சென்னை அருகே உள்ள பிரபலமான முருகன் கோவில்களில் ஒன்று சிறுவாபுரி முருகன் கோவில். Image Credit
ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தல வரலாறு
ராமர், சீதை பிள்ளைகள் லவ, குசா தன் தாயுடன் வனத்தில் இங்கே தங்கி இருந்தார்கள்.
வள்ளியை திருமணம் செய்த முருகன் சோலைகள் சூழ்ந்த இடத்துக்குச் செல்ல விரும்பி வந்த இடமே இது.
சிறுவர்கள் (லவ குசா, பால முருகன்) வந்த இந்த இடம் சிறுவாபுரி (சிறுவர்கள் புரி) என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முருகம்மை என்ற முருக பக்தர், முருகன் மீது தீவிர பக்தியாக இருப்பது பிடிக்காத இவரது கணவர், ஒருநாள் கோபத்தில் இவரின் கரத்தை வெட்டி விடுகிறார்.
முருகம்மை முருகனை துதித்ததால், முருகன் இவரது முன்னால் தோன்றி கரத்தை வெட்டப்பட்ட வடு இல்லாமல், சேர்த்ததாக வரலாறு கூறுகிறது.
தல சிறப்புகள் என்ன?
- செவ்வாய் கிழமை சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
- வள்ளியை திருமணம் செய்த முருகன் இங்கே வந்ததால், நீண்ட காலமாகத் திருமணம் தடைப்பட்டு வருபவர்கள் திருமணம் நடக்க வேண்டி வருபவர்கள்.
- வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள்.
- தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
- இத்தலம் பற்றி அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.
- கொடிமரம் அருகே பச்சைக் கற்களால் உருவாக்கப்பட்ட மயில் சிலை உள்ளது.
- நீண்ட கால வேண்டுதல் உள்ளவர்கள் செல்லப் பரிந்துரைக்கிறேன், முடிந்தால் செவ்வாய் கிழமை.
சிறுவாபுரி முருகன் கோவில் அமைப்பு எப்படியுள்ளது?
- கோவில் சிறு அளவிலேயே உள்ளது, பல நூற்றாண்டுகள் பழமையானது.
- 2021 கொரோனா காலம் என்பதால், கோவிலினுள் சென்று கோவிலைச் சுற்றி வரத் தடைசெய்யப்பட்டுள்ளது.
- எனவே, உள்ளே நேராக முருகனை தரிசித்து அப்படியே வெளியே வந்து விட வேண்டும், இரு நிமிடங்கள் கூட ஆகவில்லை.
- கொரோனா காரணமாக, பூ மற்றும் மாலைகளை முருகனுக்குச் சாத்த முடியாது, வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.
- திருநீர் கவரில் கொடுக்கப்படுகிறது.
- தைப்பூசம் காரணமாகவோ என்னவோ, மேலே படிக்கட்டில் ஏறி இறங்கி வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
- எனவே, முழங்கால் வலி உள்ளவர்கள், நடக்கச் சிரமப்படுகிறவர்கள் ஏறி இறங்குவது கடினம்.
- இந்த அமைப்பு தாற்காலிகமானதாக இருக்கலாம்.
சிறுவாபுரி எப்படியுள்ளது?
சிறு கிராமமான சிறுவாபுரிக்கு முருகன் கோவில் முக்கிய வியாபார இடம்.
கோவிலுக்கு வருபர்களை நம்பி வியாபாரம் பெரியளவில் உள்ளது.
பூ, மாலை மற்றும் பூஜை சாமான்கள் மட்டுமல்லாது, இங்கு வருபவர்கள் காய்கறிகளையும் வாங்கிச்செல்கிறார்கள்.
விலை குறைவு என்பதால், காய்கறி வியாபாரமும் சிறப்பாக உள்ளது.
கோவிலுக்கு நுழையும் போதே அருகில் உள்ளவர்கள், சுற்றி வளைத்துப் பூஜை பொருட்களை வாங்க கேட்கிறார்கள்.
இரு சக்கர வாகனம், தலைக்கவசம், செருப்பு ஆகியவற்றை நிறுத்த, வைக்க அவர்கள் இடத்தைப் பயன்படுத்தினோம்.
பூ, பூஜை சாமான்கள் வாங்கவில்லை ஆனால், பணம் வாங்க மறுத்து விட்டார்கள்.
கிராமத்தினுள் நுழைந்தால் நேராகக் கோவிலுக்குத் தான் இட்டுச் செல்லும், கோவில் பகுதி வலது புறம் சென்றால், கார் நிறுத்த விசாலமான இடமுள்ளது.
எப்படிச் செல்வது?
சென்னை கோயம்பேடில் இருந்து 40 கிமீ தொலைவில் கோவில் உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறுவாபுரிக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்துள்ளது.
இரு, நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 1+ மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.
இவ்வழியில் புதிதாகச் செல்பவர்கள் என்றால், கூகுள் வழிகாட்டி அவசியம்.
நெடுஞ்சாலையில் இருந்து சிறுவாபுரிக்கு இடது புறம் Service Road ல் திரும்ப வேண்டும்.
கூகுள் வழிகாட்டிச் சரியாகக் காட்டுகிறது ஆனால், அந்த இடம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பும் இடமாக இல்லை, மக்களே உருவாக்கிய இடம் போல உள்ளது.
எனவே, வாகனத்தைக் கொஞ்சம் மேலே ஏற்றி இறக்க வேண்டும்.
இல்லையென்றால், தூரம் சென்று எங்கே திரும்ப முடியுமோ அங்கு வரை சென்று ‘U Turn’ போட்டு Service Road ல் திரும்ப வர வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை காரணமாகக் கனரக வாகனங்கள் அதிகம் என்பதால் இரு சக்கர வாகனத்தில் சென்றால் வெயில் மற்றும் போக்குவரத்து காரணமாகக் களைப்படைய வைக்கிறது.
எனவே, கார் வாய்ப்பு இருந்தால் காரில் செல்லப் பரிந்துரைக்கிறேன். மேற்கூறியவை ஏற்புடையதாக இருந்தால், இரு சக்கர வாகனமும் பிரச்சனையில்லை.
தூரம் பிரச்சனையில்லை, போக்குவரத்து நெரிசல், கனரக வாகனங்கள் தான் எரிச்சல். ஆறு வழிப்பாதையுள்ளது ஆனாலும், போதவில்லை!
சிறுவாபுரிக்கு சாலை பிரிந்த பிறகு, டக்கென்று கிராமத்து சாலைக்குள் நுழைந்து அட்டகாசமான கிராம பயண அனுபவத்தைத் தருகிறது.
கொசுறு
சிறுவாபுரி முருகன் கோவில் செல்பவர்கள், அங்கே இருந்து 11 கிமீ தொலைவில் உள்ள பிரபலமான பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குச் செல்வார்கள்.
இக்கோவில் பற்றி அடுத்தக் கட்டுரையில் கூறுகிறேன்.
பிற்சேர்க்கை –> பெரியபாளையத்தம்மன் திருக்கோவில்
தொடர்புடைய கட்டுரைகள்
சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கடந்த சில வருடங்களாகவே நிற்பதற்கு நேரம் கொஞ்சம் கூட இல்லாமல் ஓடி கொண்டே இருப்பது போல் ஒரு உணர்வு தற்போது அடிக்கடி ஏற்படுகிறது.. அலுவலகத்தின் பணி சூழல் மட்டும் காரணமில்லை என்பது புரிகிறது. ஆனால் என்ன காரணம் என்று முழுமையாக யோசித்தும் விடை காண முடியவில்லை. ஒரு நீண்ட அமைதியான இடைவெளியை மனது வேண்டுகிறது.. இது போல ஆன்மிக தளங்களுக்கு செல்லும் போது இயற்கையாகவே மனதில் ஒரு அமைதி ஏற்படுகிறது.. விடுமுறை நேரத்தில் சில திட்டங்களை வகுத்து இருக்கிறேன்.. சக்தியுடன் அதிக நேரம் செலவு செய்து, சில ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
யாசின் ஊருக்கு வந்தாலே அனைத்தும் கிடைத்து விடும் 🙂 . சக்தி கூட ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க.
சக்தி மீதான உங்கள் நட்பு எப்போதும் என்னை வியக்க வைக்கிறது! இப்படியே தொடர வாழ்த்துகள்.
சிறுவாபுரி முருகன் கோவிலில் காலபைரவர் சிலை உண்டா?
ஆமாம் காலபைரவர் சிலை உள்ளது.