டைப்ரைட்டர் (TypeWriter) வயது “300”

10
டைப்ரைட்டர்

டைப்ரைட்டர் வயது 300 ஆகி விட்டது, அதோட உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடபட்டுவிட்டதாம்.

ஹென்றி மில் [Henry Mill] என்பவர் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார் என்று விக்கிபீடியா கூறுகிறது.

டைப்ரைட்டர்

நான் தட்டச்சு வகுப்பு சென்று கற்றுக்கொண்டேன் ஆனால், தேர்வு எழுதவில்லை. தட்டச்சில் அனுபவம் உள்ளவர்கள் அடிப்பதைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கும். சும்மா படபடன்னு அடிப்பாங்க.

சத்தம் அந்த அறையையே கலங்கடிக்கும். துவக்கத்தில் தட்டச்சு பழகும் போது விரல் வழுக்கி உள்ளே சென்று சிக்கிக் கொள்ளும் 🙂 .

வகுப்பில் இருக்கும் டைப்ரைட்டர்களில் சில நன்றாக இருக்கும், சில நன்றாக இருக்காது.

அதனால், வந்தவுடன் நல்ல டைப்ரைட்டரை பிடிக்கப் போட்டியாக இருக்கும். நான் மைலாப்பூர், கச்சேரி வீதியில் உள்ள தட்டச்சு வகுப்பில் பயின்றேன்.

இன்று வரை பயனுள்ளதாக இருக்கிறது. Image Credit

விரல்களின் அதிசயம்

தட்டச்சு செய்வது உண்மையில் ஒரு திறமை தான்.

நாம் நினைக்கும் எழுத்துக்களை வேகமாக மூளை கணக்கு செய்து நம் விரல்களுக்குக் கட்டளை பிறப்பித்து உடனே செயலாற்ற வைக்கிறது.

இதை பொறுமையாக யோசித்துப்பார்த்தால், இது நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி நடக்கும் விசயம் என்று புரியும்.

வேகமாகத் தட்டச்சு செய்யும் போது நம் உடல் ஒரு கணினி போலவே செயல்படுகிறது.

எவ்வளவு விரைவாகக் கட்டளை பிறப்பித்து நம் விரல்கள் செயல்படுத்துகின்றன என்று நினைத்தால், வியப்பாக உள்ளது.

நாம் நினைக்க நினைக்கக் கை படபட வென்று அடித்துக்கொண்டு இருக்கும். சிலர் தட்டச்சு கற்றுக்கொள்ளாமலே பட்டையைக் கிளப்புவாங்க.

கணினி விசைப் பலகையில் [Keyboard] உள்ள எழுத்துக்களைப் படிக்கக் கூறினால் தேடிக்கொண்டு இருப்போம் ஆனால், தட்டச்சு அடிக்கக் கூறினால் விரல் தானாக மின்னெலெனப் பாயும்.

மூளையின் கட்டளைகளுக்கு விரல்கள் பழகி விடுகின்றன.

சில கணக்குகளுக்குக் கடவுச்சொல் (Password) மறந்து இருக்கும். தட்டச்சு செய்தால் சரியாக வரும் ஆனால், கேட்டால் தவறாகக் கூறுவேன். வியப்பு தானே! விரலின் பழக்கம்! 🙂 .

இதைப் பற்றி யோசித்தாலே ஒரு பதிவு எழுதலாம் போல் இருக்கே! 🙂 .

DTP பணி

சென்னையில் கணினி டிப்ளமோ முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தேன்.

ஒருவரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை. 80 ல் வந்த படங்களில் எல்லோரும் வேலை தேடிக்கொண்டே இருப்பார்களே அது போலச் சுற்றிக்கொண்டு இருப்பேன்.

எனக்கு அப்போது ஆங்கிலமும் தெரியாது. இது வேறு நந்தி மாதிரி வந்து உட்கார்ந்து உயிரை எடுக்கும்.

பாலாஜி என்ற நண்பன் உதவிக்கு வருவான். இவன் தான் எனக்கு அப்போது மொழிபெயர்ப்பாளர்.

DTP ஆப்பரேட்டராகப் போகலாம் என்றால், தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும்.

எனக்கோ அப்போது ஒவ்வொரு எழுத்தாகத் தேடித்தான் படிக்கத் தெரியும், இதுல எங்க தட்டச்சு செய்வது! எக்மோர் பேந்தியன் சாலையில் ஒரு நிறுவனத்தில் DTP க்கு ஆள் எடுக்கிறார்கள் என்று பாலாஜி அழைத்தான்.

டேய்! எனக்குத் தட்டச்சு தெரியாதுடா நான் அங்கே போய் என்னடா பண்ணுறது?” என்று கேட்டால், “பரவாயில்லை வாடா முயற்சி செய்யலாம்” என்று அடம் பிடித்தான்.

சொன்னாலும் இவன் கேட்பதாக இல்லை. சரி என்ன பண்ணித் தொலையறது என்று கிளம்பி விட்டேன். அங்கே சென்றால், வரிசையில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

டேய்! சொன்னாக் கேளு கூட்டமா இருக்கு.. போயிடலாம்” என்றால் விட மாட்டேங்குறான். ‘நம்ம மானத்தை வாங்காம விடமாட்டான் போல இருக்கே!‘ என்று பயந்து கொண்டே சென்றேன்.

அங்கே சென்றதும் ஒரு தாளைக் கொடுத்து அதில் இருப்பதை தட்டச்சு செய்யக் கூறி விட்டார்கள். ம்க்கும் நமக்குத் தான் ஒன்றுமே தெரியாதே. திருட்டு முழி முழித்தேன்.

இவனைச் சபித்துக்கொண்டே அதைப் பார்த்து இரண்டே இரண்டு வார்த்தை தான் அடித்தேன். அருகில் இருந்தவர் என்னைப் பார்த்தார்.

அந்தப் பார்வைக்கு “ஏன்டா! நீ எந்தத் தைரியத்துல வந்த!” என்று கேட்பது போலவே இருந்தது.

தம்பி! டைப்பிங் தெரியாதா! இதெல்லாம் வேலைக்காகாது‘ என்று நக்கலாகச் சிரித்துக் கொண்டு கிளம்பக் கூறி விட்டார். எனக்குப் பெருத்த அவமானமாகி விட்டது.

பக்கத்துல இருக்கிறவன் கெக்கெ பிக்கேன்னு சிரிச்சுட்டு இருக்கிறான்.

வெளியே வந்து ‘டேய்! நான் தான் அப்பவே சொன்னேனடா‘ என்று கத்தியதும்… “சரி சரி வா போகலாம்” என்று அழைத்துச் சென்று விட்டான்.

அவனுக சிரிச்சது கூட ஓகே ஆனால், நான் வெளிய வரும் போது என்னைப் பார்த்து இவன் சிரிச்சான் பாருங்க…!

அங்கே தான் செம டென்ஷன் ஆகிட்டேன்.

தட்டச்சால் தொலைந்த கையெழுத்து

அலுவலக மின்னஞ்சல் தட்டச்சு செய்து பழகித் தற்போது கையெழுத்து படு மோசமாகி விட்டது.

ஏதாவது விண்ணப்பம் எழுத வேண்டும் அல்லது நிரப்ப வேண்டும் என்ற நிலை வரும் போது தான் நம் கையெழுத்து தில்லானா ஆடுவது தெரிகிறது.

மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போது கண்கள் கணினி திரையில் மட்டும் தான் இருக்கும், விரல்கள் “காதலன்” படம் பிரபு தேவா போலக் கோலம் போட்டுக்கொண்டு இருக்கும்.

பலருடன் சாட் செய்யும் போது டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் வருவது போல வேகமாகத் தட்டச்சு செய்து விட்டு எதிரில் உள்ளவர் பதில் தரக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பேன் 🙂 .

என் தட்டச்சு வேகத்தைப் பார்த்துப் பையன், ‘அப்பா! எப்படி எதையுமே பார்க்காம இவ்வளோ வேகமாக அடிக்கறீங்க!‘ என்று வியப்பாகக் கேட்பான்.

இன்று வேகமாகத் தட்டச்சு செய்ய முழுக்காரணமும் கச்சேரி வீதியில் இருந்த டைப்பிங் இன்ஸ்ட்டியூட் தான் (இன்னமும் இருக்கிறதா என்று தெரியவில்லை).

பல வருடங்கள் முன்பே கற்றுக் கொண்ட அந்தத் தட்டச்சு இன்று பல வேலைகளை விரைவாக முடிக்கத் துணை புரிந்து கொண்டு இருக்கிறது.

முக்கியமாக Blog எழுத ஆரம்பித்த பிறகு இது ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.

தற்போது இது போன்ற தட்டச்சு பயிற்சி வகுப்புகள் இல்லை. எதோ ஒன்றிரண்டு வகுப்புகள் இன்னும் மூச்சைப் பிடித்து நடந்து கொண்டு இருக்கின்றன.

இன்னும் சில வருடங்களில் தட்டச்சு இயந்திரங்களை அருங்காட்சியகத்தில் மட்டுமே காண முடியும் என்பது கசப்பான உண்மை.

Read : Android திறன்பேசி பயன்படுத்துகிறீர்களா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

 1. என்னைப் பொருத்தவரையில் இந்தப் பதிவு மிக முக்கியமானது. எனக்கு பள்ளிக்கூட சமயங்களில் கோயிலே என் வீட்டுக்கு அருகே இருந்த தட்டெழுத்துப் பயிலகம் தான். இரண்டு வருடங்கள் நான் கற்றுக் கொண்ட தமிழ் ஆங்கிலம் தட்டெழுத்துப் பயிற்சி மட்டுமே எனக்கு பொருளாதார வசதிகள் தர காரணமாக இருந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. மற்றவர்களை விட என்னால் வேகமாக மேலேற முடிந்தது. இன்று எழுத்துத்துறையில் சாதிக்க உதவி புரிந்துள்ளது.

 2. கிரி, என் சொந்த அனுபவத்தில் தட்டெழுத்துப் பயிற்சி வகுப்புக்கு ஒரு 5 முறையாவது வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு மையத்திற்குசென்று இருப்பேன். முதலில் ஒரு வாரம், இல்லனா ஒரு மாதம், பின்பு ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டு விடும்.ஆனால் ஒரு முறை கூட தேர்வு எழுதியது கிடையாது. இந்த முதல் அனுபவத்தை என்றுமே மறக்க முடியாது. இதே நிலை தான் உடல் பயிற்சி கூடத்திற்கும்.

  டிவி பார்த்தே ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்கும். கிரிக்கெட் போட்டிகள் கூட சில நேரங்களில் கணினியில் பார்பதுண்டு. படங்கள் பார்ப்பதை முற்றிலும் குறைத்து விட்டேன். அனுபவங்கள் என்றுமே தடுப்பூசிகள், அவைகள் தான் இன்று உங்களை செம்மைபடுத்தி உள்ளது.

  (சில வருடங்களில் தட்டச்சு இயந்திரங்களை அருங்காட்சியகத்தில் மட்டுமே காண முடியும் என்பது கசப்பான உண்மை) முற்றிலும் உண்மை. நமக்கு கிடைத்த இந்த அற்புதமான அனுபவம், நமக்கு பின் உள்ள சந்ததிகளுக்கு கிடைக்காது என்பது வருத்தம் தர கூடிய ஒன்று தான். பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

 3. யோசித்து பார்த்தால் ஆச்சர்யமாகதான் இருக்கு கிரி. முதல் நாள் டைப் கிளாஸ்க்கு போனப்போ எவ்வளவு வேகமா அடிக்கிறாங்கன்னு பிரமிப்பா இருந்துச்சு. நான் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்ட நிலையம் இப்போது இல்லை. எல்லாம் காலமாற்றம்.

  “இவர்கள் நிகழ்சிகளில் வரும் நீதிபதிகளின் ஒரே மாதிரியான பேச்சும், அதில் பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு அதிகமான பில்டப்புகளையும் “…. ஹா ஹா.. யார் சொன்னது? நவரசமும் கொட்டி நடிக்கிறதுல சிவாஜிதான் கெட்டிக் காரர்னு?

 4. //அவனுக சிரிச்சது கூட ஓகே ஆனால், நான் வெளிய வரும் போது என்னைப் பார்த்து இவன் சிரிச்சான் பாருங்க…! அங்கே தான் செம டென்ஷன் ஆகிட்டேன்.//

  இடுக்கண் களைவதாம் நட்பு 🙂

  நான் கற்று கொண்டது “Typing Master” என்னும் மென்பொருளை வைத்து…

 5. அண்ணா இந்த பதிவை படித்ததும் எனக்கு டைப்ரைட்டிங்கை முறையாக கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது .. நிச்சயம் ஒரு நல்ல நிலையத்துக்கு சென்று கற்றுக் கொள்ள போகிறேன் அப்படி செய்தால் அதன் கிரடிட் மொத்தம் உங்களுக்குத்தான் …

  எனக்கு டைப் ரைட்டிங் முறையாக தெரியாது என்றாலும் என்னால் ஆங்கிலம் சரளமாக வேகமாக அடிக்க வருகிறது எப்படி எனத் தெரியவில்லை…

 6. தடதடக்கும் டைப்ரைட்டரில் அன்றைக்குக் கற்றுக் கொண்டதே இன்று கீ போர்டில் பார்க்காமல் தட்டச்ச உதவிக் கொண்டிருக்கிறது. லோயர், ஹையர் பாஸ்:)! தந்தி முதல் தட்டச்சு இயந்திரம் வரை ஒன்றொன்றாக விடைபெற்று வருகின்றன. நமது தலைமுறைக்கு அவற்றோடு நீங்காத பல நினைவுகள். வரும் தலைமுறைக்கோ அவை தொடர வேண்டிய அவசியமற்றப் பழையவைகள்.

  நல்ல பகிர்வு.

 7. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜோதிஜி உங்களுக்கு தட்டச்சு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் 🙂

  @யாசின் என்னை மாதிரியே நீங்களும் தேர்வு எழுதவில்லையா? ஆனால் நான் கொஞ்சம் கூடுதல் நாட்கள் சென்றேன் 🙂

  @TV நானும் யாராவது இது போல கூறினால்.. YouTube தான் 🙂

  @பனசை நடராஜன் சரியா சொன்னீங்க.. நம்ம ஆளுங்க.. நடிகர் திலகத்தையே மிஞ்சிடுவாங்க.. ஷப்பா

  @Naveen நீங்க கொடுத்துள்ள தளம் என்னுடைய நண்பருடையது தான்.. ஏற்கனவே பார்த்து இருக்கிறேன். மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  @தமிழ்செல்வன் 🙂

  @கார்த்திகேயன் சொல்லிட்டு இருக்காம சட்டு புட்டுன்னு வகுப்பில் சேர்கிற வழியைப் பாருங்க 🙂

  டிவி முடியல்ல்ல்ல

  @பாலாஜி டேய்! போதுண்டா

  @ராமலக்ஷ்மி நீங்க தான் ரொம்ப பொறுப்பாச்சே! நீங்க தேர்வு எழுதாம இருந்தால் தான் எனக்கு ஆச்சர்யம் 🙂 ஆனால் நிறையப் பேர் என்னுடன் இருந்தவர்கள் எழுதினார்கள் / தட்டச்சு செய்தார்கள் . நான் தான் வழக்கம் போல டிமிக்கி கொடுத்து விட்டேன் :-).

 8. அண்ணா என்னுடைய ஆசை நிறைவேறுமா என தெரியவில்லை … அண்ணா இங்கு தட்டச்சு கற்றுக் கொடுக்கும் நிலையத்தை தேடிக்கொண்டு இருக்குறேன் இதுவரை சிக்கவில்லை ,,, இருக்கும் ஒரு இடங்களிலும் மாணவ மாணவியருக்கு தான் கற்றுக் கொடுப்பார்களாம் ….. என்ன செய்வது என தெரியவில்லை .. அப்போல்லோ , சி எஸ் சி கம்பியுட்டர் சென்டர்களில் அடுத்து தேடப் போகிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here