செஸ் ஒலிம்பியாட் | மாஸ் காட்டிய தமிழக அரசு

2
செஸ் ஒலிம்பியாட்

ந்தியாவில், தமிழ்நாட்டில் நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கவிழா நேரு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. Image Credit

செஸ் ஒலிம்பியாட் சிறப்பு நிகழ்ச்சிகள்

துவக்க விழாவில் நிகழ்ச்சிகளைத் தமிழக அரசு அட்டகாசமாக நடத்தி அசத்தி விட்டது. ஒரு தமிழனாக இவற்றைப் பார்க்க மிகப்பெருமையாக இருந்தது.

செஸ் போட்டியாளர்கள் ஒவ்வொரு நாட்டினராக வந்த போது அவர்கள் நாட்டின் கொடியைப் பிரதிபலித்தது அற்புதமாக இருந்தது.

லிடியன் நாதஸ்வரம் இசை நம்மவர்களுடன் பார்வையாளர்களாக இருந்த வெளிநாட்டினரையும் மிகக்கவர்ந்தது. அதிலும் குறிப்பாக ஒருவர் ரொம்ப ரசித்து ஆடிக் கொண்டு இருந்தார்.

இதன் பிறகு வந்த மணல் ஓவியம் நன்றாக இருந்தாலும், அவ்வளவு நேரம் நீட்டித்து இருக்க வேண்டாம், கிட்டத்தட்ட 25 நிமிடங்களைக் கடந்தது.

தற்போதெல்லாம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரே மாதிரியான நிகழ்ச்சியை யாரும் பார்க்க விரும்புவதில்லை. எனவே, நேரத்தை முன் கூட்டியே திட்டமிட்டு இருக்கலாம்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா தமிழ் ஆங்கிலம் கலந்து சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

தமிழரின் பெருமை

தமிழர்கள் வரலாறை / பெருமையை விளக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சி அனைவரையும் மிகக்கவர்ந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்கள் வரலாறைக் கூறும் நபராகக் கமல் குரல் கொடுத்து இருந்தார். தமிழில் செயற்கையாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசியது செம்ம கெத்தாக இருந்தது.

கமல் குரல் நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதாக இருந்தது. சில தமிழ் வார்த்தைகளை ஆங்கிலப்படுத்தாதது, தமிழ் தெரியாதவர்களுக்குப் புரிந்து இருக்காது.

அரங்கு அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தாமல், ஒளித்திரையில் (3D Mapping) காட்சிகளைக் கொண்டு வந்து அசத்தி விட்டார்கள்.

அந்தந்த சூழ்நிலைகள், காட்சிகள் ஒளித்திரையாக வரும் போது அதன் முழுமையான அர்த்தத்தை, விளக்கத்தை உணர முடிந்தது.

எஞ்சாமி‘ பாடலுடனான நடனமும் சிறப்பு, பொருத்தமாகவும் இருந்தது.

தரமான நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சியைச் விக்னேஷ் சிவன் தயாரித்து வழங்கினார்.

செஸ் முன்னோட்ட காணொளியைச் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் போல எடுத்து அனைவரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன் இதில் வட்டியும் முதலுமாகத் திரும்பிக் கொடுத்து விட்டார்.

எந்த ஒரு தேவையற்ற காட்சிகளும், விவரங்களும் இல்லாமல் CLEAN சம்பவங்களாகக் கொடுத்து இருந்தார். 

சேரர், சோழர். பாண்டியர், பல்லவர் காலங்கள், சுதந்திர காலம், சுனாமி என்று அனைத்தையும் காட்சிப்படுத்தியிருந்தது சிறப்பு.

திராவிடம், பெரியார்ன்னு கடுப்பை கிளப்புவார்களோ என்று நினைத்தேன் ஆனால், மாறாக அனைவருக்கும் முன்மாதிரியான நிகழ்ச்சியை நடத்தி காட்டி விட்டார்கள்.

அரசு நிகழ்ச்சி எப்படி நடத்த வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழகச் செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சி அமைந்து விட்டது.

முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் இல்லாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இது போல ஒரு CLEAN நிகழ்ச்சியைக் கொடுத்ததற்கு முதல்வரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அரசியலுக்காகத் தேவையற்றதை நுழைக்காமல் அரசு நிகழ்ச்சியை அமைத்ததற்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.

எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் முருகன் உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசினார்.

கடந்த முறை நலத்திட்ட விழாவில் ஸ்டாலின் சம்பந்தமே இல்லாமல் அரசியல் பேசியதுக்கு இதில் இவ்வாறு பேசினாரா எனத் தெரியவில்லை.

ஒரு விளையாட்டு துவக்க விழாவில் பேசுகிறோம் என்பதைப் போல அல்லாமல், ஒரு அரசியல் விழாவில் பேசுவது போலப் பேசினார்.

ஆனால், நெடு நேரம் பேசாமல் முடித்துக்கொண்டார்.

ஸ்டாலின்

ஸ்டாலின் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் மாற்றி மாற்றிப் பேசினார். பேசும் போது 102 கோடி செலவிடப்பட்டது உட்படப் பல விவரங்களைக் கூறினார்.

இந்த விவரங்களைக் கூறும் நிகழ்வு இதுவல்ல காரணம், அமர்ந்து இருப்பது வெளிநாட்டினர், அவர்களுக்கு இவையெல்லாம் அவசியமில்லாதது.

அதோடு சரம் சரமாகக் காகிதம் எடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.

இது போன்ற நிகழ்வில் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது நிகழ்ச்சி சம்பந்தப்பட்டதைப் பேச வேண்டும்.

ஸ்டாலின் பேசும் போது அவரது மனைவி துர்கா பெருமையுடன் கவனித்துக்கொண்டு இருந்தார். ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் முகம் மலர்ந்தது.

விளம்பரத்தில் மோடி படமில்லை, முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், மோடியும் ஸ்டாலினும் இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

வெளியே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் மேடையில் பேசிய ஸ்டாலின் அரசியல் நாகரீகத்துடனே நடந்து கொண்டார், அதையொட்டியே மோடியின் பேச்சும் இருந்தது.

மோடி

மோடி முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். இதுவரை மோடியின் முழுமையான பேச்சைக்கேட்டதில்லை. தற்போது தான் முழுமையாகக் கேட்கிறேன்.

மோடி பேசிய அனைத்துமே இந்தியாவின் பெருமை, தமிழ் மொழியின் பெருமை, செஸ் விளையாட்டைச் சுற்றியே இருந்தது.

தமிழின், தமிழர்களின் பெருமையோடு தமிழகத்துடன் செஸ் விளையாட்டுக்கு இருக்கும் தொடர்பையும் கூறி, திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறினார்.

விளையாட்டில் தோல்வியாளர்கள் இல்லை. வெற்றியாளர், எதிர்கால வெற்றியாளர் மட்டுமே‘ எனப் போட்டியாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் படி பேசினார்.

இந்திய அணிக்குக் காய் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

வந்தவர்கள் நேரடியாக மோடியிடம் கொடுத்து இருந்தாலும், இரண்டாவது வந்த போது அதை ஸ்டாலினை விட்டு எடுக்கக்கூறி இருக்கலாம் என்று தோன்றியது.

பாராட்டுக்குரிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

ஆக மொத்தத்தில் அசத்தலான, தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும்படியான நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள்.

நிகழ்ச்சிக்கு யார் உழைத்து இருந்தாலும், அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

இனி வரும் நாட்களில், போட்டிகள் முடியும் வரை இதே பெருமையைத் தக்க வைப்பது தமிழக அரசின், பொறுப்பாளர்கள் கையில் தான் உள்ளது.

துவக்க விழாவை, போட்டி ஏற்பாடுகளை மிகக்குறுகிய காலத்தில் (4 மாதங்கள்) அனைவரும் பாராட்டும்படியாகத் தமிழக அரசு நடத்தியுள்ளது.

கொசுறு 1

பிரக்ஞானந்தா திருநீர் வைத்து இருப்பதாலே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டுள்ளது.

அதற்குத் தகுந்த மாதிரி முன்னோட்ட காணொளியிலும் பிரக்ஞானந்தா விஸ்வநாதன் என்று யாரும் இல்லை.

ஆனால் நிகழ்ச்சியில் இருவருக்கும் சரியான மரியாதை கொடுத்து இருந்தார்கள்.

கொசுறு 2

திரையுலகிலிருந்து ரஜினி மற்றும் கார்த்தி மட்டுமே வந்து இருந்தார்கள். மற்றவர்களுக்கு அழைப்பு இல்லையா அல்லது வரவில்லையா என்று தெரியவில்லை.

ஒருவகையில் திரையுலகினர் வராதது நல்லதே! ஊடகங்கள் இதையே முன்னிறுத்தி பேசுவார்கள், எதைப் பேச வேண்டுமோ அதைத் தவிர்த்து விடுவார்கள்.

கொசுறு 3

தமிழக அரசு செய்த ஏற்பாடுகளைப் பாராட்டிச் செஸ் போட்டியாளர்கள் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவது கவனம் பெற்று வருகிறது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. வேலை பளுவின் காரணமாக செஸ் ஒலிம்பியாட் குறித்த எந்த செய்திகளையும், தகவல்களையும், காணொளிகளையும் இதுவரை பார்க்கவில்லை கிரி. உங்கள் பதிவின் மூலம் இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இருக்கும் என கருதுகிறேன்.. சின்ன வயதில் செஸ் விளையாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்..

  சொந்தமா செஸ் போட் இல்லாமல், நண்பர்கள் வீட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டே கற்றுக் கொண்டேன்.. தற்போது அரிதாக மட்டும் செஸ் விளையாடுவது உண்டு. குறிப்பாக என் வயதை ஒத்த 10 நண்பர்களில் 8 பேருக்கு செஸ் மீது பெரிய ஆர்வம் இல்லமல் இருக்கிறது. நேரம் இருந்து விளையாட அழைத்தாலும் விருப்பம் சிலருக்கு மட்டும் இருக்கிறது..

  (ஒருவகையில் திரையுலகினர் வராதது நல்லதே! ஊடகங்கள் இதையே முன்னிறுத்தி பேசுவார்கள், எதைப் பேச வேண்டுமோ அதைத் தவிர்த்து விடுவார்கள்) சரியா சொன்னிங்க!!! எந்த நோக்கத்துக்கு வந்தோம் என்பதே மாறி இருக்கும்.. வராமல் போனதும் நன்மை தான்..பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின்

  “சின்ன வயதில் செஸ் விளையாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்..”

  எனக்கு ஆர்வமில்லை 🙂 .

  “நேரம் இருந்து விளையாட அழைத்தாலும் விருப்பம் சிலருக்கு மட்டும் இருக்கிறது.”

  எனக்கும். எப்படி விளையாடுவது என்று கற்றுக்கொண்டேன் ஆனால், விருப்பமாக விளையாடத் தோன்றியதில்லை.

  ஆனால், செஸ் நன்றாக விளையாடுபவர்கள் மீது மதிப்புண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here