சிவபுராணம் பாடல் வரிகள் | மாணிக்கவாசகர்

9
சிவபுராணம் பாடல் வரிகள்

சிவபெருமானின் பெருமைகளைத் திரு மாணிக்கவாசகர் சிவபுராணம் பாடல் வரிகளாக எழுதி அருளியுள்ளார். image Credit

சிவபுராணம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே-எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்.

– திருச்சிற்றம்பலம்

திரு மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த சிவபுராணம்
சிவனது அனாதி முறைமையான பழமை
(திருப்பெருந்துறையில் அருளியது)
கலிவெண்பா

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!

தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,

முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பான் யான்

கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி,

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்கா விளங்கு ஒளியாய்

எண் ணிறந்து எல்லை இலாதானே! நின் பெருஞ்சீர்,

பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்று அறியேன்;

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பு ஆகி

கல்லாய், மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!

மெய்யே! உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;

உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்

ஐயா! என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!

பொய் ஆயின எல்லாம் போயகல, வந்து அருளி,

மெய்ஞ்ஞானமாகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்,

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,

போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்!

நாற்றத்தின் நேரியாய், சேயாய்! நணியானே!

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே!

கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தாற் போலச்

சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த!

மறைந்திருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,

அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி,

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலஞ் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,

நிலம் தன்மேல் வந்து அருளி, நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு,

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!

மாசு அற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே!

தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

நேசம் அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங் கருணைப் பேர் ஆறே!

ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!

நீராய் உருக்கி, என் ஆர் உயிராய் நின்றானே!

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையும் ஆம்

சோதியனே! துன் இருளே தோன்றாப் பெருமையனே!

ஆதியனே! அந்தம் நடுவு ஆகி, அல்லானே!

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!

கூர்த்த மெஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!

போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!

காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே!

ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய். சொல்லாத நுண் உணர்வாய்,

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம்

தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே!

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப

ஆற்றேன்! “எம் ஐயா”, “அரனே ஓ” என்று என்று

போற்றிப் புகழ்ந்து இருந்து! பொய் கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து!, வினைப் பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அளிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!

தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று!

சொல்லற்கு அரியானைச் சொல்லித், திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர்! சிவபுரத்தின் உள்ளார்! சிவன் அடிக் கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

– திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

அண்ணாமலை எம் அண்ணா போற்றி

கண்ணாரமுத கடலே போற்றி

காவாய் கனகத்திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

சிவபெருமானின் பெருமைகள்

மாணிக்கவாசகர் இயற்றிய சிவபுராணம், சிவபெருமானின் பெருமைகளைக் கூறுவது.

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதியே சிவபுராணம்.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. சிறப்புப் பெற்ற இந்நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.

95 அடிகளைக் கொண்டு இன்னிசைக் கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது.

அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது.

மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப்பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

சிவபுராணத்தின் நோக்கம்

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர்.

சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன.

இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம்.

இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

சைவசித்தாந்தக் கருத்துகள்

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்று கூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.

இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புகள் வருகின்றன.

இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர் நாடியாக விளங்குபவை.

சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது.

இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.

குறிப்பு

இப்பாடலை இத்தளத்தில் பதிய வைக்கக் காரணம் உண்டு.

வழக்கமாகச் செல்லும் சிவன் கோவில்களில் சிவபுராணம் பாடல் வரிகள் புத்தகம் இருக்கும் ஆனால், சில இடங்களில் இருக்காது.

எனவே, மொபைல் வழியாக இணையத்தில் தேடி படிக்க வேண்டியதாக இருக்கும் ஆனால், பெரும்பாலும் அனைத்து தளங்களிலும் ஏராளமான விளம்பரங்கள், இடையே வந்து படிக்கச் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

அதோடு சில தளங்களில் எழுதப்பட்டுள்ள சிவபுராணம் பாடல் வரிகளில் தவறுகள், எழுத்துப் பிழைகள் உள்ளது.

எனவே, செல்லும் கோவில்களில் உள்ள புத்தகம், கல்வெட்டு ஆகியவற்றையும் ஒப்பிட்டு இப்பாடல் இவ்வரிகளை எழுதியுள்ளேன்.

முடிந்தவரை தவறுகள் இல்லாத அளவுக்கு எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் பாடல் வரிகளில் இருந்தால், தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டுங்கள்.

இக்கட்டுரை தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

இக்கட்டுரை எனக்காகவே எழுதிய முதல் கட்டுரை என்றாலும், என்னைப் போலச் சிரமத்தை எதிர்கொண்டவர்களுக்கும் பயன்படும் என்றும் நம்புகிறேன்.

சிவபுராணம் கூடுதல் தகவல்கள் நன்றி தமிழ் விக்கிபீடியா

மேலும் சில பாடல்களின் வரிகள்

விநாயகர் பாடல் வரிகள்

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

9 COMMENTS

  1. கிரி.. எந்த மதமாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை மதம் மற்றும் அதன் கோட்பாடுகள், வழிபட்டு முறைகள் தான் ஒரு மனிதனை நேர்வழியில் செல்ல உதவுகிறது. இதை யார்? எழுதியது? இது கற்பனையா? அல்லது உண்மை சம்பவமா? என ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல கோட்பாடுகள் எக்காலத்திற்கும் பொருந்தும்.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய எத்தனையோ செய்திகள், தகவல்கள் தற்போதைய நம்முடைய வாழ்க்கைக்கு பொருந்தி போகிறது.. குறிப்பாக இளைய தலைமுறையினர்க்கு இது குறித்த அறிவுறுத்தல் அவசியமாகிறது.

    பள்ளி பருவத்தில் திருப்பாவை / திருவெண்பாவையை மனப்பாடம் செய்திருக்கிறேன். மாவட்ட அளவில் இந்து அறநிலைத்துறை நடத்திய கட்டுரை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறேன். கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படித்து இருக்கிறேன்.

    TMS அவர்களின் என்னுடைய விருப்ப பக்தி பாடல் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!!! எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்!!!! பாடலை கேட்கும் போது உருகி விடுவேன். கடவுள் முருகனை குறித்து இவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும். இவற்றில் சிலதை தற்போதும் கேட்டு வருகிறேன். SPB பாடிய ஓம் நமச்சிவாயா பாடலும் எல்லா மனநிலையிலும் நான் கேட்பேன்.

    வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
    நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
    பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

    உன்னை நினைத்து படத்தில் (Happy New Year) பாடலை கேட்கும் போது, இடையில் வரும் இந்த வரிகளை கேட்டு கடந்த மாதம் இந்த முழு பாடலையும் அதன் அர்த்தத்துடன் படித்து பார்த்தேன்.. என்ன உவமை? யாப்பா வரிகளையும் , பொருளையும் படித்து மிரண்டு விட்டேன்..
    ==============================

    ஒரு சின்ன உதாரணம் : இந்த பாடலில் வாரணம் என்றால் யானை என்று பொருள். இச்சொல், யானை என்னும் ஒரு பொருளைக் குறிப்பதாக சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் கூறப்பட்டுள்ள முப்பத்தெட்டுப் பெயர்களில் ஒன்று.

    யானையின் முப்பத்தெட்டுப் பெயர்களாவன : தும்பி, கடிவை, புகர்முகம், தோல், கரி, உம்பல், வயமா, பகடு, நால்வாய், கரிணி, குஞ்சரம், கயமே, களபம், மருண்மா, தந்தி, மாதங்கம், ஒருத்தல், களிறு, சிந்துரம் , கறையடி, எறும்பி, வழுவை, வாரணம், வேழம், வல்விலங்கு, நாகம், மதகயம், அத்தி, இபம், கும்பி, போதகம், உவாவே, தூங்கல், மாதிரம், மறமலி கைம்மா, ஆம்பல், கோட்டுமா, புழைக்கை.
    ==============================

    ஒரு சாதாரண விலங்கிற்கே தமிழில் இத்தனை பெயர்கள் என்றால் “நம் மொழியின் அழகை என்னவென்று சொல்வது.. நம் முன்னோர்களின் அறிவை எவ்வாறு பாராட்டுவது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “நல்ல கோட்பாடுகள் எக்காலத்திற்கும் பொருந்தும்.”

    உண்மை தான். நல்லது யார் கூறினால் என்ன? ஏற்றுக்கொள்ளவே வேண்டியது தான். நான் இதைத்தான் பின்பற்றுகிறேன்.

    “பள்ளி பருவத்தில் திருப்பாவை / திருவெண்பாவையை மனப்பாடம் செய்திருக்கிறேன். மாவட்ட அளவில் இந்து அறநிலைத்துறை நடத்திய கட்டுரை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறேன்.”

    அருமை 🙂 . படிக்கும் போது செய்யுள் தகராறு எனக்கு.

    அப்போது இருந்த இந்து அறநிலையத்துறை சரியாக இருந்து இருக்கும் போல 🙂 . உருப்படியாக செய்துள்ளார்கள்.

    “அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படித்து இருக்கிறேன்.”

    ஏற்கனவே ஒரு முறை கூறி உள்ளீர்கள். கண்ணதாசன் வரிகள் உங்களுக்கு பிடித்தமானவை என்று அறிவேன்.

    “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!!! எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்!!!!”

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அற்புதமான இசை. எப்போது கேட்டாலும் சலிக்காது. ஏன் இது போன்ற மனதில் நிற்கும் பாடல்கள் தற்போது வருவதில்லை என்ற வருத்தம் உண்டு.

    “கடவுள் முருகனை குறித்து இவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்.”

    இவருடைய முருகன் பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகன். முருகனின் பக்தன் நான். அதோடு இவர் குரலில் வந்த முருகன் பாடல்கள் அனைத்துமே அற்புதமாக இருக்கும்.

    குறிப்பாக கோவில்களில் இப்பாடல் ஒலிக்கக் கேட்டால் மிகவும் பிடிக்கும். இது போன்ற பாடல்களை இனி எவராலும் கொடுக்க முடியாது.

    நான் அடிக்கடி விரும்பிக்கேட்கும் பாடல்கள். குறைந்தது வாரத்தில் ஒரு முறையாவது காலையில் கேட்டு விடுவேன்.

    கற்பனை என்றாலும், மண்ணானாலும், அழகென்ற சொல்லுக்கு, எனக்கும் இடம் உண்டு என்று ஏராளமான தேனினும் இனிய பாடல்கள்.

    முருகனுக்கும், ஐயப்பனுக்கும் மட்டுமே இது போன்ற அருமையான பாடல்கள் ஏராளம் உள்ளது.

    முருகனுக்கு TMS போல, ஐயப்பனுக்கு வீரமணி.

    “SPB பாடிய ஓம் நமச்சிவாயா பாடலும் எல்லா மனநிலையிலும் நான் கேட்பேன்.”

    SPB யின் மகுடத்தில் இதுவும் ஒரு சிறப்பு. ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் அமையும் அது போல SPB க்கு அமைந்தது இப்பாடல்.

    மேலே இனி இது போல பாடல்கள் வருவது கடினம் என்று TMS முருகன் பாடல்களுக்கு கூறி இருந்தேன் ஆனால், அந்த அளவுக்கு இல்லையென்றாலும், பலரையும் கவர்ந்த பாடலாக இப்பாடல் அமைந்தது.

    அதாவது இக்காலத்திலும் அனைவரும் ரசிக்கும் ஒரு பாடலை கொடுக்க முடியும் என்று வந்த பாடலாக இப்பாடலை கருதுகிறேன்.

    அதற்கு இசையும், வரிகளும் முக்கியமாக SPB குரலும் வெற்றிக்குக் காரணம். இப்பாடலும் என் பட்டியலில் உள்ளது, இன்று காலை கூட கேட்டேன்.

    “ஒரு சாதாரண விலங்கிற்கே தமிழில் இத்தனை பெயர்கள் என்றால் “நம் மொழியின் அழகை என்னவென்று சொல்வது..”

    தமிழ் ஒரு அற்புதமான மொழி ஆனால், அது சரியான நபர்களின் கையில் இல்லாததே இதன் பேரிழப்பு.

  3. Hi Giri,
    Thanks for introducing Siva Pranam here. I want to get started with memorizing Thiruvasaham and I will do it with this article. Please continue posting on other chapters in Thiruvasaham. Thank you.
    Renga

  4. உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் சிவபுராணம் திருவாசகம் அருமை நன்றி நந்தகுமார்

  5. நன்றிகளை மட்டுமே சொல்ல முடிகிறது. நான் பெரும்பாலும் சிவபுராணத்தை பாடல் வடிவிலேயே கேட்டு பழகி உள்ளேன் முதல்முறையாக பாடலை நிறுத்திவிட்டு நானே பயின்றேன்

  6. @நந்தகுமார் நன்றி

    @Balraj

    தொடர்ந்து படித்தீர்கள் என்றால், மனப்பாடம் ஆகி விடும். எதையும் படிக்காமல், கேட்காமல் சிவபுராணம் கூறுவது அற்புதமான உணர்வு.

    அதுவும் மற்றவர்களுடன் இணைந்து பாடுவது உற்சாகத்தை அளிக்கும்.

    இடைவெளி விட்டால் சில வரிகள், வார்த்தைகள் மறந்து விடும். திரும்பப் படிக்க வேண்டும்.

    முயற்சியுங்கள்.

  7. மிக சிறப்பான தங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐

  8. சிவபுராணம் படித்து பொருள் உணர்ந்து இறைவனை போற்றுபவர்களுக்கு இறைவன் எப்பொழுதும் நன்மையே அளிப்பார் அனைவருக்கும் சிவாய நம திருச்சிற்றம்பலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!