பழனி முருகன் கோவில்

4
பழனி முருகன் கோவில்

வேண்டுதல் கிடையாது ஆனால், நீண்ட வருடங்களாகச் செல்ல நினைத்துத் தற்போது பழனி முருகன் கோவில் குடும்பத்துடன் சென்று வந்தேன். Image Credit

பழனி முருகன் கோவில்

பழனியை பற்றிக் கூற எனக்கு எப்போதும் எதிர்மறை செய்திகளே அதிகம் இருக்கும்.

தென் இந்தியாவின் இரண்டாவது அதிக வருமானமுள்ள கோவிலை வைத்துப் பழனியை எப்படியெல்லாமோ மாற்ற வழிகள் இருந்தும், வருமானத்தை அரசு எடுத்துக்கொண்டு கோவில் வளர்ச்சிக்குக் கிள்ளியே கொடுக்கிறது.

பல கோடி வருமானத்தை வைத்து எப்படியெல்லாம் கோவிலை அற்புதமாக மாற்றலாம், வசதிகளைப் பக்தர்களுக்குச் செய்து கொடுக்கலாம்.

கோவிலை மேம்படுத்தித் திருப்பதி போலத் தரமான வசதிகளுடன் பக்தர்களுக்கு வழங்கலாம் ஆனால், அது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அரசுள்ளது.

அதே பராமரிப்பற்ற இடங்கள், பழைய முறையில் தொங்கி கொண்டு இருக்கும் கேபிள்கள், சுத்தம் செய்யப்படாத கழிவறைகள் என்று கூறவே சலிப்பாக உள்ளது.

வசதிகள், பராமரிப்பு இல்லையென்று மறுக்க முடியாது ஆனால், தரமானதாக இல்லை.

வரும் வருமானத்தை வைத்துப் பழனி நகரையே அற்புதமாக மாற்றலாம் ஆனால், அரசுக்கு மனமில்லையே. இதுபோலக் கூற ஏராளமான விஷயமுள்ளது ஆனால், இவற்றைப்பேசி என்ன ஆகப்போகிறது.

காவடி

கடந்த வாரம் பங்குனி உத்திரம் என்பதால், இன்னமும் காவடி எடுத்து வருகிறார்கள். இன்னமும் ஒரு மாதத்துக்குக் கூட்டம் இருக்கும் என்றார்கள்.

எதோ திருவிழா கூட்டம் போல அவ்வளவு மக்கள் வருகின்றனர். கோவிட் பிரச்சனை காரணமாக வர முடியாமல் இருந்து தற்போது அனைவரும் வருகிறார்களா என்று தெரியவில்லை.

மலையாளிகளுக்கும் பழனியில் சம்பந்தம் இருப்பதால், மொத்த கூட்டத்தில் 30 – 40% இவர்களே இருக்கிறார்கள்.

அழகென்ற சொல்லுக்கு முருகன்

அழகென்ற சொல்லுக்கு முருகா!‘ என்று TMS பாடியது பாடலுக்காக இல்லையென்பதை பழனி வந்தால் உணர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பருவ வயதிலும் உள்ள முருகனின் நிழற்படங்கள் வைத்துள்ளார்கள். அனைத்தையும் வாங்கிச் சுவற்றில் மாற்றிக்கொள்ளலாம் போல உள்ளது.

மிகைப்படுத்திக் கூறவில்லை, உண்மையாகவே அங்குள்ள படங்களைப் பார்க்கும் போது தோன்றியது.

ஃபோட்டோஷாஃப்பில் வண்ணமயமாகப் பல வடிவங்களில் முருகன் படங்கள் உள்ளது. அத்தனை நிழற்படங்களையும் வாங்க விருப்பம் என்றாலும் எங்கே மாட்டுவது?

எனவே, குழந்தை முருகனை சிவன் தூக்கி வைத்து இருந்த ஒரு அற்புதமான படத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். அதன் வண்ணமும், இருவரின் மகிழ்ச்சியும், சிரிப்பும் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும். Image Credit

படத்தைப்பார்க்கும் போது மனம் புத்துணர்ச்சி, மலர்ச்சி அடையும் 🙂 . இப்படம் ஃபோட்டோஷாஃப்பில் இன்னும் அழகான வண்ணத்தில் மேம்படுத்தப்பட்டு இருந்தது.

திருவாவினன்குடி

பழனி செல்லும் பலரும் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த திருவாவினன்குடி என்ற முக்கியக் கோவிலைப் பார்க்காமலே சென்று விடுகின்றனர் ஆனால், செல்ல வேண்டிய கோவில்.

முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடாகத் திகழ்கின்றது. அகத்தியர் இங்குத் தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பழனி முகப்பு அடிவாரத்திலிருந்து 10 நிமிட நடை பயணத்திலேயே உள்ள அழகான கோவில்.

இங்கே சென்ற போது காவடிக்குப் பறை இசையுடன் நொறுக்கித்தள்ளிக்கொண்டு இருந்தார்கள். எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது.

அழகன் முருகன் நிழற்படங்கள், வெறித்தனமான காவடி ஆட்டம், சலிக்காத ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டத்தைப் பழனியில் கண்டால் முருகனுக்கு ரசிக(பக்த)ரல்லாதவர் கூட மனம் மாறி விடுவார்.

தற்போது பழனி சென்று வந்த பிறகு விருப்ப கடவுளான முருகன் மீது பல மடங்கு அன்பு அதிகரித்து விட்டது.

குறிப்பாக முருகனின் அழகு கண்டு வியந்து கொண்டே இருந்தேன். எந்த வடிவிலும் அற்புதமான அழகோடு உள்ளார். எத்தனை கடவுளுக்கு இது போல இவ்வளவு அழகான வடிவங்கள் இருக்கும்!

குழந்தை, பாலகன், சிறுவன், இளைஞன் என்று ஒவ்வொரு வயதிலும், காவி உடை, அலங்காரத்துடன் என்று எப்படிப்பார்த்தாலும் அற்புதமாக இருக்கிறார்.

கூறியதை நம்பாதவர்கள் பழனி சென்றால், அங்குக் கடைகளில் வைத்துள்ள அனைத்து வகை முருகன் நிழற்படங்களையும் பாருங்கள், ஏற்றுக்கொள்வீர்கள் 🙂 .

தொடர்புடைய விமர்சனங்கள்

தாரைத் தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம் | சிங்கப்பூர்

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம்

அழகன் முருகன்

சஷ்டி விரதம் ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள்

4 COMMENTS

 1. கிரி, பழனி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை.. ஆனால் கோவையில் பணி புரிந்த போது சக்தியுடன் சில கோவில்களுக்கு சென்று இருக்கிறேன்.. மிகவும் விருப்பமான இடம் மருதமலை கோவில்.. பழனி கோவிலுக்கு தேவர் (தயாரிப்பாளர்), தீவிர முருக பத்தர்.. இவர் 40/50 ஆண்டுகளுக்கு முன்பே பல லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருப்பதாக படித்து இருப்பதாக நினைவு.. தான் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை பழனி கோவிலுக்கு வழங்கி விடுவாராம்..

  பழனி மலை புகைப்படம்.. எங்கள் ஊர் பழைய தபால் நிலையத்தில் பழனி மலை முருகன் கோவிலின் புகைப்படம் இருக்கும்.. பார்ப்பதற்கு பெரியதாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும்.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிசயிக்க வைக்கும்.. சிறு வயதில் நான் அடிக்கடி கண்டு பிரமித்து இருக்கிறேன்.. என்னுடன் பணி புரியும் மலையாள நண்பன் தன் ஒவ்வொரு விடுமுறையிலும் தவறாமல் பழனிக்கு குடும்பத்துடன் சென்று வருவார்..

  அழகென்ற சொல்லுக்கு முருகா : வீட்டிற்கு அடுத்த தெருவில் முருகன் கோவில் உள்ளது.. சிறு வயதில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்.. குறிப்பாக விசேஷ நாட்களில்.. அந்த சமயத்தில் பல பாடல்கள் நினைவிலே இருக்கும்..TMS அவர்களின் என்னுடைய விருப்ப பக்தி பாடல் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!!! எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்!!!! பாடலை கேட்கும் போது மயங்கி விடுவேன்..

  ஆறாம் வகுப்பு படிக்கும் போது திருப்பாவை / திருவெம்பாவை மனப்பாடம் செய்து மாவட்ட பள்ளிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் முதற்பரிசை பெற்றேன்.. என் வாழ்க்கையில் நான் முதலில் பெற்ற பரிசு இது தான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. பழனி கோவிலில் இன்னும் கூட்டமா. நான் அடுத்த வாரம் குழந்தைக்கு முடி இறக்க செல்கிறேன். கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன்.

 3. @யாசின்

  “மிகவும் விருப்பமான இடம் மருதமலை கோவில்”

  நீங்கள் கோவையில் பணி புரிந்தததால் இங்கே செல்ல வாய்ப்புகள் அதிகம் என்பதால், பிடித்து இருக்கும் 🙂 .

  கோவையில் உள்ளவர்களுக்கு வார இறுதியில் செல்லும் இடங்களில் மருதமலையும் ஒரு இடம். இக்கோவிலை இன்னும் நன்றாக பராமரித்து, மரங்களை வளர்த்தால் அற்புதமாக இருக்கும்.

  ஆனால்…

  “பழனி கோவிலுக்கு தேவர் (தயாரிப்பாளர்), தீவிர முருக பத்தர்.”

  ஆமாம். அதி தீவிர பக்தர்.

  “என்னுடன் பணி புரியும் மலையாள நண்பன் தன் ஒவ்வொரு விடுமுறையிலும் தவறாமல் பழனிக்கு குடும்பத்துடன் சென்று வருவார்”

  மலையாளிகளுக்கும் பழனிக்கு சம்பந்தம் / உறவு உண்டு.

  “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!!! எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்!”

  என் சிறு வயதில் அடிக்கடி கேட்டுள்ளேன். ரொம்ப அழகான பாடல்.

  TMS பல அற்புதமான பாடல்களைப் பாடியிருந்தாலும், இவர் பாடிய முருகன் பாடல்கள் அனைத்துமே அற்புதம். இதை வைத்தே ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

  வாரத்தில் மூன்று நாட்களாவது TMS முருகன் பாடல்கள் கேட்டு விடுவேன். உதவி YouTube 🙂 .

  “ஆறாம் வகுப்பு படிக்கும் போது திருப்பாவை / திருவெம்பாவை மனப்பாடம் செய்து மாவட்ட பள்ளிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் முதற்பரிசை பெற்றேன்.. என் வாழ்க்கையில் நான் முதலில் பெற்ற பரிசு இது தான்.”

  சூப்பர் யாசின்.. எனக்குத் தெரியாது. இன்னமும் உங்கள் நினைவில் இப்பாடல்கள் உள்ளதா? மறந்து விட்டதா?

  @ஹரிஷ் நான் சென்ற போது செம கூட்டம்..இந்த வாரமும் இதே அளவு கூட்டம் இருக்குமா என்பது சந்தேகமே.

  எதற்கும் முன்னேற்பாடுடன் செல்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here