கூகுள் எப்படி உருவாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை விளக்கும் புத்தகமாக உள்ளது கூகுள் : வெற்றிக்கதை, ஆசிரியர் சொக்கன்.
கூகுள்
கூகுள் எப்போது எனக்கு அறிமுகமானது என்று நினைவில்லை. தோராயமாக 2002 ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஜிமெயில் (2004 ஏப்ரல் 1) அறிமுகம் ஆன போது, அழைப்பிதழ் அடிப்படையில் அறிமுகப்படுத்தினார்கள். இதனாலயே இதன் மீது அதீத எதிர்பார்ப்பானது.
அதோடு மின்னஞ்சலில் 5 MB போன்ற இட வசதி கிடைத்துக்கொண்டு இருந்த காலத்தில் தடாலடியாக 1 GB கொடுத்துப் பயனாளர்களை மட்டுமல்ல, போட்டியாளர்களையும் கிறுகிறுக்க வைத்தது.
இதன் பிறகே என் வாழ்க்கையில் இன்றியமையாத சேவையாகக் கூகுள் மாறியது.
லாரி பேஜ்
நான் நினைத்தது மிக ஏழை பின்னணியில், வசதியற்ற குடும்பத்தில் லாரி பேஜ் பிறந்து இருப்பார் என்று ஆனால், அந்தக்காலத்திலேயே (1978) வீட்டில் கணினி பயன்படுத்தும் அளவுக்கு வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்துள்ளார்.
அப்பவே கணினியில் ஆர்வம் கொண்டு வீட்டுப்பாடம் இதிலேயே செய்து, ஆசிரியர்களைத் திகைக்க வைத்துள்ளார்.
சிறு வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்த லாரி பேஜ் அது தொடர்பான செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மேம்படுத்திக்கொண்டார்.
லாரி பேஜ் கணினியில் மட்டுமல்ல, தலைமை பண்பிலும் தன்னை மேம்படுத்திக்கொண்டார்.
தன் ஆர்வத்துக்கும், திறமைக்கும் ஏற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த லாரி பேஜூக்கு அங்கே தன் வாழ்க்கை பயணத்தில் முக்கியமான நபரைச் சந்திக்கப் போகிறோம் என்று தெரியாது.
இப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த மாணவர்கள் உருவாக்கியது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களாக உள்ளன.
அதில் ஐபிஎம், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஹெச் பி போன்றவை அடங்கும்.
செர்கே
ரஷ்யா குடும்பத்தில் பிறந்து, குடும்பத்துடன் இடம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடர்ந்த செர்கே தந்தை சிறந்த கணித, பொருளாதார நிபுணர்.
இதையொட்டி செர்கேவும் மிகப்பெரிய கணித புத்திசாலியாக இருந்தார். எப்படியென்றால், இவருக்குக் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு.
இத்திறமையை அப்பா வாங்கிக்கொடுத்த கணினியின் மூலம் மேலும் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றார்.
கணினி அறிவு மூலம் சூத்திரங்களை உருவாக்கினார்.
இந்நிலையில் தான் லாரி பேஜ் அறிமுகம் கிடைத்து, இருவரின் எண்ணங்களும் ஒரே மாதிரி இருந்ததால், இணைந்து யோசிக்க ஆரம்பித்தார்கள்.
நூலகத்தில் புத்தகத்தைத் தேட பலர் சிரமப்படுவதை அறிந்து அதை எளிதாகக் கண்டறிய சூத்திரத்தை உருவாக்கியது பாராட்டுகளைப் பெற்றது.
BackRub (1996)
இவர்கள் முதல் பிராஜெக்ட்டாக BackRub அமைந்தது.
இது என்னவென்றால், ஒரு தளத்துக்கு யாரெல்லாம் இணைப்புக் கொடுத்துள்ளார்கள் என்று கண்டறிவதாகும்.
எடுத்துக்காட்டுக்கு, என் தள giriblog.com முகவரிக்குப் பல இடங்களில் இணைப்பு கொடுத்து இருப்பார்கள் ஆனால், யாரெல்லாம் கொடுத்துள்ளார்கள் என்று தெரியாது.
இதைக்கண்டறிவது தான் BackRub.
எளிதாகக் கூறி விட்டாலும் இது ஒரு சிலந்தி வலை போன்றது, தொடர தொடர போய்க்கொண்டே இருக்கும். இது தான் கூகுள் தேடுதலுக்கு ஆரம்பம்.
இதையொட்டி தளங்களுக்கு Page Rank கொடுப்பது உருவானது.
கூகுள் பெயர் உருவானதே ஒரு விபத்து தான்.
இதற்குப் பல கதைகள் கூறப்பட்டாலும், இதில் கூறப்பட்டது Googol என்று முகவரி வாங்க முயலும் போது தவறுதலாக google.com என்று வாங்கி விட்டார்கள்.
சில நாட்கள் இந்தப்பெயரில் ஒன்றி விட்டதாலும் இவர்கள் முதலில் நினைத்த தள முகவரியைப் பயன்படுத்துபவர் கொடுக்க மறுத்ததாலும் இதையே தொடர்ந்துள்ளார்கள்.
இந்நிலையில் தான் கூகுள் தேடலைச் செயல்படுத்தியுள்ளார்கள்.
எளிமை, தரம், வேகத்தால் உயர்ந்த கூகுள்
ஏற்கனவே மற்ற தேடல் நிறுவனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் கூகுள் விரைவாக விடைகளைக் கொடுத்தது.
இதைச் செயல்படுத்த பல்கலைக்கழகமே உதவியது. கூகுளுக்கு விளம்பரமே கிடையாது, பயன்படுத்துபவர்கள் வாய் மொழியாலே பிரபலமானது.
எளிமைக்காகவும், வேகத்துக்காகவும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், இவர்கள் வழங்கி (server) சக்தி போதவில்லை.
அதிகச் சக்தி கொண்ட வழங்கி வாங்க பணமில்லை. எனவே, லாரி பேஜ் யோசனையில், பேராசிரியர்கள் உதவியில் பல்கலை கழகக் கணினிகளை இணைத்துச் சேவையை வழங்குகிறார்கள்.
நாளடைவில் அதிகரித்த கூட்டத்தால், இங்கேயும் சமாளிக்க முடியாது என்று தனி அலுவலகத்தை (1998) உருவாக்குகிறார்கள்.
இங்கே குறிப்பிட வேண்டியது லாரி பேஜ் சிக்கன நடவடிக்கை. எங்கெல்லாம் செலவைக் குறைக்க முடியுமோ குறைத்துப் பணத்தை மிச்சப்படுத்துகிறார்.
இவர்கள் நிறுவனத்துக்கு ஒருவர் முதலீடு கொடுத்து உதவுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம் ரசிக்கும் படியுள்ளது.
வழிகாட்டி முக்கியத்துவம்
கூகுள் தளம் சிறப்பாக இருந்தாலும், வருமானம் இல்லை.
லாரிபேஜ், செர்கே இருவருமே விளம்பரங்களைப் புகுத்துவது பயனாளர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
ஆனால், வருமானமே இல்லாத நிறுவனத்தில் மற்றவர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். அதோடு நிறுவனத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் தாங்கள் இருவரே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
அதாவது முதலீட்டார்கள் பணம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், நிறுவன மேலாண்மையில் பங்கெடுக்கக் கூடாது என்று.
இப்படியென்றால், எவர் தான் ஒத்துக்கொள்வர். அதோடு இருவருமே வயது குறைந்தவர்கள்.
Eric Schmidt
எனவே, யாராவது வழிகாட்டியாக அனுபவம் உள்ளவரை நிர்வகிக்க அனுமதித்தால், முதலீடு செய்வதாகக் கூறுகிறார்கள்.
இருவருக்கும் விருப்பமே இல்லையென்றாலும், வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்கிறார்கள். அப்படி 2001 ம் ஆண்டு வந்தவர் தான் Eric Schmidt.
இவருடன் இருவருமே ஒத்துப்போனார்கள். இதன் பிறகு முதலீடு செய்பவர்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.
Eric Schmidt தற்போதும் (2022) கூகுள் தேடுதல் தொடர்பான கூகுளின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
SEO என்று கூறப்படும் Search Engine Optimization உலகில் இவரைத்தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
Adsense
கூகுள் சிறப்பாக உள்ளது ஆனால், வருமானம் இல்லையே!
எனவே அறிமுகமானது தான் AdSense. படிப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத விளம்பரங்களைக் கொண்டு வந்து பெரிய வெற்றியைப் பெற்றார்கள்.
இதோடு தளங்களுக்கு விளம்பரம் கொடுத்துப் பங்கீடு முறையில் இலாபத்தைப் பெறும் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இதன் பிறகு ஏற்றமே கண்ட கூகுள் : வெற்றிக்கதை இதுவரை இறங்குமுகமில்லை.
தேடலோடு நிறுத்திக்கொள்ளாமல், இணையம் சார்ந்த அனைத்து துறைகளிலும் கால் பதித்தார்கள். அதில் முக்கியமானது 2004 ல் அறிமுகமான ஜிமெயில், கூகுள் மேப் உட்படப் பல்வேறு சேவைகள்.
நிறுவனத்துக்கு ஆள் எடுப்பதும் எளிதல்ல.
கடுமையான வடிக்கட்டல்களுக்குப் பிறகே எடுத்துக்கொள்வார்கள். இணைந்த பிறகு பணியாளருக்கு விருப்பமாகப் பணி புரியும் சூழ்நிலையில் அலுவலகத்தை அமைத்துப் பலத்த வரவேற்பை பெற்றனர்.
இதன் பிறகு பல புதிய முயற்சிகளைக் கூகுள் செய்துகொண்டு தான் உள்ளது.
இதன் பலமே எளிமை தரம் வேகம். இவ்வளவு வருடங்களாக முகப்புப் பக்கத்தை மாற்றாத ஒரே தளம் கூகுள் மட்டுமே.
லாரி பேஜ் & செர்கே
மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், அமேசான், டெஸ்லா நிறுவன உரிமையாளரைப் பலருக்குத் தெரியும் ஆனால், கூகுள் உரிமையாளர்கள் யார் என்று தெரியாது.
பெயரைத் தெரிந்தாலும், ஆளைத்தெரியாது. காரணம், இவர்கள் முன்னிறுத்துவது தாங்கள் ரசித்த தொழில்நுட்பத்தையும், நிறுவனத்தையும் தான், தங்களையல்ல.
இது எளிதான செயல் அல்ல. பிரபலத்தை விரும்பாதவர் உலகில் எவருமே இல்லை ஆனால், இவர்கள் தங்களை முன்னிறுத்துவதே இல்லை.
இதே போலப் பலருக்குத் தெரியாமல் இருந்தவர் கோவை சாந்தி நிறுவன உரிமையாளர். இவரின் சேவைகள் மட்டுமே அறிவர், இவரை யாருக்கும் தெரியாது.
தலைச்சிறந்த நிறுவனம்
கூகுளில் பணி புரிந்தால் நன்றாக இருக்குமே! என்று நினைக்கும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவன்.
கூகுளை அதிகம் நேசிக்கிறேன். காரணம், பணம் கொடுத்தால் கூடக் கிடைக்காத தரமான சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது.
நம் தனிப்பட்ட தகவல்களை வைத்துச் சம்பாதிக்கிறது என்றாலும், இலவசம் என்று உலகில் எதுவுமில்லாத போது இவர்களைக் குறை கூறுவது என்ன நியாயம்?
பிடிக்காதவர்கள் பயன்படுத்துவதை நிறுத்தாமல், குறை மட்டுமே கூறிக்கொண்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பற்றிய செய்தி என்னவாக இருந்தாலும் படித்து விடுவேன். கூகுள் தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த விரும்புவேன்.
நண்பர்களிடையே கிண்டலாக எனக்குக் கூகுள் கிரி என்ற பெயரும் உண்டு 🙂 .
கூகுள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், கூகுள் எனக்குத்தரும் சேவைகள், உதவிகள் அளவிட முடியாதது.
கூகுள் மேலும் மேலும் உயரம் செல்ல ஒரு ரசிகனாக, பயனாளராக வாழ்த்துகள்.
யார் படிக்கலாம்?
கூகுளை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அனைவரும் படிக்கலாம்.
கூகுள் : வெற்றிக்கதை பழையது, புதிய தகவல்கள் இணைக்கப்படவில்லை. சுந்தர் பிச்சை உட்பட, கூகுளின் பல தொழில்நுட்பங்கள் பற்றிய அறிமுகம் இல்லை.
புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டால் சிறப்பானதாக இருக்கும். காரணம், வெற்றிக்கதை எனும் போது அனைத்துமே அடங்கி இருந்தால் சிறப்பு.
கூகுள் எப்படித் துவங்கி வெற்றிபெற்றது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள விரும்பினால், இதுவே போதும்.
அமேசானில் இப்புத்தகம் வாங்க இங்கே செல்லவும். நான் Kindle பயன்படுத்தினேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
Google Page Experience | இணைய தரத்தை மேம்படுத்தும் கூகுள்
கிரி, சின்ன வயதிலிருந்தே சாதித்தவர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உண்டு. நிறைய பேரின் வாழ்க்கை வரலாற்றை படித்து இருக்கிறேன்.. சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வா.வு.சிதம்பரனார் குறித்த சில தகவல்களை படித்து மிரண்டு விட்டேன்.. என்ன துணிச்சல்??? மிக பெரிய ஆங்கில அரசாங்கத்திற்கு முன் தனி ஒருவனாக அவர் சாதித்தது உண்மையில் மிக பெரிய விஷியம்.
உலகையும், இந்தியாவையும் இந்தியாவையும் ஆண்ட நிறைய மன்னர்களின் வரலாற்றை படித்து வியந்து இருக்கிறேன்.. அவர்களில் செங்கிஸ்க்கான் மிக முக்கியமானவர். ஒரு சாதாரண போர் வீரன் எவ்வாறு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துக்கு மன்னனாகிறார் என்பது உண்மையில் வியக்க வைக்கிறது.. சமயத்தில் படிக்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா?? என்று கூட ஆச்சரியப்பட்டதும் உண்டு. நான் முன்பே சொக்கன் ஆசிரியர் அவர்களின் சில வரலாற்று புத்தகங்களை படித்து இருக்கிறேன்..நேர்த்தியாக இருக்கும்..
உங்கள் பதிவில் கூகுள் வெற்றிக்கதையை படிக்கும் போது, உள்ளுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கிறது.. வாய்ப்பு கிடைக்கும் போது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.. நீங்கள் கூகிளுளை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவை படிப்பவர்களுக்கு தெரியும். கூகுள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், கூகுள் எனக்குத்தரும் சேவைகள், உதவிகள் அளவிட முடியாதது.கூகுள் மேலும் மேலும் உயரம் செல்ல ஒரு ரசிகனாக, பயனாளராக வாழ்த்துகள்.. (உங்கள் நிலை தான் என் நிலையும்) பகிர்வுக்கு நன்றி கிரி.
“கப்பலோட்டிய தமிழன் வா.வு.சிதம்பரனார் குறித்த சில தகவல்களை படித்து மிரண்டு விட்டேன்.”
இவர் உண்மையிலேயே வியப்பளிப்பவர். வெள்ளையர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி விட்டாரே! ஆனால், பாவம் அவரது இறுதிக்காலம் மிக மோசமானதாக இருந்ததாக படித்தேன்.
எனக்கும் இவர் வாழக்கை வரலாறு படிக்க விருப்பம்.
சொக்கன் எழுத்துகள் எளிமையானதாக இருக்கும். பல புத்தகங்களைப் படித்துள்ளேன்.
தலைவன் கூகுள் இல்லையென்றால், திண்டாட்டம் ஆகி விடும் 🙂 . பணம் கொடுத்தது பெறும் சேவையை விட கூகுள் தரும் சேவை அளப்பரியது.