“X” Revenue Share | எல்லாமே மாறுகிறது

7
X

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதில் ஒன்று நிறுவனத்தின் பெயரை X என்று மாற்றியது. Image Credit

X

வாங்கியதும் கிட்டத்தட்ட 60% க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசியம் இல்லை என்று பணி நீக்கம் செய்தார். அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், இன்றுவரை அதனால் எந்தப் பெரிய தொழில்நுட்ப சிக்கலையும் நிறுவனம் சந்திக்கவில்லை. சிறுசிறு தொழில்நுட்ப பிரச்சனைகள் மட்டுமே வந்தன.

தான் முன்னரே வாங்கி இருந்த X இணையத் தளத்தின் பெயருக்கு ட்விட்டர் பெயரை மாற்றி, பயனாளர்கள் அறியாமலே எக்ஸ்க்குள் இழுத்து விட்டார்.

அதாவது, வேறு தளத்துக்கு மாறி விட்டோம் என்ற உணர்வே இல்லாத அளவுக்கு.

இவற்றோடு நிறுத்தாமல், X என்ற தளத்தை அனைத்துக்கும் பொதுவான தளமாகக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.

அதாவது பல சேவைகளையும் இணைத்து, அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்போகிறார்.

X தளம்

இந்த X முகவரிக்கு ஒரு கதையுண்டு.

எலன் மஸ்க் X இணையத் தள முகவரியை (https://www.X.com) துவக்கத்தில் $10,000 க்கு வாங்கினார். அதை இன்னொருவர் தனக்கு $12,000 க்கு கொடுக்கக் கேட்டுள்ளார், அதாவது உடனடி $2,000 இலாபம்.

அப்போது $2,000 என்பது மிகப்பெரிய தொகை (தற்போதும் கூட). ஆனாலும், எலன் மஸ்க் மறுத்துள்ளார். இன்று X முகவரியின் மதிப்பு கணக்கிலடங்காதது.

தற்போது ட்விட்டரை X தளத்துக்கு மாற்றிய போது (Redirect), எலன் மஸ்கிடம் $12,000 கொடுப்பதாகக் கூறிய நபர் இக்கதையைக் கூறி, தற்போது வேறு லெவலுக்கு இதை எலன் மஸ்க் கொண்டு சென்றதுக்குப் பாராட்டியுள்ளார் 🙂 .

எப்படிப்பாருங்க! எலன் துவக்கத்திலிருந்தே ஒரு முற்போக்கு சிந்தனையாளர் தான். எலன் மஸ்க் விண்வெளி நிறுவனத்தின் பெயர் SpaceX என்பது குறிப்பிடத்தக்கது.

Bluetick

முன்பு ட்விட்டரில் Bluetick பிரபலமானது. இதை வைத்து இருந்தால் ஒரு கெத்து. சிலருக்கு மனதினுள் எதோ தான் பெரிய லபக்கு என்ற எண்ணம்.

இதை உடைத்து, பணம் செலுத்தினால் எவருக்கும் Bluetick என்று கொண்டு வந்தார்.

இதனால், ‘நானும் மற்றவரும் ஒன்றா!‘ என்று சிலர் கொந்தளித்த போது ‘வேணும்னா பணம் கொடு, இல்லைனா கிளம்பு‘ என்று உறுதியாகக் கூறி விட்டார்.

தற்போது பலரும் Bluetick பெற்று விட்டார்கள், அதோடு பல சலுகைகளையும்.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுக்க, ட்விட்டருக்கு என்று இருந்த 280 எழுத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அதிகப்படுத்தி விட்டார்.

திருத்தும் வசதியைக் கொடுத்துள்ளார். அதோடு காணொளி நீளத்தையும் அதிகப்படுத்தி விட்டார்.

Revenue Share

எலன் மஸ்க் அறிமுகப்படுத்திய திட்டமே விளம்பர வருவாயில் பகிர்வு. கருத்துப் பகுதியில் வரும் விளம்பரங்களின் வருவாயைப் பயனாளருடன் பகிர்வது.

இதுவரை எக்ஸ்ல் வெட்டியா எழுதிக்கொண்டு இருந்தவர்களுக்கு, மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது.

விளம்பர வருவாய் பகிர்வைப்பெற Bluetick Subscription பெற வேண்டும்.

சரி இதில் என்ன பிரச்சனை?

பலருக்கு குறிப்பிடத் தக்க தொகையை X கொடுத்துள்ளது. எனவே, X பயனாளர்களிடையே இவ்வசதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக கருத்துகளுக்காக, சர்ச்சையான ஸ்டேட்டஸ் வைப்பது, கேள்வி கேட்டுப் பதிலைப் பெறுவது, பரபரப்பு செய்திகளைப் பகிர்வது என்று எக்ஸ் மாறி வருகிறது.

இதுவரை யாரையும் மதிக்காமல் இருந்தவர்கள் கூட அனைவருக்கும் பதிலளிக்கத் துவங்கியுள்ளார்கள், நல்ல மாற்றம்.

பதில் அளித்தால், கருத்திடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும் என்பதே இம்மாற்றத்துக்குக் காரணம்.

மேலும் சிலர் வேண்டும் என்றே சண்டையை இழுத்து, பலரை கருத்துப்பகுதியில் சண்டை போட வைத்து வருவாய் பெற்று வருகிறார்கள்.

கருத்துகள் அதிகம் வருகிறது என்றால், Bluetick பெற வலியுறுத்துகிறேன். இவ்வசதி நல்லதையும் கொடுத்துள்ளது, கெட்டதையும் கொடுத்துள்ளது.

Blog

பலர் என்னிடம் Blog தொடங்குவது எப்படி என்று கேட்டுள்ளார்கள், கேட்கிறார்கள். இனி துவங்கி தளத்தை நடத்துவது எளிதல்ல.

தற்போது Blog துவங்க நினைப்பவர்களுக்கு Bluetick Subscription சரியான வாய்ப்பு. மாதம் ₹900 கட்ட வேண்டும் (₹9400 ஆண்டுக்கட்டணம்).

ஒரு இணையத் தளத்தை நடத்துவதை விடச் செலவு அதிகம் ஆனால், ஒருவேளை பிரபலமானால் X வருவாய் பகிர்வு மூலம் கூடுதல் பணம் கிடைக்கும்.

X ல் எழுதினால் மேலும் பலரை சென்றைடையலாம், கருத்துக்களைப் பெறலாம் ஆனால், எனக்கு giriblog தளம் தான் எல்லாமே!

இதில் என் தொழில்நுட்ப ஆர்வம், 17+ வருட உழைப்பு, Passion என்று ஏகப்பட்டது உள்ளதால், X தளத்தில் முழுக்கட்டுரையைப் பகிரும் எண்ணம் இல்லை.

இத்தளத்தில் புதிதாக என்ன செய்ய முடியுமோ அதை முயன்று கொண்டே இருப்பதில் அலாதி ஆர்வம். இங்க நான் தான் கிங், நான் வைப்பது தான் சட்டம் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. இங்க நான் தான் கிங், நான் வைப்பது தான் சட்டம்.. (Y)
    super giri, as usual 🙂

  2. ட்விட்டர் இது வரை நான் பயன்படுத்தியது இல்லை. அதனால் இதை பற்றி கூடுதல் விவரங்கள் எனக்கு தெரியாது.. எலன் மாஸ்க் இந்த நிறுவனத்தை வாங்கிய சில நாட்களில் மிக பெரிய நட்டத்தை அடைந்ததை செய்திகளில் படித்த நினைவு இருக்கிறது..
    ==============================
    எலன் மஸ்க் X இணையத் தள முகவரியை (https://www.X.com) துவக்கத்தில் $10,000 க்கு வாங்கினார். அதை இன்னொருவர் தனக்கு $12,000 க்கு கொடுக்கக் கேட்டுள்ளார், அதாவது உடனடி $2,000 இலாபம்.

    அப்போது $2,000 என்பது மிகப்பெரிய தொகை (தற்போதும் கூட). ஆனாலும், எலன் மஸ்க் மறுத்துள்ளார். இன்று X முகவரியின் மதிப்பு கணக்கிலடங்காதது.

    இதுவரை நான் அறியாத புதிய செய்தி.. சுவாரசியமாக இருக்கிறது..
    ==============================
    பலர் என்னிடம் Blog தொடங்குவது எப்படி என்று கேட்டுள்ளார்கள், கேட்கிறார்கள். இனி துவங்கி தளத்தை நடத்துவது எளிதல்ல.

    உண்மை தான் கிரி.. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாசகர்களின் மனநிலை தற்போது இல்லை.. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இது மாறி கொண்டே இருக்கும்.. எழுதுபவர்கள் இதை சரியாக கணித்து எழுத வேண்டும்.. அது உண்மையில் மிகவும் சிரமமான ஒன்று..

    எல்லாவற்றிக்கும் மேல் எழுதுவதை விரும்பி, ரசித்து எழுத வேண்டும்.. உதாரணத்துக்கு உங்களை போல்.. அப்போது தான் சில ஆண்டுகளுக்காவது தாக்கு பிடித்து நிற்க முடியும்.. வெறும் வருமானத்துக்காகவும், LIKE குக்காகவும் எழுதினால் நீண்ட தூரம் பயணிப்பது கடினம்.

    நான் வெகு சமீபத்தில் இணையத்தில் தமிழில் எந்ததெந்த BLOGS தற்போது ஆக்ட்டிவாக இருக்கிறது என்று GOOGLE இல் தேடும் போது, உங்கள் தளம் உட்பட வெகு சொற்ப BLOGS மட்டும் தான் தற்போது ஆக்ட்டிவாக உள்ளது.. நிறைய BLOGS கடந்த 8 / 9 வருடமா இயங்கவில்லை..

    எனக்கு ஆரம்பத்தில் இது போல BLOGS இருப்பதெல்லாம் தெரியாது.. அலுவலகத்தில் இணையத்தை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடு உண்டு. ஆரம்பத்தில் உங்கள் தளத்தை எப்படி கண்டுபிடித்தேன் என்று சரியாக என் நினைவிலில்லை.. ஆனால் GOOGLE மூலம் ஏதோ ஒன்றை தேட போய் உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்ததாக நினைவில் இருக்கிறது..

  3. நான் 2010 இல் இருந்து உங்க ப்ளாக் படிக்கிறேன். அப்ப ப்ளாக் ரொம்ப famous. அப்ப ப்ளாக் எழுதிட்டு இருந்த பலபேர் இப்ப ஆளையே காணோம். நீங்க மட்டும் தான் இன்னும் அதே வேகத்தோடு இருக்கீங்க. cable sankar இன்னமும் எழுதறார். ஆனால் படிக்க தான் ஆளில்லை. யாருமே இல்லாத கடையில் டீ ஆத்தி கொண்டு இருக்கிறார். அவர் சினிமா & சாப்பாடு விமர்சனத்திற்கு முன்னாடியெல்லாம் நூற்றுக்கணக்கில் கமெண்ட்ஸ் வரும் இப்ப ஒரு கமெண்ட்ஸ் கூட வருவதில்லை. எனக்கு தெரிந்து ப்ளாக்கில் ஆக்டிவாக இருப்பது நீங்க மட்டும் தான்.

  4. @ரகு நன்றி 🙂

    @யாசின்

    “ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாசகர்களின் மனநிலை தற்போது இல்லை.. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இது மாறி கொண்டே இருக்கும்.”

    அது மட்டுமல்ல. கட்டுரையாக படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

    படிப்பதற்கு ஏராளமாக இருப்பதால், நேரமின்மை காரணமாக சுருக்கமாக படிக்க, பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

    எனவே, Blog க்கு வரவேற்பு குறைந்து விட்டது.

    “வெறும் வருமானத்துக்காகவும், LIKE குக்காகவும் எழுதினால் நீண்ட தூரம் பயணிப்பது கடினம்.”

    மறுக்க முடியாத உண்மை.

    “உங்கள் தளம் உட்பட வெகு சொற்ப BLOGS மட்டும் தான் தற்போது ஆக்ட்டிவாக உள்ளது.. நிறைய BLOGS கடந்த 8 / 9 வருடமா இயங்கவில்லை.”

    துவக்கத்தில் தமிழ்மணம், தமிளிஷ் போன்ற தளங்கள் எழுதுபவர்களை ஒருங்கிணைக்கவும், படிப்பவர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்தையும் படிக்க வாய்ப்பு கொடுப்பவையாகவும் இருந்தன.

    ஆனால், இத்தளங்கள் மூடப்பட்டதால், பலருக்கு யார் எழுதுகிறார்கள் என்று தெரிவதில்லை.

    பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் என்று தொடர்வதால், கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவது குறைந்து, நின்று விட்டது.

    எனக்கு எழுதுவதில் ஆர்வம் இருப்பதாலும், அதை எனக்கு தெரிந்த தொழில்நுட்பம் மூலம் பலருக்கு எப்படி கூகுள் மூலம் கொண்டு செல்ல முடியும் என்று தெரியும் என்பதாலும், என்னால் தொடர முடிகிறது.

    இது மட்டுமல்ல, மற்றவர்கள் விமர்சனம், படிப்பவர்கள் எண்ணிக்கை போன்றவற்றை பற்றியும் கவலைப்படாமல் எழுதுவதால், தொடர முடிகிறது.

    இவையல்லாமல் எதிர்கால பயண அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். நிச்சயம் எழுதுவேன்.

    “GOOGLE மூலம் ஏதோ ஒன்றை தேட போய் உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்ததாக நினைவில் இருக்கிறது”

    தலைவன் கூகுள் நம்மை இணைத்து இருக்கான் 🙂 .

  5. @ஹரிஷ்

    “2010 இல் இருந்து உங்க ப்ளாக் படிக்கிறேன். அப்ப ப்ளாக் ரொம்ப famous.”

    ஆமாம். 2008 முதல் 2010 வரை Blog பொற்காலம்.

    “முன்னாடியெல்லாம் நூற்றுக்கணக்கில் கமெண்ட்ஸ் வரும் இப்ப ஒரு கமெண்ட்ஸ் கூட வருவதில்லை.”

    இது அனைவருக்கும் பொருந்தும்.

    இத்தளத்திலும் ஏராளமான பேர் கருத்திட்டுள்ளார்கள் ஆனால், தற்போது அது போல இல்லை. இருப்பினும் ஒரு சில விவாத கட்டுரைகளுக்கு தொடர்கின்றன.

    ஆனால், முன்பு போல இல்லை. இதை நானும் உணர்ந்துள்ளதால், எதிர்பார்ப்பை வைத்துக்கொள்வதில்லை.

    படிக்கிறார்கள் என்பது Google Analytics மூலம் தெரிவதால், அது வரையில் மகிழ்ச்சி.

  6. எனக்கென்னவோ எலான் வேற ஏதோ பெருசா பிளான் போட்டுருக்கார்னு தோணுது, ஜியோ மாதிரி.

  7. @கார்த்திக்

    கட்டுரையில் கூறியுள்ளபடி “பல சேவைகளையும் இணைத்து, அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்போகிறார்.”

    Google Pay, Linkedin போன்று அனைத்தையும் இதில் இணைக்கப்போகிறார்.

    எதிர்காலத்தில் X தளத்தில் அனைத்துமே இருக்கும்படி பார்த்துகொள்ளப்போகிறார் என்று நினைக்கிறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here