தலைவர் உள்ளே நுழைந்ததும் அரங்கமே அதிர்ந்து, ஓரிரு நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. வழக்கம் போல, மின்னல் வேகத்தில் வந்து, அனைவருக்கும் வணக்கம் செலுத்தி அமர்ந்தார். Image Credit
ரஜினி வரும்வரை ஒரு ரஜினி பாடல் கூடப் பாடப்படவில்லை. தலைவர் வந்தவுடன் ஆட்டோகாரன் பாடலுக்கு நிஜ ஆட்டோவையே கொண்டு வந்து ஆடினார்கள்.
அதுவரை ஒவ்வொரு பாட்டுக்கும் அரங்கத்தில் பார்வையாளர் பகுதியில் ஒவ்வொருவர் ஆடிக் கவனத்தை ஈர்த்து வந்தனர் ஆனால், ஆட்டோக்காரன் பாடலுக்கு அரங்கமே ஆடி அதிர்ந்தது.
இதன் பிறகு அண்ணாமலை அண்ணாமலை, தங்கமகன் என்று தலைவர் பாடல்களாகப் பாடப்பட்டது.
இடையில் தலைவரைத் திட்டிக் கிண்டலடித்த, ஆபாசமாகப் பேசும், தமிழ்நாடு பாடதிட்டத்தின் பொறுப்பில் உள்ள லியோனி வெட்கமே இல்லாமல் தலைவருடன் (தன் மகனுடன்) படம் எடுத்துக்கொண்டார்.
பிரபலங்கள் பலரும் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டார்கள். தலைவி மாளவிகாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டார் 🙂 .
தலைவரைப் பலரும் பாராட்டிய போது எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், சிலை மாதிரி அமைதியாக அமர்ந்து இருந்தார்.
அதிகபட்சம் சிறு புன்னகை மட்டுமே!
அனிருத்
அனிருத் கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வருவதாகக் கூறி வந்ததாகத் தேவா, அனிருத் இருவருமே கூறினார்கள்.
தனது இரு பாடல்களுக்குத் தேவா உதவியதை அனிருத் கூறினார். கண்ணுல திமிரு (தர்பார்) பாடல் முழுக்கத் தேவா பெருந்தன்மையாக உதவியதாகக் குறிப்பிட்டார்.
தனக்குப் பிடித்த பாடல்களாக வெற்றி நிச்சயம், சிங்கம் ஒன்று உட்படப் பாடல்களைக் குறிப்பிட்டார். வெற்றி நிச்சயம் பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினார்.
ஆட்டோகாரன்
ஆட்டோகாரன் பாடல் ஒளிபரபரப்பட்ட சமயத்தில் ஆட்டோ ஓட்டும் பெண்கள், ஆண்கள் ஆகியோரின் பேட்டிகளை ஒளிபரப்பினார்கள். செம மாஸாக இருந்தது.
SPB பாடல்களை அவரது மகன் சரண் பாடினார். SPB அவர்களின் குரலை நேரடியாகக் கடைசிவரை கேட்க முடியாமல் போனது ஏமாற்றமே!
தலைவர் கிளம்ப வேண்டியிருந்ததால், தலைவரைப் பேச அழைத்தார்கள்.
பாட்ஷா காட்சியை மறு உருவாக்கம் செய்து BGM வைத்து Action கூறி தலைவரை நடக்க வைத்து மேடைக்கு அழைத்துச் சென்றதில் அரங்கமே அதிர்ந்தது.
ரஜினியின் பேச்சு
இசை விழா நடக்கிறது என்று மட்டுமே கூறியதாகவும், வேறு எதுவுமே கேட்காமல் உடனே தேவா சென்று விட்டார் என்று ரஜினி கூறினார்.
பின்னர் தேவாவை தொலைபேசியில் அழைத்து, தான் கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதியளித்ததைக் குறிப்பிட்டார்.
அறிமுகக் காலத்தில் தேவா எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பதையும், தூர்தர்சனில் பணி புரிந்ததையும், தனது தம்பிகளுடன் போராடி வெற்றி பெற்றதையும் கூறினார்.
வெற்றியின் உச்சத்தில் இருந்த இளையராஜா, புயலாக வந்த ரகுமான் ஆகியோரையும் கடந்து தேவா பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டார்.
அண்ணாமலை & பாட்ஷா
அண்ணாமலை, பாட்ஷா படங்களின் அனுபவங்களைக் கூறினார்.
பாட்ஷா பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் பார்த்து இப்படம் ஓடுமா?! என்ற சந்தேகம் வந்ததாகவும், சுரேஷ் கிருஷ்ணா, “சார் இது பத்து அண்ணாமலை” என்று கூறிய பிறகு பார்த்து வியப்படைந்ததைக் குறிப்பிட்டார்.
அண்ணாமலையில் ஆரம்ப (Super Star Rajni) இசையை அமைத்தது பற்றிக் கூறி தேவாவையும் சுரேஷ் கிருஷ்ணாவையும் பாராட்டினார்.
நேரம் காரணமாக அனுபவங்களைச் சுரேஷ் கிருஷ்ணாவால் பகிர முடியவில்லை ஆனால், இவருடைய சுவாரசியமான பேட்டிகள் YouTube ல் உள்ளது.
தேவாவின் திறமையை அவர் பழகும் விதத்தை ரஜினி மிக உயர்வாகக் கூறிய போது தேவா கண்கலங்கி, அந்தப் பெருமையின், பாராட்டின் உச்சத்தைத் தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். Well Deserved!
தஞ்சாவூரு மண்ணெடுத்து
இதோடு முடித்துக் கிளம்பிய பிறகு நினைவு வந்தவராக,
தேவாவின் பாடலான தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைச் சிங்கப்பூர் ஜனாதிபதி SR நாதன் காலமான போது அவரின் விருப்பப் பாடலாக அனைத்து உலகத்தலைவர்கள் முன்னணியில் ஒலிக்க விட்டனர் என்று கூறினார்.
SR நாதன் அவர்களே கடைசி விருப்பமாகக் கேட்டுக்கொண்டாதாகக் குறிப்பிட்டார்.
இதைச் சிங்கப்பூர் அல்லாது, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளிலும் ஒளிபரப்பியதாகக் கூறி, பெருமையான இந்நிகழ்வை தமிழக ஊடகங்கள் ஒருத்தர் கூடச் செய்தியாக்கவில்லை என்று ஊடங்களுக்கு கொட்டு வைத்தார்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையாக அனைவரையும் பாராட்டி ஊக்குவித்துப் பழகுங்கள் என்றார்.
இதன் பிறகு தேவா பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது.
SR நாதன் நிகழ்வை முன்பே வைரமுத்து கூறி விட்டார் ஆனால், வைரமுத்து பேசிய பிறகே ரஜினி வந்ததால், வைரமுத்து கூறியது தெரியாததால் திரும்பக் கூறினார்.
ஆனாலும் இதன் பிறகு ரஜினி கூறியதே அடுத்த நாள் செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் தேவா பாடலுக்குக் கிடைத்த பெருமை பேசப்பட்டது.
சிங்கப்பூர் காணொளியும் பலரால் பகிரப்பட்டது. சம்பவம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி!
சித்ரா லட்சுமணன்
ரஜினி கிளம்பிய பிறகு பேசிய சித்ரா லட்சுமணன், வழக்கமாக ரஜினி எந்த அழைப்பிதழிலும் தன் பெயரைப் போட வேண்டாம், முடிந்தால் கலந்து கொள்கிறேன் என்று கூறுவார் ஆனால், கலந்து கொள்வார்.
அவரின் குருநாதர் பாலச்சந்தர் அவர்களின் நிகழ்வுக்குக் கூட இப்படித்தான் செய்தார்.
ஆனால், தேவா நிகழ்ச்சிக்கு மட்டுமே தான் கலந்து கொள்வதாக அறிவித்துத் தன் பெயரைப் போட அனுமதித்து இருக்கிறார். இதன் மூலம் தேவாவை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பது புரிகிறது என்று குறிப்பிட்டார்.
எனக்கென்னவோ, தேவாவை பலரும் கொண்டாட தவறியதால், அவருக்குண்டான மரியாதை, புகழ் வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதைத் தலைவர் செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இதற்கு நன்றிக்கடனாகவோ என்னவோ இசை நிகழ்ச்சி தேவா THE தேவா என்று இருந்தாலும், ரஜினி நிகழ்ச்சி போலவே இருந்தது.
ஒவ்வொரு நிகழ்விலும் ரஜினி ரஜினி ரஜினி என்றே இருந்தது.
தேவாவின் இசையை ரசிக்கச் சென்ற எனக்குப் போனஸாகத் தலைவரையும் கொண்டாட்டமாக ரசிக்க வாய்ப்புக்கிடைத்ததில் இரட்டை மகிழ்ச்சி 😀 .
மேலும் ஒரு போனஸாக மாளவிகாவை பார்த்தது 🙂 .
அரங்கில் தலைவருக்குக் கிடைத்த வரவேற்பு செம மாஸாக இருந்தது. அதாவது, போதும் அமைதியாகுங்க! என்று கூறும் அளவுக்குத் தொடர்ந்தது.
ரஜினியின் நிற்காத வளர்ச்சிக்கு மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று தனக்கு உதவியவர்களை என்றும் மறக்காமல் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பது தான்.
விஜய் சேதுபதி
பள்ளி முடித்துக் கல்லூரி சேர்ந்த 1996 ஆண்டில், தான் நண்பர்களுடன் எப்படித் தேவா பாடல்களைக் கொண்டாடினேன் என்பதைக் கூறி, கவலைப்படாதே சகோதரா பாடலைப் பாட விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டார்.
இதையொட்டி இப்பாடலை தேவா பாட அரங்கம் அதிர்ந்தது.
இதே போல, குன்றத்துல கோவில் கட்டி, வித விதமா சோப்புச் சீப்பு கண்ணாடி ஆகியவற்றையும் பாடி அசத்தினார்கள்.
போகிற போக்கில் ‘கானா பாடல்களோடு உங்க ஐட்டம் பாடல்களும் பிடிக்கும் சார்!‘ என்று விஜய் சேதுபதி பிட்டைப் போட்டுவிட்டுச் சென்றார்.
Blacksheep விக்னேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தேவாக்கு ஒரு முத்தமும் வழங்கினார் 🙂 .
தேவா
தேவா பாடல்கள் இன்றும் அடிக்கடி கேட்கும் எனது விருப்பப் பாடல்களாக உள்ளது. ஏற்கனவே தேவா பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.
இளையராஜா ரகுமான் ஆகியோரின் இசை சிறப்பு என்றாலும், என் இளமைக்கால நிகழ்வுகளைத் தேவா பாடல்களே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
ஒவ்வொரு பாடலுக்கும், படத்துக்கும் எனக்கு ஒரு கதையுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நண்பன் சதீஷை ரொம்பத் தவற விட்டேன். அவன் வந்து இருந்தால், ஒவ்வொரு பாட்டையும் ஆட்டத்துடன் கொண்டாடி இருப்பான்.
இவனோடு எத்தனை படம் சென்று இருப்பேன்! தேவா இசையில் வெளிவந்த படங்களின் பாடல்களைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
கானா, ஐட்டம் பாடல்களுக்கு இவன் அதி தீவிர ரசிகன். இவன் வர முடியாத சூழல் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.
தேவாவை பாராட்டினால் அவரது தம்பிகளைப் பாராட்டாமல் முடிக்க முடியாது. காரணம், தேவா வெற்றிக்கு இவர்களே மிக முக்கியக் காரணம்.
இன்றும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.
தேவா THE தேவா நிகழ்ச்சி மனநிறைவுடன் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. நேரம் இல்லாததால் முன்னரே கிளம்ப வேண்டி இருந்தது மட்டுமே வருத்தம்.
என்றும் மறக்காத அற்புதமான நினைவுகளைக் கொடுத்த தேவா அவர்கள் மேலும் பல ஆண்டுகள், நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திய Blacksheep குழுவினருக்கு வாழ்த்துகள்.
கொசுறு
இது போன்ற இசை / திரை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மாலை 3 / 4 மணிக்கே துவங்கினால், கூடுதல் பாடல்களைக் கேட்டுச் செல்ல முடியும்.
இவர்கள் துவங்குவதே 6 / 7 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. இரவுப் பேருந்து, ரயில் கிடைப்பது சிக்கலாகி விடுகிறது.
12 மணிக்கு நிகழ்ச்சியை முடித்தால் எப்படிச் செல்வது?! வாகனங்களில் வந்தவர்கள் செல்ல முடியும் மற்றவர்கள் என்ன செய்வது?
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதல் பகுதி –> தேவா THE தேவா 1 | A Great Musical Experience
தொடர்புடைய கட்டுரைகள்
என்ன விட்டு எங்கடி நீ போன | Magic Man SPB
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஆட்டோக்காரன் பாடல் : எங்கள் தாத்தா வீட்டில் புதிய நேஷனல் ரேடியோ இருந்தது.. முதன்முதலில் ஆடியோ கேசட் போட்டு அதிக முறை கேட்கப்பட்ட பாடல் இது தான்.. எனக்கு அந்த பருவத்தில் தான் முதன்முதலில் பாடல்கள் கேட்க ஆர்வம் பிறந்தது..
லியோனி செல்ஃபி : அரசியல் இதெல்லாம் சாதாரணம் கிரி.. முன்பு தூற்றுவதும் பின்பு போற்றுவதும்.. தேவைப்பட்டால் காலை பிடிப்பதும் , தேவையில்லையென்றால் காலை வருவதும்..
அதிகபட்சம் சிறு புன்னகை : தனிப்பட்ட முறையில் எனக்கு ரஜினி சார் மீது பல விமர்சனங்கள் உண்டு.. எவ்வளவு விமர்சனங்கள் உள்ளதோ அதை போல இரண்டு மடங்கு அவரின் உழைப்பின் மீதும், அவரின் எளிமை மீதும், அவரின் குணநலன் மீதும் மரியாதை உண்டு.. குறிப்பாக அவரின் திரைத்துறை வெற்றி என்பது அசாத்தியமானது..
வெற்றியின் உச்சத்தில் : இளையராஜா, புயலாக வந்த ரகுமான் ஆகியோரையும் கடந்து தேவா பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டார். 100% சதம் உண்மை, ஏற்று கொள்கிறேன் கிரி..
SR நாதன் : இதுவரை நான் அறியாத செய்தி இது. உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.
சித்ரா லட்சுமணன் : திரையுலகின் பொக்கிஷம் இவர்.. திரை மறைவில் உள்ள பலரை இவரது நிகழ்ச்சி மூலம் அறிய வைத்து வருகிறார்.. உண்மையில் இவரின் தகவல்கள் எல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்க பட வேண்டும்..
மாளவிகா : உங்களை பல வருடங்கள் தொடர்பவர்களுக்கு நீங்கள் இவரின் பரம விசிறி என்பது தெரியும்..
தேவா : என்றும் மறக்காத அற்புதமான நினைவுகளைக் கொடுத்த தேவா அவர்கள் மேலும் பல ஆண்டுகள், நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துகள். நிச்சயமா கிரி..