அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

5
அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

ம்முடைய பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணங்களில் ஒன்று “அடுத்தவன் என்ன நினைப்பான்?” என்ற எண்ணமே. Image Credit

என்ன நினைப்பான்?

நண்பர்கள், உறவினர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர் மற்றும் நமக்கு நெருக்கமுமில்லாதவர்கள் எவராக இருந்தாலும், அடுத்தவன் என்ன நினைப்பான் என்று நினைத்து நினைத்தே நாம் நிம்மதியைத் தொலைக்கிறோம்.

இது நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளவும், நிம்மதி இழக்கவும் செய்யுமே தவிர இதனால் எந்தப் பயனும் கிடையாது.

முதலில், அடுத்தவன் யாரு நமக்கு சான்றிதழ் கொடுக்க?!

நீங்க உங்க மனசாட்சிக்கு சரியானதை செய்தால், நீங்க எதற்கு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படணும்?

அடுத்தவன் 1000 பேசுவான் அவன் பேசுறதுக்கு எல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கை முழுவதும் பயந்து, நிம்மதியிழந்து, கவலைப்பட்டு இருக்க வேண்டியது தான்.

அவங்க இப்படி சொல்றாங்க.. நம்மை பற்றி அப்படி பேசுறாங்க..” இவையே பலரின் நிம்மதியை இழக்க வைக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன என்று பார்த்தால், “அடுத்தவன் என்ன நினைப்பான்” என்ற விஷயம் தான்.

பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. ஏனென்றால், அது தான் அவங்க வேலை, பொழுதுபோக்கு. அடுத்தவர்களைப் பற்றி பேசி இன்பம் காணுவதே அவர்களுக்கு தலையாய கடமை.

அதுவும், நீங்க இதை நினைத்து வருத்தப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீங்களே அவர்களை உற்சாகப்படுத்த நினைத்தால் மட்டுமே இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

அடுத்தவர் இது போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியடைய வேண்டுமென்றால் மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும்.

நீங்கள் முட்டாளா? யாராவது அடுத்தவன் கெட்ட எண்ணத்தில் மகிழ்ச்சியடைய தன்னை வருத்திக்கொள்வானா?

நம்மை பற்றி தவறாக கூறுபவர்கள் எதிரில் நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதே அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும், அடுத்தவன் நம்மைப் பற்றித் தவறாகப் பேசி மகிழ்ச்சி அடைகிறானோ அல்லது வேறு எதுவும் நினைக்கிறானோ அதைப் பற்றி நமக்கென்ன?!

நாம் நம்ம வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்போம். இது தான் சிறந்தது.

என்ன நினைத்தால் நமக்கென்ன?

மற்றவங்க என்ன நினைத்தால் நமக்கென்ன? அவர்கள் நினைப்பதால், பேசுவதால் நாம் என்ன இழக்கப்போகிறோம்? உங்களை யாருக்கு நிரூபிக்க நினைக்கிறீர்கள்?

புரிந்து கொள்பவர் நீங்கள் எதுவும் சொல்லாமலே புரிந்து கொள்வார். புரிந்து கொள்ளாதவர், நீங்கள் எவ்வளவு விளக்கியும் புரிந்து கொள்ளப்போவதில்லை. அப்புறம் என்ன?

இதையெல்லாம் யோசித்தால், நீங்கள் செய்வது முட்டாள்தனமான செயல் என்று புரியும்.

நான் இப்படித்தான்” என்ற ஒரு பதிலில் அனைத்தும் அடித்துச் செல்லப்படும்.

வேண்டும் என்றே ஏதாவது கூறுபவர்களைத் திருப்தி செய்வது உங்கள் வேலையல்ல! இதைப் புரிந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

புறம் கூறுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற உணர்வு மிக அற்புதமானது, மிகச் சுதந்திரமானது.

நீ எதையோ சொல்லிட்டுப் போ எனக்கென்ன?!” என்று இருந்து பாருங்கள்!

எப்போதும் பறந்து கொண்டு இருப்பது போலவே இருக்கும்.

உங்கள் கைகளைக் கட்டி இருக்கும் போதும், கட்டுகளை அவிழ்த்த பின்னரும் இருக்கும் நிலை தான், மேற்கூறியது.

நேர்மையான விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுங்கள், மற்றதை புறக்கணியுங்கள். கவலையற்ற, சுதந்திரமான மனநிலையை அடைவீர்கள். இதை அனுபவித்ததாலே கூறுகிறேன்.

எளிமையாகப் புரிய ரஜினி கூறிய கதையையே கூறலாம்..

புத்தர் நடந்து செல்லும் போது அவர் முன்னே வந்த சிலர் மிகக் கடுமையான வார்த்தைகளில் புத்தரை விமர்சித்தார்கள் ஆனால், புத்தர் அமைதியாகவே இருந்தார்.

அவர்கள் சென்றதும், அவருடைய சீடர்கள், “குருவே! அவர்கள் அவ்வளவு கடுமையாக திட்டியும் நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே!” என்று கேட்ட போது, “அவர்கள் கொட்டி விட்டுச் சென்றதை நான் எடுத்துக்கொள்ளவில்லையே!” என்று கூறினாராம்.

அது போலத்தான், பேசுறவங்க பேசிட்டே இருப்பாங்க.. புறக்கணித்துட்டு போயிட்டே இருங்க.

கொசுறு 1

இதைச் சில வருடங்களாக பின்பற்றுகிறேன் என்றாலும், எனக்கு இந்த விசயத்தில் முன்மாதிரி தலைவர் ரஜினி அவர்கள் தான்.

எத்தனை விமர்சனங்கள்! அவர் பேசினாலும் பேசா விட்டாலும் எதையாவது விவாதித்து அவரை விமர்சிக்கிறார்கள்.

அவர் சொல்லாததையெல்லாம் சொன்னதாகக் கூறி விமர்சிக்கிறார்கள். இதையெல்லாம் தாங்க வேண்டும் என்றால், புறக்கணிக்கப் பழக வேண்டும்.

ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருந்தால், அவர் நிலை என்ன ஆகி இருக்கும்?! ஆனால், அவரும் மகிழ்ச்சியாக உள்ளார்! யாரையும் வருத்தமடைய வைப்பதும் இல்லை.

தேவையானதை கேட்டுக்கொள்கிறார், புறம் கூறுபவர்களை ஒதுக்குகிறார், முக்கியத்துவம் / பதில் கொடுப்பதில்லை ஆனால் பாருங்கள்..

அவர் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறார்.

அவரை விமர்சிப்பவர்கள் அப்படியே உள்ளார்கள் அல்லது மோசமான நிலையை அடைகிறார்கள்.

எனவே, யாராக இருந்தாலும் அடுத்தவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்த்து விட்டு நாம் உயர என்ன செய்யலாம்? என்று சிந்தியுங்கள்.

வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கொசுறு 2

இக்கட்டுரையிலேயே ஒரு எடுத்துக்காட்டு உள்ளது.

ரஜினியை பிடிக்காதவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு எதற்கு இதில் ரஜினியை கொண்டு வர வேண்டும் என்ற எரிச்சல் இருக்கும்.

அவர்களைத் திருப்தி செய்ய எனக்குப் பிடித்ததை எழுதாமல் இருக்க முடியுமா?! 🙂 .

இது தான் நம்ம மனசுக்கு பிடித்ததை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிக் கவலைப்படாமல் செய்வது. அடுத்தவரைத் திருப்தி செய்வது என் வேலையல்ல!

நீங்களும் யார் என்ன கூறினால் என்ன?! சொல்லும் விஷயம் சரியா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். இதுவே நம்மை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. இந்த மனோபாவம் நமக்கு முழுமையாக உண்மையாக வர வேண்டும் என்றால் காந்திய கொள்கைகளில் நாட்டம் இருக்க வேண்டும். எனக்கு உண்டு. இதைத்தான் தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறேன்.

 2. அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று நினைத்தே தங்களை வருத்தி பாதிப்படைந்து கொள்ளும் மிகபெரும் பெருப்பான்மையினரை சிந்திக்க வைக்கும் நல்லதொரு பதிவு. அதற்குள் உங்க உங்க ரஜினிகாந்த்தையும் கொண்டுவந்துள்ளீர்கள் 🙂
  //அடுத்தவர் இது போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியடைய வேண்டுமென்றால் மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும்.
  நீங்கள் முட்டாளா? யாராவது அடுத்தவன் கெட்ட எண்ணத்தில் மகிழ்ச்சியடைய தன்னை வருத்திக்கொள்வானா?//
  அப்படி தானே நடைபெறுகிறது அடுத்தவன் தன்னை பார்த்து பிரமிக்க வேண்டும் என்பதிற்காக தானே தனது சக்தியையும் மீறி தன்னை வருத்தி ஆடம்பர திருமண விழாக்கள் பிறந்த நாள் விழாக்கள் என்று இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 3. அடுத்தவர்கள் என்ன?? நினைப்பார்கள் என என்றும் நான் கவலை கொண்டதில்லை.. குறிப்பாக சுற்றி இருப்பவர்களின் கருத்துக்களை என்றும் காதில் வாங்கிக் கொள்வதில்லை.. இதன் காரணமாகவே நெருங்கிய சொந்த / பந்தங்களில் கொஞ்சம் கெட்ட பெயரும் உண்டு.. யார் சொன்னாலும் கேட்கமாட்டான் என்று.. உண்மை அவ்வாறில்லை..

  சிறு வயதிலிருந்து எல்லா விஷயங்களிலும் சுயமாக முடிவெடுக்க என் தாய் அனுமதித்ததின் விளைவு தான் என்னை ஒரு சுயம்பாக வளர செய்தது..தற்போது வரை என்னுடைய எந்த விஷியத்திலும் என் தாய் குறுக்கிட்டதில்லை.. திருமணத்திற்கு பின்பும் இதே நிலை தான் தொடர்கிறது.. ஆனால் மனைவிக்கு மட்டும் சில சமயங்களில் அந்த நாலு பேரை குறித்து கவலை இருக்கும்..

  மூன்று ஆண்டுகளுக்கு முன் தெரிந்த சொந்தத்தில் ஊரில் நடந்த ஒரு விழாவிற்கு மனைவியுடன் சென்றேன்.. அங்கு என் மனைவியின் தோழி, என் மனைவியிடம் உங்கள் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கிறார், அவரின் சட்டை ரொம்ப சாதரணமாக (பழைய) சட்டையாக தெரிகிறது என கூறியுள்ளார்.. வீட்டிற்கு வந்த என் மனைவி என்னிடம் இதை கூற, நான் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை..

  இவர்களை நினைக்கும் போது சிரிப்பாக இருக்கிறது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் தான்.. அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக நாம் வாழ்க்கை வாழ முடியாது.. பின்வரும் வரிகள் இணையத்தில் தற்செயலாக படித்தது.. படித்த உடன் மிகவும் பிடித்து போனது .. இதை வாழ்க்கையில் பின்பற்றவும் முயற்சி செய்து வருகிறேன்..

  “ஒருவன் அடைந்ததைக் கண்டு பொறாமைப்படாதீர்கள். அவன் இழந்தவை தெரிந்தால், அடைய வேண்டும் என்ற ஆசையே உங்களுக்கு வராது..” சத்தியமான உண்மை…

  பகிர்வுக்கு நன்றி கிரி..

 4. மிக சரியாய் சொன்னீர்கள். உவமையாக ரஜினிகாந்த் !
  அதே போல் கருத்துக்களில் யாசீன் அவர்கள் சொன்னதும் நடக்கறது. கைகொட்டி சிரிப்பார்கள் ஊரார் கைகொட்டி சிரிப்பார்கள் என்று ஒரு சினிமா பாடல் இருக்கிறது எந்த படம் என்று ஞாபகம் இல்லை. மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று அதே சமயம் மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிட்டால் நாம் தனிமை படுத்து விடுவோமோ என்று பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

 5. @ஜோதிஜி காந்தி கொள்கைகள் எதையும் நான் பின்பற்றுவது போல தெரியவில்லை. எனக்கு இயல்பாகவே இதில் ஆர்வம் வந்தது, பின்னர் ரஜினி மற்றும் என்னுடைய சொந்த அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொண்டேன்.

  @வேகநரி “அதற்குள் உங்க உங்க ரஜினிகாந்த்தையும் கொண்டுவந்துள்ளீர்கள் ?”

  நான் மாற அவரும் ஒரு முக்கியக் காரணம் என்ற நன்றி.

  “அடுத்தவன் தன்னை பார்த்து பிரமிக்க வேண்டும் என்பதிற்காக தானே தனது சக்தியையும் மீறி தன்னை வருத்தி ஆடம்பர திருமண விழாக்கள் பிறந்த நாள் விழாக்கள் என்று இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறார்கள்.”

  இதில் இரண்டு விஷயம் உள்ளது.

  தேவையற்று செலவு செய்வது ஒரு வகையில் தவறு.

  ஆனால், இதன் மூலம் நேரடியாக மறைமுகமாக பலர் பயன் பெறுகிறார்கள். பலர் தொழில் கிடைக்கப்பெறுகிறார்கள்.

  மற்றவர்களுக்கு தொல்லை / பாதிப்பு இல்லாதவரை யாரும் எதையும் பண்ணினால் என்னை பொறுத்தவரை சரி தான்.

  @யாசின்

  “மனைவிக்கு மட்டும் சில சமயங்களில் அந்த நாலு பேரை குறித்து கவலை இருக்கும்..”

  அது இயல்பு. நம்மை போலவே அனைவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

  சில நேரங்களில் மற்றவர்களை / சமூகத்தை பற்றி யோசிக்காமல் செய்து விட முடியாது என்ற நடைமுறை எதார்த்தம் இருப்பதால், மாற்றக் கூடிய விஷயங்களில் நம்மை மாற்றிக்கொள்வது நமக்கு நன்மை.

  @சரவணன் “மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று அதே சமயம் மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிட்டால் நாம் தனிமை படுத்து விடுவோமோ என்று பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்”

  உண்மை தான். எது சாத்தியமோ அதை செய்யலாம். அதற்காக எனக்கு பிடிக்கிறது என்று அனைத்தையும் செய்து விட முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here