Chat GPT (Chat Generative Pre-trained Transformer) தளம் 2022 நவம்பர் 30 துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. Image Credit
Chat GPT
செயற்கை நுண்ணறிவு தளமான Chat GPT நாம் கேட்கும் கேள்விகளைப் புரிந்து அதற்கு ஏற்றப் பதில்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Machine Learning / Artifical Inteligence என்ற பிரபலமான தொழில்நுட்பத்தில் இது வேலை செய்கிறது.
என்ன வகையான கேள்விகளைக் கேட்டாலும் முடிந்தவரை பதில் அளிக்கிறது. கூகுளை இன்னும் சில வருடங்களில் ஒன்றும் இல்லாமல் செய்து விடும் என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் பலரின் வேலையைக் காலி செய்து விடும் என்பதால், ஆட்குறைப்பு அதிகளவில் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
ஊடகங்களில் கட்டுரை எழுத வேண்டும் என்றால், இதன் மூலமாகவே முடித்து விடலாம். இதனால், எழுத்தாளர்களுக்கான தேவையையும் குறைக்கிறது.
Buzzfeed நிறுவனம் ChatGPT தொழில்நுட்பத்தில் ஈர்க்கப்பட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து முழுமையாக ChatGPT AI பயன்படுத்தப்போகிறது என்று அறிவித்தவுடன் அதன் பங்குச் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
என்னென்ன விவரங்களைத் தருகிறது?
கட்டுரை, Script, Program, கடிதம், மின்னஞ்சல், கவிதை, கதை, இடத்தைப் பற்றிய தகவல், தலைவர்கள் என்று அனைத்தையும் கூறுகிறது.
ஒருவேளை சரியான விவரங்களைக் கொடுக்கவில்லையென்றால், கேள்விகளில் மாற்றங்களைச் செய்து கொடுத்தால், விரிவான தகவல்களைப் பெற முடியும்.
அதாவது, அதற்குப் புரியும்படியாகக் கேள்விகளைக் கேட்பது அவசியம்.
சில கேள்விகளுக்குப் பதில் இருக்காது ஆனால், தற்போது சோதனை அடிப்படையிலேயே இருப்பதால், எதிர்காலத்தில் தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்வதற்கான 100% வாய்ப்புகள் உள்ளன.
என்னென்ன பிரச்சனைகள்?
- மாணவர்கள் கட்டுரை எழுத இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கான திறமையை மங்க செய்து விடும்.
- தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுளை நாடியது போல, இதில் கூடுதலாகக் கேட்டு விவரங்களைப் பெறுவதால் மூளையைப் பயன்படுத்துவது குறையும்.
- அலுவலக மின்னஞ்சல்களை இதன் மூலம் எழுதுவதால், நமக்கான தனித்தன்மை குறைந்து விடும்.
- சில காலங்களில் மின்னஞ்சலைப் பார்த்தாலே இது ChatGPT மூலமாக எழுதப்பட்டது என்று கண்டறிந்து விட முடியும்.
- காரணம், இதன் பதில்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி format ல் இருக்கும், வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கும்.
- எனவே, Grammarly போன்றவற்றைப் பயன்படுத்துவது எழுதுவதில் நம்மை மேம்படுத்தும், Chat GPT பயன்படுத்துவது நம் திறமையை மழுங்கடிக்கும்.
- கவிதையைக் கொடுத்தாலே, இது ChatGPT யில் எழுதப்பட்டதா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள் 🙂 .
- ஏனென்றால், அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒன்றையே தரும்.
- அரசியல், மத ரீதியாக, தலைவர்கள் குறித்துக் கொடுத்த ஒருதலைப்பட்சமான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேற்கூறியவை யாவுமே பரிசோதனை முயற்சி என்பதால், வரும் காலங்களில் தவறுகளைச் சரி செய்து மேம்படுத்திக்கொள்ளும்.
கூகுளை மிஞ்சி விடுமா?
தெரியவில்லை, இன்னும் சில காலம் சென்றாலே கூற முடியும்.
ChatGPT புதிதாக உருவாக்குவது ஆனால், கூகுள் ஏற்கனவே இருப்பதைக் கொடுப்பது.
அதாவது ஒரு கேள்வியைக் கேட்டால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் கூகுள் பட்டியலிடும். அதில் நமக்குத்தேவையான சரியான விவரத்தைப் பெறலாம்.
ஆனால், ChatGPT யில் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பதிலைத்தான் அதுவாகவே உருவாக்கிக் கொடுக்கும். எனவே, மற்றவர்களின் அனுபவங்களை உணர முடியாது.
ஆனால், தனிப்பட்ட விவரங்கள் script, program, mail உட்படப் பலவற்றைக் கூகுளை விட மிகச்சிறப்பான முறையில் Chat GPT ல் பெறலாம்.
இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மையாக உள்ளது. எனவே, இடம் பொருள் ஏவல் பொறுத்து இவற்றின் தேவை மாறுபடும்.
எந்த ஒரு தொழில்நுட்பம், நபர் திடீர் என்று உச்சத்துக்குச் செல்கிறார்களோ அவர்களின் வளர்ச்சி நிலையானதாக இருப்பது கடினம்.
எனவே, Chat GPT இதே போல வளர்ந்து கூகுளை அழிக்குமா அல்லது தற்காலிக வெற்றியா என்பது ஓரிரு வருடங்களில் தெரிந்து விடும்.
Chat GPT யில் மைக்ரோசாஃப்ட் உட்படப் பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
தனது BING தேடுதலால் கூகுளை ஒன்றுமே செய்ய முடியாமல் இருந்த மைக்ரோசாஃப்ட்க்கு ChatGPT சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
கூகுள் என்ன செய்யும்?
கூகுள் ஏற்கனவே இது தொடர்பான பணிகளைச் செய்துகொண்டு தான் வருகிறது ஆனால், Chat GPT யின் திடீர் வரவு கூகுளை நிலைகுலைய வைத்துள்ளது.
விரைவில் ChatGPT க்குப் போட்டியாகத் தனது தொழில்நுட்பமான Bard (LaMDA) என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தப்போகிறது.
கூகுளின் மிகப்பெரிய வருமானமே கூகுள் தேடலிலிருந்து தான் வருகிறது. எனவே, அடிமடியிலேயே ChatGPT கை வைத்துள்ளதால், கூகுள் எளிதாக எடுத்துக்கொள்ளாது.
ஃபேஸ்புக் போட்டியாகப் பொறுப்பு இல்லாமல் தனித்துவம் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட Google Buzz, Google+ போன்றவை பெரும் தோல்வி அடைந்த அனுபவம் இருப்பதால், இம்முறை எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று கருதுகிறேன்.
இவையெல்லாம் ஒரு புறம் என்றாலும், Chat GPT இணையத்தில் பரபரப்பை, புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.
தொடர்புடைய கட்டுரைகள்
ஆங்கில எழுத்து இலக்கணப் பிழை தவிர்க்க Grammarly
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).