நிலாக்கு சென்றாலும் அங்கும் மலையாளிகள் டீக்கடை வைத்திருப்பார்கள் என்பது நகைச்சுவையாகக் கூறப்படும் கருத்து. தற்போது மலையாளிகள் பேக்கரி பக்கம் வந்துள்ளதை இக்கட்டுரை கூறுகிறது. Image Credit
மலையாளிகள் பேக்கரி
மற்ற மாநிலங்களில் எப்படி என்று தெரியவில்லை ஆனால், தமிழகத்தில் குறிப்பாகக் கொங்கு பகுதியில் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம்.
இதற்குக் கேரளா கொங்கு எல்லையாக இருப்பதும், தொழில் செய்யக் கொங்குப் பகுதி பிரச்சனை இல்லாததும் முக்கியக்காரணம்.
முன்பு எங்குப் பார்த்தாலும் இவர்களின் டீக்கடை இருக்கும். இங்கெல்லாம் எப்படிக் கடை திறந்தார்கள் என்று வியக்கும் அளவுக்குக் கடை வைத்திருப்பார்கள்.
தற்போது டீக்கடையிலிருந்து பேக்கரி மாடலுக்கு கொங்கு பகுதி மாறி வருகிறது. டீக்கடை + பேக்கரி இணைந்து இருப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
டீக்கடையாக மட்டுமே இருந்த கடைகளும் தற்போது பேக்கரியாக மாறி வருகிறது. டீக்கடையாக மட்டுமே இருக்கும் கடைகளுக்கு ஆதரவு குறைந்து வருகிறது.
இவ்வாறு வைக்கப்படும் பேக்கரிகளில் பெரும்பாலும் (80%) மலையாளிகளே உள்ளனர்.
சென்னையில் இவ்வகைக் கடைகள் பிரபலமாகததற்குக் காரணம், கடையின் பரப்பளவு அதிகமாக இருப்பதால் வாடகை அதிமிருக்கும்.
தேர்வு செய்யப்படும் இடங்கள்
தமிழர்கள் இந்த விசயத்தில் மலையாளிகளிடம் பின்தங்கி இருக்கிறார்கள் என்று வருத்தம் இருந்தாலும், திறமை உள்ளவர் வெற்றி பெறுகிறார்கள்.
தமிழர்களால் முடியாததை மலையாளிகள் வெற்றிகரமாகச் செய்து வருகிறார்கள் என்பதைப் பிடிக்கவில்லையென்றாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
விடுமுறையில் ஊருக்குச்சென்றபோது பல சாலைகளில் பயணிக்கும் போது பார்க்கும் போதே நம்மை ஈர்க்கும் கடைகளாக இருக்கும்.
ஒவ்வொரு கடைக்குச் செல்லும் போதும் இது தமிழர் கடையாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செல்வேன் ஆனால், பெரும்பாலும் ஏமாற்றமே கிடைக்கும்.
இவர்கள் தேர்வு செய்யும் இடம் வியப்பாக உள்ளது. மிகச்சரியான அனைவருக்கும் எளிதாக உள்ள இடங்களைத் தேர்வு செய்து கடை அமைக்கிறார்கள்.
கோபி கோயம்புத்தூர் பிரிவு அருகே ஒரு கடை வந்துள்ளது, கூட்டம் அள்ளுகிறது. எங்கே இருந்து அந்த இடத்துக்கு இவ்வளவு வருகிறார்கள் என்று புரியவில்லை.
கொளப்பலூரிலிருந்து திங்களூர் செல்லும் வழியில் இடதுபுறம் ஒரு கடை. இதுபோலக் குறிப்பிட ஏராளமான கடைகள் உள்ளன.
இவர்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு இடத்தை வைத்தும் Phd யே செய்யலாம்.
நின்று கொண்டு காஃபி குடிப்பதை விட Relax ஆக அமர்ந்து குடிப்பது பிடிக்கும். எனவே, இயல்பாகவே பேக்கரி காஃபி கடைகள் விருப்பமானதாகி விட்டது.
காஃபி சுவை
நண்பர்களோடு சென்னையில் வசித்த போது நண்பர்கள் அனைவரும் டீ / காஃபி குடிக்கச் செல்வார்கள் இரவு 1.30 க்கு கூட ஆனால், நான் மட்டும் குடிக்க மாட்டேன்.
இவற்றில் ஆர்வமே இருந்ததில்லை.
தற்போது அலுவலகத்தில் BREAK க்காகச்சென்று காஃபி பழகி / பிடித்து விட்டது. குடிப்பதற்காக இல்லையென்றாலும் ஒரு BREAK க்கா செல்வது பழகி விட்டது.
தற்போது சுவையான காஃபியை தேடுவதே வழக்கமாகி விட்டது.
முன்பு நண்பர்கள் உடன் இருந்தார்கள் காஃபி குடிப்பதில் ஆர்வமில்லை, தற்போது காஃபி குடிப்பதில் ஆர்வமுள்ளது உடன் வர நண்பர்கள் இல்லை 🙂 .
‘கிரி! ஒரு டீ போடலாமா..!‘ என்று கேட்கும் விஜய் சென்னையில் இல்லை 🙂 .
காஃபியில் ஆர்வம் அதிகமாகி, ஒரு காஃபி ஷாப் எதிர்காலத்தில் வைக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாகி விட்டது.
ஒரு சுவையான காஃபி கடையைச் சிறிய அளவில் துவங்க வேண்டும் என்ற விருப்பம் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டே உள்ளது.
ஆனால், 70’s / 80s கிட்ஸ்களுக்கு விருப்பமும் அதற்கான முதலீடு இருந்தாலும் எதிர்காலக் குடும்பப் பொறுப்புகளைக் கடந்து ரிஸ்க் எடுப்பது எளிதல்ல.
தமிழர்கள் காஃபி
கவனித்ததில் மலையாளிகள் காஃபி சுவை ஒரே மாதிரியுள்ளது, தமிழர்கள் காஃபி சுவை வேறு மாதிரியுள்ளது. தொடர்ந்து மலையாளிகள் கடையில் குடித்ததாலோ என்னவோ சுவை அலுத்து விட்டது.
பல புதிய கடைகளை (காஃபி சுவையை) முயற்சிக்கிறேன் ஆனால், வெகு சில கடைகளைத் தவிரத் திருப்தியளிக்கவில்லை.
கடந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல Black Pekoe கடையில் சுவை நான் எதிர்பார்க்கும்படியுள்ளது. இக்கடை மலையாளிகள் கடையல்ல.
குறைந்தபட்சம் பணிபுரிபவர்கள் மலையாளிகள் அல்ல. பணிபுரிபவர்கள் மலையாளிகள் இல்லையென்றாலே கடை அவர்களுடையதாக இருக்காது.
காரணம், மலையாளிகள் பெரும்பாலும் மலையாளிகளையே பணி அமர்த்துவார்கள் குறைந்தபட்சம் ஒருவராவது இருப்பர். தமிழர்கள் கடையில் தமிழர்கள், மலையாளிகள், வடக்கத்தினர் பணியாளர்களாக இருப்பார்கள்.
என் காஃபி தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது 🙂 . சுவாரசியமாகவும் உள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்கள் காபி தேடும் பயணம் வியப்பாக உள்ளது.. எனக்கு சிறு வயதிலிருந்து டீ / காபி மீது பெரிய ஆர்வம் இல்லை.. இருந்தால் சாப்பிடுவேன்.. குடித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. கோவையில் இருந்த காலகட்டத்தில் நானும் ,சக்தியும் செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போதெல்லாம் நாடு ராத்திரியில் பாதம் பால் சாப்பிடுவது வழக்கம்.. சக்தியின் உணவு ரசனை முற்றிலும் வேறு!!! நான் தர லோக்கல்.. ஆனால் அவர் சுத்த அக்ரகாரம்..
தரமான உணவகத்தை தேடி பிடித்து உணவு சாப்பிட வைப்பார்.. நான் சில சமயம் கிண்டலடிப்பதும் உண்டு.. நிறுவனத்தில் இலவச உணவு / உறைவிடம்.. இதை ரெண்டையும் விட்டு விட்டு தனியாக கோவையில் குறைவான சம்பளத்தில் தனியாக ரூமில் வாடகைக்கு இருந்தார்.. இரவு படம் பார்த்து விட்டு வரும் போதெல்லாம் அவர் ரூமில் நானும் தங்குவதுண்டு..
மலையாளிகள் : எனக்கு இவர்களிடம் நிறைய நேரடியான அனுபவம் உண்டு.. இவர்களின் திறமை நமக்கு எப்பொழுதும் வர வாய்ப்பில்லை.. இவர்கள் உலகம் வேறு.. தொழில் எப்படி நடத்த வேண்டும் என்பதை குஜராத்திகளுக்கே கோர்ஸ் எடுப்பார்கள் மலையாளிகள்..
அரபிக் காவா : கசப்பான பிளக் காபி இது .. சுவை ஆரம்பத்தில் எல்லோருக்கும் பிடிக்காது.. வித்தியாசமான சுவையாக தோன்றும்.. நிறைய பிளவர் இருக்கிறது.. அளவு குறைவாக தான் குடிப்பார்கள்.. நன்றாக இருக்கும்.. அரபிகள் இதை அருந்தும் போது பேரீச்சம் பழத்தை ஒன்று / இரண்டு எடுத்து கொள்வார்கள்..வாய்ப்பு இருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்..
@யாசின்
“நிறுவனத்தில் இலவச உணவு / உறைவிடம்.. இதை ரெண்டையும் விட்டு விட்டு தனியாக கோவையில் குறைவான சம்பளத்தில் தனியாக ரூமில் வாடகைக்கு இருந்தார்.. இரவு படம் பார்த்து விட்டு வரும் போதெல்லாம் அவர் ரூமில் நானும் தங்குவதுண்டு..”
பெரிய விஷயம் தான் 🙂 .
“எனக்கு இவர்களிடம் நிறைய நேரடியான அனுபவம் உண்டு”
பலமுறை கூறியுள்ளீர்கள்
“தொழில் எப்படி நடத்த வேண்டும் என்பதை குஜராத்திகளுக்கே கோர்ஸ் எடுப்பார்கள் மலையாளிகள்..”
🙂
“அரபிகள் இதை அருந்தும் போது பேரீச்சம் பழத்தை ஒன்று / இரண்டு எடுத்து கொள்வார்கள்..வாய்ப்பு இருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்..”
சென்னையில் இருப்பதாக நினைக்கவில்லை.
கிரி நான் 30 வருடங்களுக்கு முன் கோவையில் கல்லூரியில் படிக்கும் போதே பேக்கரி காபி கடைகள் இருந்தன. அப்போது அது எனக்கு புதிதாக இருந்தது. ஆனால் நண்பர்களுடன் உட்கார்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு டீ காபி சாப்பிடுவது ஒரு நல்ல அனுபவம்.