பெரியபாளையத்தம்மன் திருக்கோவில்

2
பெரியபாளையத்தம்மன் திருக்கோவில்

சென்னை அருகே பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் உள்ளது.

பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் தலவரலாறு

நூற்றாண்டுக்கு முன் கோவில் இருந்த இடத்தில் பாம்பு புற்று இருந்துள்ளது.

அப்போது ஆந்திர வளையல் வியாபாரிகள் இப்பகுதி வழியாகச் சென்று வளையல் விற்று வருவது வழக்கம்.

அப்படி வந்த வியாபாரி ஒருவர் சாப்பிட்டு விட்டு இங்கு ஓய்வெடுத்தார்.

கிளம்பும் போது வளையல்களைக் காணாததால், தேடிப்பார்த்து புற்றுக்குள் வளையல் இருப்பதைக்கண்டு எடுக்க முயற்சித்து முடியாததால், ஆந்திரா சென்று விடுகிறார்.

அவரது கனவில் ரேணுகாதேவி பவானி அம்மன் தோன்றி, புற்றுக்குள் சுயம்புவாக உள்ளேன். என்னை வணங்கி வழிபட ஒரு கோவிலை எழுப்பு என்று கூறுகிறார்.

ஊர் மக்களிடம் தான் கனவில் கண்டதை கூறியதும், ஊர் மக்கள் புற்றை அகற்றி பார்க்கும் போது அங்கே சுயம்பு இருப்பதைக்கண்டு கோவில் எழுப்புகின்றனர்.

கோவில் துவக்கத்தில் சிறியதாக இருந்தது ஆனால், நாளடைவில் மக்கள் அதிகரித்ததால், கோவிலும் விரிவாகியது.

ரேணுகாதேவி தான், பவானி அம்மன் மற்றும் பெரியபாளையத்தம்மன்.

பவானி அம்மன் தனது முன்புற வலது கையில் சக்தி ஆயுதம், பின் புறக்கரத்தில் சக்கராயுதம், இடது பின் கையில் சங்கு, முன்புறக் கையில் கபாலம் ஏந்தியுள்ளார்.

இக்கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

ஆரணி ஆற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது.

தல சிறப்புகள் என்ன?

  • உடல் நலம் பெற வேண்டுதல்.
  • அம்மை நோய் உள்ளவர்கள் பலர் இங்கே வேண்டுவது அதிகம்.
  • குழந்தை வரம்.
  • பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டுகிறார்கள்.
  • தாலியை காணிக்கையாகச் செலுத்தி மஞ்சள் சரடில் தாலி கட்டிக்கொள்கிறார்கள்.
  • உயிர் பலிக்கு தடையிருப்பதால், கோழி, சேவல், ஆடு ஆகியவற்றை உயிருடன் விட்டுச் செல்கிறார்கள்.
  • ஆடி மாதம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • வேப்பிலையை உடலில் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
  • பொங்கல் படையிலிட முடி காணிக்கை செலுத்த கோவிலில் மண்டப வசதியுள்ளது.

பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் அமைப்பு எப்படியுள்ளது?

  • கோவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
  • நூற்றாண்டு பழமையானது கடவுளுள்ள இடம் மட்டுமே, மற்றவை தற்கால வடிவமைப்பிலேயே உள்ளது.
  • கொரோனா காரணமாக, உள்ளே நுழையும் போதே Liquid Soap கொடுத்துக் கை கழுவ கூறுகிறார்கள். முகக்கவசம் கட்டாயம்.
  • வழக்கமான கோவிலை விட ஊழியர்கள் அதிகளவில் உள்ளனர்.
  • பெரிய மண்டபம் என்பதாலும், மக்கள் கூட்டம் அதிகம் வருகிறது என்பதாலும், சிறப்பு வரிசைகள் உள்ளன.
  • கொரோனா காரணமாகக் கையில் பிரசாதம் கொடுக்கப்படவில்லை.
  • பெருமாள், முருகர், ஆஞ்சநேயர் கோவில்களும் உள்ளன.
  • கோவில் பராமரிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அறநிலையத்துறை இந்தளவுக்குப் பராமரிப்பது வியப்பளித்தது.
  • அதிக வருமானம் வரும் கோவில் என்பதால், பராமரிப்பும் நன்றாக உள்ளது.
  • கார் நிறுத்துவதற்கு இடமுள்ளது.
  • கோவில் அதிகாரப்பூர்வ தளம் –> பவானி அம்மன்

கோவிலுக்கு எப்படிச் செல்வது?

சென்னை கோயம்பேடில் இருந்து நெற்குன்றம் வழியாகக் கொல்கத்தா நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

கோயம்பேடில் இருந்து 45 கிமீ தொலைவில் கோவில் உள்ளது.

பழக்கமில்லாத சாலையென்றால், கூகுள் வழிகாட்டி உதவியுடன் செல்வது அவசியம்.

இக்கோவில் அருகே சிறுவாபுரி முருகன் கோவில் உள்ளதால், முருகன் கோவிலுக்குச் சென்று அங்கே இருந்து செல்லலாம்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் இருந்து பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில், இடது புறம் பாபா கோவில் உள்ளது.

கோயம்பேடில் இருந்து பெரியபாளையத்துக்குப் பேருந்து வசதி உள்ளது.

பேருந்து நிலையம் கோவில் அருகேயே உள்ளதால், ஐந்து நிமிடங்களுக்குள் கோவிலை அடைந்து விடலாம்.

தொடர்புடைய கட்டுரை

சிறுவாபுரி முருகன் கோவில்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, தற்போது நிறைய கோவில்களுக்கு சென்று வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் பார்வையில் தாயின் கருவறைக்கு பின் மனிதனின் மனதிற்கு அமைதி / நிம்மதி தரக்கூடிய ஒரே இடம் வழிபாட்டு தளங்கள் மட்டுமே!!! நான் ஊரில் இருந்த சமயத்தில் ஓய்வு கிடைக்கும் போது அதிகமாக செல்ல கூடிய இடம் மசூதியும், அதை ஒட்டி இருக்கக்கூடிய சுடுகாடும் தான்.. அங்கு செல்ல கூடிய ஒவ்வொரு தருணத்திலும் மனதில் சொல்ல முடியாத நினைவுகள் எழும்.

    நான் யார்?? நாளை என் நிலை என்ன என்பதை புரிய வைக்க இதை விட சிறந்த இடம் எங்கும் இல்லை.. சமூகத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் எல்லாம் ஒன்றாக உறங்கி கொண்டு இருப்பார்கள். மனிதன் தான் வாழும் போது எத்தனை விதமான எண்ணங்களோடு வாழுகிறான்.. தனது மரணத்தின் ஒரு நொடி முன்வரை தனது ஆசைகளை யாரும் விட தயாராக இருப்பதில்லை.. இயற்கைக்கு முன் மனிதன் ஒரு துளி என்பதை நினைத்தாலே நமது ஆணவம், ஆசை, வெறுப்பு, கோபம் என எல்லா கெட்ட பழக்கங்களும் நாம் கலைந்து நல்ல மனிதனாக சிறந்த வாழக்கையை யாருக்கும் துன்பம் தராமல் வாழலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின் கோவில்களுக்கு முன்பு இருந்தே சென்று கொண்டு இருக்கிறேன் ஆனால், அது பற்றி எழுதவில்லை அவ்வளவே.

    தற்போது எழுதக்காரணம், இத்தளத்தை Information தளமாக மாற்றி வருகிறேன். எனவே, பல தகவல்களைச் செய்தி போல கொடுக்க முயற்சித்து வருகிறேன்.

    முன்பு Blog நிறைய எழுதினார்கள். எனவே, கூட்டம் இருந்தது தற்போது இதுபோல படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள்.

    தற்போது கூகுள் தேடுதலில் இருந்து வருபவர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே, அதைக் கருத்தில் கொண்டு கட்டுரைகளை எழுதுகிறேன்.

    காலத்துக்கு ஏற்ப மாறினால் தானே நிலைக்க முடியும். அதோடு இதுவே எனக்குப் பிடித்துள்ளது 🙂 .

    புதிதாக முயற்சிக்கும் போது சுவாரசியமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here