WOMAN Of The DEAD (2022 German) | Thriller Web Series

4
the woman of the dead

ரபர த்ரில்லர் சீரீஸாக Woman Of The DEAD உள்ளது. Image Credit

Woman Of The DEAD

காவல்துறையில் பணிபுரியும் கணவர், அலுவலகம் செல்லும் போது வீட்டின் முன்னே கார் மோதி இறந்து விடுகிறார்.

கணவரின் இறப்புக்குக் காரணம் என்ன என்பதைப் பரபரப்பான திரைக்கதையில் கூறியுள்ளதே Woman Of The DEAD.

ரொம்ப நாளைக்குப் பிறகு தரமான த்ரில்லர் சீரீஸ். இங்கி பிங்கி போட்டுத் தேர்வு செய்ததில் வந்தது இது 🙂 .

Anna Maria

கதையின் நாயகி Anna (Blum) பொருத்தமான தேர்வு, அதிரடியாக அசத்துகிறார்.

இவர் என்னவாகப் பணிபுரிகிறார் என்று கூறினால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். பல காலங்களுக்குப் பிறகு என் சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.

மேற்கத்திய செய்திகளில், காண்பிக்கப்படும் சவப்பெட்டியில் வைத்துள்ளவரை பார்த்தால், புத்துணர்ச்சியான முகமாக இருப்பார்.

அட! எப்படி இது போல இறந்தும் பளிச்சென்று இருக்கிறார்கள் என்று வியந்ததுண்டு. இதைப்பார்த்த பிறகு தான் புரிகிறது, இவ்வாறு தயார் செய்வதற்கென்றே நிறுவனம் இருக்கிறது என்று.

இறந்தவர்களை இங்கே கொண்டு வந்தால், துடைத்து, விரைத்துள்ள உடல் பாகங்களைச் சரி செய்து, முகத்துக்கு ஒப்பனை செய்து கொடுக்கிறார்கள்.

எனவே தான் நாம் பார்க்கும் போது இறந்தும் புத்துணர்ச்சியுடன் பளபளப்பாக இருக்கிறார்கள். இதைத்தான் Anna செய்துகொண்டு இருப்பார்.

ஜெர்மன்

ஜெர்மனில் கதை நடப்பதாக உள்ளது.

என்னவொரு அற்புதமான இடம்! பொறாமையாகவும் உள்ளது 🙂 . வழக்கம் போலப் பல இடங்கள் அனாதையாக உள்ளது, கூட்டமே இல்லை.

அற்புதமான ஒளிப்பதிவில் ட்ரோன் காட்சிகளில் வளைவான சாலைகள், காடுகள், பனி மலைகள் என்று தலை கிறுகிறுக்க வைக்கிறது.

வீட்டிலிருந்து பார்த்தால், பனி மலை தெரியும்! எப்படி 🙂 .

வாழக்கையில் ஒருமுறையாவது இதைப் போன்ற இடங்களைப் பார்த்து விட வேண்டும். அனைத்தையும் பார்க்க இரு கண்கள் போதாது.

அற்புதமான சாலைகள். அதில் கணவரின் Ducati பைக்கில் Anna பறக்கும் போது மிரட்டலாக உள்ளது. அவருக்குச் செம்ம கெத்தாக உள்ளது.

பழிவாங்கல்

இக்கதை கணவரின் இறப்புக்கு பழிவாங்கலாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக வேட்டையாடுவது மிரட்டல்.

எப்படி இது போன்ற குருட்டுத் தைரியத்தில் செய்கிறார் என்று வியப்பாகவும், கவலையாகவும் இருக்கும். ஏனென்றால், ஆபத்து நிறைந்தவையாக இருக்கும்.

இதில் இவரது பிள்ளைகள் இவருடன் ஒட்ட மாட்டார்கள். இந்நாடுகளில் குழந்தைகளின் சுதந்திரம், பேச்சுகள் பயத்தை அளிக்கிறது.

அதுவும் பெண் பிள்ளையாக இருந்தால், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தான் இருக்க வேண்டும் போல. வயதுக்கு மீறிய நடவடிக்கைகள், பேச்சுகள்.

Anna ஒவ்வொருவரையும் பழிவாங்குவது ஒரு பக்கம் என்றாலும், அவர்களின் உண்மையான முகம் தெரிய வரும் போது Hostel படம் போலச் செல்கிறது.

பிணங்களுடனே பணி புரிவதால், இயல்பாகவே Anna தைரியம் உள்ளவராக இருப்பது லாஜிக்கலாகச் சரியாகப் பொருந்துகிறது.

இறுதியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றுமுள்ளது.

த்ரில்லர் சீரீஸுக்கே உரிய பின்னணி இசை. அதுவும் ஒளிப்பதிவுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது சிறப்பு.

யார் பார்க்கலாம்?

த்ரில்லர் படங்களை ரசிப்பவர்கள் தவறவிடாமல் பார்க்கலாம். திரைக்கதை மிகச்சிறப்பாக உள்ளது, எங்கும் சலிப்பாக இல்லை.

6 எபிசோட் உள்ளதால், எளிதாகப் பார்த்து விடலாம். ஒரே இரவில் முடித்து விட்டேன்.

5 வது எபிசோடிலேயே முடிந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கும். நானும் முடிந்து விட்டதோ என்று நினைத்தேன் ஆனால், இறுதி (6) எபிசோடில் தான் அதிரடியே!

த்ரில்லர் படங்களை விரும்புபவர்கள் தாராளமாகப் பார்க்கலாம், ஏமாற்றாது.

NETFLIX ல் காணலாம்.

Director Nicolai Rohde
Writer Mike Majzen, Nicolai Rohde, Benito Mueller, Barbara Stepansky, Wolfgang Mueller
Starring Anna Maria Mühe, Felix Klare, Simon Schwarz, Michou Friesz
Series Music by Patrick Kirst
Cinematography by Stephan Burchardt
Release Date Nov 7, 2022
Language German

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. என்ன கிரி. PS-1 ஆஹா ஓஹோன்னு விமரசனம் பண்ணீங்க. PS-2 வந்து ஒரு மாதம் ஆகிறது. உங்களிடம் இருந்து விமர்சனமே காணுமே?
    படத்தை சொதப்பி எடுத்து இருக்கிறார் மணி. அவர் சரித்திரப்படம் எடுக்க தகுதியில்லை. உடனே பாகுபலி கற்பனை கதை இது அப்படியில்லை என்று உருட்டுவார்கள். பத்மாவத் படம் நிஜத்தல் நடந்த கதை தான் அவர்கள் எல்லாம் திறமையாக அருமையாக எடுத்தார்கள். மணிக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. PS எடுத்து சொதப்பிவிட்டார்கள். உண்மையாக படம் நல்லா இருந்தால் உலகம் முழுவதும் இந்தியா முழுவதும் கொண்டாடி தீர்த்து இருப்பார்கள். பாகுபலி. கேஜிஎஃப். RRR. புஷ்பா போன்று. தமிழக முட்டு பாய்ஸ்களால் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ஓடின மாதிரி தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. தெலுகு ஹிந்தி ரசகர்கள் அனைவரும் படத்தை காரி துப்பிவிட்டார்கள். பாகுபலி படம் இன்றளவும் பேசப்படும் படம். வெற்றிப்படம் என்றால் இப்படி இருக்க வேண்டும்

  2. @ஹரிஷ்

    “என்ன கிரி. PS-1 ஆஹா ஓஹோன்னு விமரசனம் பண்ணீங்க”

    ஆஹா ஓஹோன்னு விமர்சனம் செய்தேனா?! 🙂 . நிறை குறைகளைக் கூறி விமர்சனம் செய்தேன்.

    பொன்னியின் செல்வன் புத்தக விமர்சனத்தில் பின்வரும்படி கூறி இருந்தேன்.

    எத்தனை கோடி செலவு செய்து இதைத் திரைப்படமாக எடுத்தாலும், படிப்பதில் கிடைக்கும் ஒரு அற்புத உணர்வு நமக்குக் கிடைக்காது என்பது நிச்சயம்.

    இதைத் திரைப்படமாக எடுக்க ஒரு முறை இயக்குநர் மணிரத்னம் முயற்சித்ததாகப் படித்தேன். தயவு கூர்ந்து இதைத் திரைப்படமாக எடுத்து இந்த நாவலை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.

    என்னால் கற்பனையில் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை. இது யாராலுமே சாத்தியமில்லாத செயல்.

    https://www.giriblog.com/ponniyin-selvan-book-review/

    பொன்னியின் செல்வன் 1 விமர்சனத்தில் பின்வரும்படி கூறி இருந்தேன்.

    பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்குக் கதாப்பாத்திரங்களின் பின்புலம் தெரியாததால், அவர்களுக்குச் சுவாரசியமாக இருக்கும், எதிர்பார்த்தது தான்.

    படித்தவர்களில் என்னைப் போன்ற சிலருக்கு ஏமாற்றங்கள் உள்ளது.

    தமிழ்நாட்டை, இந்தியாவை அளவு கடந்து நேசிக்கிறேன். எனவே, இவர்களைச் சராசரிக்கும் அதிகமான இடத்திலேயே வைத்துள்ளேன்.

    இவர்கள் தமிழர்களின், இந்தியர்களின் பெருமை. எனவே, இவர்களைச் சாதாரணமாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

    படம் முடிந்த பிறகு ஒரு Excitement எனக்கில்லை, உடனடியாக மற்றவரிடம் பகிர வேண்டும் என்ற ஆர்வம் வரவில்லை.

    எனக்குத் திருப்தியளிக்கவில்லையென்றாலும் படம் பலரை சென்றடைந்ததில், மிகப்பெரிய வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே.

    இறுதியாக, பொன்னியின் செல்வன் பாகம் 1 ல் ஏமாற்றம், வருத்தம் உள்ளது ஆனால், கோபம் இல்லை.

    https://www.giriblog.com/ponniyin-selvan-1-movie-review/

    உங்களைத் திரும்ப ஒருமுறை விமர்சனத்தைப் படிக்க வலியுறுத்துகிறேன்.

    “PS-2 வந்து ஒரு மாதம் ஆகிறது. உங்களிடம் இருந்து விமர்சனமே காணுமே?”

    இன்னும் பார்க்கவே இல்லை.

    கதையை மாற்றி விட்டதாகக் கூறியதால், பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. கல்கி எழுத்தில் உருவான என் கற்பனைகளைச் சிதைக்க விருப்பமில்லை.

    பின்னர் ஒருவேளை OTT யில் பார்க்கத் தோன்றினால், பார்ப்பேன் ஆனால் உறுதியில்லை.

    “பாகுபலி படம் இன்றளவும் பேசப்படும் படம். வெற்றிப்படம் என்றால் இப்படி இருக்க வேண்டும்”

    பொன்னியின் செல்வன் கதையை பாகுபலியோடு ஒப்பிடுவது சரியான ஒப்பீடாக கருதவில்லை.

    முழுக்க கற்பனை கதையோடு கற்பனை கலந்த நாவலை ஒப்பிட முடியாது. வரலாற்றில் நடந்தவற்றை மிகைப்படுத்த முடியாது ஆனாலும், இறுதியில் மணிரத்னம் மாற்றி விட்டதாக கூறினார்கள்.

    ஆனால், இதே பொன்னியின் செல்வனை ராஜமௌலி எடுத்து இருந்தால், பிரம்மாண்டமாக வேறு லெவலில் எடுத்து இருப்பார் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

    ராஜமௌலி ஸ்டைலில் அதிரடியாக, பலரும் போற்றும் படமாக வந்து இருக்க வேண்டிய படம் ஆனால், அதை அடையவில்லை.

    குறிப்பாக இரண்டாம் பாகம் வரவேற்பை பெறவில்லை என்பது உண்மை தான்.

  3. பள்ளி பருவத்தில் நான் அதிகம் பிரமித்த சிலவற்றில் ஜெர்மனியும், ரஷ்யாவும் ஒன்று.. குறிப்பாக ஜெர்மனி.. அது என்ன காரணம் என்று நினைவில் இல்லை.. ஜெர்மனி குறித்த எந்த செய்திகளையும் நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும்.. காரல் மார்ஸ், ஜென்னி, ஹிட்லர், உலகப்போர் 1 & 2, ஜெர்மானிய கண்டுபிடிப்புகள், இடங்கள், காலநிலை என பல விடயங்கள் எனக்கு பிடிக்கும்.. இந்த படத்தை நிச்சயம் பார்க்க முயற்சி செய்கிறேன்..

    காரணம் (என்னவொரு அற்புதமான இடம்! பொறாமையாகவும் உள்ளது 🙂 . வழக்கம் போலப் பல இடங்கள் அனாதையாக உள்ளது, கூட்டமே இல்லை.

    அற்புதமான ஒளிப்பதிவில் ட்ரோன் காட்சிகளில் வளைவான சாலைகள், காடுகள், பனி மலைகள் என்று தலை கிறுகிறுக்க வைக்கிறது.

    வீட்டிலிருந்து பார்த்தால், பனி மலை தெரியும்! எப்படி….)

    ஓய்வு நேரங்களில் YOUTUBE இல் Rick Steves’ Europe அவர்களின் காணொளிகளை காணும் போது ஐரோப்பா இடங்கள் என்னை வேறு உலகிற்கு அழைத்து செல்லும்.. நேரம் இருந்தால் பார்க்கவும்.

    பகிர்வுக்கு நன்றி கிரி.

  4. @யாசின்

    நீங்க கூறியதால் Rick Steves’ Europe பார்த்தேன், சிறப்பாக உள்ளது.

    ஐரோப்பா அற்புதமான இடங்கள். இங்கே வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!