நம்பினால் நம்புங்கள்

4
நம்பினால் நம்புங்கள்

ம்பினால் நம்புங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் என் தனிப்பட்ட அனுபவங்களே. பொதுவான கருத்தாகக் கருத வேண்டாம். Image Credit

நம்பினால் நம்புங்கள்

இத்தலைப்பு பார்த்து உங்களுக்குப் பழைய நினைவு வந்தால், தூர்தர்ஷனில் Ripleys Believe it or not நிகழ்ச்சியை சிறு வயதில் பார்த்து இருப்பீர்கள்.

Ripleys Believe it or not நம்பினால் நம்புங்கள்‘ நிகழ்ச்சியில் சில சம்பவங்களைத் தொகுத்து வழங்குவார்கள், நம்பவும் முடியாது நம்பாமலும் இருக்க முடியாது.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் இருக்கிறேன் 🙂 .

சிலதை நம்பவும் முடியலை, நம்பாமலும் இருக்க முடியலை. எதேச்சையாக நடக்கிறதோ என்றும் தோன்றுகிறது, அப்படியில்லை என்றும் தோன்றுகிறது.

நேர்மறை எண்ணங்கள்

இத்தளத்தைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் குறித்து இங்கே எழுதுவதைக் கவனித்து இருக்க முடியும். படிப்பவர்களை மனரீதியாகச் சோர்வடையச் செய்யும் கட்டுரைகளை எழுதுவதில்லை.

சமூகக் கோபங்கள், அரசியல் விமர்சனங்கள் இருக்கும் ஆனால், அதுவே வேலையாக வைத்துக்கொள்வதில்லை.

2015 ம் ஆண்டுக்குப் பிறகு நேர்மறை எண்ணங்களில் ஆர்வம் ஏற்பட்டது. பதட்டமாகாமல் இருப்பது, அவசரப்படக் கூடாது என்பது போன்ற வழக்கங்களைப் பின்பற்றத் துவங்கினேன்.

பள்ளி & வீடு

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த நேரம். மகன் வினயை பள்ளியில் சேர்க்கணும் ஆனால், பள்ளிகளில் நடுவில் (3 ம் வகுப்பு) சேர்க்க எவரும் ஒப்புக்கொள்ள வில்லை.

அனைவரும் LKG க்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார்கள். சில பள்ளிகளில் வாய்ப்புக் கிடைத்தது ஆனால், அதற்கான வழிமுறைகள் மிகக் கடினமாக இருந்தது.

இருப்பினும் எப்படியும் கிடைக்கும் என்று பதட்டமாகாமல் நம்பிக்கையாக இருந்தேன். அதே போல ஒரு பள்ளியில் ஒரே முயற்சியிலேயே கிடைத்து விட்டது.

சென்னையில் வீடு தேடிய போதும் ஒரே முயற்சியிலேயே வீடு வாடகைக்குக் கிடைத்து விட்டது. தற்போது வரை அதே வீட்டில் தான் வசிக்கிறேன்.

இது எனக்கு எதோ நேரம் நன்றாக உள்ளது அதனால் பிரச்சினை இல்லாமல் கிடைத்து இருக்கும் என்று கருதிக்கொண்டேன்.

மூன்று வருடங்களைக் கடந்தது (2018)

இதன் பிறகு தொடர்ந்து நேர்மறை (Positive) எண்ணங்களைத் தீவிரமாகப் பின்பற்றத் துவங்கினேன். முன்னர் கடினமாக இருந்தது, பின்னர் எளிதாகி விட்டது.

அதாவது, இதற்காக எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே நமக்கு அமைந்து விடும்.

இதன் பிறகும் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது ஆனாலும், எதேச்சையாக நடப்பதாகவே தோன்றியது.

ஆனால், மூன்று வருடங்களைக் கடந்தும் அப்படியே இருக்குமா?! என்று தோன்றினாலும் நம்பவும் முடியலை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

நேர்மறையாக நினைத்தும் எதிர்மறை செய்திகளில் ஆர்வம் செல்கிறதே என்ற கவலை முன்பு இருந்தது ஆனால், தற்போது எதிர்மறை செய்திகளில் முற்றிலும் ஆர்வமில்லை.

இது முழுக்கத் தொடர் ஆர்வம், பயிற்சியாலே சாத்தியமானது.

ஆறு வருடங்களைக் கடந்தது (2022)

முன்னர் எதையெல்லாம் தவிர்க்கச் சிரமப்பட்டேனோ அவையெல்லாம் எளிதாகப் புறக்கணிக்க முடிந்தது. தேவையற்ற எண்ணங்கள் என்னை அண்டுவதில்லை.

கடந்த ஓரிரு வருடங்களாக அனைவருமே அன்பாக நடந்து கொள்கிறார்கள். யார் என்றே தெரியாதவர் கூட என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார்.

சூர்யவம்சம் படத்தில் பேருந்தில் செல்பவருக்கு மணிவண்ணன் கை காட்டுவரே அது மாதிரி பேருந்தில் இருப்பவர் நிலையில் குழப்பமாக இருப்பேன் 🙂 .

படிக்கும் உங்களுக்கு நம்பச் சிரமமாக இருக்கும் என்பதை உணர்கிறேன் ஆனால், நம்பினால் நம்புங்கள்.

இதற்கு என் எண்ண அலைகள் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

யாரையும் எதிரியாக கருதுவதில்லை ஆனால், இந்து மதத்தை, இந்தியாவை, தமிழகத்தை இழிவுபடுத்துபவர்களை வெறுக்கிறேன்.

கோபம் வருகிறது, ஆத்திரமாக இருக்கிறது ஆனால், அவையெல்லாம் அந்நேரத்துக்கு மட்டுமே. இதையவே நினைத்துக் கொண்டு இருப்பதில்லை.

தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரிகளே இல்லை. ஒருவேளை பிரச்சனை செய்தாலும், அதை மனதில் வைத்துக்கொண்டு இருப்பதில்லை, அப்போதே மறந்து விடுகிறேன் அல்லது புறக்கணித்து விடுகிறேன்.

எனவே, என் மீது அன்பு செலுத்துபவர்கள் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருகிறது 🙂 . ஆமாம். நம்பினால் நம்புங்கள்.

கடவுள் நம்பிக்கை

நேர்மறை எண்ணங்களோடு கடவுள் நம்பிக்கையும் உண்டு. இரண்டும் இணைந்து எனக்கு அளவற்ற நன்மைகளைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக நம்புகிறேன்.

அனைத்தையும் பிரச்சனைகளாகக் கருதக் கூடாது என்பதைத் தொடர்ந்து பின்பற்றித் தற்போது எதுவுமே பிரச்சனையாகத் தோன்றுவதில்லையா அல்லது எனக்குப் பிரச்சனைகளே இல்லையா என்பதில் தற்போதும் குழப்பம்.

எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் என்ற எண்ணங்கள் பெரியளவில் உதவுகிறது. தேவைப்படும் நேரத்தில் கடவுள் உதவுகிறார் என்பதும் உறுதியாகிறது.

ஏனென்றால், என்னால் முடியவில்லை என்ற நிலை வரும் போது எங்கிருந்தாவது தானாகவே உதவி கிடைக்கிறது, பொய் கூறவில்லை.

என் சிறு வயதிலிருந்து இது நடந்து வருகிறது.

கடவுள் துணை இருக்கிறார் என்று திரைப்படங்களிலும், பெரியவர்களும் கூறுவது மற்றவர்களுக்கு எப்படியோ! எனக்கு நடப்பது உண்மையே.

இதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்கள் நடந்துள்ளது. பெரிய சம்பவங்களும் கண் முன்னே நடக்கும் போது, கடவுள் உடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

இக்கட்டுரை எழுதவும் அது போல நடந்த ஒரு சம்பவமே! எனக்கு எது நல்லது எது கெட்டது என்று உடன் இருக்கும் கடவுளுக்குத் தெரிகிறது.

எனவே, என் முயற்சியைக் கடந்து என்ன நடந்தாலும் அதற்குக் காரணம் இருக்கும், நம் நன்மைக்கே என்றே எடுத்துக்கொள்கிறேன் அல்லது அது விதியாக இருக்கலாம் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

பிரச்சனைகளே இல்லையா?

இதற்காக பிரச்சனைகளே வாழ்க்கையில் இல்லையா?! என்று நினைக்க வேண்டாம். இருக்கிறது! ஆனால், அவற்றைப் பிரச்சனைகளாகக் கருதுவதில்லை.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி‘ என்ற கண்ணதாசன் வரிகளே நினைவுக்கு வருகிறது. எனவே, எதையும் கடந்து செல்லவே விரும்புகிறேன்.

கடந்து செல்வது தானே வாழ்க்கை.

மனைவியைச் சமாளிப்பது தான் கடினம். ஏங்க! உங்களுக்கு எது தாங்க பிரச்சனை! என்பார் 🙂 .

கடவுளிடம் பல வருடங்களாக எனக்காக எதையும் வேண்டுவதே இல்லை (ஒரே ஒரு வழக்குப் பிரச்சனை தவிர்த்து). ஏனென்றால், இதற்கு மேல் வேண்டும் என்று கேட்பதே நியாயமில்லாததாக உள்ளது.

என்னால் முடியவில்லை என்ற நிலை வரும் போது தானாகவே, யார் மூலமாகவோ உதவி கிடைக்கும் போது எதற்காக பயப்பட, கவலைப்பட வேண்டும்!

எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் 🙂 .

எண்ணங்களுக்கு பலம் அதிகம்

முக்கியமான ஒன்றை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்‘ என்கிறார் புத்தர். எனவே, எதிர்மறை எண்ணங்களையே நினைத்துக்கொண்டு இருந்தால், அது தொடர்பான நிகழ்வுகளே உங்களுக்கு நடக்கும்.

Pls don’t underestimate your THOUGHTS.

எனக்கு ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணமே மேலே கூறப்பட்டவை. எதிர்மறையாக எப்போதும் நினைப்பது இல்லை, இருந்தாலும் மிக மிகக்குறைவு.

எனவே, நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். 

உடனடியாக இதன் பலன் தெரியவில்லை என்றாலும் நாளடைவில் நிச்சயம் உங்களால் வித்யாசத்தை உணர முடியும்.

நம்பினால் நம்புங்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?

மற்றவரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. அருமை….

  இன்று காலை கிட்டத்தட்ட இதே அலைவரிசையில் சிறிது நேரம் யோசித்து கொண்டு இருந்தேன். இப்போது உங்கள் கட்டுரை….

  இதுவும் அவன் செயலே…

  உன் எண்ணம் சரியான திசையில் செல்கிறது என உணர்த்துகிறார் போலும்….

 2. கிரி, இந்த பதிவை நான் ஒரு தன்னம்பிக்கை டானிக்காகா கருதுகிறேன்.. உலகில் பிரச்சனை இல்லாத மனிதன் எவனும் இல்லை.. அப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்றால் ஒன்று, முற்றும் துறந்த முனிவராகவோ / ஞானியாகவோ தான் இருக்க வேண்டும்.. தற்போதைய சூழ்நிலையில் இது போன்றவர்களை காண்பது அரிது..

  என்னை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டங்களிலும் வெவ்வேறு விதமான படி நிலைகளை நான் கடந்து வருவதாக உணர்கிறேன்.. கடவுள் நம்பிக்கை இருக்கிறது.. பாட்ஷா படத்தில் ரஜினி சார் கூறுவது தான் நிஜம்.. “உன் வாழ்க்கை உன் கையில்”.. நமக்கு ஏற்பட்டும் பிரச்சனைக்கான திறவுகோல் நம்மிடம் தான் உள்ளது என்பதை ஆழமாக உணர்ந்தாலே” பாதி பிரச்சனை முடித்து விட்டதாக உணரலாம்..

  நீங்க இங்கு குறிப்பிட்டுள்ள பல விஷியங்கள் நீங்கள் அனுபவ பூர்வமாக கடந்து வந்து உள்ளதால், கண்டிப்பாக இதை மற்றவர்கள் பின்பற்றும் போது அதற்கான ரிசல்ட் , நிச்சயம் பாசிட்டிவாக இருக்கும்.. இந்த பதிவில் நிறைய விஷியங்கள் கூறலாம்.. ஆனால் அதை எழுதும் போது வார்த்தை உண்மையில் வரவில்லை.. நேரில் பேசினால் நிறைய பேசலாம்.. நன்றி கிரி..

  ஒரு செய்தி மட்டும் கூறுகிறேன்.. புத்தகத்தில் படித்தது தான்.. நல்லா தேர்வுக்கு படித்து விட்டு, கடவுளை கும்பிட்டு விட்டு, தேர்வில் நல்ல மார்க் எடுக்கும் போது அதற்கான காரணம் .. கடவுளின் அனுகிரகமா? நம் முயற்சியா?? என்ற கேள்வி எழலாம்..

  நாம் ஒன்னுமே படிக்காமல் கடவுளை மட்டும் கும்பிட்டு விட்டு, தேர்வெழுதி தேர்வில் பெயில் ஆகும் போது, கடவுள் கை கொடுக்க வில்லை என நினைக்கலாமா??? அல்லது நாம் முயற்சி செய்யவில்லை என்பதா ??? எது உண்மை..

  சிக்கலான கேள்வி.. ஆனால் பதில் இவ்வாறு வரும் “நல்ல படிச்சிட்டு கடவுள கும்பிடமா போனாலும், கடவுள் நமக்கு நிச்சயம் வெற்றி தான் தருவார் காரணம்.. நமது முயற்சியையும், உழைப்பையும் கடவுள் புறம் தள்ளமாட்டார்”.. என்பதாக பதில் இருக்கும்.. இந்த வரிகள் நான் அடிக்கடி நினைவு கூறும் ஒன்று ..

  காரல் மார்ஸ் தன் மனைவி “ஜென்னியை பற்றி கூறும் போது
  “தெய்வங்களும் என்னை விட்டு விலகின
  பொழுதில் ஒரு தேவதையாய் வந்து
  என்னை தாங்கியவள் ஜென்னி”

  கடவுளே கை விட்ட ஒரு மனிதனுக்கு கடவுள் தான் வராமல் ஒரு தேவதையை (ஜென்னி உருவில்)அனுப்புகிறார்.. என நான் யூகித்து கொள்வேன்…

  நீங்க குறிப்பிட்ட அதே செய்தி தான்.. நான் முடியமா?? என்று நினைத்த பிரச்சனைகள் யாரோ ஒருவர் மூலம் முடித்து வைக்கபடுகிறது.. இல்லை யென்றால் ஏதோ ஒரு வகையில் உதவி கிடைத்து விடுகிறது. என்று சொன்னிங்க!!! கண்டிப்பாக இது போன்ற நிகழ்வுகள் எல்லோரது வாழ்விலும் நடைபெறும்.. ஆனால் எல்லோரும் நம்மிடம் இருப்பதை யாரும் கணக்கீடு செய்வதில்லை.. நம்மிடம் இல்லாததை மட்டும் கணக்கீடு செய்து கொண்டிருக்கிறோம்..

  கண்ணதாசன் என்று நீங்க சொன்ன மேற்கோளை பார்த்தவுடன்.. சில பழைய பாடல்களை கேட்டேன்.. அதுல ஒரு பாட்டுல (“உன்னை சொல்லி குற்றமில்லை”) பாடலின் இறுதியில்

  “ஒரு மனதை உறங்க வைத்தான்
  ஒரு மனதை தவிக்க விட்டான்…
  இருவர் மீதும் குற்றமில்லை
  இறைவன் செய்த குற்றமடி…

  காதலி ஏமாற்றியதற்காக காதலியை தண்டிக்கமால் “கடவுளையே தண்டித்து இருப்பார்..” ஒரு மனிதனின் கற்பனை திறன் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது பிரம்மிக்க வைக்கிறது.. இவரின் பாடல்களுக்கு என்றும் மரணமில்லை..

  கண்ணதாசன் ஐயா, நீங்கள் வாழ்ந்த அதே பூமியில், நீங்கள் சுவாசித்த அதே காற்றை நாங்களும் சுவாசித்தோம் , உங்கள் என்ற ஒற்றை பெருமை மட்டும் எங்கள் தலைமுறைக்கு உண்டு..

 3. @சக்தி & ரத்தினகுமார் 🙂

  @யாசின்

  “நாம் ஒன்னுமே படிக்காமல் கடவுளை மட்டும் கும்பிட்டு விட்டு, தேர்வெழுதி தேர்வில் பெயில் ஆகும் போது, கடவுள் கை கொடுக்க வில்லை என நினைக்கலாமா??? அல்லது நாம் முயற்சி செய்யவில்லை என்பதா ??? எது உண்மை..”

  இதில் குழம்ப ஒன்றுமே இல்லை யாசின்.

  கர்ம வினை கட்டுரையில் கூறியது போல, நம் கடமைகளை, முயற்சிகளைச் சரி வரச் செய்ய வேண்டும். செய்த பிறகு நடப்பது நம் கையில் இல்லை.

  கடவுளே எல்லாமே பார்த்துப்பார் என்று இருந்தால், நாம் எதற்கு இருக்கிறோம்!

  ஒரே போல சூழ்நிலையில் இருவர் இருந்தும், வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக இருவரும் பயன்படுத்தியும் ஒருவர் உயர்ந்து விடுகிறார் ஒருவர் அது போல ஆவதில்லை.

  இதற்கு காரணம் என்ன? இதை யோசித்தால், நான் கூறுவது புரியும்.

  என்ன முயற்சி செய்தாலும் சில நம்மையும் தாண்டியுள்ளது. எனவே தான் அந்த இடத்தில் கடவுள் வேண்டுதல் நடைபெறுகிறது.

  கடுமையான முயற்சிகளையும், உழைப்பையும் தாண்டி “நேரம்” என்ற ஒன்றும் இருக்கிறது. இது இல்லாமல் அனைவராலும் எந்த உயரத்தையும் அடைய முடியாது.

  ரஜினி ஒரு மேடையில் கூறியதை கூறுகிறேன்.

  உழைப்பு மட்டுமே ஒருவரை உயர்த்தி விடாது, அதோடு அதற்கான நேரம், சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் அனைத்தும் அமைய வேண்டும்.

  இவை நடந்தாலே வெற்றி சாத்தியமாகிறது.

  ஏன் நடக்கவில்லை எனும் போது அதற்கு கர்மவினை உட்பட பல்வேறு காரணங்கள் வருகிறது. சிலருக்கு இதில் உடன்பாடு உண்டு, சிலருக்கு இல்லை.

  கண்ணதாசன் அவர்களின் திறமை அளப்பரியது. அவர் எப்படி இது போல அற்புதமாக இவ்வளவு எழுதினார் என்று வியப்பாக உள்ளது.

  ஊற்று போல வந்துகொண்டே இருந்துள்ளது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here