“சிவசக்தி” பாண்டியன்

6
Sivasakthi Pandian சிவசக்தி பாண்டியன்

1980 களில் பிறந்தவர்களுக்கு 90 களில் சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரிப்பில் வெளி வந்த படங்கள் அச்சமயத்தில் இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்தவை.

இவர் படங்களின் பாடல்களைக் கேட்டாலே நண்பர்களுடன் சுற்றியது தான் நினைவுக்கு வரும். இவர் படங்கள், பாடல்கள் குறித்து அதிகம் பேசி இருக்கிறோம்.

ஓவ்வொரு படத்தின் பாடல்களும் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்.

தேவா இவரின் படங்களுக்கு மட்டும் அதிகச் சிரத்தை எடுத்துக்கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றும்.

டூரிங் டாக்கீஸ்

சித்ரா லட்சுமணனின் “டூரிங் டாக்கீஸ்” சேனலுக்காகக் கொடுத்த பேட்டியைப் பார்த்த போது பழைய நினைவுகளுக்குச் சென்று விட்டேன், அற்புதமான நாட்கள் அவை.

சிவசக்தி பாண்டியன் அவர்களின் உறவினர் பையன் என் அறையில் இருந்தான்.

அப்போது அவர் தயாரித்த படங்கள் குறிப்பாகக் காதல் கோட்டை தயாரிப்பு, சம்பவங்கள் பற்றி அவன் கூறும் போது வியப்பாகக் கேட்டுக்கொண்டு இருப்போம்.

அதுவும் ஹீரா பற்றிக் கூறும் போது.. 🙂 🙂 .

சென்னை பாடியில் “சிவசக்தி” என்ற திரையரங்கை வைத்துள்ளார் அதனாலயே “சிவசக்தி” பாண்டியன் என்று அழைக்கப்பட்டார்.

மிகப்பெரிய தலைவர் ரசிகர் இவர். இவருடைய படப் பாடல்களில் எல்லாம் ஏதாவது ஒரு காட்சியில் தலைவரைக் கொண்டு வந்து விடுவார்.

வான்மதி & காதல் கோட்டை

திரையரங்கில் வெளியிட்ட “முத்து படத்தின் தின வசூலை வைத்தே அஜித் நடித்த “வான்மதி” படத்தை 60% முடித்தேன்” என்று கூறிய போது வியப்பாக இருந்தது.

“வான்மதி” படம் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். அதில் வரும் பாடல்களை இன்றும் ரசித்துக் கேட்பேன். எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்கள்.

லாஜிக், தமிழ் திரையுலகை மாற்ற வந்த படம் என்றெல்லாம் யோசிக்காமல் பொழுதுபோக்கான படம் என்று பார்த்தால், ரசிக்கத் தக்க படம்.

“காதல் கோட்டை” பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அஜித்துக்கு மிகப்பெரிய வியாபாரத்தை, திருப்பு முனையைக் கொடுத்த படம்.

இப்படம் பற்றிய தன்னுடைய அனுபவங்களைச் சிவசக்தி பாண்டியன் கூறுவதைச் சலிப்புத்தட்டாமல் கேட்கலாம்.

திரைப்படத்தைப் போன்ற ஒரு சுவாரசியத்தை இவர் பேட்டி கொடுத்தது.

கண்ணெதிரே தோன்றினாள்

“கண்ணெதிரே தோன்றினாள்” படம் அப்போது சக்கை போடு போட்ட படம். இதில் வரும் பாடல்கள் அனைத்தும் அப்படியொரு வெற்றியைப் பெற்றது.

“ஜீன்ஸ்” படம் வந்த கையோடு பிரசாந்துக்கு வெற்றியாகிய படம்.

பிரசாந்த்துக்கு இப்படத்தின் கதாப்பாத்திரம் மிகப்பொருத்தமாக அமைந்தது. பிரசாந்தை தவிர வேறு எவருக்கும் பொருந்தி இருக்குமா என்பது சந்தேகமே!

எப்படியோ வந்து இருக்க வேண்டிய பிரசாந்த் எப்படியோ போய்ட்டார்.

இப்படம் பற்றிக் கூறும் போது ஒரு விஷயத்தைப் பகிர வேண்டும் என்று தோன்றுகிறது.

பலர் கூறி கேட்டு இருக்கலாம். “இப்படத்தில் எனக்கு சிறு காட்சி தான் ஆனால், முக்கியமான காட்சி, திருப்புமுனை காட்சி” என்று கூறுவார்கள் ஆனால், படம் வந்தால் அவர்கள் கூறிய அளவுக்கு இருக்காது.

இப்படத்திலும் சின்னி ஜெயந்த், “எனக்கு இது முக்கியமான கதாப்பாத்திரம், குறைவான நேரம் வந்தாலும் எனக்கு முக்கியத்துவம் இருக்கும்” என்றார்.

வழக்கம் போலச் சொல்கிறார்கள் என்று நினைத்தேன் ஆனால், உண்மையாகவே இவருடைய கதாப்பாத்திரம் படத்தின் இறுதியில் காட்சியையே மாற்றும்படி இருக்கும். எனக்கு இப்படம் ரொம்பப் பிடிக்கும்.

இசையமைப்பாளர் தேவா

தேவா ஒவ்வொரு படத்திலும் ஒரு கானா பாடலைப் போட்டுக்கொடுத்து விடுவார். அந்த ஒரு பாடலும் அசத்தல் வெற்றி பெறும்.

இதை நேரம் என்பதைத் தவிரச் சொல்ல வேறு ஒன்றுமில்லை.

நானும் சென்னை, தேவாவும் சென்னை எனவே கானா பாடல் எங்களுக்கு நன்கு பொருந்தியது” என்று சிவசக்தி பாண்டியன் கூறியது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.

“வெற்றிக்கொடி கட்டு” படமெல்லாம் அதிரி புதிரி வெற்றியாகும். அனைத்துமே ஒருங்கே அமைந்த படம். இப்படத்தின் நகைச்சுவை இன்றளவும் பேசப்படுகிறது.

பார்க்காமல் காதல், பேசாமல் காதல் என்று வித விதமான காதல் படங்களை எடுத்தார்.

இக்காலம் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்குச் சுக்கிர திசை காலம் என்றே கூற வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலம்.

தொட்டதெல்லாம் வெற்றி என்று இருந்தது.

மக்களின் ரசனை அறிந்து பல வெற்றிப்படங்களைப் பொழுதுபோக்குப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

சிவசக்தி பாண்டியன் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத, கூடாத நபர் என்றால் அது நிச்சயம் இசையமைப்பாளர் தேவாவாகத்தான் இருக்க முடியும்.

அவர் படங்களின் வெற்றியில் தேவாவின் பங்கு மகத்தானது.

இவருடைய பேட்டியைத் தவறாமல் பாருங்கள். இவரின் பேச்சுக்காகவே பார்க்கலாம். அனுபவங்களை அவ்வளவு ஆர்வமாக, சுவாரசியமாக, ரசித்துக் கூறுகிறார்.

சிறப்பாகப் பேட்டி எடுத்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொடர்புடைய கட்டுரை

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா

“டூரிங் டாக்கீஸ்” சித்ரா லட்சுமணன்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

6 COMMENTS

  1. //மிகப்பெரிய தலைவர் ரசிகர் இவர். //
    இதை சொல்லாம விட்டுடுவீங்களோ நினச்சேன் 🙂
    இவர் தன் தயாரிப்பில் வெளிவந்து நூறு நாட்கள் ஓடிய எந்த படத்திற்கும் விழா எடுத்த நியாபகம் இல்லை. தலைவர் வந்தா தான் நான் நூறு நாள் விழா எடுப்பேன் இல்லைனா எடுக்கமாட்டேன் சொன்னார், முதல் இரண்டு படங்களுக்கு தலைவரின் தேதி /(வேற காரணம்) இல்லாததால் விழா எடுக்கவில்லை அப்புறம் எந்த படத்திற்கும் நூறு நாட்கள் விழா எடுக்கலைன்னு படிச்ச நியாபகம்.

  2. இந்த நேர்காணலை நானும் பார்த்தேன்.. சிவசக்தி பாண்டியன் அவருடைய அனுபவங்களை விவரித்த விதம் நேரில் பார்ப்பது போல் இருந்தது.. தற்போது மீண்டும் ஒருமுறை காதல் கோட்டை படத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறது.. சிவசக்தி பாண்டியனின் தயாரிப்பு படங்களுக்கு, கிட்டத்திட்ட தங்கர் பச்சன் தான் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் மகிழ்ச்சி..

    ஏனெனில் அழகி படத்தை போல் இன்னொரு படம் வருமா?? என்று தெரியவில்லை.. அழகி படத்தை பார்த்தால் அதன் உணர்ச்சிகளை அடக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.. பள்ளி காதல் என்ற ஒன்றை தாண்டி வேறு ஏதோ ஒன்று நெஞ்சம் கசக்கி பிழிகிறது..

    நடிகர் முரளியும் இவரது படங்களில் அதிகமாக நடித்து இருக்கிறார்.. அவரை குறித்தும் பகிர்ந்து இருந்தால் இன்னும் தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டிருக்கலாம்..
    ஒரு முறை இயக்குனர் சேரன் நடிகர் முரளியை பற்றி சொன்னது : சினிமா உலகிலே கொஞ்சம் கூட திமிரும், ஆணவமும், கர்வமும் இல்லாத ஒரே நடிகன், முரளியின் இழப்பு தனிப்பட்ட முறையில் என் சகோதரனின் இழப்பு என குறிப்பிட்டார்..

    இந்த காணொளி உங்களுக்கு பிடித்து இருப்பதால், காதல் கோட்டை படத்தின் இயக்குனர் அகத்தியன் அவர்களது நேர்காணலை பார்க்கவும்.. ஒரு படைப்பாளியாக கொஞ்சமும் சமரசம் செய்யாத அவரது செருக்கு எனக்கு ரொம்பவும் பிடித்தது..

    ரொம்ப ஆழமாக சிந்தனை கொண்ட மனிதராக தெரிகிறார்.. இவரது படங்களுக்கு பாடல் இவர் தான் எழுதுவார் என்பதால் இவர் மேல் தனி மரியாதை கூடியது.. ஏன்னெனில் எனக்கு பாடலாசிரியர்கள் மீது எப்போதும் காதல் உண்டு.. நேரம் இருப்பின் பார்க்கவும்..

    https://www.youtube.com/watch?v=QAHMCe-uZEU

    • அகத்தியன் பட்டுக்கோட்டை அருகே சிறிய கிராமத்தில் பிறந்தவர். நாவிதர் வகுப்பைச் சேர்ந்தவர். இதைக்குறிப்பிடக்காரணம் அந்த அளவுக்கு வாழ்வின் கீழ்நிலையில் இருந்து தன் திறமையால் மேலே வந்தவர். ஆனால் புகழ் வெளிச்சத்தில் தன்னை இழந்தவர். அழகப்பா கல்லூரியில் எனக்கு சூப்பர் சீனியர். அதுவரையிலும் தமிழ் திரையுலகம் சாதிக்காத இயக்குநருக்கான தேசிய விருது. திரைக்கதைக்கான தேசிய விருது என்ற இரண்டும் பெற்றவர். குடியும் மற்ற பழக்கமும் முடக்கிவிட்டது.

      • உங்கள் தகவலுக்கு நன்றி.. உண்மை தான் 40 ஆண்டுகளாக யார்க்கும் கிடைக்காத தேசிய விருது அகத்தியனுக்கு கிடைத்தது மாபெரும் சாதனை.. ஆனால் அவரது வீழ்ச்சிக்கான காரணத்தை அறியும் போது வருத்தமாக இருக்கிறது..

  3. @ஸ்வாமிராஜன்

    “இதை சொல்லாம விட்டுடுவீங்களோ நினச்சேன் ?”

    சிவசக்தி பாண்டியன் என்றாலே தலைவரும் தானாகவே வந்து விடுவாரே! விட முடியுமா 🙂

    “தலைவர் வந்தா தான் நான் நூறு நாள் விழா எடுப்பேன் இல்லைனா எடுக்கமாட்டேன் சொன்னார்”

    அப்படியா… இது எனக்கு புது செய்தி.

    @யாசின்

    ” சிவசக்தி பாண்டியன் அவருடைய அனுபவங்களை விவரித்த விதம் நேரில் பார்ப்பது போல் இருந்தது”

    அதை விட அவர் விவரித்த விதம், அட்டகாசம். ரொம்ப ஆர்வமாக பேசினார்.

    “தங்கர் பச்சன் தான் ஒளிப்பதிவாளர் ”

    காதல்கோட்டை படத்தில் ஜெய்ப்பூர் காட்சிகள், பாடல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.

    நான் கூட குறிப்பிட்டு இருந்து இருக்கலாம்..

    அகத்தியன் பேட்டி பார்க்கிறேன்.

    @ஜோதிஜி திரைத்துறையில் பலரை அழிப்பது இப்பழக்கங்களே! வருத்தமான கசப்பான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!