண்டி செய்யும் காரியங்கள் கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்தும்.. உதாரணம் : 9 வகுப்பு படிக்கும் போது சக வகுப்பு தோழன் கோபால கிருஷ்ணன்.. வேண்டுமென்றே ஒரு பேனாவை ஸ்விச் தட்டி கொண்டு என்னை வெறுப்பேற்றினான், பல முறை எச்சரித்தும் அதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்..

  ஒரு கட்டத்தில் பேனாவை புடுங்கி சதக் என்று தொடையில் குத்தி விட்டேன்.. பாதி பேனா உள்ளே போகி விட்டது.. யாருமே எதிர்பார்க்கவில்லை . இவ்வாறு நான் செய்வேன் என்று.. எனக்கே தற்போது வரை ஆச்சரியமாக இருக்கும்..

  கல்லூரி படிக்கும் தருணங்களில் அதிகம் கோபம் வரும் போது ஹோட்டலுக்கு போய் நல்ல ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே எங்க ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போன அங்க இருக்கிற மரங்களில் வசிக்கும் குருவி, கிளிகளின் சப்தங்களை கேட்டு கொண்டே பெஞ்சில் தூங்கி விடுவேன்.. சொர்க்கத்தில் உள்ளது போல இருக்கும்.. எழுந்தவுடன் இன்று ” பிறந்த குழந்தை போல உணர்வேன்”..

  தற்போதும் கிரிக்கெட் நண்பர்களுடன் விளையாடும் பல தருணங்களில் கோபப்பட்டு இருக்கிறேன்.. பந்து வீசும் போது பேட்ஸ்மேனை உசுப்பேத்துவேன்.. முடிச்சா அடி டா.. சில நேரம் அடியும் வாங்குவேன். பல நேரம் விக்கெட் எடுப்பேன்..அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்.. அந்த கோபம் ஆட்டம் முடிந்தவுடன் மறைந்து விடும்..

  மற்றபடி அலுவலகத்தில் கோபப்படுவது இல்லை.. அரிதாக கோபம் வரும் போது அந்த இடத்தில் இல்லாமல் அமைதியாக சென்று விடுவேன்.. பல நேரம் கழிவறைக்கு சென்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்து கொண்டே இருப்பேன்.. அது எனக்கு ஒரு வித சாந்தத்தை கொடுக்கும்…

  குடும்பத்தை பொறுத்தவரை பல நிகழ்வுகளை அமைதியாக கடந்து விடுகிறேன்.. சிலவற்றிற்கு கோபத்தை வெளிப்படுத்தும் படி உள்ளது.. ஊரில் இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்ததால் பல கசப்பான நிகழ்வுகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.. பணம் தான் இங்கு பிரதானமாக இருக்கிறது.. நாம் நம்பிக்கை வைத்தவர்கள் நம்மை ஏமாற்றும் போது வெளிப்படுகிற ஆதங்கத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  • “பணம் தான் இங்கு பிரதானமாக இருக்கிறது.. நாம் நம்பிக்கை வைத்தவர்கள் நம்மை ஏமாற்றும் போது வெளிப்படுகிற ஆதங்கத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை”

   சத்தியமான வார்த்தை நம்பியவர்கள் ஏமாற்றும்போது ஏற்படும் வலி அது சொல்லி மாளாது. அதன் பிறகு எல்லா உறவுகளும் நட்புகளும் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆக மாறி விடுவார்கள்.

   • உறவுகளும் நட்புகளும் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆக மாறி விடுவார்கள்.
    =============================================
    இந்த காரணத்திற்காகவே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை.. வாழ்வில் “சக்தி” மட்டுமே உண்மையான நண்பராக மாறி போனார்.. இனி யாரிடமும் ஏமாற்றங்களை தாங்க உடம்பில் சக்தியில்லை..

 3. இது போன்ற நிகழ்வுகள் நம்முடைய அறிவு வட்டத்தை சுருக்கி விடும். நல்லவர்களையும் நாம் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதால் புதிய நல்ல நட்புகளும் ஏற்படாது. இனி ஒரு துரோகத்தை அல்லது மனவேதனையை தாங்க முடியாது என்ற சூழ்நிலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

  • பழகும் எல்லோரிடமும் நாம் “இவன் நமக்கு என்றாவது ஒரு நாள் துரோகம் செய்து விடுவானோ” என்ற எண்ணத்தோடே பழக முடியாது.. அவ்வாறு பழகுவதும் தவறு..

   இணையத்தில் எங்கோ படித்தது.. நட்பு கொள்வதில் நிதானம் காட்டு” “நட்பு கொள்வதில் அவசரப்படாதே!!! நட்பு கொண்ட பின் சீக்கிரம் விலகி விடாதே”..
   மிகவும் ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள்..

   என்னை பொறுத்தவரை கடந்த 15 / 20 ஆண்டுகளில் பல புதியவர்களை சந்தித்து இருக்கிறேன்.. பழகி இருக்கிறேன். ஆனால் எல்லோரும் நண்பர்களா? என்றால் நிச்சயம் இல்லை.. நமக்கு தெரிந்தவர்கள் வேறு.. பழகியவர்கள் வேறு..

   கல்லூரி பருவத்தில் இவன் தான் டா என் பெஸ்ட் பிரென்ட்.. என்று நாம் பழகிய எத்தனையோ நண்பர்கள் கால ஓட்டத்தில் இன்று திசைகள் மாறி பயணித்திருப்போம்.

   கைப்பேசியில் இருக்கும் 200 / 300 மேல் உள்ள அனைவரும் தெரிந்தவர்களே!!! ஆனால் அவர்களில் எத்தனை பேருடன் நாம் உறவு பாராட்டுகிறோம்.. எத்தனை பேர் நம்முடன் உறவு வைத்திருக்கின்றார்..

   நமது வலியையும், சோகத்தையும் பரிமாறி கொள்ள முதலில் யாரை அழைக்கிறோமோ “அந்த நண்பன் நான் நம் உண்மையான நண்பன் ஆவான்.. அதனால் அது போல ஒருவரை நாம் நிச்சயம் எல்லோருடைய வாழ்விலும் தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.. அந்த வகையில் சக்தியின் நட்பு எனக்கு கிடைத்தது உண்மையில் பாக்கியமே!!!

 4. நம்முடன் பழகியவர்கள் பயணித்தவர்கள் அனைவரும் நமது நண்பர் ஆகமாட்டார்கள் உண்மைதான்

 5. @விஜயகுமார்

  “காலத்தை மாற்ற முடியாது ஆனால் கடந்தகால தவறுகளை திரும்ப நடைபெறாமல் தவிர்க்கலாம்.”

  சரியே. நடந்ததை மாற்ற முடியாது.

  “Linux பற்றியும் அதைப் பயன்படுத்தி பழைய கணினிகளை உயிர் கொடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பது பற்றி தங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.”

  இது கொஞ்சம் பொறுமை வேண்டும் விஜயகுமார்.. மற்ற கட்டுரைகள் போல எழுதி விட முடியாது. நிறைய படிக்கணும்..ஆனால் முடியாதது அல்ல.. சோம்பேறித்தனம் 🙂 .

  “உங்களிடமிருந்து அனுபவம் மற்றும் தொழில்நுட்ப பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.”

  அனைத்து வகை கட்டுரைகளையும் எழுதிக்கொண்டுள்ளேன். சில நேரங்களில் சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி குறிப்பிட்ட வகைக் கட்டுரைகள் அதிகமாகலாம்.

  தொழில்நுட்ப கட்டுரைகளுக்கு பலர் ஆதரவு அளிப்பதில்லை. இது போலச் சொல்றாங்களே தவிர அதிகம் படிப்பது போல இல்லை.

  இருப்பினும் அவ்வப்போது அனைத்து கட்டுரைகளையும் எழுதிக்கொண்டே தான் உள்ளேன்.

  எனக்கு கவிதை, கதை மட்டுமே தெரியாது.. மற்ற அனைத்தையும் எழுதுவேன்.

  • காத்திருக்கிறேன். வலைத்தளங்களில் படிக்கின்ற இனிமை ஃபேஸ்புக்கில் இல்லை. கன்றாவி பிடித்த கமெண்ட்கள் விஷயத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன.பிளாக்குகளில் பழைய பதிவுகளை மீண்டும் படிக்கலாம்.எளிது.லைக்கு அடிமையாகி தன்னை உயர்வாக என்னவேண்டும் என்ற நினைப்பு பேஸ்புக்கில் மேலோங்கி உள்ளது.நீங்கள் எழுதுவதை நிறுத்தகூடாது அன்பு வேண்டுகோள்

   • எழுதுவதை நிறுத்த வாய்ப்புக்குறைவு.

    நான் எழுதவில்லை என்றால், நேரமில்லாதது மட்டுமே காரணமாக இருக்கும். மற்றபடி எழுத ஏதாவது விஷயங்கள் இருந்து கொண்டே தான் உள்ளது.

    எழுதுவது எனக்கு Passion என்பதால் சலிப்பது இல்லை.

    பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்துவது இல்லை. Blog மட்டுமே.

 6. @யாசின்

  “நாம் நம்பிக்கை வைத்தவர்கள் நம்மை ஏமாற்றும் போது வெளிப்படுகிற ஆதங்கத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.”

  ரொம்ப சரியா சொன்னீங்க யாசின்.

  ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று உதவினேன் ஆனால் பணத்தை ஏமாற்றி விட்டார். நேரடியாக ஏமாற்றவில்லை ஆனால், நம்பிக்கை துரோகம்.

  இதனால் சலிப்பாகிறது. நாம் ஏன் உதவ வேண்டும்? நட்டமடைய வேண்டும் என்று தோன்றுகிறது. நல்ல எண்ணத்தில் செய்தாலும் நமக்கே பிரச்சனையாகிறது.

  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அனுபவமாக எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டேன்.

  வேறு என்ன செய்வது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here