அனுமன் பக்தரான நடிகர் அர்ஜுன் தனது கனவு ஆஞ்சநேயர் கோவில் கட்டி தனது நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றி உள்ளார். Image Credit
ஆஞ்சநேயர் கோவில்
இந்துக்கடவுள்களில் ஒவ்வொரு கடவுளுக்கும் தனிப்பட்ட முறையில் பக்தர்கள் ஏராளம். அவ்வகையில் ராமனின் அதி தீவிர பக்தரான அனுமனுக்கு அவரை விட அதி தீவிர பக்தர்கள் உள்ளன.
இந்தியாவெங்கும் அனுமனுக்கான கோவில் உள்ளது போலக் கடல் கடந்தும் பல அனுமன் கோவில்கள் உள்ளன, அதில் சிங்கப்பூர் அனுமன் கோவில் குறிப்பிடத்தக்கது.
அனுமன் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் உலங்கெங்கும் மிகச்சிறப்பாகக் குறிப்பாக வடஇந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படுகிறது.
கடவுளுக்குச் சேவை செய்த பக்தரைக் கடவுளாகக் கொண்டாடும் இந்து மதம் வித்யாசமானது 🙂 .
இவ்வாறு அனுமனை கொண்டாடும் கோடிக்கணக்கான பக்தர்களில் நடிகர் அர்ஜுனும் ஒருவர். தனது திரைப்படங்களிலும் அனுமன் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
அனுமன் கோவில் கட்ட வேண்டும் என்ற அர்ஜுன் பல கால விருப்பம் நிறைவேறியுள்ளது. கோவிட் காலத்தில் கோவில் திறக்கப்பட்டது.
கோவில் எப்படியுள்ளது?
- கோவிலின் அமைப்புத் தமிழ் முறைப்படியல்லாமல் வடமாநிலம், கேரளா, கர்நாடக கலவையில் உள்ளது.
- மிகப்பெரிய பிரமாண்டமான அனுமன் சிலை பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
- ராமர், சீதா, லக்ஷ்மணர் சிலைகளுள்ள சிறு கோவில் மிக அழகாக உள்ளது. உயரம் குறைவான வாசலுடன் பழமையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
- பெரிய விநாயகர் சிலை தனியாகவுள்ளது.
- மற்ற இடங்கள் இயற்கை சூழலுடன் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே தென்னந்தோப்பு உள்ளது, கோவில் கட்டப்படும் முன் கோவிலும் இதே போலத் தோப்பாக இருந்து இருக்க வேண்டும்.
- எனவே, சில தென்னை மரங்களை அப்படியே விட்டு விட்டார்கள். கருங்கற்கள் இடையே புற்களுடன் அழகாகத் தரை அமைக்கப்பட்டுள்ளது.
- திறந்தவெளி திண்ணை மண்டபம் உள்ளது. தியானம் செய்யலாம், யாகம் செய்பவர்களும் உள்ளனர்.
- அர்ச்சகர்கள் தமிழர்கள் போல இல்லை. கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் ஆனால், தமிழ் பேசினார்.
- நிழற்படம் எடுக்க அனுமதி கேட்டேன், இல்லையென்றார் ஆனால், கூகுள் மேப்பில் பலரும் அனுமதி இல்லாமல் எடுத்துப் பகிர்ந்துள்ளார்கள்.
- வெளியிலிருந்து கொண்டு வரும் பூ மற்றும் பூஜை சாமான்களுக்கு அனுமதியில்லை.
- கோவிலினுள் போதுமான விசாலமான இடமுள்ளது. அதோடு அமைதியான இடமாகவுமுள்ளது.
வாகன நிறுத்த இடம்
வாகனங்கள் நிறுத்தக் கோவிலினுள் இடம் ஏற்படுத்தியுள்ளார்கள் ஆனால், நாங்கள் சென்ற போது அனுமதிக்கவில்லை.
வெளியே குறுகிய சாலையாகவுள்ளது. எனவே, சிறப்பு நாட்களில் கூட்டம் காரணமாக அருகில் வசிப்பவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
கோவில் அழகாக அமைக்கப்பட்டு இருந்தாலும், கோவில் இருக்கும் இடம் அந்தப் பகுதிக்குப் பொருத்தமானதாக இல்லை.
அர்ஜுன் முன்பு வாங்கிப் போட்டு இருந்த இடமாக இருந்து இருக்கலாம், அங்கேயே கோவிலைக் கட்டியிருக்கலாம்.
பணி புரிபவர்கள் ஊதியம், பராமரிப்பு என்று மாதமே பெரிய செலவு உள்ளது. அர்ஜுன் குடும்பத்தினர் மட்டுமே தொடர்வது அவ்வளவு எளிதல்ல.
எப்படிச்செல்வது?
போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் இடது புறம் செல்ல வேண்டும். கூகுள் வழிகாட்டிப் பயன்படுத்தி எளிதாகச் செல்லலாம்.
கோவிலினுள் வாகனத்தை நிறுத்த அனுமதிக்கவில்லையென்றால், காரை நிறுத்தச் சிரமமாகவே இருக்கும்.
கொசுறு
அனுமனை வணங்கியதோடு தினமும் ஆற்காடு சாலையில் பயணிப்பவர்களின் காலில் விழுந்தும் வணங்க வேண்டும் 🙂 .
யப்பா! எப்படிப்பா வேலைக்குப் போய்ட்டு வரீங்க?!
மெட்ரோ வேலை நடப்பதால், இருபுறமும் 15 அடிக்கும் குறைவான சாலை தான் உள்ளது. இவ்வளவு கேவலமான சாலையைப் பார்த்ததும் பயணித்ததும் இல்லை.
10 கிலோ மீட்டர் பயணித்தது, 50 கிலோ மீட்டர் பயணித்த களைப்பை கொடுத்து விட்டது.
மாநகராட்சிக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியில்லையா?! மக்கள் எப்படி இதில் தினமும் பயணிக்கிறார்கள்! என்று சத்தியமாகப் புரியவில்லை.
தொடர்ச்சியாக ஒரு மாதம் இந்த மோசமான சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டினால், இடுப்பு வலி, முதுகு வலி, Spinal பிரச்சனை அத்தனையும் வந்து விடும்.
ஆற்காடு சாலையை விரைவில் சரி செய்ய அனுமனை வேண்டிக்கொள்கிறேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நடிகர் அர்ஜூன் இந்த கோவிலை கட்டியதை செய்திகளில் படித்ததாக நினைவில் இருக்கிறது.. விளக்கமாக விவரித்து எழுதியமைக்கு நன்றி கிரி..
@யாசின் 🙏