ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]

15
ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை

 டந்த வாரம் அகதிகளாகப் படகில் செல்ல முயன்ற “சிரியா” மக்கள் கடலில் மூழ்கி இறந்தனர். இறந்த குழந்தை “Aylan” துருக்கி நாட்டின் கரையில் ஒதுங்கிய படம் உலகை உலுக்கி வருகிறது. Image Credit

அகதிகள் பிரச்சனை குறித்துப் பல்வேறு நாடுகளும் மக்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து நான் என்னுடைய கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

இக்கட்டுரையை உணர்ச்சிவசப்படாமல் படிக்க வலியுறுத்துகிறேன்.

அகதிகள் என்பவர்கள் யார்?

தங்கள் சொந்த நாட்டில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையைச் சமாளிக்க முடியாமல் தங்களால் இங்கே வாழ முடியும், பிழைக்க ஏதாவது வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி ஓர் புதிய நாட்டிற்கு அனுமதி இல்லாமல் செல்பவர்களே அகதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தற்போது இது பற்றி ஏன் பேசப்படுகிறது?

தற்போது சிரியா உட்படப் பல நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள், IS மற்றும் Boko Haram தீவிரவாத அமைப்புகள் செய்து வரும் வன்முறைகளால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேற முயற்சித்து வருகிறார்கள்.

இவற்றில் “ஐரோப்பா நாடுகள்” முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஏன் ஐரோப்பாக்கு மக்கள் செல்கிறார்கள்?

இவர்கள் இங்கே செல்லக் காரணம், தாங்கள் இருக்கும் நாடுகளில் பொருளாதாரப் பிரச்சனை, உள்நாட்டுக் கலவரம், நிலையற்ற தன்மை, பாதுகாப்பு இல்லை, பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகள் ஆகியவை.

ஐரோப்பா சென்றால் தங்களால் பாதுகாப்பாக, அமைதியாக வாழ முடியும் என்று கருதுகிறார்கள்.

சுருக்கமாக, எப்படியாவது பெரியளவில் பிரச்சனையில்லாமல் தாங்கள் வாழ்க்கை நடத்த முடியும் என்று நம்புகிறார்கள். இதற்காகவே அனைவரும் செல்ல விரும்புகிறார்கள்.

சிக்கலில் ஐரோப்பா நாடுகள்

அகதிகள் வருவதைப் பல ஐரோப்பா நாடுகள் விரும்பவில்லை காரணம், அவர்களால் உள்நாட்டில் பிரச்சனை ஏற்படும் என்று கருதுகிறார்கள். இதனால் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

வாழ வழியில்லாமல் வரும் அகதிகளிடையே மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உலக ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இச்சிறுவனின் நிழற்படம் வெளியான பிறகு இக்குரல்கள் அதிகரித்துள்ளன.

ஐரோப்பா நாடுகள் இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டுள்ளன.

அகதிகளால் இவர்களுக்கு என்ன பிரச்சனை?

தற்போது அகதிகளாக வருபவர்கள் முஸ்லிம்களே! ஐரோப்பா, கிறித்துவர்கள் பெரும்பான்மையோர் உள்ள நாடு.

எனவே இது கலாச்சார / மதப் பிரச்னையை எதிர்காலத்தில் தன் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறார்கள்.

அகதிகளாக வருபவர்கள் துவக்கத்தில் அமைதியாக இருந்தாலும் இனி பிரச்சனையில்லை என்ற பாதுகாப்பான நிலை ஏற்பட்ட பிறகு தங்களுக்கு அனைத்திலும் உரிமை வேண்டும் என்று மதத்தின் பெயரால் போராட்டம் நடத்துவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள்.

இவர்கள் பயப்படுவதில் உண்மையில்லாமல் இல்லை. நியாயமான பயமே!

எப்போதுமே குறைவான எண்ணிக்கையில் இருக்கும் வரை பிரச்சனையில்லை ஆனால், எண்ணிக்கை அதிகரிக்கும் போது தங்களுக்கான உரிமைகளைப் பெற எந்தச் சமூகமே நினைக்கும்.

இது அகதிகள் பிரச்சனை என்றில்லாமல் அனைத்து நாடுகளிலும் நடக்கும் இயல்பான ஒன்று.

எந்தெந்த நாடுகளில் அந்நாட்டு மக்களுடன் வேறு நாட்டு மக்கள் அதிகம் கலக்கிறார்களோ அங்கெல்லாம் இப்பிரச்சனை எதிரொலிக்கும்.

அகதிகள் பின்னணி தெரியாமல் லட்சக்கணக்கில் ஐரோப்பா நாடுகளில் அனுமதிக்கும் போது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிறது.

அகதிகளாக வருபவர்கள் அனைவருமே அப்பாவிகள் என்று கருத முடியாது, இதில் குற்றப்பின்னணியில் உள்ளவர்களும் ஏராளம் இருப்பார்கள்.

இவர்களால் தங்கள் நாட்டில் விரும்பத்தகாத பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளதாகக் கருதுகிறார்கள்.

இந்தியா வங்காளத்தேசம்

வங்காளத்தேசம் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக அதிகளவு மக்கள் அகதிகளாக  இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள்.

தற்போது அவர்களால் இந்திய எல்லைப் பகுதி மாநிலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட இப்பிரச்சனை எதிரொலித்தது.

துவக்கத்தில் வாழ வழியிருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் தங்கள் நிலை சரியானதும் புதுப் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதே பிரச்சனையைத் தான் ஐரோப்பா நாடுகளும் எதிர்நோக்கும் என்று அங்குள்ளவர்கள் பயப்படுகிறார்கள்.

சென்னை

ஐரோப்பாவை இங்கே இருந்து பலர் திட்டிக்கொண்டு இருக்கின்றனர் ஆனால், கடந்த வாரம் மியான்மர் அகதிகள் சென்னை மணலியில் 57 பேர் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் தங்கி இருந்த இடத்தை முற்றுகையிட்டு வெளியேற வைத்து இருக்கிறார்கள்.

அகதிகள் இதற்கு முன் 2012 ல் இருந்து கேளம்பாக்கத்தில் தங்கியிருந்து இருக்கிறார்கள்.

அங்கே உரிமையாளர் வீடு கட்ட உள்ளதால் இங்கே இன்னொருவர் உதவியுடன் வந்த இடத்தில் தான் இப்பிரச்சனை. இவர்கள் தற்போது மண்ணடிக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

இதை எதற்குக் கூறுகிறேன் என்றால், எவருமே தங்களுக்குப் பாதிப்பில்லாதவரை அடுத்தவருக்கு அறிவுரை, ஆலோசனைகள் கூறலாம் ஆனால், தங்களுக்கு பாதிப்பு என்று வந்தால் ஒவ்வொருவரும் சுயநலவாதிகள் தான் என்பதைச் சுட்டிக்காட்டவே.

Source – தினத்தந்தி

Islamic State / Boko Haram என்ற தீவிரவாத அமைப்புகள்

IS அமைப்புத் துவங்கப்பட்ட போது இதில் உள்ளவர்களைப் போராளிகள் என்று கூறியதை பெரும்பாலானவர்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் ஆனால், கால மாற்றத்தில் இவர்களின் உண்மையான முகம் வெளிவர ஆரம்பித்ததும் பலரும் அதிர்ந்து விட்டார்கள்.

இவர்களால் அருகே உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன.

பெண்களை, சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர். இவர்களின் கண்ணீர் கதைகளைக் கேட்கக் கொடுமையாக இருக்கிறது.

இக்கட்டுரைக்காக பெண்கள் சிறுமிகள், இவர்களிடம் அனுபவித்த கொடுமைகள் குறித்தத் தகவல்களை குறிப்பிட நினைத்துத் தேடிய போது நான் மன உளைச்சல் அடைந்தது தான் மிச்சம்.

நரகம் என்ற ஒன்று இருந்தால், அதை விட மோசமாக இருக்கிறது.

நீங்கள் அவற்றைப் படிக்காமல் இருப்பதே நல்லது!

ஆப்ரிக்கா நாடுகளில் Boko Haram தீவிரவாத அமைப்பு, IS அமைப்பு போல மிகக் கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

300 க்கும் மேற்பட்ட நைஜீரிய சிறுமிகளைக் கடத்தி அவர்களில் பெரும்பாலானவர்களைக் கர்ப்பம் ஆக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்காகப் பெண்கள்  ட்விட்டரில் #Bringbackgirls என்ற hashtag உருவாக்கிப் போராடினார்கள்.

அடிக்கடி வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தி பல பொதுமக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். அரசாங்கமே இவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

கடல் வழியாகத் தப்பித்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று நன்கு தெரிந்து இருந்தும், உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாதிகளால் கொடுமைப்பட்டு தினம் தினம் சாவதை விட வேறு நாடுகளுக்குச் செல்வது மேல் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இதுவே அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்.

ஏன் ஐரோப்பாக்கு வர வேண்டும்?

அகதிகளாக வருபவர்கள் தங்களை வெறுக்கும் ஐரோப்பாவுக்கு ஏன் வர வேண்டும்? ஏன் அருகில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லவில்லை?

என்று ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்கள் கேட்கிறார்கள். இவை சுயநலம் என்றாலும் இவர்கள் கேள்வி நியாயமானது தான்.

தன் மதம் உள்ள சக நாடுகளை விரும்பாமல் முற்றிலும் வேறு மதத்தினரை / கலாச்சாரத்தைக் கொண்ட இன்னொரு நாட்டுக்கு, கடல் வழியே சென்றால், உயிரை இழப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று நன்கு தெரிந்தும் செல்கிறார்கள்.

சிறு அளவில் அகதிகள் என்றால் ஏற்பதில் பிரச்சனையில்லை ஆனால், லட்சக்கணக்கில் வரும் போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் அந்நாடுகளுக்கு எதிர்காலத்தில் பொருளாதாரம் / பாதுகாப்புரீதியாக பிரச்சனைகள் ஏற்படும்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு மக்கள், நாடு விட்டு நாடு செல்வது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான பிரச்சனை என்றாலும் இது போல ஒரே சமயத்தில் பல லட்சம் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்குத் தயாராக இல்லாத நாடுகள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.

லட்சணக்கணக்கில் ஐரோப்பா நோக்கி…

UN 2,00,000 அகதிகளை ஐரோப்பா நாடுகள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பா அதிகளவில் அகதிகள் பிரச்னையைத் தற்போது எதிர் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. Matthew Mirabelli/AFP/Getty Image

சிரியாவில் இருந்து தப்பித்து வருபவர்களுக்கு அருகில் உள்ள ஐரோப்பா நாடுகளாக இருப்பது கிரீஸ் மற்றும் இத்தாலி நாடுகள். இதில் கிரீஸ் பொருளாதாரம் ஏற்கனவே மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பரிதாபமான நிலையில் இருக்கிறது.

இத்தாலி பிரதமர் தனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் இங்கே வரும் அகதிகளை மற்ற ஐரோப்பா நாடுகளுக்குள் அனுமதித்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

ஐரோப்பா நாடுகளில் ஜெர்மனி தற்போது அதிகளவில் அகதிகளை வரவேற்று ஆதரித்து வருகிறது.

மணிக்கு 100 பேர் அகதிகளாக வருகிறார்கள். அகதிகளின் அடிப்படைத் தேவைக்காக 2016 க்குள் 1.8 – 3.3 பில்லியன் ஈரோ வரை செலவாகும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

ஜெர்மனியில் முஸ்லிம் —> கிறித்துவம் மத மாற்றங்களும் அகதிகளிடையே குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வருகிறது.

அகதிகளாக வருபவர்கள் சிரியாவில் இருந்து வருபவர்கள் மட்டுமல்ல ஆப்ரிக்கா உட்பட மற்ற முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களையும் சேர்த்துத் தான். 

அகதிகள் போர்வையில் மற்றவர்களும் இதைப் பயன்படுத்தி நுழைகிறார்கள்.

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் மக்களின் எண்ணிக்கை குறைவான அளவிலே உள்ளது. எனவே, அதிகளவில் வேற்று கலாச்சார / மத மக்கள் நுழையும் போது அவர்களின் அடிப்படை கட்டமைப்பே பிரச்சனைக்குள்ளாகிறது.

இக்காரணங்களால் ஐரோப்பா நாடுகள் இடியாப்பச் சிக்கலில் உள்ளது.

முஸ்லிம் நாடுகள் அகதிகளுக்கு உதவவில்லையா?

ஊடகங்களின் செய்திகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது அகதிகள் அனைவரும் ஐரோப்பா செல்வது போலத் தோற்றம் தரும் ஆனால், பெரும்பான்மையான மக்கள் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் அருகே உள்ள சக நாடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.

இதில் துருக்கி மற்றும் லெபனானில் அதிகளவில் அகதிகள் அடைக்கலமாகியுள்ளனர். லெபனான் முன்பு கிறித்துவ நாடாகும் ஆனால், நாளடைவில் முஸ்லீம் பெரும்பான்மை நாடாகி விட்டது.

Image Credit – UNCHR

Aylan நிழற்படம் ஏற்படுத்திய மாறுதல்

இக்குழந்தையின் படம் வெளியான தாக்கத்தில் அகதிகளுக்கு வரவேற்புத் தெரிவித்து ஜெர்மனியின் Dortmund நகரில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பேனர் பிடித்துள்ளனர்.

அகதிகளுக்கு ஒரு மில்லியன் டாலர் உதவி செய்யப்போவதாக Bayern Munich அணி அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த Real Madrid அணி 6 கோடி ரூபாயை அகதிகள் நிவாரண நிதியாக அளித்துள்ளது.

இப்பிரச்சனையை மையப்படுத்தி பலர் ஓவியங்கள் வரைந்து வருகிறார்கள். இப்படங்கள் பலர் மனதில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Image & News creditVikatan.com

ஆயிரம் விமர்சனங்கள் ஐரோப்பா நாடுகள் மீது இருந்தாலும், தங்களுக்குப் பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தும் அகதிகளை வரவேற்கிறார்கள்.

அனுமதிக்காத அரபு நாடுகள்

தற்போதைய சூழ்நிலையில் பணக்கார நாடுகளான அரபு நாடுகள் அகதிகளைப் பற்றிக் கூறும் செய்திகளும், அவர்கள் நடந்து கொள்ளும் முறையும் நியாயமற்றதாக இருக்கிறது.

எங்களுடைய நாடு சிறிய நாடு, எங்களால் அகதிகளை அனுமதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். அதற்குப் பதிலாக நிதி உதவி செய்கிறோம்

என்று கத்தார் கூறுகிறது.

அதிகமான அகதிகள் வந்தால் எங்களுடைய அரபு மொழி, கலாச்சாரம், அரசியல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்

என்று Sultan Sooud al Qassemi கூறியிருக்கிறார்.

2011 பிரச்சனையில் நாங்கள் 1.2 மில்லியன் லிபியா அகதிகளை அனுமதித்தோம் அதற்கான “விலையை” கொடுத்து விட்டோம் அதனால் எங்களால் சிரியா அகதிகளை அனுமதிக்க முடியாது

என்று துனிசியா கூறுகிறது.

UAE ல் வெளிநாட்டு நபர்கள் அதிகம், அகதிகளை அனுமதித்தால் உள்ளூர் மக்கள் மைனாரிட்டியாகவும் வெளி மக்கள் மெஜாரிட்டியாகவும் மாறி விடுவார்கள் அதை நாங்கள் விரும்பவில்லை

என்று UAE Abdulkhaleq Abdulla அரசியல் பிரமுகர் கூறியிருக்கிறார்.

News Credit : NDTV

இவர்கள் அனைவரும் உதவியைப் பணமாகத் தரத் தயாராக இருக்கிறார்கள் ஆனால், மக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இக்காரணங்களை நியாயமாக ஐரோப்பா நாடுகள் தான் கூற வேண்டும், மாறாக அரபு நாடுகள் கூறி வருகிறார்கள்.

பிரச்சனையை ஏற்படுத்திய நாடுகளையும், உதவி செய்ய வசதி வாய்ப்புகள் இருந்தும் எந்த முயற்சியும் எடுக்காத அரபு நாடுகளையும் விட்டுவிட்டு, ஐரோப்பா நாடுகளை இரக்கமற்றவர்கள் என்று விமர்சிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

முடிவு 

அகதிகள் பிரச்சனைக்கு உலக நாடுகள் இணைந்து முடிவெடுக்க வேண்டும். இதில் அரபு நாடுகளின் பங்கு தன் இன மக்கள் என்றளவில் தார்மீக ரீதியாக முக்கியமாக உள்ளது.

Aylan மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறக்க நேரிட்ட அனைவருக்கும் என் அஞ்சலிகள்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

15 COMMENTS

  1. உண்மைதான் கிரி .முஸ்லிம் நாடுகளே அவர்களை ஏற்க மறுப்பது உண்மையில் வேதனையான விடையம் .அடுத்தது அவர்கள் கொஞ்சநாட்களில் என்ன செய்வார்கள் என்பதை பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற வகையில் இஸ்லாமிய நாடுகளை சேர்ததவர்கள் அறிவார்கள் . இதில் ஜரோப்பிய நாடுகளின் நிலைதான் பரிதாபம் .ஜெர்மனியில் பல இஸ்லாமிய அகதிகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுகிறார்கள் சலுகைகளுக்காக . கிறிஸ்தவ தேவாலையங்கள் அகதிகளை பொறுப்பேற்க வேண்டும் என்று போப் சொல்லி இருக்கிறார்

    கனடாவில் அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் இப்போது கனேடிய அரசு ஏன் “பொல்லைகொடுத்து” அடிவாங்கவேண்டும் என்று சிந்திக்கிறது .
    ஏற்கன்வே கனடாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் போது நீரோட்டத்தில் சேராமல்
    தனி சமுகமாக வாழ்வதாக குற்றம் சாடடப்படும் நிலையில் ,கனேடிய அரசு இதில்
    மிகவும் நிதானப்போக்கையே கடைப்பிடிக்கிறது .
    அடுத்து வட அமேரிக்கா தொலைவில் இருப்பதால் பொறுப்பு ஜரோப்பிய நாடுகளையே
    சாருகிறது .

    ஜெர்மனியில் நிலவும் நிறவெறி ஏன்பது உலக பிரசித்தம் .பெரும் தொகையில் அகதிகள் வசிக்கும் இடங்களில் கலவரங்கள் அடிக்கடி நடப்பது வழமை .பிரான்ஸ் ஜரோப்பாவில் அதிகளவு முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இருந்தாலும் அவர்கள் ஏற்கனவே இந்த விடையத்தில் சூடு கண்ட பூனை இனிமேல் இஸ்லாமியர்களை ஏற்பார்கள் என்ற நிலை அவர்களிடம் இல்லை .

    நல்லதொரு ஆய்வு .நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறிர்கள் போலும் .

    கரிகாலன்

  2. well said. thanks for this article. as a public we are willing to help by offering/sharing our food/shelter for some extend. it is out of our hand. we can pray for their good health and wish for luck.

  3. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றார் பாரதி. அடுத்தவன் ஒரு வேளை நல்ல உணவு உண்டால் நாம் இருவேளை பட்டினி கிடக்கிறோம்.

    நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. ஆனால் மனிதன்????

    அன்றைய பர்மா, இன்றைய Myanmar ஒரு காலத்தில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வும், வேலையும் கொடுத்தது. ஆனால் இன்று 63 அகதிகளை ஏற்க நாம் தயாராக இருக்கவில்லை..

    சுயநலன் என்ற ஒன்றை மட்டும் மனிதன் கருதி பொது நலனை விட்டு விடுகிறான். தங்களுடைய சொந்த நாட்டை விட்டுவிட்டு வேறு ஒரு நாட்டுக்கு தஞ்சம் புகுவது மிகவும் வேதனையான ஒன்று. உலகம் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று என்பதை மனிதன் மறந்து விடுகிறான்..

    சமூக ஊடகங்களில் அதிகம் இதுபோல செய்திகளை பகிரும், படிக்கும், குருதி கொதித்தேழும் எத்தனை சகோதரர்கள் நமது அடுத்த வேளை உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்??? (என்னையும் சேர்த்து). மனிதர்களால் அல்ல, மனித நேயம் கொண்ட சிலராலே இயங்குகிறது உலகம்…இறைவா!!! எங்கள் எதிரிக்கு கூட இந்த நிலை வேண்டாம்.

  4. மதம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றுக்கு பலரும் கருத்து சொல்ல விரும்புவதில்லை. இதற்கு கருத்துச் சொல்லப் போனால் அங்கே தான் தொடங்கும். அங்கே தான் முடியும்.

  5. உண்மைகளை வெளிப்படையாக தெரிவித்து பதிவு எழுதிய கிரிக்கு பாராட்டுகள்.

    //அகதிகளாக வருபவர்கள் தங்களை வெறுக்கும் ஐரோப்பாவுக்கு ஏன் வர வேண்டும்? ஏன் அருகில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்குச் செல்லவில்லை? என்று ஐரோப்பா நாடுகளில் உள்ளவர்கள் கேட்கிறார்கள்.//

    இது ஏற்கெனவே தெரிந்த காரணம் தான். இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்களாக அல்லாத மக்களின் அரச நிர்வாகத்தின் கீழ் தான் பாதுகாப்பாகவும், நிம்மதியான வாழ்கை வாழ முடியும் என்பதையே வரலாறு உணர்த்தி வருகிறது.

    பாதுகாப்பாக நல்லதொரு வாழ்கை வாழ வந்த இடத்தில் பின்பு சொந்த நாட்டுகாரனும் தங்களது இஸ்லாமியமதஷரியா சட்டத்தை தான் பின்பற்ற வேண்டும் என்று பிரச்சனைகள் கொடுப்பார்களோ என்ற நியாயமான அச்ச உணர்வு ஐரோப்பியர்களிடம் மட்டுமல்ல கிரி, பலரக, பலவித மக்கள் சேர்ந்து வாழ்கின்ற ஆஸ்திரேலியா,மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் உண்டு.

  6. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் சுயநலத்தால் ஏற்படும் விளைவுகள் இது. அவர்கள் கொள்கை என்னவென்றால் “Divide and Rule”. அதனால் பிற நாட்டு மக்கள் படும் துயரம் ஏராளம்.

  7. ok. my two cents.
    i believe that who ever created the war and whoever is responsible for this mess should accept the refugees in their countries. america and its chum UK started this stupid war just because Syria happened to be a russian military base. they destroyed the infrastructure, business, homes and everything and now act innocent as if it is some third world problem. they created this humanitarian crisis and they should solve it. syria is a poor country ruled by an autocrat just like most muslim nations. but there was some order in syria under assad. he was a secular ruler and gave a decent administration to syria.
    some of the european countries have graciously accepted the syrian refugees. its not easy to help others when they themselves are in trouble like greece. hope the refugees dont change colour and be grateful to countries like germany, austria and hungary in future.
    இன்னொரு விஷயம் இஸ்லாமிய நாடுகள்ன்னு GCC நாடுகளான ஆறு நாடுகள மட்டும் பார்த்து முடிவு பண்றது சரி இல்லை. கொஞ்சம் குட இரக்கமே இல்லாம காட்டுமிராண்டி தனமா இருக்கற இந்த சவுதி, எமிரேட்ஸ், கத்தார், குவைத் நாய்களை உலக நாடுகள் சபைல வச்சு அசிங்க படுத்தனும். அதே சமயம் மிடில் கிளாஸ் நாடான ஜோர்டான் கிட்ட தட்ட 1 மில்லியன் அகதிகள accept செய்து இருக்கு. ஏற்கனவே கடுமையான போரில் பாதிக்க பட்ட குட்டி நாடான லெபனான் குட லட்ச கணக்கான அகதிகள ஏத்துகிட்டு இருக்கு. அவர்கள் செய்த உதவி பல பேருக்கு தெரியல.
    இந்த அனாவசியமான போற பஷார் அசாத்க்கு எதிரா ஆரம்பிச்சது அமெரிக்க, துர்கி, இஸ்ரேல், சௌதியும் தான். இந்த நான்கு நாடுகளும் மற்றும் அமெரிக்கா எது சொன்னாலும் சுய அறிவே இல்லாம ஜால்ரா அடிக்கும் பிரிட்டின் மற்றும் நேட்டோ நாடுகலடைய தான் இந்த அகதிகளுக்கு பொறுப்பு எடுத்துக்கணும்.

  8. தல,
    உங்களோட டாப் 10 சிறந்த பதிவு ல இதுவும் ஒன்னு அவளவு நல்லா வந்து இருக்கு
    எனக்கு இந்த பதிவு ல உள்ள பல விஷயம் புதுசா தெரிஞ்சு கிட்டேன்.. தகவல் களுக்கு நன்றி தல

    – அருண் கோவிந்தன்

  9. Great . அழகாக ப்ராக்டிகலாக இருக்கிறது உங்கள் கட்டுரை. என்னுடைய எண்ணமும் இதே தான். மனித நேயம் wise ஆக handle பண்ணபட வேண்டிய விஷயம். அவசரப்பட்டு மனித நேயம்(!) காண்பித்தால் consequences பயங்கரமாக இருக்கும். சிரியா நாட்டின் ஒரு குழந்தையின் படம் இன்று உருவாக்கிய மனிதநேயம் எதிர்காலத்தில் எத்தனை ஐரோப்பிய குழந்தைகளுக்கு எமனாக போகிறதோ!

  10. தமது சொந்த நாட்டில் வாழ முடியாமல் மற்ற நாட்டிற்கு அகதிகளாகச் செல்லும் மக்களை மற்ற நாடுகள் ஏற்க மறுப்பதை மட்டும் குறைபடுவதில் எந்த பயனுமில்லை,
    இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக மக்கள் அடுத்த நாடுகளுக்குச் சென்று விட்டால் அந்த நாட்டில் யார் வாழ்வது? அப்படியானால் தீவிரவாதிகள் செய்யும் அட்டுளியங்களுக்குப் பயந்து அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் சென்று மறைந்து கொண்டால் அந்த நாட்டை அவர்களே ஆளட்டும் என விட்டுவிடலாமா? இதை இப்படியே விட்டுவிட்டால் மற்ற நாடுகளுக்கும் பரவாது என்பது என்ன நிச்சயம் ??
    எனவே மற்ற நாடுகள் அகதிகளை ஏற்பதை மட்டும் பிரச்சனையாக பார்க்காமல் அந்நாட்டில் உள்ள தீவிரவாதத்தை ஒடுக்கவும் ,பிரச்சனைக்கான சரியான தீர்வையும் ஏற்படுத்தி அந்நாட்டு மக்களை அவர்கள் நாட்டில் வாழ வழி செய்வது தான் சரியாகும், இல்லையென்றால் மற்ற நாடுகளுக்கும் இந்நிலை வெகு விரைவில் வரும் என்பதில் சந்தேகமில்லை.

    • சரியான ஒரு கருத்து. தீவிரவாதத்தை அடக்கி, ஒடுக்கி அந்நாட்டு மக்களை அவர்கள் சொந்த நாட்டில் வாழ வழி செய்வது தான் அவர்களுக்கு பிற நாடுகள் செய்யும் உதவியாகும்.

  11. வணக்கம் கிரி
    நீங்கள் மிகவும் பக்குவம் அடைந்து வருவதை இந்த பதிவு காட்டுகிறது

  12. ஜேர்மனியில் பெரும் தொகை அகதிகள் வரவால் வந்த தாக்கம்,புதுவருட கொண்டாட்டத்தில் அரபு மற்றும் வட ஆபிரிக்கர்கள் ஜேர்மனியபெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர்.
    http://www.bbc.com/news/world-europe-35241818

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!