பாஜக தலைவராகத் தற்போதுள்ள அண்ணாமலை அவர்கள் முன்னர் காவல்துறையில் அதிகாரியாக இருந்ததை அனைவரும் அறிவர். காவல்துறை அனுபவங்களை Stepping Beyond Khaki என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.
Stepping Beyond Khaki
காவல்துறை என்றில்லை மக்களிடம் தொடர்புள்ள எத்துறையாக இருந்தாலும் ஏராளமான அனுபவங்கள் இருக்கும் ஆனால், அதே காவல்துறை எனும் போது அளவில்லா அனுபவங்கள் இருக்கும்.
தன் காவல்துறை பணியில் எதிர்கொண்ட அனுபவங்களையும், IPS படிப்பு அனுபவத்தையும் புத்தகமாக எழுதியதே Stepping Beyond Khaki.
சாதாரண ஒரு அதிகாரி எழுதினாலே வரவேற்பு / ஆர்வம் இருக்கும் ஆனால், அதே கர்நாடக சிங்கம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட அண்ணாமலை எனும்போது அதற்கான வரவேற்பு அதிகம்.
கர்நாடக சிங்கம்
அனைவரிடமும் அதிரடியான காவல் அதிகாரி என்று பெயரெடுத்த அண்ணாமலை, கர்நாடக சிங்கமாக மாறியதை எங்குமே முன்னிறுத்தவில்லை.
இது எனக்கு உண்மையிலேயே வியப்பு, கொஞ்சம் ஏமாற்றம்.
எப்படி அதிரடியாகச் செயல்பட்டார் என்று பரபரப்பாக எழுதி இருப்பார் என்று நினைத்தால், எந்தப் பில்டப்பும் இல்லாமல் மிகச்சாதாரணமாக எழுதியுள்ளார்.
அதோடு தன்னைப் பெரியாளாக முன்னிறுத்த வாய்ப்பு இருக்கும் சம்பவங்களில் கூடச் சாதாரணமாகக் கூறி கடந்து செல்கிறார்.
இது பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படிக்க நினைத்தால், அவ்வாறு இல்லாமல் இயல்பான சம்பவங்களாக, தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், காவலர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் என்று செல்கிறது.
எனவே, இப்புத்தகம் படிப்பவர்கள் இதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஏன் கான்ஸ்டபிள் தொப்பையுடன் இருக்கிறார்?
இக்கேள்வி தோன்றாத எந்தப் பொது ஜனமும் இருக்க முடியாது.
காவல்துறை என்றாலே மிடுக்காக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடையே உள்ளது ஆனால், எதார்த்தம் அதற்கு மாறாக உள்ளது.
கர்நாடகாவில் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு வாகனம் ஓட்டும் காவலரிடம் அண்ணாமலை இந்தக்கேள்வியைக் கேட்க, அவர் நாளைக் கூறுவதாகக் கூறுகிறார்.
அதிகாரி கேட்டும் நாளைக் கூறுகிறேன் என்று சொல்கிறாரே என்று நினைக்காமல், சரி என்று நகர்ந்து விட்டு அடுத்த நாள் மறக்காமல் கேட்கிறார்.
அடுத்த நாள் கேட்கும் போது தனது அதிகாரி உண்மையான அக்கறையோடு கேட்டுள்ளார் என்பதை உணர்ந்து அவர் கொடுக்கும் விளக்கம் சிறப்பு.
அவர் கொடுத்த நியாயமான விளக்கத்தைக் கேட்டு அண்ணாமலை வாயடைத்து விடுகிறார். படிக்கும் நமக்கும் அதில் உள்ள எதார்த்தம் புரிகிறது.
காவலர்கள் பிரச்சனை
புத்தகம் பெரும்பான்மை பகுதி காவலர்கள் பிரச்சனையைக் கூறுகிறது, அவர்களின் பிரச்சனைகளை எப்படிச் சரி செய்வது என்றே நகர்கிறது.
அதிகப்பணியால் காவலர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், கோபம், உடல்நலக்குறைவு போன்றவற்றைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று முயற்சிக்கிறார்.
காவலர்களைத் திட்டும் நம்மில் பலருக்கு தெரியாத விஷயம் காவலர்களுக்கு விடுமுறையே கிடையாது என்பது.
இவ்வாறு தொடர்ந்து ஓய்வு இல்லாமல் உழைப்பது அவர்களை மனரீதியாகப் பாதிப்படைய வைக்கிறது. இது கைதிகளிடமும், பொதுமக்களிடமும், குடும்பத்தினரிடமும் கோபமாகத் திரும்புகிறது.
தங்களின் கோபத்தை இவர்களிடையே காட்டுகிறார்கள். இப்பிரச்சனையைக் களைய கட்டாய விடுமுறை கொடுக்கிறார்.
ஆனால், பலர் விடுமுறையை எடுக்க மறுக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம், பரிதாபமாக உள்ளது.
ஒரு காவலர் கூறும் பதில் கலங்க வைத்தது. வீட்டிலிருந்தால் சண்டை போடுவதாகக் கூறி அவரது மனைவியே அவரைப் பணிக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்.
கைதிகளிடமே தொடர்ந்து பேசி காவலர்கள் ஒரு இயந்திர மனிதனை போலவே மாறி விடுகிறார்கள். எனவே, கடுமையாகவே நடந்து கொள்கிறார்கள்.
எளிமையாகப் புரிந்து கொள்ள, ஆசிரியராக / ஆசிரியையாக இருப்பவர்கள் பலர் வீட்டிலும் மிகக்கட்டுப்பாடாக, அதிகாரத்துடன் நடந்து கொள்வார்கள்.
இவர்களுக்காவது வார இறுதியில் விடுமுறை, மற்ற பொது விடுமுறைகள் உள்ளது ஆனால், காவலர்களுக்கு எப்போதுமில்லை.
அரசியல்
அரசியலும் காவல்துறையும் பிரிக்க முடியாத ஒன்று.
அரசியல்வாதிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், அவற்றை எப்படிக் கையாள்வது என்பதே ஒரு கலையாக உள்ளது.
கலவரம் செய்தவரைக் கைது செய்து வந்த பிறகு அவரது ஆதரவாளர்கள் பெரியளவில் கூடி காவல் நிலையத்தைக் கல்லில் அடித்து நொறுக்குகிறார்கள்.
அண்ணாமலை வெளியே வர வேண்டும் என்று போராட்டம், அண்ணாமலை மேல் அதிகாரிகளுக்கு அழுத்தம் என்று சர்ச்சையாகும் சூழ்நிலை பரபரப்பாக உள்ளது.
இன்னொரு பிரச்சனையில் அரசியல்வாதி செய்வது சிரிப்பை வரவழைத்தாலும், அவர் செய்வது மிக எதார்த்தமாக பிரச்சனையை சரி செய்வதாக உள்ளது.
கவுண்டர் ஒரு படத்தில் வெளியே பில்டப் செய்து விட்டு உள்ளே சென்று காலி விழுந்து கெஞ்சி உத்தரவைப் பெற்று வரும் காட்சியே நினைவுக்கு வந்தது 😀 .
உத்திரப்பிரதேசத்தில் 2023 ம் வருடம் கொல்லப்பட்ட முக்தார் அன்சாரி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஏராளமான கொலை, வல்லுறவு, மிரட்டல், சொத்து அபகரிப்பு என்று செய்தாலும் அவர் MLA ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கூறுகிறார்.
அதிலும் மோசமாகச் சிறையிலிருந்தே வெற்றி பெற்று இருக்கிறார். இப்படி ஒருவரை எப்படி மக்கள் வாக்களித்துத் தேந்தெடுக்கிறார்கள் என்றே புரியவில்லை!
இது போன்று கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதியையும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தகம் எப்படியுள்ளது?
அரசியலுக்கு வந்த பிறகு அண்ணாமலை பேச்சு நாளுக்குநாள் எளிமையாகி, பாமர மக்களுக்கும் புரியும்படியாகப் பேசுவதாலே பலரை சென்றடைகிறார்.
ஆனால், இப்புத்தகம் தற்போது அவர் பேசுவது போல இல்லாமல் கொஞ்சம் கடினமாக உள்ளது, ஆங்கிலமும் எளிமையான ஆங்கிலமாக இல்லை.
கர்நாடகாவில் இவருக்கு இருக்கும் பில்டப்பை இவர் காட்டாதது ஒரு வகையில் பாராட்டும் வகையில் இருந்தாலும், எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாகவும் இருந்தது.
சத்ரியன், சிங்கம் படம் போல எதிர்பார்த்து படித்தால், ஏமாற்றமே மிஞ்சும்.
பெரும்பாலும் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், காவலருக்கு எப்படிப்பட்ட தீர்வைக் கொடுத்துப் பிரச்சனைகளைச் சரி செய்யலாம் என்றே உள்ளது.
அதோடு கெட்டுக்கிடக்கும் சிஸ்டத்தை மாற்றாத வரை இவற்றுக்குத் தீர்வு இல்லையென்பதையும் கூறி, காவல்துறையையும் தாண்டி நாட்டின், சமூகத்தின் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறார்.
எல்லோரும் பேசிக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் செயல்பாட்டில் காட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதே அவரது எண்ணமாக உள்ளது.
தற்போது அரசியலுக்கு வந்தது கூட இதன் ஒரு பகுதியாக இருக்கலாம். நினைத்ததைச் செய்து காட்டியுள்ளார்.
காவல்துறையில் சாதித்தது போல அரசியலிலும் சாதிக்க வாழ்த்துகள்.
அமேசானில் புத்தகம் வாங்க –> Stepping Beyond Khaki: Revelations of a Real-Life Singham. Paperback & Kindle இரண்டுமே உள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இதுவரை இந்த புத்தகம் பற்றி கேள்விப்பட்டதில்லை.. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்க முயற்சி செய்கிறேன். அது மட்டுமில்லாமல் திரு. அண்ணாமலையை பற்றியும் அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.. பகிர்வுக்கு நன்றி கிரி.
கிரி, அண்ணாமலை மேல் இருந்த ஈர்ப்பால் நான் புத்தகம் வெளியான ஓரிரு மாதத்தில் அமேசானில் இருந்து வாங்கி வாசித்தேன். நீங்கள் சொல்வது போல் மிக இயல்பாவாகவும் அதிக பரபரப்பு இல்லாமலும் எழுதி உள்ளார். இந்த புத்தகம் ஒரு முழுமை பெறாமல் முடிந்தது போல் உள்ளது.
IAS பயிற்சி தேர்வுக்காக அவர் வார இறுதியில் டெல்லி சென்று படித்தது. IAM படிப்பு மற்றும் IAS தேர்வுக்கான தயாரிப்பு என அவர் மிக கடின உழைப்பை செலுத்தியிருக்கிறார். IPS தேர்வு ஆன பின்பும் IAS காண தேர்வை எழுதி இருக்கிறார் ஆனால் மதிப்பெண் குறைவானதால் IPS யை தேர்வு செய்து கர்நாடக மாநிலத்தை தேர்வு செய்து பணிக்கு வந்திருக்கிறார்.
IPS அகாடெமியில் இன்னும் ஏன் குதிரைகள் இருக்கின்றன, குதிரை பயிற்சி எதற்கு என்று கேள்வி கேட்டார் என்று நினைக்கிறேன்.அதற்க்கு சரியான பதிலை எவரும் தரவில்லை என்று சொல்கிறார். அகாடெமியில் முதல் மாணவராக தேர்வு செய்ய பட்டார் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் அவர் அரசியல்வாதிகளை பற்றி தெளிவான பார்வை கொண்டு இருந்திருக்கிறார். மக்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது அவர்களின் குறைகளை கேட்பது எளிய பிரச்சனைகளை தீர்ப்பதை தான். அரசியவாதிகளின் குற்ற பின்னனி, ஊழல் எல்லாம் பெரும் பிரச்சனை இல்லை. இது மிக பெரிய புரிதல் என்று நினைக்கிறேன். அவர் அரசியல் வாதிகளிடம் அணுக்கமாக இருந்திருக்கிறார் , பல விசயங்களை அவர்களிடம் இருந்து கற்றும் இருக்கிறார்.
பணிச்சுமை காரணமாக காவல் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கை பாதிக்கிறது. பெரும்பாலான காவல் அதிகாரிகள் குடும்பத்தை விட்டு பிரிந்தே இருக்கிறார்கள். ஓய்வு பெறும் கடைசி நாளில் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து எவரும் பங்கு கொள்வதில்லை என்று பதிவு செய்கிறார். அவர்கள் fit ஆக இருந்தால் அவர்கள் விரும்பிய காவல் நிலையத்துக்கு transfer செய்தும் இருக்கிறார்.
பொதுமக்கள் மின் தடைக்கு கூட காவல் நிலையத்தை அணுகியதாகவும், பெரும்பாலும் குடும்ப சண்டைகளை அவருக்கு எடுத்து வந்ததாகவும், சில தம்பதிகளிடையே உள்ள மன முறிவை களைந்து சேர்த்து வைத்ததாகவும் சொல்கிறார். மற்றோரு பக்கம்,பொது மக்கள் இரவு ரோந்தில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்காக அவர்களின் வீட்டின் வெளியே பிளாஸ்கில் டீ வைத்ததாகவும் சிலாகித்து எழுதியுள்ளார்.
கடைசி அத்தியாயங்களில் இந்திய அரசியல் எதை நோக்கி செல்கிறது , அரசியலில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய அவருடைய பார்வையை வைத்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசித்த பின்பு இவர் மேல் உள்ள மதிப்பு எனக்கு அதிகமானது. இவரால் தமிழ் நட்டு அரசியலில் மாற்றம் வரும் என்ற எண்ணம் வலுவானது. இதுவரை தமிழகம் கண்ட அரசியல்வாதிகலில் அண்ணாமலை தனித்துவமானவர் என்பதை என்னால் சொல்ல முடியும். அதை அவர் நிரூபிப்பார் என்றே நினைக்கிறேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.
@யாசின்
“அண்ணாமலையை பற்றியும் அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.”
யாசின் நீங்கள் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள தற்போது என் மண் என் மக்கள் யாத்திரையில் அவர் பேசி வரும் காணொளிகளைக் கேட்டாலே போதும்.
@மணிகண்டன்
“இந்த புத்தகம் ஒரு முழுமை பெறாமல் முடிந்தது போல் உள்ளது.”
நானும் உணர்ந்தேன்.
“IPS அகாடெமியில் இன்னும் ஏன் குதிரைகள் இருக்கின்றன, குதிரை பயிற்சி எதற்கு என்று கேள்வி கேட்டார் என்று நினைக்கிறேன்.அதற்க்கு சரியான பதிலை எவரும் தரவில்லை என்று சொல்கிறார்.”
குதிரையை அடக்குவது எளிதல்ல.
எனவே, கலவரங்களை அடக்கும் போது கையாள பொறுமை, திறமை வேண்டும். அதைக்கையாள இக்குதிரை பயற்சி உதவும் என்று வருகிறது.
“மக்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது அவர்களின் குறைகளை கேட்பது எளிய பிரச்சனைகளை தீர்ப்பதை தான். அரசியவாதிகளின் குற்ற பின்னனி, ஊழல் எல்லாம் பெரும் பிரச்சனை இல்லை. இது மிக பெரிய புரிதல் என்று நினைக்கிறேன்.”
உண்மை. நீ என்னவோ பண்ணிக்கோ என் பிரச்சனையைக் காது கொடுத்துக் கேட்டுக்குறியா! என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு.
எடுத்துக்காட்டுக்கு, மருத்துவரிடம் சென்றால், ஆறுதலாகப் பேசி, பிரச்சனைகளை விரிவாக தெரிந்து பின்னர் ஆலோசனைகளைக் கூறுவதையே நோயாளி எதிர்பார்க்கிறார்.
ஒரே நிமிடத்தில் பிரச்சனையைப் புரிந்து கொண்டு மருத்துவர் சரியான மருந்தைக் கொடுத்தாலும், நம்ம கிட்ட பேசலையே என்ற ஏக்கம் பின்னர் இந்த டாக்டருக்கு ஒண்ணுமே தெரியலன்னு புகார் கூற வைக்கிறது.
எனவே, அனைவருமே தங்களை குறைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதைப் பலர் செய்வதில்லை.
“பொதுமக்கள் மின் தடைக்கு கூட காவல் நிலையத்தை அணுகியதாகவும்”
படிக்கச் சிரிப்பாக இருந்தது 🙂 .
“பெரும்பாலும் குடும்ப சண்டைகளை அவருக்கு எடுத்து வந்ததாகவும், சில தம்பதிகளிடையே உள்ள மன முறிவை களைந்து சேர்த்து வைத்ததாகவும் சொல்கிறார்”
ஆமாம். இதுவும் இவருக்கு திருப்தியை அளித்துள்ளது.
“கடைசி அத்தியாயங்களில் இந்திய அரசியல் எதை நோக்கி செல்கிறது , அரசியலில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய அவருடைய பார்வையை வைத்திருக்கிறார்”
இதை எழுதும் போது அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை ஆனால், இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளார்.
அதைத்தான் மேடைகளில் தற்போது கூறி வருகிறார் என்று நினைக்கிறேன்.
“இவரால் தமிழ் நட்டு அரசியலில் மாற்றம் வரும் என்ற எண்ணம் வலுவானது. ”
எனக்கு அவரின் பேச்சைக் கேட்டே மதிப்பு வந்தது. அதில் உண்மை உள்ளது, பொய்யாக கூறுவதில்லை.
சில இடங்களில் மிகையாக இருக்கலாம் அது எவருக்குமே இயல்பு. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது தமிழகத்துக்கு கிடைத்த அற்புதமான மனிதர்.
இவர் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.
“இதுவரை தமிழகம் கண்ட அரசியல்வாதிகலில் அண்ணாமலை தனித்துவமானவர் என்பதை என்னால் சொல்ல முடியும்.”
காமராஜருக்குப் பிறகு.
நல்லவராக மட்டுமல்லாமல், பிரச்சனைகளைத் திறமையாக அணுகுபவராகவும் உள்ளார். அதோடு எதிர்கட்சிகளைத் தைரியமாக எதிர்ப்பவராகவும், ஊடகங்களுக்கு செருப்படி கொடுப்பவராகவும் உள்ளார்.
இதுவே இவர் மீதான மதிப்பை அதிகரித்தது.
“காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.”
சொல்ல வேண்டும். இல்லையென்றால், திராவிட கட்சிகளை வைத்தே காலத்தை ஓட்ட வேண்டியதாகி விடும் 🙁 .