மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகளை அழித்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது அவர்கள் மோசமாக நடந்து கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது. Image Credit
மேற்கத்திய நாடுகள்
எப்போதுமே மேற்கத்திய நாடுகளுக்கு மனதில் நாட்டாமை எண்ணம் இருக்கும், தான் பெரிய ஆள் என்று. இதற்கு அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, காலகட்டம் அது போல.
இதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பாகக் குறிப்பிட்டு இருந்தார்.
ஐரோப்பா நாடுகளின் பிரச்சனை உலகப்பிரச்னையாகக் கருதப்படும் ஆனால், உலக நாடுகளின் பிரச்சனைகள் ஐரோப்பா பிரச்சனைகள் அல்ல.
இவர்கள் அனைவருக்குமே ரஷ்யா மீது கடுப்பு. ரஷ்யா அழிய வேண்டும் என்று ஒருத்தர் விடாமல் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
இதனால், தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை ரஷ்யாக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இவர்கள் தொடர்ச்சியாக வழங்கும் ஆயுதங்களால், உக்ரைன் போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இதனால் என்ன பிரச்சனை?
இதனால் மற்ற நாடுகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெரும்பாலான நாடுகள் பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன.
இவற்றில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பாதிக்கப்பட்டதுக்குக் கச்சா எண்ணெய் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவின் பணமதிப்பிழப்பும் ஒரு காரணம்.
இவற்றைத் தனிக்கட்டுரையில் விளக்குகிறேன்.
IMF வெளியிட்ட பட்டியலில் பல முன்னேறிய நாடுகளும் குறைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளன. இதற்கு முக்கியக்காரணம் உக்ரைன் போர் தான்.
இப்பிரச்சனைகளால் உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, தற்போது ஆட்குறைப்பில் (Layoff) வந்து நிற்கிறது.
எங்கோ நடக்கும் போர் அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தனிநபரின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது.
மேற்கத்திய நாடுகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன ஆனாலும், மேலும் ஆயுதங்களைக் கொடுத்து போரை வளர்த்து வருகிறார்கள்.
பொருளாதார சிக்கல்களால் ஐரோப்பா நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நாம் எதற்கு உக்ரைனுக்கு செலவழிக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
கெடுவான் கேடு நினைப்பான்
எப்பவுமே அடுத்தவன் அழியனும் என்று முயற்சிகளை எடுப்பவர்கள், துவக்கத்தில் வெற்றி பெறுவது போல இருந்தாலும், இறுதியில் அழிந்தே போவார்கள்.
இதை வெளிப்படையாகக் காண முடிகிறது.
இங்கிலாந்து ஐந்தாவது இடத்தை இந்தியாவிடம் இழந்தது இப்பிரச்சனைகளாலே ஆனாலும், ஹெலிகாப்டர் உட்படப் பல்வேறு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.
தற்போது பணவீக்கத்தால் கடுமையான விலை உயர்வை எதிர்கொண்டு வருகிறது, இங்கிலாந்து மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பான 32 ட்ரில்லியன் டாலரை எட்டிவிட்டது ஆனாலும், பில்லியன் கணக்கான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.
அதிகாரத்தில் உள்ளவர்களே இம்முடிவை எடுப்பதால், சம்பந்தமே இல்லாத பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
வளர்ந்து வரும் ரஷ்யா பொருளாதாரம்
இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் பொருளாதார ரீதியாக ரஷ்யாவை ஆதரித்து வருவதால் (குறிப்பாக கச்சா எண்ணெய்) அமெரிக்கா எதிர்பார்த்தது நடக்கவில்லை.
இப்போரால் ரஷ்யா பொருளாதாரம் வலுப்பெற்று விட்டது.
மேற்கத்திய நாடுகளின் ‘அடுத்தவன் தன்னை மிஞ்சக் கூடாது‘ என்ற எண்ணம் இவர்களையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது.
ஆனாலும், தெரிந்து கொண்டே பொறாமை, ஈகோ காரணங்களால் தங்களை அழித்துக்கொண்டுள்ளார்கள்.
எதிர்காலம் இந்நாடுகளுக்குப் பிரகாசமாக இல்லை.
ரஷ்யாக்குப் பிரச்சனை ஏற்படுத்த டாலரை வைத்து நெருக்கடி கொடுக்க, தற்போது மற்ற நாடுகள் டாலரை தவிர்த்துத் தங்கள் சொந்த கரன்சியில் பரிமாற்றத்தைச் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள்.
உடனே இல்லையென்றாலும், டாலர் மதிப்பு இதனால் குறையப்போகிறது. இது மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவை அமெரிக்காக்கு ஏற்படுத்தும்.
அகதிகள்
மேற்கத்திய நாடுகள் நாசம் செய்த நாடுகளின் பட்டியல் மிகப்பெரியது.
ஈராக், சிரியா, ஆப்ரிக்கா உட்பட ஏராளமான நாடுகளை அழித்து விட்டன. இதனால், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் இந்நாடுகளுக்கே இடம் பெயர்கிறார்கள்.
இவ்வாறு இடம்பெயர்பவர்களால் ஐரோப்பா நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காரணம், ஐரோப்பா கலாச்சாரமும் அகதிகள் கலாச்சாரமும் வேறு.
துவக்கத்தில் அமைதியாக இருக்கும் அகதிகள், பாதுகாப்பான நிலையை அடைந்த பிறகு தங்கள் மத நம்பிக்கையைத் திணிக்க முயல்வது, சமூகக் குற்றங்களில் ஈடுபடுவது அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் அகதிகளால் பாதிக்கப்பட்ட ஸ்வீடன் பெண் கண்ணீருடன் தன் சொந்த நாட்டிலேயே வாழ்க்கை கேள்விக்குறியானது குறித்து அழுதது சமூகத்தளங்களில் பரவியது.
அகதிகளை வரவேற்றவர்கள் தற்போது தங்கள் நாட்டில் அகதிகளால் ஏற்படும் வன்முறைகள், சமூகக் குற்றங்களால் விழி பிதுங்கியுள்ளனர்.
தற்போது நடப்பவை வெறும் சிறு முன்னோட்டம் மட்டுமே! இனி வரும் காலங்களில் தான் உண்மையான பாதிப்பை உணரப்போகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளின் நிலைக்கு அவர்களே காரணம், வேறு யாருமல்ல.
உலக நாடுகளைச் சீரழிவுக்கு ஆளாக்கிய, ஆளாக்கும் நாடுகளின் எதிர்காலம் மிகச் சிக்கலாகவே உள்ளது.
கர்மாவின் தாக்குதலிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.
கொசுறு
இந்தியாவின் வளர்ச்சியும் மேற்கத்திய நாடுகளுக்குப் பிடிக்கவில்லை.
இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது அதனால், நேரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், இந்தியா இதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இதைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.
இவர்கள் என்ன செய்தாலும், தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ
குண்டூசியையும் தாண்டிய வளர்ச்சியில் இந்தியா
பிரிட்டனை பொருளாதாரத்தில் இந்தியா தாண்டியது சாதனையா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.