நான் 1995 ம் வருடம் வரை யாருக்கும் ரசிகரில்லை ஆனால் 1995 ல் வந்த “பாட்ஷா” திரைப்படம் என்னை ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகன் ஆக்கி விட்டது. Image Credits
பாட்ஷா வெளியான போது இந்த அளவிற்கு பெரும் வெற்றி பெறும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
பள்ளி நண்பர்கள் சிலர் பாட்ஷா நன்றாக இல்லை என்று கூறி இருந்தார்கள்.
ஒரு படம் நன்றாக இல்லை என்று நாம் சந்திக்கும் நபர்கள் கூறி விட்டால், அப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்காது.
அப்போது மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தேன். ஒவ்வொரு சனி மாலையும் Free Night என்று விடுவார்கள் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை.
இந்த இடைப்பட்ட நேரத்தில் எங்கே வேண்டும் என்றாலும் செல்லலாம் பெரும்பாலும் படம் அல்லது உணவகம் செல்வார்கள்.
ரஜினி ரசிகன்
பாட்ஷா செல்லலாம் என்று முடிவு செய்து சென்றேன். படம் பார்க்கப்போகும் போது சாதாரணமாகச் சென்றவன் வெளியே வரும் போது ரஜினி ரசிகனாக வந்தேன் 🙂 .
அடுத்த சனியும் இதே படம். விடுமுறை விட்ட பிறகு ஈரோடு அபிராமி திரையரங்கில் இரண்டு முறை என்று இருக்கிற அனைத்து திரையரங்கிலும் பார்த்து விட்டேன்.
இன்று வரை நான் அதிக முறை பார்த்த திரைப்படங்களில் பாட்ஷாவே முன்னணியில் உள்ளது.
இப்போது வரை (*2011) பாட்ஷாவை 24 முறை பார்த்துள்ளேன்.
ஆக்ரோஷம் அதிரடி
ரஜினியைத் தவிர வேறு யாராலும் இக்கதாப்பாத்திரத்தைச் செய்யவே முடியாது. எவ்வளவு சிறந்த நடிகராக இருந்தாலும் செய்யவே முடியாது.
ரஜினி என்றால் ஆக்ரோஷம், அதிரடி தான். இவருக்கு இந்தக்கதாப்பாத்திரம் 100 க்கு 200 சதவீதம் அருமையாகப் பொருந்தியது.
படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சி பிடிக்கும்.
யுவராணிக்கு கல்லூரியில் இடம் கேட்கப்போவது, கிட்டியை அவரது அலுவலகத்தில் சென்று சந்திக்கப்போவது, இடைவேளை சண்டைக்காட்சி, மும்பை டான், ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் இடம் என்று படம் முழுக்க கூறிக்கொண்டே போகலாம்.
எதையும் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை அனைத்துமே ஒவ்வொரு வகையில் சிறப்பாகக் காட்சி அமைக்கப்பட்ட காட்சிகள்.
“ஐயா! என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு” & “உண்மையைச் சொன்னேன்” வசனங்கள் இன்று வரை ரசிகர்களிடம் பிரபலம்.
நான்கு ஹீரோக்கள்
இப்படத்தில் 4 ஹீரோக்கள்.
ரஜினி, ரகுவரன், தேவா & சுரேஷ் கிருஷ்ணா.
தேவா
ரஜினி வரும் பின்னணி இசைக்கு “டெர்மினேட்டர்” படத்தில் இருந்து, தேவா சுட்டுப்போட்டு இருந்தாலும் ஒரிஜினல் இசையை விட இது வெறித்தனமாக இருக்கும்.
ரஜினியை DIG அலுவலகம் செல்லும் காட்சியில், ரஜினி நடந்து வரும் ஸ்டைலும் அதற்குத் தேவா கொடுத்த பின்னணி இசையும் உடலைச் சிலிர்க்க செய்யும்.
பார்க்கும் ஒவ்வொரு முறையும் இக்காட்சியில் உடல் ஜிவ் என்று ஆகி விடும் 🙂 .
இடைவேளைக் காட்சியில் ரஜினி அடித்தவுடன் அங்கே உள்ள மின்சாரக் கம்பத்தில் அந்நபர் மோதி விழும் போது கொடுக்கப்படும் பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கும்.. இதை எழுதும் போதே எனக்கு உடல் சிலிர்க்கிறது 🙂 .
ரஜினி அடித்தவுடன் பின்னணியில் ரயில் செல்வது போல ஓசை வரும் அட! அட!! கலக்கல் போங்க. ரஜினி தி மாஸ் என்பதை நிரூபிக்க இந்த ஒரு காட்சி போதும்.
தேவாவை எத்தனை பாராட்டினாலும் தகும் இக்காட்சிக்கு இதை விட யாரும் சிறப்பாகப் பின்னணி இசை கொடுத்து விட முடியாது என்றே நினைக்கிறேன்.
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” வசனமும் காட்சி அமைப்பும் ஒளிப்பதிவும் இசையும் அடி தூள் தான்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சிகள்.
பாடல்கள்
வைரமுத்து பாடல் வரிகளும், எடுக்கப்பட்ட விதமும், இசையும் காலம் கடந்து இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
‘நான் ஆட்டோக்காரன்’ பாடலை Rap பாடல் போல முதலில் தேவா உருவாக்கி இருக்கிறார். ‘இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. வழக்கமான முறையில் போடுங்க‘ என்று ரஜினி கூறி ஆட்டோக்காரன் பாடல் வந்துள்ளது, நல்லவேளை.
இன்றும் ஆயுதபூஜை அன்று ஆட்டோ ஓட்டுநர்களிடையே பிரபலமாக உள்ள பாடல்.
தங்கமகன் பாட்டுக்கு ஜூலியஸ் சீசர் போல உடையணியும்படி சுரேஷ் கிருஷ்ணா காட்சியமைத்துள்ளார் ஆனால், ரஜினியோ, ‘தனக்கு அதற்கான உடல்வாகு இல்லை அதனால் வேண்டாம்‘ எனக்கூறி, பின்னர் தற்போதைய காட்சி படமாக்கப்பட்டது.
ஸ்டைல் பாடல் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது, வெற்றியும் பெற்றது. அழகு பாடலில் ரஜினியின் விருப்பமான நடத்துநர் கதாப்பாத்திரம் கொண்டு வரப்பட்டது. ராமையா பாடலில் வழக்கமான தத்துவம் கொண்டு வரப்பட்டது.
துவக்கத்தில் பேருந்து நடத்துநராக ரஜினி கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டது ஆனால், கதைக்குச் சரியாக வராது, பல இடங்களுக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், ஆட்டோக்காரராக மாற்றப்பட்டது.
சொல்லப்போனால், இப்படத்தில் அனைத்துமே சரியாக அமைந்துள்ளது.
நக்மா & தேவன்
படத்திலேயே எனக்குத் திருப்தியளிக்காத நபர் நக்மா தான். பின்னர் தொடர்ந்து படத்தைப் பலமுறை பார்த்துப் பழகி விட்டது 🙂 .
தேவன் மிகச்சிறப்பாகத் தன் கதாப்பாத்திரத்தைச் செய்து இருப்பார். சென்னை மற்றும் மும்பை இரு பகுதிகளிலுமே நன்றாக நடித்து இருப்பார்.
சண்டைக்காட்சிகள்
சில படங்களில் சண்டைக்காட்சிகள் வந்தால், கொட்டாவி தான் வரும். எப்படா அடித்து முடித்து நிறுத்துவாங்க என்று இருக்கும்.
ஆனால், இதில் மிக மிகப் பரபரப்பாக ரசித்துப் பார்க்கும் படி இருக்கும், குறிப்பாக இடைவேளை சண்டைக் காட்சிகள்.
அற்புதமாக அமைத்த சண்டைப் பயிற்சியாளர் ராஜா இன்னும் படங்களுக்கு அமைக்கிறாரா? நான் அதிகம் கண்டதில்லை.
ஆனந்தராஜ்
“யாருயா! இந்த இந்திரனுக்கு எதிரா அரெஸ்ட் வாரன்ட் கொடுத்த ஆம்பிளை” என்பதும் ரஜினியின் தம்பியை நக்கலடித்து விட்டுச் சத்யப் ப்ரியாவை “வணக்கமோய்” என்று கலாயிப்பதும், கொஞ்ச நேரமே வந்தாலும் ஆனந்தராஜ் நிறைவாகச் செய்து இருப்பார்.
ரஜினியை கட்டி வைத்து அடிக்கும் காட்சியில் எடிட்டிங்கில் தவறு செய்து இருப்பார்கள். ரஜினி அடி வாங்கிய பிறகு ரத்தம் பனியனில் இருக்கும், திரும்பக் காட்டும் போது இல்லாமல் இருக்கும், அடுத்த காட்சியில் திரும்ப இருக்கும்.
இதை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. அடுத்த முறை நீங்கள் பாட்ஷா பார்க்கும் படி வந்தால் இக்காட்சியை கவனித்துப் பாருங்கள்.
மறு வெளியீட்டில் கூட இதைச் சரி செய்யவில்லை.
ஆனந்தராஜ் கதாப்பாத்திரம் படம் துவங்கும் போது இல்லையென்றும், இடையிலேயே சேர்க்கப்பட்டதாகச் சுரேஷ்கிருஷ்ணா கூறினார்.
ஆனந்தராஜ் கதாப்பாத்திரம் இல்லாமல், இடைவேளை காட்சியை நினைக்கவும் முடியலையே! 🙂 .
ஜனகராஜ்
ரகுவரன் எப்படி ரஜினியின் பல படங்களில் வந்தாரோ அதே போல ஜனகராஜ்.
இது வரை காமெடி நடிகராகவே அறியப்பட்ட இவரை இதில் சீரியஸ் நடிகராகக் காட்டி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
கொஞ்சம் ஏமாந்தாலும் அவர் கதாப்பாத்திரம் காமெடியாகப் போய் விட வாய்ப்பு இருந்தது, இருப்பினும் திரைக்கதையின் மூலம் சரி செய்து இருந்தார்கள்.
‘இன்னைக்கு ஆயுத பூஜைல அண்ணன் ஆட்டோ ஸ்டேன்ட்ல பட்ட கிளப்பிட்டு இருப்பாரு!‘ என்று ஆரம்பித்துப் படம் முழுவதும் ரஜினியுடன் வருவார்.
ரகுவரன்
படத்தின் அடுத்த ஹீரோ வில்லன் ரகுவரன்.
பாட்ஷா மிகப்பெரிய வெற்றி பெற்றதுக்கு ரஜினி ஒரு காரணம் என்றால் அவருக்குச் சரியான போட்டியைக் கொடுத்து இருப்பவர் சந்தேகம் இல்லாமல் ரகுவரன் தான்.
ரகுவரன் இல்லை என்றால் படம் இந்த அளவு வெற்றி பெற்று இருக்காது.
ரகுவரன் ஆரம்பமே அசத்தலாக இருக்கும். ஒரு Gangster எவ்வளவு அளவான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ரகுவரனை பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அலட்டல் இல்லாத அட்டகாசமான நடிப்பு.
Gate way of India பின்னணியில் ரஜினியிடம் ‘நீ நம்ப ரங்கசாமி புள்ளையாச்சே ஏதாவது உதவி தேவையா தம்பி‘ என்று கேட்பது செம்ம நக்கலாக இருக்கும் 🙂 .
ரகுவரனைத் தவிர வேறு எவரும் ரஜினியை இப்படி கூற முடியுமா? கூறினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஆனாலும் ரகுவரனை கொண்டாடுகிறார்கள்.
பாட்ஷா மறுவெளியீட்டில் ரகுவரனுக்கு கிடைத்த வரவேற்பு கூறும், ரஜினி ரசிகர்கள் எவ்வளவு தூரம் அவரை ரசிக்கிறார்கள் என்று!
ரகுவரன் அறிமுகத்துக்குத் திரையரங்கம் அதிர்ந்தது, ரஜினியின் அறிமுகத்துக்கு ஈடான வரவேற்பு.
ரகுவரன் பற்றிக் கூறுவதென்றால் தனியாக இன்னொரு விமர்சனம் எழுதணும் 🙂 .
ரஜினியின் பெரும்பாலான படங்களில் ரகுவரன் வில்லனாக வருவார்.
ரகுவரன் உடல் நிலை சரியில்லாததால் சிவாஜியில் நடிக்க முடியவில்லை என்றாலும், ரஜினியின் வேண்டுகோளுக்கிணங்க சிறு காட்சியில் மருத்துவராக வந்து இருப்பார்.
இதுவே ரஜினியுடன் நடித்த கடைசிப் படம் 🙁 .
R.M வீரப்பன் யோசனை
பின்னணியில் நெகடிவில் ரஜினியின் மும்பைக் காட்சிகளை இணைக்கச் சொன்னது தயாரிப்பாளர் R.M வீரப்பன் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.
பின்னணி என்னவென்றே தெரியாமல் இடைவேளை வரை இருப்பது பரபரப்பாக இருக்காது. எனவே, இதை இணைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.
இவர் எந்த நேரத்தில் கூறினாரோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம் ஆகி விட்டது.
இப்பக் கூட நினைத்துப்பார்த்தால் சரியான சமயத்தில் கூறப்பட்ட அற்புதமான யோசனை என்று தோன்றுகிறது.
நெகடிவில் காட்டப்படும் காட்சிகளின் போது ரசிகர்கள் ஆராவாரம் வார்த்தையால் விவரிக்க முடியாது.
பாலகுமாரன்
ஒரு படத்துக்கு வசனம் மிக முக்கியம். பாட்ஷாவில் அற்புதமாக அமைந்தது. படம் துவக்கத்தில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு வசனமும் அட்டகாசமாக இருக்கும்.
காலத்தால் அழியாத வசனங்களைப் பாலகுமாரன் அவர்கள் கொடுத்து இருக்கிறார்.
பாலகுமாரன் வசனங்களில் இரு படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
ஒன்று பாட்ஷா மற்றொன்று புதுப்பேட்டை. இப்படங்களை வசனங்கள் வேறு நிலைக்கு எடுத்துச் சென்று இருக்கும்.
ஒளிப்பதிவாளர் P.S பிரகாஷ்
இடைவேளைக் காட்சி, மும்பை காட்சிகளை வேறு கட்டத்துக்குக் கொண்டு சென்று இருப்பார் ஒளிப்பதிவாளர் பிரகாஷ்.
படம் வெளியாகி 25 (*2020) வருடங்கள் ஆனாலும், இன்னும் அனைத்துக் காட்சிகளும் தற்காலத்திலும் ரசிக்கும்படி உள்ளது என்றால், முழு காரணம் ஒளிப்பதிவு தான்.
குறிப்பாக இடைவேளை, மும்பை காட்சிகள் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
படத்தொகுப்பாளர் கணேஷ்
படத்தொகுப்பாளர் கணேஷ் படத்தை எங்குமே சலிப்பு தட்டாமல், மிக விறுவிறுப்பாக அமைத்து இருப்பார். மும்பை காட்சிகள் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக இருக்கும்.
மும்பை பகுதியில் ஒரு கதைக்குள் இன்னொரு கதை அந்தக் கதைக்குள் இன்னொரு கதை என்று இருந்தாலும், குழப்பம் இல்லாமல் இருக்கும்.
இதை எப்படி யோசித்து செய்து இருப்பார்கள் என்று இன்றும் வியப்புள்ளது!
சுரேஷ் கிருஷ்ணா
பாட்ஷா போல ஒரு படத்தைச் சுரேஷ் கிருஷ்ணா நினைத்தாலும் திரும்ப எடுக்க முடியாது. இவருடைய பேட்டிகளை YouTube ல் பாருங்கள். அற்புதமாக இருக்கும்.
ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார்கள் என்று அவ்வளவு ரசித்து விளக்குவார்.
குறிப்பாக, மும்பை டானாக ரஜினி மாறும் காட்சிகள் பற்றி அவர் கூறும் போது சுவாரசியமாக இருக்கும்.
பாட்ஷா இரண்டாம் பாகம் எடுக்கச் சுரேஷ் கிருஷ்ணா முயற்சித்த போது, ரஜினி மறுத்து ‘பாட்ஷா ஒரு மேஜிக், அது ஒரு முறை தான் நிகழும்‘ என்று கூறி விட்டார்.
ரஜினி கூறியது உண்மை. இனியொரு பாட்ஷாவை யாராலும் கொடுக்க முடியாது.
ஒரே ஒரு பாட்ஷா தான்.
ரஜினி பற்றி ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதி இருந்தாலும், பின் வரும் கட்டுரை எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பப் பிடித்தது.
படங்களில் மட்டுமல்ல பிறந்த தேதிகளில் கூட ரஜினியும் ரகுவரனும் நெருங்கியே இருக்கிறார்கள். ரகுவரன் அவர்களுக்கு டிசம்பர் 11 பிறந்த நாள், டிசம்பர் 12 அவரது நெருங்கிய நண்பரான ரஜினிக்கு பிறந்த நாள்.
Directed by Suresh Krissna
Produced by R. M. Veerappan, V. Rajammal, V. Thamilazhagan
Screenplay by Suresh Krissna
Starring Rajinikanth, Nagma, Raghuvaran
Music by Deva
Cinematography P. S. Prakash
Edited by Ganesh Kumar
Production company Sathya Movies
Release date 12 January 1995
Running time 144 minutes
Country India
Language Tamil
இக்கட்டுரை 2020 ல் புதுப்பிக்கப்பட்டது.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
பாட்ஷாவை பற்றி எவளவு முடியுமோ அவளவையும் எழுதிவிட்டீர்கள்; தமிழ் சினிமாவில் ரஜினி கொடுத்த பாட்ஷாவை பலரும் வேறு கலரில் முயற்சி செய்துவிட்டார்கள், ஆனால் ரஜினி பாட்ஷாவின் ஒரு சீனை கூட தன அடுத்தடுத்த திரைப்படங்களில் பயன்படுத்தவில்லை, இதுதான் ரஜினியின் வெற்றி ரகசியம்!!!!
தமிழ் சினிமா வை மொத்தமா கெடுத்தது இந்த ரஜினி தான்.கமல்ஹாசன் உடைய அன்பேசிவம் முனாடி இந்த படம் எல்லாம் கால் தூசு .
பதிவுக்கு நன்றி… ஆனால் 24 முறை ஒரு படம் பாக்க தனி தில்லு வேணும்… கிரி அந்த விசியத்துல கில்லிதான்…. @ கண்ணன் யாருக்கும் ரசிகனா இருப்பது தவறில்லையே… நான் கூட டிராவிட்ன் தீவிர ரசிகன் தான்…
அழகு கிரி
இந்த பதிவு
உங்க பையன் நல்லா துரு துரு நு இருக்காரு.. சூப்பர் தல
– அருண்
‘ரஜினி’ என்பது ஒரு வகையான மந்திரச் சொல். அந்த மந்திரம் நம்மைப் போன்ற பல பேருக்கு இன்று மட்டுமல்ல, என்றும் அந்த ‘மந்திரம்’ நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பகிர்வுக்கு நன்றி பாஸ்.
அங்கு எடுத்த படங்களில் நான்கை மட்டும் பகிர்ந்து இருக்கிறேன். இந்தப்படங்களில் நான் இல்லை.
ஏமாற்றம்.
உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா?!? :)))
என் பேர் கிரி எனக்கு சிங்கப்பூர்ல இன்னொரு பேர் இருக்கு …………………….
நோ கமெண்ட்ஸ் ஆன் ரஜினி 🙂
தலைவரை பற்றிய சம கலக்கல் பதிவு.
///இதை எழுதும் போதே எனக்கு உடல் சிலிர்க்கிறது…..///
அப்போ உங்க பதிவு மொத்தத்தையும் படித்த எங்களக்கு எப்படி இருந்து இருக்கும்……….
கேட்கப்போவது, கிட்டியை( அது கிட்டி இல்லை சேது விநாயகம் )
உங்கள் பையனை பார்த்தேன் மகிழ்ச்சி நீங்கள் ஏன் இல்லை கிரி
நீங்க இருக்கும் படம் ஏன் வெளியிடவில்லை கிரி
பாட்ஷா படம் எனக்கு மிகவும் பிடித்த படம்
அட்டகாசம்!!! அருமை !!! எனக்கு பாட்ஷா தான் மிகவும் பிடித்த படமாய் இருந்தது… ஆனால் சிவாஜி வந்த பிறகு , சிவாஜி மிகவும் பிடித்து போனது …
இப்போது தலைவர் படங்களில் டாப் மூன்று
சிவாஜி – தலைவர வித வித மா காட்டுறதுல ஷங்கர் செம சூப்பர் 🙂 தலைவர் தி பாஸ்
தளபதி – தளபதி முதலில் தியேட்டரில் பார்த்த படம்,…கடைசி நான்கு வருடங்களில் திரும்ப திரும்ப பார்த்து, இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டது 🙂
பாட்ஷா – 2007 வரை முதல் இடத்தில இருந்த பாட்ஷா 2011 இல் மூன்றாம் இடம் சென்றாலும், 2011 இல் அண்ணா தியேட்டரில் சென்று பார்த்தது கொலைவெறி மாஸ்
– ஸ்ரீநிவாஸ்
கொசுறு நல்ல விஷயம். கேக் கட் செய்யத் தயாராக நிற்கும் லிட்டில் ஸ்டாரின் ஸ்டைலான போஸ் சூப்பர்:)!
எனக்கு என்னமோ உங்களை போல ரசிகர்களின் அன்பு தான் அவரை நூறு வயது வரை வாழவைக்கும் என தோன்றுகிறது. ஏன் விருப்பமும் அதுவே!!!
ரஜினி மாதிரி நீங்களும் வாழ்க்கைல பெரிய ஆளா வந்தா ரொம்ப சந்தோசம் ! எதற்க்கு ரசிகனா இருக்கணும் எதற்க்கு யாரோ ஒரு நடிகனை பற்றி எழுதி நேரத்தை வீணாக்கணும். வாழ்க தமிழ் இனம்.
இப்போது வரை பாட்ஷாவை 24 முறை பார்த்துள்ளேன்.
—————————————————————————————————————-
mr. giri,
i saw the following movies more than one time.
chandramukhi — 3 times
shivaji — 3 times
kuselan — 3 times
endhiran—5 times
Eventhough i am a rajini fan, the film i saw many times was kamalhasan’s INDIAN. I saw that movie nearly ten times.
2. unga paiyan romba supera irukkan giri
RAJESH. V
// இந்த படம் வெளிவந்த பிறகு ரஜினி உச்சத்தை தொட்டு விட்டார்.//
தவறு கிரி.
நீங்கள் ரஜினி என்னும் உச்சத்தை தொட்ட படமாக இது இருக்கலாம்.
80களில் நீங்கள் ரஜினி ரசிகனாக இருந்ததில்லை அதனால்தான் இவ்வாறு கூறுகிறீர்கள். முழுப்பக்க விளம்பரங்கள் என்ன! பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ன!
அரசியல் சார்ந்த நிலைப்பாட்டைக்கூட “மனிதனில்” இருந்தே படத்தில் தொடர்ந்து வலியுறுத்த தொடங்கிவிட்டார். அதற்கு முன்பு “தனிக்காட்டு ராஜா” – “நல்லவனுக்கு நல்லவன்” போன்றவற்றிலும் லேசான அரசியல் வாடை இருக்கும்
எஸ்.பி.எம், தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் ரஜினியை இயக்கிய காலத்திலேயே உச்சத்தை தொட்டுவிட்டார்.
உன்மையிலேயே ரஜினியை அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக ஆக்கியது “பில்லா”தான்.
ஹலோ கிரி,
நான் எந்த அளவுக்கு இடைவேளை பகுதிய பார்த்து சிலிர்த்தேனோ அதே அளவுக்கு நீங்களும்…
சண்டை பயிற்சியாளர் ராஜா சூப்பர் ஸ்டார் + சுரேஷ் கிருஷ்ணா படங்கள் எல்லாத்திலயும் இருக்கார் (Except BABA)
a very good article about BAASHAA.
(இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழ் படிச்சிடிங்களா ?)
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ராஜா ரைட்டு 🙂
@ராம்ஸ் நீங்க பதிவை சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன்.
@ஸ்ரீநிவாஸ் எனக்கு பாட்ஷா தான் 🙂
@அருண் ராமலக்ஷ்மி நன்றி
@சூர்யா உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு https://www.giriblog.com/what-is-wrong-in-become-rajini-fan/ எழுதி இருக்கிறேன். நேரத்தை வீண் செய்ததா யார் உங்களுக்கு கூறியது? இது என்னுடைய பொழுது போக்கு வேலைக்கு பிறகு கிடைக்கும் நேரங்களில் எனக்கு இளைபாறுதல் தருவது.
உங்க சந்தோசம் வீண் போகவில்லை. ரஜினி அளவிற்கு பெரியாள் இல்லை என்றாலும் நானும் ஒரு நல்ல நிலையிலேயே இருக்கிறேன். கவலை வேண்டாம்.
@ராஜேஷ் எனக்கும் இந்தியன் ரொம்ப பிடித்த படம் இருப்பினும் பாட்ஷா தான் முதல் 🙂
@காத்தவராயன் நான் கூறியது திரைப்படத்தில் அல்ல பொது வாழ்க்கையில். திரைப்படத்தில் பில்லா என்பது அனைவரும் அறிந்தது தானே.
@பாலாஜி புத்தகம் படித்து விட்டேன். ரொம்ப நன்றாக இருந்தது.
வணக்கம் கிரி அவர்களே
அருமையான பதிவு இந்த பதிவை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
நன்றி
தலைவர் பற்றிய பதிவை அதுவும் அவரது பிறந்த நாளிலேயே அவரது மெகா ஹிட் படமான பாட்ஷாவைப் பற்றி எழுதியது மிகவும் மகிழ்ச்சி கிரி..கிரி சிவா படத்தில் இடம் பெற்ற ‘அட மாப்பிள்ளை சும்மா முறைக்காதீங்க’என்ற பாடலை மட்டும் நான் ஆயிரம் முறைக்கும் மேல் பார்த்திருப்பேன்..!! நிச்சயம் பாருங்கள் கிரி அந்த பாடலை எனக்காக ஒரு முறை.. spb யின் கணீர் குரல் , இளையராஜாவின் அட்டகாசமான மியூசிக் இருந்தாலும் ரஜினியால்தான் அந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்றது என்பது மிகப் பெரிய உண்மை அடேயப்பா தலைவரின் ஸ்டைல்தான் என்ன அந்த பாடலில்..நிச்சயம் எவராலும் முடியாது… ராஜாதி ராஜா படத்தில் இடம் பெற்றுள்ள ‘எங்கிட்ட மோதாதே ‘ தலைவரின் ஸ்டைலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது கிரி..தலைவர் எப்பொழுதுமே சிறப்பு தான் கிரி.. தலைவர் வாழ்க பல்லாண்டு…!!
ஹலோ கண்ணன் நானும் ரஜினி ரசிகர்தான் தான்!!!!!!!!!! நான் என்ன கெட்டு போய் விட்டேன்! தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறேன்.எனது குடும்பத்தை நல்ல முறையில் பாதுகாக்கிறேன்.. உங்களது உறவுகளை பிடிப்பதற்கு ஏதேனும் காரணம் சொல்ல முடியுமா ?.ரஜினியை அளவுக்கு மீறி பிடித்திருக்கிறது,..என்னையறியாமல் நானே தேடிக் கொள்ளும் சந்தோசம் அது…!!இதில் என்ன தவறு இருக்கிறது..? இதற்கும் நாடு முன்னேறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..கிரியின் தளத்தில் வரும் ரசிகர்கள் அனைவருமே உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று இருப்பவர்கள் அல்ல.அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..! எல்லையில் நின்று போர் புரிந்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த பதிவை எல்லாம் எதற்கு படித்துக் கொண்டு உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை..!!உண்மையை சொல்லப் போனால் ரஜினி ரசிகரான எனக்கு ரஜினி பிறந்த நாளில் பின்னூட்டம் இடக்கூட நேரமில்லை..அந்த அளவுக்கு வேலைப்பளு அதிகம்.. பாலாபிஷேகம் செய்பவர்களை தேடித் பிடித்து வெட்டுங்கள்..முதல் ஆளாக சந்தோசப்படுவது நாங்களாத்தான் இருப்போம் …!!சும்மா பேசக் கூடாது…!!