அம்மா என்றால் அன்பு பாசம்

31
amma அம்மா என்றால் அன்பு பாசம்

பெரும்பாலனவர்கள் ஏற்றுக் கொள்ளும் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் “அம்மாவின் அன்பு”. நம் மீது பலர் அன்பு வைத்து இருக்கலாம் ஆனால், எத்தகைய அன்பாக இருந்தாலும், அம்மா அன்பு முன்பு அவை பலமிழந்தே போய் விடுகின்றன.

அம்மா

எனக்குச் சிறு வயதில் இருந்தே அம்மா என்றால் ரொம்பப் பிடிக்கும்.

பொதுவாக அப்பா என்பவர் கண்டிப்புடன் இருப்பார். அதனாலேயே நமக்குப் பரிந்து பேசும் நமக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்து விடும் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்.

நமக்கு நம் அம்மாவுடன் இருக்கும் போது கூட அவ்வளவாகத் தெரியாது, நாம் வேறு எங்காவது செல்லும் போது ஏற்படும் பிரிவில் தான் நாம் அம்மாவை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதே புரியும், அம்மாவின் பாசமிகு அனுசரணைகள் தெரியும்.

எனக்கு ஏதாவது ஒன்று என்றால் இன்றும் துடித்து விடுவார்கள், நான் திருமணம் செய்து தந்தையாகி விட்டேன்.

இருந்தும் அம்மாவிற்கு நான் இன்னும் குழந்தை தான். சிறு தலைவலிக்கு கூட என்னவோ எதோ என்று பதறி விடுவார்கள்.

மனதைப் படிப்பவர்

அலுவலகம் செல்லும் போது யோசனையாக இருந்தால் மதியம் தொலைபேசியில் அழைத்துச் சாப்டாச்சா! உடல் நிலை நன்றாக உள்ளதா!

காலையில் நீ சரியாக இல்லையே ஏதாவது பிரச்சனையா! என்று என் மனதை உடனே படித்து விடுபவர்.

அம்மா வருத்தப்படுவார்களே என்று சாதாரணமாக இருக்க எப்படி முயற்சித்தாலும் பெரும்பாலான சமயங்களில் எனக்குத் தோல்வியே மிஞ்சும்.

என் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து வைத்து இருப்பவர்

சிறுவயதில் அம்மாவின் மீது வைத்து இருந்த பாசத்தை விடத் தற்போது வைத்து இருக்கும் பாசம் அளவிட முடியாதது.

காரணம் அது புரியாத வயது இது அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் வயது.

வயது அதிகமாக அதிகமாக அம்மாவின் மீது வைத்து இருக்கும் மரியாதையும் பாசமும் என் மீது வைத்து இருக்கும் பாசத்தால் அல்லது நடந்து கொள்ளும் முறையால் அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறதே தவிரக் கொஞ்சம் கூடக் குறையவில்லை.

முன்பு அம்மா என்ற ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் தற்போது கடவுளைப் போலப் பார்க்கிறேன்.

அம்மாவின் அன்பை எதனோடும் அல்லது யாரோடும் ஒப்பிட முடியாது, கடவுளை யாருடனும் ஒப்பிட்டுப் பேச முடியுமா! யார் சிறந்தவர் என்று!

எதிர்பார்ப்பில்லாத ஒரே ஜீவன்

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத நம் நலனை மட்டுமே சதா சர்வகாலமும் எண்ணிக்கொண்டு இருக்கும் ஜீவன் இருக்குமானால் அது அம்மா மட்டுமே.

அவருடைய உடல் நிலை பற்றிக் கவலைப்படாமல், பிடிவாதமாக எனக்காக விரதம் இருப்பார் நான் நன்றாக இருக்க வேண்டுமென்று.

தற்போது தான் நாட்களைக் குறைத்து!! கொண்டுள்ளார் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்க.

அம்மா இது வரை பெரிதாக எந்த ஒரு மகிழ்ச்சியையும் அனுபவித்தது கிடையாது காரணம், குடும்ப நிலை. அம்மாவும்  அதைப் பெரிதாக நினைப்பது கிடையாது.

அம்மா எண்ணம் முழுவதும் அப்பாவும் பிள்ளைகளான நாங்களும் நன்றாக இருந்தால் அதே அவர்களுக்குப் மகிழ்ச்சி. தனிப்பட்ட முறையில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட.

எனக்குச் சிறு வயதில் இருந்தே அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

7 ம் வகுப்பில் இருந்து மாணவர் விடுதியில் தான் இருந்தேன், பள்ளி படிப்பு முடிந்த பிறகும் உடனே சென்னை வந்து விட்டேன்.

சென்னையில் 12 வருடம் என்று என் வாழ்க்கையின் பெரும்பகுதியை என் அம்மாவுடன் இல்லாமலே கழித்து விட்டேன்.

உடன் இருந்தால் அன்பு தெரியாதோ என்னவோ பிரிந்து இருந்ததால் எப்போதும் அம்மா மீது எனக்குத் தனிப் பிரியம்.

STD கட்டணம்

சாப்பாடு சரியாகச் சாப்பிடுகிறேனோ இல்லையோ என் அம்மாவிற்கு மறக்காமல் சென்னையில் இருந்த போது போன் செய்து விடுவேன்.

அப்போது STD கட்டணம் ரொம்ப அதிகம், 15 நிமிடம் பேசினாலும் கட்டணம் தாறுமாறாக வரும்.

மாலை 5 மணிக்குப் போன் செய்தாலும் சரி வழக்கமாகக் கேட்கும் முதல் கேள்வி ‘தம்பி! சாப்டாச்சா?‘ என்பது தான்.

என்னம்மா நீங்க! சாயங்காலமே ஆகி விட்டது இப்ப போய்க் கேட்கறீங்களே!‘ என்றால் புன்னகை மட்டுமே பதிலாக வரும்.

நல்லா சாப்பிடுறயா! எண்ணெய் தேய்த்து குளி, வெய்யிலில சுத்தாதே, இரவு ரொம்ப நேரம் கண் விழித்து இருக்காதே, தண்ணீர் நிறையா குடி என்று எத்தனை முறை போன் செய்தாலும் இதுவே முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கும்.

என்னம்மா! நீங்க இப்படிக் கேட்டுக் கேட்டே எனக்கு ₹30 ருபாய் ஆகி விட்டது என்று ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவேன்.

ஆனால், இந்தக் கேள்விகள் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிங்கப்பூர்

அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லையே அல்லது உடன் நான் இருக்கவில்லையே என்று வருத்தம் எனக்குப் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது, அப்போது கிடைத்தது தான் சிங்கப்பூர் வேலை.

நான் இங்கு வந்ததே பெரிய விசயமாக இருக்கும் போது அம்மாவை வெளிநாடு அழைத்துச் செல்வேன் என்று நினைக்கவே இல்லை.

அம்மாவை விமானத்தில் அழைத்து வந்த போது அவரது அருகில் உட்கார்ந்து இருந்த எனக்கு அப்போது கிடைத்த மகிழ்ச்சி எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.

நானும் வேலைக்கு வந்த பயனை அடைந்து விட்டேன் என்று நினைத்தேன்.

18 வருடங்களுக்குப் பிறகு

அம்மா சிங்கப்பூர் வந்ததைப் பெரிய மகிழ்ச்சியாக எண்ணி கூறிய போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சி அளவிட முடியாது.

18 வருடங்களுக்குப் பிறகு என் அம்மாவுடன் இங்கு தான் இருந்தேன்.

பள்ளியில் மாணவர் விடுதியில் இருந்த போது, அப்பாவிற்குத் தெரியாமல் என் கையில் செலவுக்குப் பணத்தைத் திணித்துச் சென்றது…

சென்னையில் இருந்த போது வேலை தேடிய போது பணம் இல்லாமல் சரியாகச் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்ட போது அதை நான் ஊருக்கு வரும் போது சொல்லிச் சொல்லி வருத்தப்படுவது, பல நேரங்களில் கண் கலங்குவதும்…

சிங்கப்பூர் வேலைக்காக வந்த போது விமான நிலையத்தில் என் பிரிவைத் தாங்க முடியாமல் எவ்வளோ கட்டுப்படுத்தியும் முடியாமல் அழுததையும் என்னால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.

அன்புத் தொல்லை

வேறு ஏதாவது யோசனையாக இருந்தாலும் தலைவலிக்குதா..உடம்பு சரியில்லையா என்று எப்போதும் என்னை அன்புத் தொல்லை செய்பவர்.

பல நேரங்களில் எனக்குப் பெருத்த சந்தேகம் வருவதுண்டு.

எனக்குக் கோபம் வரும்படியோ அல்லது என் மனது வருத்தப்படும் படியோ எப்போதும் பேசமாட்டார்கள் அது எப்படி! என்று இன்று வரை எனக்குப் பெரிய சந்தேகம்.

அம்மா என்றால் பிள்ளையின் மனதை புரிந்து வைத்து இருப்பார்கள் என்று கூறுவது இது தானோ!

என்னோட விருப்பங்களைக் கூட அவரது விருப்பங்களாக மாற்றிக்கொண்டவர்.

எனக்கு ரஜினி பிடிக்கும் என்பதால் அம்மாவிற்கு ரஜினி பிடிக்குமா அல்லது உண்மையாகவே ரஜினி பிடிக்குமா என்று இன்று வரை எனக்குச் சந்தேகம்.

எனென்றால், முன்பு ரஜினி பிடிக்கும் என்று அவர் கூறியதாக எனக்கு நினைவில்லை, எனக்கு ரஜினி பிடிக்கும் என்று கூறிய பிறகே அவரும் ரசித்ததாக நினைவு.

தலைமுறை இடைவெளி

பொதுவாக வயதானவர்கள் என்றால் தற்போதைய தலைமுறையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்ற கருத்துண்டு.

அப்படிக் கூறுபவர்கள் அம்மாவிடம் பேசினால் தங்கள் கருத்தைக் கண்டிப்பாக மாற்றிக் கொள்வார்கள்.

நடைமுறை பிரச்னையைப் புரிந்து கொண்டு பிடிவாதம் பிடிக்காமல் பழைய கதை பேசாமல் அனைத்தையும் உணர்ந்து பேசுபவர்.

அவ்வளவு புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர். அடிக்கடி அம்மாவிடம் கிண்டலாகக் கூறுவது.. அம்மா! நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை 🙂 .

என் மிகச் சிறந்த நண்பர்களுள் குறிப்பிடத்தக்கவர் அம்மா.

அம்மாவின் மீது நான் வைத்து இருக்கும் அன்பிற்கு அளவே இல்லை.

யாரும் அம்மாவைக் கிண்டலுக்குக் கூடத் திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அது அப்பாவாக இருந்தாலும் சரி.

என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி வரும் :-). எனக்குக் கூடக் கோபம் வரும் என்று அப்போது தான் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

யாராக இருந்தாலும் பாரபட்சமின்றிச் செம திட்டு விழும்.

அம்மா என்ற தெய்வம்

அம்மாவைப் பற்றிப் பேசுவதென்றால் அதற்கு முடிவே இல்லை.

அடுத்தப் பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் அதிலும் இவருக்கே மகனாகப் பிறக்க வேண்டும் என்பதே என் விருப்பம், மற்றபடி வேறு எந்த விருப்பமும் இல்லை.

பணம் சம்பாதிக்கும் ஆசையில் கோவில் கோவிலாகச் சென்று வேண்டுகிறார்கள் பலர், அவர்களுடனே ஒரு தெய்வம் இருப்பதை மறந்து.

அம்மாவைப் புரிந்து கொள்ளுங்கள் அம்மாவிற்கென்று நேரம் செலவழியுங்கள்.

அம்மாவை விடச் சிறந்த தெய்வம் உலகில் இல்லை என்பதை உணருங்கள். பணம் மட்டுமே அல்ல வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதியோர் இல்லம் என்ற ஒன்றை இல்லாமல் செய்யுங்கள்.

அனைவருக்கும் “அன்னையர் தின வாழ்த்துகள்”

அம்மா என்ற தெய்வத்தை நேசிக்கும் அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்.

தொடர்புடைய கட்டுரைகள்

கதையல்ல நிஜம் | ஒரு நாளில் ஒரு லட்சம்

தலைவர் ரஜினி

சென்று வாருங்கள் அப்பா!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

31 COMMENTS

  1. அம்மா இங்க வா வா
    அன்பை மட்டும் தா தா.
    நீ மட்டும் போதும்
    ஊரில் எவரும் வேணாம்.
    பூமியில் யாரும் இல்லை
    உன்ன போல அம்மா.

  2. ஒரு இனிய காலை அன்பாய் அழகாய்த் தொடங்க வைத்ததற்கு நன்றி.

  3. கவிஞர் வாலி,இசை இளையராஜா & ரஜினியின் கூட்டுப்படையல் அந்த பாட்டு.
    சில சமயம் கேட்கும் போது அப்படியே எங்கேயோ இழுத்துப்போய் விடும்.

  4. உங்கள் பதிவு என் மனதை பிரதிபலிக்கிறது…..இந்த அருமையான பதிவுக்கு என் நன்றி…..
    அன்னையர் தின நல் வாழ்த்துகள்

  5. நல்ல பதிவு… நெகிழ்ச்சியடைய செய்தது அம்மா மீதான உங்கள் பாசம்.

  6. அருமை அருமை.உங்கள் சமீபத்து பதிவுகளில் மிக நல்ல பதிவு.
    //என் அம்மாவை விமானத்தில் அழைத்து வந்த போது அவரது அருகில் உட்கார்ந்து இருந்த எனக்கு அப்போது கிடைத்த சந்தோசம் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது//
    உண்மை.நிச்சயம்.சத்தியம்.

  7. நான் சொல்ல சொல்ல நீங்க எழுதுன மாதிரி இருக்குது கிரி!

  8. அனைத்து தாய்குலங்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  9. ‘அம்மாவின் அன்பு’ எழுத்தின் சிகரம்.

    தாய்க்குல பதிவர்கள் சார்பாகவும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  10. தாயின் பாசத்தை அனுபவித்து எழுதியுள்ளீர்கள் கிரி.

    கணவன், குழந்தைக்குத் தகப்பன் என்ற நிலைக்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட தாயிடமிருந்து ஒரு விலகல் ஏற்பட்டுப் போவது யதார்த்தம்.

    காரணம், நாம் புதிய பெரிய மனிதர்களாகிறோம். நம் அம்மாவோ இன்னும் அதே மனுஷியாக நிற்கிறார். நமக்கும் வயதாகும்போதுதான் இந்த உண்மை புரிந்து மனம் தவிக்கிறது.

    ஆனால் நீங்கள் இன்னும் அந்த தொட்டில்வாசம் மாறாமல், தாயிடம் பிணைப்பாக இருப்பதுதான் சிறப்பு.

    அன்னையர் தினத்துக்கு பிள்ளைகள் வாழ்த்து சொல்வது அபத்தம். தாயின் உள்ளம்தான் எப்போதும் வாழ்த்தும் உள்ளமாயிற்றே!

  11. /எனக்கு கோபம் வரும்படியோ அல்லது என் மனது வருத்தப்படும் படியோ எப்போதும் பேசமாட்டார்கள்//

    -:) முற்றிலும் உண்மை,

    அன்னையர் தினத்தில் தான் அன்னையை பற்றி பதிவு போடனுமா,
    அம்மா நினைப்பிருக்கிற ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம் தான்.

  12. மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரி.

    பித்தன் said…
    //அன்னையர் தினத்தில் தான் அன்னையை பற்றி பதிவு போடனுமா, அம்மா நினைப்பிருக்கிற ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம் தான்.//

    உண்மைதான்,அம்மா நினைப்பிருக்கிற ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமேதான். ஆனால் இது போன்ற தினத்தில் நம் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதால் கிடைக்கிறது ஒரு மன நிறைவு. கூடவே அம்மா நினைப்பு இல்லாத சிலரின் மனதை தட்டி எழுப்பவும் செய்திடுமல்லவா பதிவு? எல்லோரது அனுபவங்களிலும் எவரேனும் ஒருவருக்காவது ஒரு செய்தி கிடைக்குமாயின் நல்லதுதானே பித்தன்? ஆகையால் அன்னையர் தினத்தில் அவர்களை சற்று ஸ்பெஷலாக வாழ்த்திடுவோம் வாருங்கள்:)!

  13. அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

  14. கிரி…
    அம்மா எப்படி இருக்காங்க, நீங்க எப்படி இருக்கீங்க, குழந்தை எப்படி இருக்கான்…

    ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவிற்கு பதில் அளிக்கிறேன்…
    உங்களுடைய இந்த பதிவை வாசிக்கும் பொது என் சொந்த வாழ்க்கைய திரும்பி பத்து போல இருந்தது…. இடையில் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன்

    ” அவருடைய உடல் நிலை பற்றி கூட கவலைப்படமாட்டார், ஆனால் என்ன கூறியும் பிடிவாதமாக எனக்காக விரதம் இருப்பார் நான் நன்றாக இருக்க வேண்டுமென்று”

    “எனக்கு ரஜினி பிடிக்கும் என்பதால் என் அம்மாவிற்கு ரஜினி பிடிக்குமா அல்லது உண்மையாகவே ரஜினி பிடிக்குமா என்று இன்று வரை எனக்கு சந்தேகம், எனென்றால் முன்பு ரஜினி பிடிக்கும் என்று அவர் கூறியதாக எனக்கு நினைவில்லை, நான் எனக்கு ரஜினி பிடிக்கும் என்று கூறிய பிறகே அவரும் ரசித்ததாக நினைவு.”

    இவையாவும் என் வாழ்விலும் நடந்தவை…
    நன்றி கிரி சந்தோசமா இருக்கு…

  15. அருமையான அன்னையர் தினப் பதிவு.
    தன் வாழ்நாளில் தன் தாய்,தந்தையரை மகிழ்வாய் வைத்துப் பார்த்துக்கொள்கிறவன் எல்லா வளமும் பெற்று நலமோடிருப்பான் என்று எங்க வீட்ல சொல்லுவாங்க. நீங்க நல்லா இருப்பீங்க கிரி.

  16. படித்து கண் கலங்கினேன் ! சிறந்த படைப்பு வாழ்த்துகள் !

  17. ரொம்ப அழகாக சொன்னிங்க உங்க அம்மா பையன் பாசத்த பக்குரப்ப எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த அன்பும் பாசமும் நிண்ட நாட்கள் நிடித்து இருக்க இறைவனை வேண்டிக்கிறேன் ஒவ்வொரு வரியும் வாசிக்க வாசிக்க அவ்வளவு சந்தோசமும் ஆனந்த கண்ணீரும் தான் வந்ததது………………… என்றும் வாழ்க வளமுடன் …… பவித்ரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here