வழக்கமாகப் பொங்கலுக்கு ஆண்டு விடுமுறைக்குச் செல்வேன் ஆனால், கொரோனா காரணமாகத் தள்ளிச்சென்று மே மாதம் செல்வதாக முடிவானது.
மத்திய புரீஸ்வரர் கோவில்
எங்கள் கூகலூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த (சிவன்) மத்திய புரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விழா நடத்தினார்கள்.
முன்பே அனைவரும் குடும்பத்தினருடன் வர வேண்டும் என்று கூறி இருந்ததால், இதற்குத் தகுந்த மாதிரி விடுமுறையை மாற்றிக்கொண்டேன்.
ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அனைவரின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் கவர்ந்தது வழக்கம் போல மோளம் தான். கமலாய வாத்தியம் என்ற மோளத்தை அடித்தார்கள். இவர்கள் பணத்துக்காக மோளம் இசைப்பவர்கள் அல்ல.
சிவனடியார்களான இவர்கள் சிவன் மீது கொண்ட பக்தியால் விருப்பப்பட்டுச் சேவையாகச் செய்து வருகிறார்கள்.
இது போன்ற முக்கிய நிகழ்வுகள், முருகனுக்கு மற்றும் கும்பாபிஷேகம் உட்படச் சில நிகழ்வுகளுக்கு மட்டுமே இசைப்பார்கள்.
இவர்கள் அடித்த அடியில் சிவனே இறங்கி வந்து ஆட்டம் போட்டு விடுவார் போல, அந்த அளவுக்கு அடி பின்னி எடுத்து விட்டார்கள் 🙂 .
மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்ததில், காணொளி எடுக்க மறந்து விட்டேன். இசை நின்ற பிறகே நிஜ உலகுக்கு வந்து, அட! வடை போச்சே என்றாகி விட்டது.
சாரதா மாரியம்மன் கோவில்
கோபியில் பிரபலமான கோவில்களில் ஒன்று சாரதா மாரியம்மன் கோவில். வருடாவருடம் மே மாதத்தில் பால் குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்தமுறை விழா சரியாக விடுமுறையில் சென்ற வாரத்தில் வந்தது மகிழ்ச்சி.
பசங்க இருவரும் ஐந்து வருடங்களாகப் பால் குடம் எடுக்கிறார்கள். இந்தமுறை முதல்முறையாக அவர்களுடன் இணைந்து கொண்டேன், நான் எடுக்கவில்லை.
யாரோ ‘எதுக்குடா பால் குடம் எடுக்குறீங்க?‘ என்றதற்கு, ‘எடுத்துட்டு வரும் போது ரஸ்னா, மோர் கொடுப்பார்கள்‘ என்கிறார்கள் 🙂 .
இந்து அறநிலையத்துறை விழாவில் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். தவில், நாதஸ்வரம், மோளம், தாரை, தப்பட்டை உட்படப் பல வாத்தியங்கள் இருந்தன.
மோளம்
வழக்கம் போல மோளம் பட்டையைக் கிளப்பினார்கள். தற்போது இளைஞர்கள் குழுவாக சீருடை அணிந்து மோளம் அடிப்பது சரவெடியா இருக்கும்.
எவ்வளவு நேரம் அடித்தாலும் கேட்டுட்டே இருக்கலாம் போல.
காணொளி எடுக்கச்செல்லும்போது சரியாக மோளம் முடிந்து விடுவதால், Peak Time இசையை எடுக்க முடியவில்லை.
அடுத்த முறை இதற்காகவே காத்திருந்து எடுத்துப் பகிர்கிறேன்.
சிவன் குடம், சக்தி குடம் என்று இரு குடங்களை எடுப்பார்கள். இதில் சக்தி குடம் எடுத்தவர் எங்கள் உறவினர்.
மோளம் அடிப்பவர்கள் சாரதா மாரியம்மன் பாடல் பாடி, ‘வா வா‘ ன்னு கூறிய பிறகு வாய்க்காலிலிருந்து கோவில் வரும்வரை அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நான்கு பேர் பிடித்தும் நிறுத்தமுடியவில்லை, கோவில் கோபுரம் அருகே வந்த பிறகு ஐந்து பேர் பிடித்துக் கட்டுப்படுத்தினார்கள்.
பால்குடத்தைத் துவக்கத்தில் பலர் சேர்ந்து பல அடுக்காக வேப்பிலை உட்படப் பல்வேறு இலைகள், பூக்களால் அலங்கரித்தார்கள். எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டுகிறார்கள் என்று புரியவில்லை.
பின்னரே புரிந்தது, இதைச் செய்யவில்லை என்றால், இவர் ஆடிய ஆட்டத்துக்குக் குடம் மட்டும் தான் இருந்து இருக்கும், வேற எதுவும் இருக்காது போல. கட்டுப்படுத்தமுடியாத தாறுமாறான ஆட்டம்.
இவ்வளவு இறுக்கமாகக் கட்டப்பட்டு இருந்தும் மேல் பகுதி பிய்ந்து விட்டது.
இதெல்லாம் பொய் என்றெல்லாம் தோன்றவில்லை. இதற்கு அறிவியல் காரணம் நிச்சயம் இருக்கும் ஆனால், அருகிலிருந்து பார்த்தால், வேறு எதுவும் தோன்றாது.
இவர்களுடன் கூட வந்த இன்னொரு இளைஞர் காலில் சலங்கையுடன் செம்ம ஆட்டம் போட்டார். மோளம், சலங்கை ஆட்டத்தில் எனக்கு தலை முதல் பாதம் வரை பலமுறை மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு.
மோளம் அடிப்பது அற்புதமான கலை, இதன் திறமையை உணர்ந்தவர்கள் கூடுதலாக ரசிக்க முடியும்.
கீழே காணொளியில் இருப்பது ஒருவகை மோளம்.
இந்த இசையைப் பெரும்பாலும் வயதானவர்களும், நடுத்தர வயதில் உள்ளவர்களுமே வாசிப்பார்கள். இளைஞர்களுக்கு இசைக்கத் தெரியாது.
இக்குறிப்பிட்ட இசையைக் கிராமங்களில், சிறு நகரங்களில் மட்டுமே காண முடியும்.
இதில் ஒவ்வொரு குழுவினரும் இசையை அவ்வளவு அழகாக ஐந்து ஆறு நொடிகளில் வேறு மெட்டுக்கு மாற்றுவார்கள். இதனால் ஆடுபவர்களுக்குப் புதிய இசை மேலும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
மேல் உள்ள காணொளியில் 10 வது நொடியில் மாறும் இசை எங்கள் பகுதியில் பிரபலமான இசை குறிப்பாகத் திருமணங்களில் காணலாம்.
பின்னணியில் ஒலிப்பது தாரை இசை.
இதில் பறை இசை மோள இசையை அமுக்கி விட்டது. வலது புறம் உள்ள பெரியவர் அடிக்கும் மோள இசையை (10 வது நொடி) தனியாகக் கேட்டால் இதன் அற்புதத்தை உணரலாம்.
நம் பாரம்பரிய இசையை அழித்து வரும் செண்டை மேளம் இரு கோவில் விழாக்களிலும் இல்லாதது மகிழ்ச்சி.
இக்கோவிலுக்கு மாத வருமானமே கடை வாடகை உட்படப் பல்வேறு வகைகளில் இரண்டு லட்சம் குறைந்தபட்சம் வரும் என்று கூறினார்கள்.
எனவே, இப்பணத்தில் திருவிழா கிட்டத்தட்ட ஒருவாரம் சிறப்பாக நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை அவ்வளவு நல்லவர்களா என்று நினைத்தால், மத்திய புரீஸ்வரர் கோவில், பாரியூர் கோவிலில் நடப்பவற்றைக் கேட்டுக் காண்டானதை தனிக்கட்டுரையாகப் பின்னர் எழுதுகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்து சமய அறநிலையத்துறை தேவையா?
செண்டை மேளம் | தமிழகத்தை ஆக்கிரமிக்கிறது
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, புகைப்படம் அருமையாக இருக்கிறது.. (இடம் எங்கே என குறிப்பிடவும்) விடுமுறையை குடும்பத்துடன் நன்றாக செலவழித்து உள்ளீர்கள்.. அதுவும் குறிப்பாக நமக்கு பிடித்த மாதிரி, நமது விடுமுறை கொண்டாட்டங்களுடன் அமையும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி!!! நேரடியாக வாசிக்கும் வாத்தியங்களின் இசையை அதிகம் நான் கேட்டதில்லை..
ஆனால் நாதஸ்வரம் வாசிக்கும் போது கேட்க பிடிக்கும்.. காரணம் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திற்கு, அருகில் ஒரு நாதஸ்வர இசைக்கலைஞர் வீடு இருந்தது.. அடிக்கடி அவர் வாசிப்பதை கேட்டதால் இயல்பாகவே ஒரு ஈடுபாடு வந்து விட்டது..
மெல்ல திறந்தது கதவு படத்தை பார்த்தவுடன் “நானும் நடிகர் மோகனை போல்” இசையை கற்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.. தற்போது கூட புல்லாங்குழல் கற்று கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“இடம் எங்கே என குறிப்பிடவும்”
மேற்கூறிய பால் குடம் துவங்கிய இடம். கோபி, வாய்க்கால் பிரிவு.
“நானும் நடிகர் மோகனை போல்” இசையை கற்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது”
🙂 உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள்.