சில நேரங்களில் எதையோ தேடி எதுவோ கிடைக்கும். அது போல வந்த அட்டகாசமான படமே Head Full Of Honey. Image Credit
Head Full Of Honey
மறதி நோயால் பாதிக்கப்பட்ட, மனைவியை இழந்த Amandus என்ற முதியவரால் ஏற்படும் சிக்கல்களை நகைச்சுவை கலந்து உணர்ச்சிப்பூர்வமாக Head Full Of Honey ல் கூறியுள்ளார்கள்.
அல்சைமர்
அல்சைமர் என்ற மறதி நோய் என்பது மறதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இறுதியில் உடன் இருப்பவர்கள் யார், தான் யார் என்பதே மறந்து விடும்.
என்ன செய்வது? என்ன செய்தோம்? என்று புரியாமல் Blank ஆகி விடுவார்கள்.
வயதானவர்களுக்கு மறதி இயல்பு என்றாலும், அல்சைமர் இருப்பவர்களுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கும்.
Amandus
அல்சைமரால் பாதிக்கப்பட்ட Amandus அற்புதமாக நடித்துள்ளார். அவருடைய உடல்மொழியும் மறதியை வேறு காரணம் கூறிச் சமாளிப்பதும் அருமை.
கை நடுக்கம் உள்ளவர்கள் பொருட்களைக் கையில் பிடிப்பது எளிதல்ல. அதை அற்புதமாகப் பிரதிபலித்துள்ளார்.
மறதி அதிகமாகி அவர் சிரமப்படும் போது Parkinson நோயால் இதே போலப் பாதிக்கப்பட்ட அப்பா தான் ஒவ்வொரு காட்சியிலும் நினைவுக்கு வந்தார்.
அவருடைய இறுதி கட்டத்தில் என்னையே அடையாளம் தெரியவில்லை என்றதும் அம்மா அதிர்ச்சியாகி கண் கலங்கியது மறக்க முடியாதது.
சிலர் நினைப்பது போல மறதி சாதாரணப் பிரச்சனை அல்ல. நம்மைக் கிறுக்கு பிடிக்க வைத்து விடும்.
குடும்பம்
அப்பாவால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டாலும் அதைப் பரிவோடு ஏற்றுக்கொள்பவர் Amandus மகன்.
அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பது ஒரு வயது குழந்தையைக் கவனிப்பது போல. 24 மணி நேர கண்காணிப்புத் தேவை.
என்ன வேண்டும் என்றாலும் அவர்கள் அறியாமல் செய்து விடுவார்கள். சில நேரங்களில் எங்காவது சென்று வீட்டுக்கு எப்படிப்போவது என்பது தெரியாது.
மாமனாரின் அட்டகாசங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறும் சராசரி மருமகள். ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகிறார்.
பேத்தி
இவர்கள் அனைவரையும் விடப் பேத்தியாக வரும் சிறுமியின் நடிப்பு அபாரம். செயற்கை, மிகை நடிப்புச் செய்யாமல் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்.
தாத்தாக்கு பிடித்ததைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியதைக் கேட்டு அவர் விரும்பிய வெனீஸ் நகருக்கு அழைத்துச் செல்வது கவிதை.
பொது இடத்தில் பிரச்சனை செய்யும் போது அதை ஏற்று அனுசரித்துச் செல்வது ஒருவகை என்றால், அதை ரசிப்பது அடுத்தக் கட்டம். அதைத்தான் பேத்தி செய்வார்.
தாத்தாவிடம் பேத்தி நடந்து கொண்ட விதம் கண்டு என் அப்பாவிடம் இன்னும் கூடுதல் புரிந்துணர்வோடு அன்போடு இருந்து இருக்கலாமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.
தாத்தாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள், அதற்கு அவருக்குக் கிடைக்கும் உதவிகள் என்று Feel Good காட்சிகள்.
சமீப படங்களில் நான் மிக ரசித்த இயல்பான நடிப்பாக இச்சிறுமியின் நடிப்புள்ளது. அருமை. இன்னும் சில நாட்களுக்கு இதன் பாதிப்பு என்னுள்ளே இருக்கும்.
தாத்தா பாட்டியின் அன்பு கிடைக்காமலே (காலமாகி விட்டார்கள்), தெரியாமலே வளர்ந்ததால், எப்போதுமே வயதானவர்களிடம் எனக்குப் பிரியம் அதிகம்.
லாஜிக்கல் கேள்விகள்
அல்சைமர் பிரச்சனையை எளிமையாக, பேத்தியின் பேரன்போடு கவிதையாகக் கூறியதால் லாஜிக்கல் கேள்விகளை மன்னித்து விடலாம்.
முரளி பெருமாள் என்ற கதாப்பாத்திரமும் ஒரு காட்சியில் வந்து செல்கிறார் 🙂 .
கேமரா பயன்படுத்த அனுபவம் இல்லாதவர் கூட DSLR கேமராவில் எடுத்தால் அழகாக வரும். அது போல ஐரோப்பா நாடுகளை எப்படி ஒளிப்பதிவு செய்தாலும் அழகாக இருக்கும் போல.
Head Full of Honey படம் 2014 ஜெர்மன் படத்திலிருந்து அமெரிக்காவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுடன் வசிப்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
இப்படம் பார்த்தால், அவர்களை அணுகும் முறையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.
Amandus கொஞ்சம் ப்ளே பாய் மாதிரியான கதாப்பாத்திரம். எனவே, சில Lighter Adult காட்சிகளும் வசனங்களும், நகைச்சுவையும் உள்ளது.
NETFLIX ல் காணலாம்.
Directed by Til Schweiger
Screenplay by Til Schweiger, Lo Malinke, Jojo Moyes
Based on Head Full of Honey by Hilly Martinek, Til Schweiger
Produced by Til Schweiger, Christian Specht
Starring Nick Nolte, Matt Dillon, Emily Mortimer, Sophia Lane Nolte
Cinematography René Richter
Edited by Christoph Strothjohann, Til Schweiger
Music by Martin Todsharow, Diego Baldenweg, Nora Baldenweg, Lionel Baldenweg
Distributed by Warner Bros. Pictures
Release date October 27, 2018 (Valladolid International Film Festival)
Country Germany
Language English
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
Mithunam (தெலுங்கு 2012) | அன்புக்கு இல்லை எல்லை
Jivan Sandhya (2021 மராத்தி) | முதுமைக் காதல்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அருமையான விமர்சனம் கிரி.
கிரி, நீங்க குறிப்பிட்ட படத்தை இது வரை பார்க்கவில்லை.. ஆனால் படத்தின் கதையம்சம் எனக்கு பிடித்து இருக்கிறது.. 2018 இல் தமிழில் வெளிவந்த ராதாமோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் சார் நடித்த “60 வயது மாநிறம்” படமும் கிட்டத்திட்ட இதே கதையம்சம் கொண்ட படம் தான் என எண்ணுகிறேன்.. படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்.. படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஸ்ரீனிவாசன் நன்றி 🙂
@யாசின்
“2018 இல் தமிழில் வெளிவந்த ராதாமோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் சார் நடித்த “60 வயது மாநிறம்” படமும் கிட்டத்திட்ட இதே கதையம்சம் கொண்ட படம் தான் என எண்ணுகிறேன்.”
OTT யில் இல்லை. அமேசானில் உள்ளது ஆனால் US க்கு மட்டும். இந்தியாக்கு வரும் போது பார்க்கிறேன்.
பரிந்துரைக்கு நன்றி.