தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் உள்ள ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தக் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு இந்த ஆண்டுத் துவங்கியுள்ளது.
காசி தமிழ் சங்கமம்
இந்தியாவின் ஆன்மீக நகரம் காசி என்றால், ஆன்மீக மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே அதிகக் கோவில்கள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
எனவே, இரு மாநிலங்களுக்கும் உள்ள பிணைப்பைக் கொண்டாட பிரதமர் மோடி எண்ணத்தில் உருவானதே காசி தமிழ் சங்கமம்.
யாருக்குமே தோன்றாத மிகச்சிறந்த முன்னெடுப்பு. Image Credit
அரசியல்
மோடியின் முன்னெடுப்பில் அரசியல் கணக்கும் உள்ளதை அனைவரும் அறிவர்.
அரசியல் முக்கியக் காரணமாக இருந்தாலும், இதன் மூலம் இரு மாநிலங்களுக்குமான ஆன்மீக பிணைப்பு மறு உருவாக்கம் அடைவது மகிழ்ச்சி.
காரணம், தமிழகம் என்றாலே ஆன்மீக பூமி ஆனால், தமிழக அரசியல் காரணங்களால் இவை புறக்கணிப்பட்டு வருகிறது.
எனவே, இம்முயற்சி இழந்த பிணைப்பை மீட்டுருவாக்கம் செய்ய உதவியுள்ளது.
அரசியலுக்காக தமிழ் மீது பற்றுள்ளவராக மோடி நடிக்கிறார் என்ற விமர்சனம் இருந்தாலும், மோடிக்கு தமிழின் சிறப்பு தெரிந்த அளவுக்கு இங்குத் தமிழ் தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளுக்கு தமிழின் சிறப்பு தெரியாது என்பதே உண்மை.
இளையராஜா நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் சிறு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனால், அங்கு இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இளையராஜாவின் சிறப்பை உணராதவர்கள் என்பதால், பேசிக்கொண்டும், கேமராக்கு கை அசைத்துக்கொண்டும், கவனமில்லாமலும் இருந்தார்கள்.
பார்க்கவே கடுப்பாக இருந்தது. அதோடு இளையராஜா பாடியது சரியாக கேட்கவில்லை, ஒலிபெருக்கி அவருக்கு மட்டும் சரியான அளவில் இல்லை.
இளையராஜா நிகழ்ச்சி என்றால், ஒழுங்கு இருக்கும், அமைதியாக இருப்பார்கள். அமைதியாக இல்லை என்றால், இளையராஜா அமைதிப்படுத்துவார்.
ஆனால், இந்நிகழ்வில் முடியாது என்பதால், தொடர வேண்டியதாகி விட்டது.
அடுத்த முறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சிக்கு ஆர்வமுள்ளவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும், மற்ற நிகழ்ச்சிகளோடு இசை நிகழ்ச்சியை இணைக்கக் கூடாது. பார்த்தவரை, மோடி மட்டுமே ரசித்துக்கேட்டார்.
இம்முறை அறிமுக நிகழ்ச்சி என்பதாலும் கூட இதைக்கட்டுப்படுத்த முடியாதது காரணமாக இருக்கலாம்.
என்னவாக இருப்பினும் பார்க்கவே எரிச்சலாக இருந்தது.
ஆக்கிரமிப்பில் காசி
அந்நியப் படையெடுப்புகளால் காசி கோவில் மிகப்பெரிய சீரழிவுக்குள்ளானது.
இதனாலே போர்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டுக் கோவிலைச் சுற்றியுள்ள வெளிப்புற அமைப்புகள், சாலைகள் குறுகலாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கும்.
தற்போது காசி சென்றாலும் இவற்றைக்காண முடியும்.
சுதந்திரம் அடைந்த பிறகும், இவ்வளவு வருடங்களாகக் காசியின் சிறப்பை உணராத கட்சிகள் ஆட்சியில் இருந்ததால், காசி புகழ் மங்கி இருந்தது.
2019 ம் ஆண்டுப் பாராளுமன்றத்தேர்தலில் வாரணாசி தொகுதியில், வாரணாசியை மேம்படுத்தி, காசியின் சிறப்பை மீட்பேன் என்று மோடி வாக்குறுதியளித்து இருந்தார்.
புணரமைக்கப்பட்ட காசி
காசி கோவிலைச் சுற்றி பராமரிப்பு இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கோவிலின் பரப்பளவு சுருங்கியிருந்தது.
இதனால், அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இழப்பீடு கொடுத்து வேறு பகுதியில் குடியமர்த்திக் கோவிலின் இடம் மீட்கப்பட்டுக் கூட்டதைத்தாங்கும் இட வசதியுடன் கோவில் மிகச்சிறப்பாகச் சீரமைக்கப்பட்டது.
அப்போது இருந்த கோவிலின் அமைப்புக்கும் தற்போதைய நிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம்.
கோவிலைச் சீரமைப்பது பெரிய விஷயமில்லை ஆனால், இவ்வளவு பேருக்கும் இழப்பீடு கொடுத்து, பெரிய சிக்கல் இல்லாமல் இடத்தை மீட்டுள்ளார்கள்.
மூன்று வருடங்களில் இவ்வளவும் செய்து முடிக்கப்பட்டுக் கோவிலும் குறைந்த காலத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை.
கோவில் மட்டுமல்ல, வாரணாசி முழுக்கவே சுற்றுலாக்காக மேம்படுத்தப்பட்டு, சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, சில வருடங்களுக்கு முன்பு வாரணாசி சென்றவர்களுக்குத் தற்போதைய வாரணாசியைப் பார்த்தால், வியப்பே மேலிடும்.
மேம்படுத்த வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் இருந்தாலும், குறைந்த காலத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் பாராட்டுதலுக்குரியது.
தமிழகம்
தமிழகம் ஆன்மீக பூமி ஆனால், கடவுள் நம்பிக்கையற்றவர்கள், போலி பகுத்தறிவாளர்கள் பொறுப்பில் தமிழக ஆன்மிகம் சென்றதால் தமிழகம் ஆன்மீக சிறப்பை இழந்து பொலிவற்றதாகி விட்டது.
கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிப்பதால், உண்மையான ஆன்மீக வழிபாட்டை, வழிமுறைகளை இழந்து தமிழகம் தத்தளித்து வருகிறது.
யாரும் நிம்மதியாகக் கோவில் விழாக்களைக் கொண்டாட முடியவில்லை காரணம், கடவுள் நம்பிக்கையற்றவர்களிடம் கட்டுப்பாடு உள்ளது.
கோபியில் உள்ள மிகப்பிரபலமான கோவிலான பாரியூர் கொண்டத்துக் காளி அம்மன் கோவிலுக்குக் கோடிக்கணக்கான பணமுள்ளது.
ஆனால், கோவில் திருவிழாக்கு அப்பகுதி மக்கள் தங்கள் சொந்தக்காசை போட்டே விழாவை நடத்துகிறார்கள். இந்து அறநிலையத்துறை பணம் செலவழிப்பதே இல்லை.
இது இக்கோவிலுக்கு மட்டுமான நிலையல்ல, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் நிலைமை இது தான்.
திருப்பதிக்கு அடுத்து அதிக வருமானமுள்ள கோவிலான பழனிக்கு வரும் வருமானத்தை வைத்துப் பழநி நகரையே மேம்படுத்தி விடலாம் ஆனால், கோவில் பெரிய மாற்றம் இல்லாமல் அதே நிலையிலுள்ளது.
இது தான் தமிழகத்து கோவில்களின் நிலை.
ஆன்மிகம்
கோவிலுக்குச் சென்று வழிபடுவதால் மட்டுமே ஆன்மீக உணர்வு முழுமையாக இருப்பதாகக் கருத முடியாது.
காரணம், ஆன்மீக உணர்வோடு இருப்பவர்கள் விழாவை நடத்துவதற்கும் கடமைக்கு நடத்துபவர்களுக்கும் நிறைய வேறுபாடுள்ளது.
திராவிடக் கட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே தமிழகம் தன் உண்மையான ஆன்மீக சிறப்பைப் பெறும்.
காரணம், கடவுள் நம்பிக்கையற்ற ஆட்சியாளர்கள் கோவில்களை வருமானம் தரும் இடமாகவே பார்க்கிறார்கள், ஆன்மீகத்தலமாக அல்ல.
பாஜக ஆட்சிக்கு வந்தால், கோவில்கள் இந்து அறநிலையத்துறை வசமிருந்து விடுவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
அந்நாளுக்காகக் காத்துக்கொண்டுள்ளேன். அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது உண்மையான ஆன்மீக சிறப்பை மீட்டெடுக்கும் என்று நம்பலாம்.
காசி தமிழகம்
மாணவர்கள், வயதானவர்கள் காசிக்கு செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
காசிக்கும் தமிழகத்துக்கும் பன்னெடுங்காலத் தொடர்புள்ளது.
அங்கே நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்றும் பலர் மடங்களை அமைத்துள்ளார்கள். பல இடங்களில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தங்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.
முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது மெக்கா சென்று வருவது எப்படிச் சிறப்போ அது போல இந்துக்கள் காசி சென்று வருவது சிறப்பு.
தங்கள் இறுதிக்காலம் காசியில் முடிந்தால், மோட்சம் பெறுவோம் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது.
வடமாநில காசிக்குத் தூரம் காரணமாகச் செல்ல முடியாதவர்கள் அல்லது சிலர் வழியிலேயே இறந்து விடுகிறார்கள் என்று, பாண்டிய மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றி கோவிலைக் கட்ட சொன்னதே தென்காசி கோவில் என்பது வரலாறு.
காசி தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் தமிழகத்திலிருந்து காசி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பலாம்.
சுற்றுலா
காசி மட்டுமல்ல, தமிழகத்தைப் போல ஆன்மீக மாநிலமான உத்தரபிரதேசம் ஏராளமான சிறப்பு வாய்ந்த கோவில்களைக் கொண்டுள்ளது.
ஆனால், அவையாவும் சிறப்புத் தெரியாதவர்களால் இவ்வளவு காலமும் புறக்கணிக்கப்பட்டு வந்தது.
தற்போது யோகி ஆதித்யநாத் அங்குள்ள கோவில்களைப் புணரமைத்து வருகிறார். கோவில்களை மட்டுமல்ல உத்தரப்பிரதே உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறார்.
ஏராளமான, புதிய தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து யோகி ஆதித்யநாத் பற்றிய தனிக்கட்டுரையில் விளக்குகிறேன்.
பிற்சேர்க்கை
யோகி ஆதித்யநாத் | காவியில் ஒரு காக்கி
கடந்த நான்கு வருடங்களாகத் தமிழக சுற்றுலாத்துறை முதல் இடத்தில் உள்ளது ஆனால், தமிழகம் தங்கச்சுரங்கம் என்பதைச் சுற்றுலாத்துறை உணராமல் உள்ளது.
இது குறித்தும் தனிக்கட்டுரை பின்னர் எழுதுகிறேன்.
ஒன்றுமே செய்யாமலே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றால், தமிழகத்தின் நூற்றாண்டு பழமையான கோவில்களை மற்றும் மற்ற சுற்றுலா தளங்களை மேம்படுத்தினால் எந்த நிலையில் இருக்கும்!
ஆனால், நம் மதிப்பை உணராத கட்சிகள் தான் ஆண்டு வருகின்றன.
ராமர் கோவில் 2024 ல் திறக்கப்பட்டு, மற்ற உத்தரபிரதேச மாநில கோவில்களும் புணரமைக்கப்பட்டால், இந்தியளவில் சுற்றுலாவில் இரண்டாம் இடத்தில் உள்ள உத்தரபிரதேசம் முதலிடத்தைப் பெற்று விடும்.
தமிழகம் முதலிடத்தில் தொடர்வது ஆட்சியாளர்கள் கையில் குறிப்பாகச் சுற்றுலாத்துறை கையில் உள்ளது.
ஆன்மீகம்
காலங்கள் எடுத்தாலும், தமிழகம் மீண்டும் ஆன்மீக சிறப்பைப் பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.
ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் ஆன்மீக நிகழ்ச்சியை நடத்துவதற்கும் கடமையாகச் செய்யும் இந்து அறநிலையத்துறை செயலுக்கும் அதிக வித்யாசமுள்ளது.
தமிழகம் இழந்த ஆன்மீகப் பெருமையை மீண்டும் பெற கடவுளை வேண்டுகிறேன்.
சுவாரசியமற்றுப்போய், ஆன்மீகப்பிடிப்பு தளர்ந்து இருந்த தமிழக ஆன்மீக பக்தர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது காசி தமிழ் சங்கமம்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும், ஆன்மீகம் செழிக்க வேண்டும்.
இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்ற நம்பிக்கையுள்ளது.
அவ்வாறு செல்லும் போது, அவ்வனுபவங்களை இத்தளத்தில் நிச்சயம் பகிர்வேன்.
தொடர்புடைய கட்டுரை
இந்து சமய அறநிலையத்துறை தேவையா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்கள் வலிகளை எழுத்துக்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.. காசி தமிழ் சங்கமம் உண்மையில் வரவேற்க்க தக்க ஒரு நிகழ்வு.. இதற்கு பின் என்ன அரசியல் இருந்தாலும், நிச்சயம் இது ஒரு நல்ல முயற்சி என கருதுகிறேன்.. வட மாநிலங்களில் பல இடங்களை சக்தியுடன் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆவல் முன்னரே உண்டு.. குறிப்பாக பெருநகரங்கள் இல்லாமல் சரித்திர புகழ் பெற்ற கோவில்கள், கோட்டைகள், ஆன்மிக தளங்கள். நேரம் தான் மிக இருவருக்கும் போதுமானதாக இல்லை..
பண்டைய காலங்களில் இங்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் பெரும்பாலும் கோவில்களை கட்டியதோடு மட்டுமில்லாமல், அதனை முறையாக பராமரித்து வந்தனர்.. இதை ஒரு முக்கிய பணியாகவே செய்து வந்தனர்.. காலப்போக்கில் எல்லாம் மாறி போகி விட்டது.. கடல் கடந்தும் சில தேசங்களில் இந்த பணியை அந்த காலங்களில் செய்து இருப்பது வியப்பாக இருக்கிறது..
கோவிலுக்குச் சென்று வழிபடுவதால் மட்டுமே ஆன்மீக உணர்வு முழுமையாக இருப்பதாகக் கருத முடியாது. கிரி.. என்னை பொறுத்தவரை வழிபாடும் & மதநம்பிக்கையும், தனி மனிதனின் சுதந்திரம்.. அதில் தலையிட யார்க்கும் உரிமையில்லை.. என்னுடைய வழிபாடு முட்டாள்தனமாக இருந்தாலும், அது என்னை மட்டும் தான் பாதிக்குமே தவிர, சமுதாயத்தை பாதிப்பதில்லை.. எல்லோர்க்கும் மத சுதந்திரம் நிச்சயம் வேண்டும்..
பிரச்சனைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை.. எல்லோர்க்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கிறது.. அதற்கான வடிகால் தான் இந்த வழிபாடும், பிராத்தனைகளும் .. வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து, இனி வாழவே முடியாது என்ற நிலையில் உள்ள பல பேரை (எந்த மதமாக இருந்தாலும்) வாழவைப்பதே இந்த ஒற்றை கடவுள் நம்பிக்கை தான்.. மற்றவர் பார்வையில் சிலரது வழிபாடும் / அதன் முறைகளும் தற்காலத்தில் முட்டாள் தனமாக தெரியலாம்.. ஆனால் அதனால் யார்க்கும் நட்டமில்லையே!!!
@யாசின்
“கிரி.. என்னை பொறுத்தவரை வழிபாடும் & மதநம்பிக்கையும், தனி மனிதனின் சுதந்திரம்.. அதில் தலையிட யார்க்கும் உரிமையில்லை.. என்னுடைய வழிபாடு முட்டாள்தனமாக இருந்தாலும், அது என்னை மட்டும் தான் பாதிக்குமே தவிர, சமுதாயத்தை பாதிப்பதில்லை.. எல்லோர்க்கும் மத சுதந்திரம் நிச்சயம் வேண்டும்..”
சரியான பார்வை யாசின்.
இங்கே பிரச்சனை தங்களை பகுத்தறிவுவாதிகளாக கருதிக்கொள்பவர்கள் தங்களை புத்திசாலிகளாக தாங்களே கருதிக்கொண்டு கருத்து கூறுவதே இங்கே சிக்கலுக்குக் காரணம்.
நம்பிக்கையில்லாதவனுக்கு இங்கே என்ன வேலை!
“பிரச்சனைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை.. எல்லோர்க்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கிறது.. அதற்கான வடிகால் தான் இந்த வழிபாடும், பிராத்தனைகளும்”
சரியா சொன்னீங்க. இதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.
இதை கூறும் போது காலமான மூத்த பதிவர் அனுராதா அவர்கள் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.
நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்.
“வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து, இனி வாழவே முடியாது என்ற நிலையில் உள்ள பல பேரை (எந்த மதமாக இருந்தாலும்) வாழவைப்பதே இந்த ஒற்றை கடவுள் நம்பிக்கை தான்.”
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கடவுள் கூடவே இருப்பதாக உணர்கிறேன். அதாவது என்னைப் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாகவே உணர்கிறேன்.
இதற்கு பல சம்பவங்களைக் கூறலாம், பல எனக்கு தாமதமாகவே புரிந்தது. இது பற்றிய கட்டுரையைச் சரியான நேரம் அமையும் போது எழுதுகிறேன்.
“மற்றவர் பார்வையில் சிலரது வழிபாடும் / அதன் முறைகளும் தற்காலத்தில் முட்டாள் தனமாக தெரியலாம்.. ஆனால் அதனால் யார்க்கும் நட்டமில்லையே!”
என்னைப்பொறுத்தவரை மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத, ஒருவரை துன்புறுத்தாத எந்தச் செயலும் தவறில்லை.
எனேவ, நம்பிக்கையை விமர்சிப்பதெல்லாம் தங்களை புத்திசாலிகள் என்று உணரும் முட்டாள்கள் செயலே.