பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 7 வது கட்டுரை. Image Credit
கடவுளை எப்போது நினைப்போம்?
டக்குனு சொல்வதாக இருந்தால் நமக்கு கஷ்டம் வரும் போது நினைப்போம்.
அதுவரை கடவுளைக் கண்டுக்காமல் இருந்தவர் கூட தனக்கு கஷ்டம் வந்தால், உடனே கடவுள் நினைவு வந்து வேண்ட ஆரம்பித்து விடுவார் 🙂 .
இதை நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் அனுபவங்களை வைத்து இப்பகுதியை சச்சிதானந்தா சுவாமிகள் விளக்கியுள்ளார்.
திருநாவுக்கரசர்
சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பற்றி பள்ளியில் படித்து இருப்போம்.
அவருக்கு ஒருநாள் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. கடவுளின் பக்தர் என்பதாலும், இந்துமதக்கோட்பாடுகளை பின்பற்றியதாலும் பின்வருமாறு கூறுகிறார்.
ஆண்டவனே! எதனால் இந்த வயிற்று வலி எனக்கு வந்தது என்று தெரியவில்லை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.
ஆனால், தற்போதோ முற்பிறவியிலோ தவறு செய்து இருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
என் கர்ம வினைகளைக் கழிக்கவே இவ்வயிற்று வலி வந்துள்ளது என அறிவேன்.
நான் இன்பமுற்று இருக்கும் போது உன்னை நினைக்க மறக்கலாம் ஆனால், துன்பமுற்று இருக்கும் போது உன் நினைவு வந்து விடுகிறது.
உன்னை மறந்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வலியை கொடுத்துள்ளாய். எனவே, இவ்வலியை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.
எனக்கு இவ்வலி வேண்டாம் என்று கூறவில்லை ஆனால், இவ்வலியை தாங்கும் சக்தியைக் கொடு என்று வேண்டுகிறேன்.
என்று கூறுகிறார்.
புரூஸ்லீ
இதையே புரூஸ்லீயும் கூறுகிறார்.
அதாவது ‘எளிமையான வாழ்க்கையை வேண்டாதீர்கள், கஷ்டம் வந்தால் அதை எதிர்த்துப் போராடும் மனவலிமையை வேண்டுங்கள்‘ என்று.
திருநாவுக்கரசர் ஆன்மீக வழியில் கூறுகிறார், புரூஸ்லீ எதார்த்தமாகக் கூறுகிறார். விளக்கும் வழி வேறு என்றாலும் சொல்லவரும் கருத்து ஒன்றே.
நம்பிக்கை
ஏதாவது ஒன்றின் மீது பற்றாக, நம்பிக்கையாக இருப்பது நம் வாழ்க்கையை வழிநடத்தி செல்ல ஒரு பிடிப்பாக இருக்கும்.
எடுத்துக்காட்டுக்கு, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் 🙂 என்ற எண்ணம் இருக்கும்.
தங்கள் கஷ்டங்களை, மன உளைச்சல்களை கடவுளிடம் ஒப்படைத்து விடுவார்கள். ‘எனக்குத் தெரியாது.. நீ தான் சரி செய்துகொடுக்க வேண்டும்‘ என்று.
எனவே ஒன்றின் மீது நம்பிக்கை வைக்கும் போது அதுவே எண்ண அலைகளை ஏற்படுத்தி, தொடர்ச்சியான ஆழ்மன நம்பிக்கை காரணமாக அதை நிறைவேற்றி விடுகிறது.
எனவே, நம்மால் முடியாத செயல்களை, பொறுப்புகளைக் கடவுள் வசம் ஒப்படைக்கும் போது இயல்பாகவே மனது அமைதியாகி விடுகிறது.
பந்தை நாமே வைத்து இருந்தால் பதட்டமாகவே இருக்கும். அதையே இன்னொருவரிடம் தள்ளி விட்டால், வேலை முடிந்தது. அது தான் இது.
எனவே, கஷ்டம் வந்தால் அதைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள், உங்கள் கை மீறி, மனித உதவியால் நடக்க வாய்ப்பில்லை எனும் போது பொறுப்புகளைக் கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.
இதைத்தான் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஆழ்மனம்
ஏனென்றால், ஆழ்மன நம்பிக்கைகளுக்கு பலம் அதிகம். சந்தேகமின்றி முழுமையாக நம்பும் போது அதை நிறைவேற்றி விடுகிறது.
ஆழ்மனம் பற்றி விரைவில் விரிவாக கட்டுரை எழுதுகிறேன்.
பிற்சேர்க்கை – ஆழ்மனதின் அதிசய சக்தி
எளிமையாக கூற வேண்டும் என்றால், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் போது நேர்மறை செயல்களே நம் வாழ்வில் நடக்கும். அதே தான் இதுவும்.
நேர்மறை எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்த பிறகு கஷ்டங்களே எனக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் எங்கிருந்தாவது உதவி கிடைத்து விடுகிறது.
ஒருவேளை கஷ்டங்களைக் கஷ்டமாக நினைப்பதில்லை என்பதும் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
எனவே, திருநாவுக்கரசர் கூறுவது 100% உண்மை என்று என் அனுபவத்தில் கூறுகிறேன்.
எனவே, எளிமையான வாழ்க்கையையும் வேண்டவில்லை, கஷ்டம் வந்ததால் புலம்பவும் இல்லை. நேர்மறையாக சிந்திப்பதற்கே இவ்வளோ நல்லது நடக்கிறது 🙂 .
இன்னும் திருநாவுக்கரசர் கூறுவது, க்ரியா யோகா அது இதுன்னு போனால் வாழ்க்கை சொர்க்கம் ஆகிடும் போல இருக்கு 🙂 .
கடவுளிடம் திருநாவுக்கரசர் உரையாடியதை சச்சிதானந்த சுவாமிகள்,
இது எவ்வளவு அழகான பிரார்த்தனை. இத்தகைய மனப்பக்குவத்தால், நாம் எத்தகைய துன்பத்தையும் தாங்க முடியும்.
நமக்கு ஆண்டவன் மேல் அசையாத நம்பிக்கை இருந்தால், உடலைப்பற்றியதாயினும், மனிதர்களால் ஏற்பட்டதாயினும் அல்லது இயற்கையினால் நேர்ந்ததாயினும் நம்மால் அதை கடக்க முடியும் என்று கூறுகிறார்.
நானும் கடவுளிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றாலும், நினைப்பது / நடப்பது தாமதமாகும் போது சிறு அவநம்பிக்கை ஏற்படுகிறது. இந்த அவ நம்பிக்கையைத் தடுக்க முயல்வதே தற்போதைய என் முயற்சி.
எனவே, கடவுளை நம்பினால் முழுமையாக நம்புங்கள். சந்தேகத்தோடு, அவநம்பிக்கையோடு இருக்காதீர்கள் என்பதே கூற வரும் கருத்து.
தொடர்புடைய கட்டுரைகள்
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இந்த பதிவை படிக்கும் போது கொஞ்சம் நேர்தியா இல்லாதது போல தோன்றுகிறது.. சொல்ல வந்த மெசேஜ் சரியா சொல்லலையா? இல்லை நான் சரியா புரிந்து கொள்ளவில்லையா? என்று தெரியவில்லை.. என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை உண்டு.. நடப்பபை எல்லாம் இறைவன் புறத்தில் இருந்து தான் நடக்கிறது என்பதை முழுவதும் நம்பினாலும், சில கசப்பான நிகழ்வுகள் எதிர்பாராமல் நடக்கும் போது சில நேரம் நம்பிக்கை சறுக்குவதும் உண்டு..
நம்மை சுற்றி நடக்கின்ற பல நிகழ்வுகளை தீர்மானிப்பது பணம் தான்.. பணம் தான் இங்கு பிரதான பொருளாக இருக்கிறது.. பணமிருந்தால் மட்டும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று கூறலாம்.. ஆனால் பணமில்லாமல் இங்கு வாழவே முடியாது என்பது தான் யதார்த்தம்.. பணத்திற்கான அளவீடு என்பது அவரவர் தேவையை பொறுத்து அமைகிறது.. பசியோடு இருக்கும் போது தான் உணவின் அருமை புரியும்..
என்னை பொறுத்தவரை கடந்த காலங்களை அதிகம் அசை போடுபவன் நான்.. வயது, சூழல், வாழ்வியல் எல்லாம் மாறினாலும் நான் என்னுடைய கடந்த காலங்களை அதிகமதிகம் நினைப்பத்துண்டு.. அந்த நினைவுகளை எல்லாம் நான் நெஞ்சில் அப்படியே தேக்கி வைத்து இருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது அவைகளை மீண்டும் அசைபோட்டு என்னுடைய கடினமான நாட்களை கூட மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு..
3 இடியட்ஸ் படத்துல ஒரு காட்சி வரும்.. நண்பன் தேர்வில் தோல்வி அடைந்தால் துக்கப்படுகிறோம்.. அதே நண்பன் தேர்வில் முதலிடம் வந்தால் இன்னும் அதிகம் துக்கப்படுகிறோம்.. இது தான் எதார்த்தம்.. சக மனிதனின் வெற்றியை கொண்டாட ஏனோ மனது ஒத்துக்கொள்வதில்லை.. சக மனிதர்களை கொண்டாட வேண்டும் என்ற மனநிலை வந்து விட்டாலே நம்முள் இருக்கும் எல்லா நெகடிவ் எண்ணங்களும் மடிந்து போகிவிடும்.
அடுத்தடுத்து நான்கு துக்கம் தொடர்ந்து வந்துச்சுனா, நாத்திகன் கூட ஆத்திகனாக மாறி விடுவாங்க!!! கண்ணதாசன் ஐயா சொன்னாரான்னு தெரியல? எங்கோ கேள்விப்பட்டது.. ஆனால் எதார்த்தமான வார்த்தைகள்.. எனக்கு இறைநம்பிக்கையில் பிடிக்காத ஒரே விஷியம்.. கடவுளுக்கும், நமக்கும் இடையில் இருக்கும் புரோக்கர்கள் தான்.. என்னுடைய இறைவனிடத்தில் நான் எனக்காக தேவையை கேட்க ஏன் இடையில் ஒருவர்??
இது மட்டும் புரியாத புதிர். பணமிருப்பார்கள் இந்த பூஜைகளையும், மற்ற சடங்குகளையும் செய்ய இயலும்.. ஆனால் பணமில்லாதவர்களின் நிலை?? இந்த பரிகாரம், சடங்குகளுக்கு பின் இறுதியில் இருப்பது பணம் ஒன்று மட்டுமே.. எல்லா மதத்திலும் இது உள்ளது.. இது ஒரு தவறான நிலைப்பாடு என்பது என் கருத்து.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கிரி.. இந்த பதிவை படிக்கும் போது கொஞ்சம் நேர்தியா இல்லாதது போல தோன்றுகிறது.”
அப்படியா! நீங்க கூறியதை படித்த பிறகு திரும்ப இரு முறை படித்துப்பார்த்தேன், சரியாக இருப்பது போலவே தான் இருந்தது.
அடுத்த முறை உங்களுக்கும் புரியும் விதத்தில் எழுத முயற்சிக்கிறேன்.
“நடப்பபை எல்லாம் இறைவன் புறத்தில் இருந்து தான் நடக்கிறது என்பதை முழுவதும் நம்பினாலும், சில கசப்பான நிகழ்வுகள் எதிர்பாராமல் நடக்கும் போது சில நேரம் நம்பிக்கை சறுக்குவதும் உண்டு..”
அது மனித இயல்பு. அனைவருக்கும் இந்த எண்ணம் வராமல் போகாது.
“ஆனால் பணமில்லாமல் இங்கு வாழவே முடியாது என்பது தான் யதார்த்தம்.. பணத்திற்கான அளவீடு என்பது அவரவர் தேவையை பொறுத்து அமைகிறது.. பசியோடு இருக்கும் போது தான் உணவின் அருமை புரியும்..”
இது உண்மை தான் யாசின். ஏற்றுக்கொள்கிறேன்.
பசியோடு இருப்பவர்கள் அதைக் கடப்பது எப்படி என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதைச் செய்யாமல், புலம்பிக்கொண்டு இருப்பதால் பயனில்லை.
கடவுள் வழி காட்டி இருக்கலாம் ஆனால், அதை அவர்கள் உணராமல் கடந்து இருக்கலாம்.
பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அதன் முக்கியத்துவம் நமக்கு குறைந்து விடும்.
தற்போது பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால், தேவை என்று வரும் போது அதுவாகவே எனக்கு கிடைத்து விடுகிறது.
எப்படி கிடைக்கும் என்று சொல்ல முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது ஆனால், கிடைக்கும்.
பணத்துக்கான தேவை முடிந்தும் பலர் அதிகரித்துக்கொண்டே இருப்பதே பல சிக்கல்களுக்கு காரணம். தேவை குறையும் போது பணத்துக்கான அவசியமும் குறையும்.
ஆசையால் தேவைகளை அதிகரிப்பதே பிரச்சனைகளுக்கு காரணம்.
எடுத்துக்காட்டுக்கு, வெளிநாட்டில் இருப்பவர்களும் கடனில் இருக்கிறார்கள், உள்நாட்டில் இருப்பவர்களும் கடனில் இருக்கிறார்கள்.
ஏன்?
தேவைகளை அதிகரிப்பதே. ஒரு வீடு, நிலம் என்று நிறுத்துவதில்லை, மேலும் மேலும் வாங்க ஆசைப்படும் போது பணத்துக்கான தேவை அதிகரிக்கிறது.
எனவே, இயல்பாகவே மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது.
நான் இதிலிருந்து விலகிவிட்டேன்.
என் அடிப்படை தேவைகளை மட்டுமே பார்ப்பதால், கடந்த 5 வருடங்களாக குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறேன்.
தேவைகளை, எதிர்பார்ப்புகளைக் குறைத்து கொண்டேன். எனவே, எனக்கு பணச்சிக்கல் எதுவுமில்லை.
பணத்தேவை வந்தாலும், கடவுள் அருளால் தானாகவே யாராவது உதவி செய்து விடுகிறார்கள்.
“பணமிருப்பார்கள் இந்த பூஜைகளையும், மற்ற சடங்குகளையும் செய்ய இயலும்.. ஆனால் பணமில்லாதவர்களின் நிலை?”
இதில் குழம்ப ஒன்றுமே இல்லை. எதையும் செய்யாமல் இருப்பது தான் நல்லது.
கடவுள் இதையெல்லாம் செய்யக்கூறுவதில்லையே. நாம் தானே இதெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.
பணம் இருந்தால் செய்யலாம் இல்லையென்றால், கோவிலுக்கு சென்று கும்பிட்டுவிட்டு வந்தால் முடிந்தது.
எதிர்பார்ப்புகளை குறைத்தால், நிம்மதி தானாக வரும்.
“இந்த பரிகாரம், சடங்குகளுக்கு பின் இறுதியில் இருப்பது பணம் ஒன்று மட்டுமே.”
முழுக்க அப்படி சொல்ல முடியாது. எனக்கு அப்படியில்லை.
கடவுள் எனக்கு போதுமான அளவு கொடுத்து இருப்பதாகவே உணர்கிறேன். எனவே, பணத்தை கேட்டு என்றும் வேண்டுவதில்லை.
வேறு பிரச்சனைகள் வரும் போது அதை சரி செய்ய வேண்டுவேன் அவ்வளவே.