வழக்கறுத்தீஸ்வரர் கோவில் | காஞ்சிபுரம்

2
வழக்கறுத்தீஸ்வரர்

நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடப் பலரும் செல்லும் கோவிலாகக் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. Image Credit

வழக்கறுத்தீஸ்வரர்

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வழக்கறுத்தீஸ்வரர் கோவில். நீதிமன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஈஸ்வரனை வணங்கி வருகிறார்கள்.

வழக்குகளுக்காகவே பிரபலமான கோவில். சசிகலா, சிம்பு போன்றவர்கள் வணங்கித் தங்கள் வழக்குகளிலிருந்து விடுபட்டதால், இக்கோவில் பலரிடையே பிரபலமானது.

தல வரலாறு

தந்தையை அரக்கன் விழுங்கிக் கொன்று விட்டதால், அரக்கனை அழிக்கப் பராசர முனிவர் சிவனை வணங்கித் தவமிருந்து வழிபட்டதால், காட்சி தந்து அருள் பாலித்தார்.

தவ வலிமையால் என்னை அடைந்த நீ, மேலும் ஒரு வேள்வி செய்து அரக்கர்களைக் கொன்று நீதியை நிலை நிறுத்துவாயாக‘ என்று கூறி சிவன் சென்று விடுகிறார்.

அதே போலப் பராசர முனிவரும் வேள்வி செய்து அரக்கர்களை அழித்தார். அவர் வணங்கிய லிங்கம் பராசர ஈஸ்வர் என்ற பெயரால் வணங்கப்பட்டு வருகிறது.

தல சிறப்புகள்

 • வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காகவே இக்கோவிலுக்குப் பலர் வருகை புரிகிறார்கள்.
 • 16 திங்கள் கிழமைகள் நெய் தீபம் ஏற்றிச் சிவனை வழிபட்டால் தீராத வழக்குகளும் தீரும் என்பது நம்பிக்கை.
 • எனவே, ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை விஷேசம் என்பதால், கூட்டமாக இருக்கும்.
 • கோவிலுக்குச் சென்ற சமயத்தில் உற்சவரை எடுத்துச்சென்றார்கள். எனவே, உற்சவர் மூலவர் இருவரையும் அலங்காரத்துடன் பார்க்க வாய்ப்புக்கிட்டியது.

கோவில் அமைப்பு

 • கோவில் மிகச்சிறியது.
 • நுழைந்தவுடன் இறக்கமான பகுதியில் அமைந்துள்ளது. நவகிரகம், விநாயகரை வணங்கிச் சிவனை வழிபடலாம்.
 • இளஞ்சிவப்பு கற்களால் அமைந்தது விநாயகர் சிலை.
 • வழக்கறுத்தீஸ்வரர் லிங்கம் அமைந்துள்ள கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானதும், அந்தப் பழமையைக் கெடுக்காமலும் பாதுகாக்கப்படுகிறது.
 • லிங்கம் பார்ப்பதற்கு மிக அழகாகவும், மனதுக்கு நிறைவானதாகவும் உள்ளது.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில் எப்படிச்செல்வது?

சென்னையிலிருந்து பேருந்து, ரயிலில் காஞ்சிபுரம் செல்லலாம்.

சொந்த வாகனங்களில் செல்ல விரும்புபவர்கள் GST சாலையில், பெருங்களத்தூர் தாண்டிய பிறகு வலது புறம் பாலத்தில் ஏறித் திரும்பினால், நேராக சென்று கொண்டே இருக்க வேண்டியது தான்.

1.30 மணி நேரப்பயணம்.

பெருங்களத்தூர் –> படப்பை –> ஒரகடம் –> வாலஜாபாத் –> காஞ்சிபுரம்.

கோயம்பேடிலிருந்து GST சாலை அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாக வரலாம், இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பயண நேரம் தான்.

ரயிலில் (₹25) காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கடற்கரைக்குக் கிட்டத்தட்ட 3 மணி நேரமாகிறது. வாகனம், பேருந்து என்றால் குறைவான நேரமே ஆகும்.

எனக்குள்ள நீதிமன்ற வழக்கு பற்றிக் குறிப்பிட்ட போது இக்கோவிலுக்குச் செல்ல வாசகர் முரளி பரிந்துரைத்து இருந்தார்.

இவருடைய பரிந்துரையின் பேரிலேயே இக்கோவில் அறிமுகமானது.

பல காலமாக நீதிமன்ற வழக்கு பிரச்சனையுள்ளவர்கள் இக்கோவிலுக்குச் சென்று வழக்கறுத்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை 🙂 .

கொசுறு 1

படப்பையிலிருந்து வாலஜாபாத் வரை மரக்கன்றுகள் நடப்பட்டுச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வருடங்களில் (2025) இப்பகுதியில் பயணிப்பது அருமையான அனுபவமாக இருக்கும்.

மரக்கன்று நடப்பட்டு, பராமரிப்பது தேசிய நெடுஞ்சாலை துறையென நினைத்தேன் ஆனால், மாநில நெடுஞ்சாலைத்துறையே பராமரித்து வருகிறது.

யார் இப்பணியைச் செய்து இருந்தாலும், அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

கோவிலுக்குச் சென்றதை போல இம்மரக்கன்றுகளைத் தொடர்ச்சியாகச் சாலையெங்கும் பார்த்தது மகிழ்ச்சியளித்தது.

கொசுறு 2

முருகன், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் சென்றேன். தனிக்கட்டுரை எழுதும் அளவுக்கு விவரங்கள் உள்ளதால், இதில் குறிப்பிடமுடியவில்லை.

காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களே! 🙂 .

தொடர்புடைய கட்டுரை

மெலூஹாவின் அமரர்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. எனக்கு இந்த கோவிலை பற்றி இது வரை எந்த தகவலும் தெரியாது கிரி.. ஆனால் பழமையான கோவில்களுக்கு செல்வது விருப்பமான ஒன்று.. குறிப்பாக கூட்டம் அதிகம் இல்லாமல், ஆள் ஆரவாரமற்று மிகவும் எளிமையாக இருக்கும் கோவில்களுக்கு எப்போவது செல்வதுண்டு.. அந்த இடமே ஒரு வித மனஅமைதியை கொடுக்கும்..

  நான் அதிகம் சோர்வுற்ற தருணங்களில் தனியாக எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் செல்வதுண்டு.. 8 / 10 மணி நேரம் கடந்தாலும் உள்ளுக்குள் சொல்ல தெரியாத ஒரு மன மகிழ்ச்சி ஏற்படும்.. பறவைகளின் கீச்சு குரல்கள், மெலிதான காற்றின் ஓசை, எப்போதாவது வரும் புகைவண்டியில் தடக், தடக் சப்தம், புகைவண்டி செல்லும் போது அறிமுகமில்லாத மனிதர்களை வேடிக்கை பார்ப்பது, இந்த இடத்துக்கு அருகில் நாங்கள் அதிகம் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளை அசை போடுவது என தனிமையில் மனது பலவற்றை யோசித்து கொண்டே இருக்கும்.. ஒரு ரம்மியமான அமைதி இங்கு இருக்கும்.. சில கோவில்களுக்கு செல்லும் போது எனக்குள் இந்த ரம்மியமான அமைதி ஏற்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்..

  (படப்பையிலிருந்து வாலஜாபாத் வரை மரக்கன்றுகள் நடப்பட்டுச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வருடங்களில் (2025) இப்பகுதியில் பயணிப்பது அருமையான அனுபவமாக இருக்கும்.) அடுத்த சில வருடங்களில் இங்கு பயணித்தாலே உள்ளுக்குள் ஒரு வித உற்சாகம் நிச்சயம் ஏற்படும்.. வாய்ப்பு அமையும் போது நான் இங்கு பயணிக்க முயற்சிக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின்

  “கூட்டம் அதிகம் இல்லாமல், ஆள் ஆரவாரமற்று மிகவும் எளிமையாக இருக்கும் கோவில்களுக்கு எப்போவது செல்வதுண்டு.. அந்த இடமே ஒரு வித மனஅமைதியை கொடுக்கும்.”

  மிக உண்மை.

  “நான் அதிகம் சோர்வுற்ற தருணங்களில் தனியாக எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் செல்வதுண்டு.”

  சூப்பர் . நானும் இது போல ரயில் நிலையங்களை விரும்புவேன் 🙂 . சில ஒற்றுமைகள் நம்மிடையே உள்ளது.

  ஊருக்குச் செல்லும் போது முன்பே சென்று அமர்ந்து இருப்பேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here