கடைசி விவசாயி (2022) | தமிழர்கள் வாழ்வியல்

3
கடைசி விவசாயி

ழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்றுங்க என்ற கூக்குரல்கள் இருந்தாலும், முதலில் திரைத்துறையினரிடமிருந்து விவசாயத்தை காப்பாற்றுங்கள் என்ற கூக்குரலும் எழுகிறது ஆனால், இதிலிருந்து விலகி இருப்பதே கடைசி விவசாயி.

கடைசி விவசாயி

விவசாயம், விவசாயி பற்றி படம் எடுக்கிறேன் என்று தமிழ் திரையுலகில் ஒரு கூட்டம் கிளம்பி சர்வநாசம் செய்து வருவது அனைவரும் அறிந்தது. Image Credit

விவசாயிகளே ‘டேய்! எங்களை விட்டுடுங்கடா! புண்ணியமா போகும்!‘ என்று கதறும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

இந்நிலையில் ஒரு தரமான படைப்பாக கடைசி விவசாயி வந்துள்ளது.

இப்படத்தின் சிறப்பு விவசாயம், விவசாயியின் சிரமத்தைக் கூறவில்லை, அவர்களுடைய வாழ்வியலை கூறுகிறார்கள்.

அதாவது திணிப்பாக இல்லாமல், இயல்பாக செல்கிறது.

மாயாண்டி

வயதான, காது சரியாக கேட்காத மாயாண்டி பெரியவர் தான் முக்கியக்கதாப்பாத்திரம் ஆனால், கதை இவரை முன்னிலைப்படுத்தவில்லை.

அதாவது அவரது வாழ்க்கையை நாம் ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்! அது தான் இக்கதை. ரொம்ப இயல்பாக உள்ளது.

இவர் வழக்கமான நடிகர் அல்ல, இப்படத்தில் நடிக்க கேட்கப்பட்டு நடித்துள்ளார். இவர் மட்டுமல்ல இவர் போல ஒரு ஊரே நடித்துள்ளது.

இயக்குநர் மணிகண்டன் இவரிடம் என்ன கூறி இருப்பார் என்றால்,

பெரியவரே! இப்படி நில்லுங்க, நடங்க, இப்படி பாருங்க.. அங்க உட்காருங்க, நேரா பாருங்க..! இவ்வளவு தான் சொல்லி இருப்பாருனு நினைக்கிறேன் 🙂 .

பெரியவர் அப்படியே நடித்துப் பிரமாதப்படுத்தி இருக்கார். கொஞ்சம் கூட நடிப்பு என்றே தெரியலை. அப்படியே அவரை நடமாட விட்டு இருக்காங்க.

அவர் எதார்த்தமாக கேட்கும் கேள்விகள், சூழ்நிலை புரியாமல் அப்பாவியாக பேசும் போது அனைவர் மனதையும் கொள்ளை கொள்கிறார்.

இந்த விதையைப் போட்டா பழத்துல விதையே இருக்காது‘ என்று கடைக்காரர் கூற, ‘அப்படின்னா அவனுக்கு மட்டும் எப்படி விதை கிடைத்தது?!‘ என்று பெரியவர் கேட்பார். இதைக்கூறி உடன் இன்னொன்றையும் கூறுவது செம 🙂 .

இறுதியில் கலங்க வைத்து விட்டார், நான் அழுது விட்டேன். வழக்கமா படங்களுக்கு கண்கள் கலங்கும் இதில் கண்ணீரே வந்து விட்டது 🙂 .

GST, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்

GST, நியாயவிலை அட்டை, குடிமகன் என்று வழக்கமான விவசாயி திரைப்பட வசனங்களை கேட்டவுடன் ஆஹா! இவர்களும் ஆரம்பித்துட்டாங்களா என்று நினைத்தேன் ஆனால், அப்படியில்லை.

விவசாயம் அழிந்து வர பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியக்காரணங்களுள் ஒன்று 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம்.

அனைவரும் இத்திட்ட வேலைக்கு சென்று அமர்ந்து கொள்வதால், விவசாயத்துக்கு ஆள் கிடைப்பதே பிரச்சனையாக உள்ளது. தற்போது இயந்திரங்களை வைத்து சமாளித்து வருகிறார்கள் இருப்பினும் இப்பிரச்சனை எங்கும் உள்ளது.

நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டம் பற்றி விவசாயிகளிடம் கேட்டால், பலர் கழுவி ஊத்துவார்கள். இதில் குறையாகக் கூறாமல் காட்சியாக வருகிறது.

முருகக்கடவுள்

படம் முழுக்க முருகக்கடவுளும் அவர் சார்ந்தவைகளுமே நிறைந்து உள்ளது.

தமிழர்கள் வாழ்வியலோடு, விவசாயத்தில் முருகன் இரண்டற கலந்துள்ளதை இயக்குநர் மணிகண்டன் பேட்டியில் விளக்கமாகக் கூறியது ரசிக்கும்படி இருந்தது.

எனது விருப்பக்கடவுள் முருகன் சம்பந்தப்பட்டவை அதிகம் படத்தில் வந்தது மிக மகிழ்ச்சியை கொடுத்தது. படம் துவங்குவதே ‘மயில் அகவும் சத்தம், கற்பனை என்றாலும்‘ பாடலை வைத்துத் தான் 🙂 .

முருகனின் வாகனமான மயில் முக்கிய கதாப்பாத்திரமாக உள்ளது. படம் துவக்கத்தில் இருந்து இறுதிக்காட்சி வரை இதன் பங்கு உள்ளது.

முருக பக்தராக விஜய் சேதுபதி வருகிறார். மனநிலை பிறழ்ந்தவராக நடித்துள்ளார்.

யோகி பாபு தேவையே இல்லை. நட்புக்காகவோ, கமர்சியலுக்காகவோ இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நீதிமன்றம்

இதில் நடித்தவர்கள் அனைவரும் அறிமுக நடிகர்களே. குறை கூற முடியாத அளவுக்கு அனைவரும் நடித்துள்ளார்கள்.

மயிலைக் கொன்று விட்டதாக கைது செய்யப்படும் மாயாண்டி பெரியவரை விசாரிக்கும் நீதிபதியாக வரும் பெண் சரியான தேர்வு.

ஆண் நீதிபதியாக இருந்தால், உணர்வுப்பூர்வமாக இருந்து இருக்குமா என்பது சந்தேகமே.

பெரியவர் விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வில் விரல்களைப் பிசைந்து பயத்தில் இருக்கும் நீதிபதியின் நிலை அற்புதம். இந்த இடத்தில் தான் அழுது விட்டேன்.

இப்படத்தில் காட்டப்படும் நீதிமன்றம் போலத்தான் நீதிமன்றங்கள் இருக்கும், நடக்கும். வழக்கமாக திரைப்படங்களில் காட்டப்படுவது போல இருக்காது.

காவல்துறையினர் நீதிபதியிடம் நடந்து கொள்வதெல்லாம் மிகைப்படுத்தப்படாமல் அப்படியே காண்பிக்கப்பட்டுள்ளது

வழக்குக்காக நீதிமன்றம் சென்று கூண்டில் நின்றுள்ளதால், இந்த சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

நீதிபதிக்கு எழுந்து நிற்பது நியாயமான மரியாதை, அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் வணங்குவது எல்லாம் அடிமைத்தனம் போல உள்ளது.

நீதிபதிகள் மரியாதைக்குரியவர்களே ஆனால், கடவுள்கள் அல்ல.

நீதிமன்றம் சென்றால், கையெடுத்து வணங்கியே ஆக வேண்டும். எனக்கு கையே மேலே வர மாட்டேன் என்கிறது 🙂 .

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒளிப்பதிவு சீரியல் பார்ப்பது போல உள்ளது.

நீங்கள் கவனித்து இருந்தால், சீரியல் ஒளிப்பதிவு ஒரு மாதிரியும், திரைப்பட ஒளிப்பதிவு ஒரு மாதிரியும் இருக்கும். இதற்கு கேமரா காரணமா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை.

இப்படம் முழுக்க கோணங்கள் சிறப்பாக உள்ளது ஆனால், சீரியல் பார்ப்பது போல ஒளிப்பதிவில் உள்ளது.

இளையராஜா அமைத்த பின்னணி இசை பிடிக்கவில்லையென்று இயக்குநர் மணிகண்டன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை மாற்றி விட்டார்.

இளையராஜாவையே நீக்கிய ஒரே இயக்குநர் மணிகண்டன். நம்பவே முடியவில்லை!

பின்னணி இசை வழக்கமான சந்தோஷ் நாராயணன் இசை போல அல்லாமல் அடக்கி வாசித்தது போல இருந்தது, நன்றாக உள்ளது.

படம் முடிந்த பிறகு எழுத்துப் போடும் போது வரும் இசையைக் கேட்க மறவாதீர்கள். மகான் படத்தில் வரும் ‘சூறையாட வாடா!‘ பாடலின் இசை போல இருந்தது.

படத்தின் முடிவு ஆர்ப்பாட்டம் இல்லாமல் கவிதையாக முடிக்கப்பட்டுள்ளது.

யார் பார்க்கலாம்?

முதல் பாதி, விருதுக்கான படம் போல மிக மெதுவாக உள்ளது.

இடையிடையே நகைச்சுவையும் இருந்தாலும், இளசுகளால் இப்படத்தை புரிந்து கொள்ள முடியாது. அதாவது இப்படத்தின் உணர்வுகள் அவர்களுக்கு அந்நியம்.

நல்ல படங்களை வரவேற்பவர்கள் தவறவிடக்கூடாத படம். இப்படத்தைக்கொடுத்த மணிகண்டனுக்கு மிகப்பெரிய நன்றி.

தமிழர்கள் வாழ்வியலோடு கலந்துள்ள இறை நம்பிக்கையை மிக மிக அழகாக கூறியுள்ளார்கள். இதில் வரும் ஒவ்வொன்றையும் என் கிராமத்தில் கண்டுள்ளேன்.

புரட்சி, புண்ணாக்கு என்று தமிழ் திரையுலகையே நாசக்கேடாக்கி விட்ட சூழ்நிலையில் முந்தைய காலத்துக்குக் கால இயந்திரத்தில் சென்றது போல உள்ளது.

தமிழர்கள் வழக்கத்தையே தமிழ் திரைப்படங்கள் மறந்து விட்ட அல்லது புறக்கணித்துவிட்ட நிலையில் கடைசி விவசாயி நமக்கு மீட்டுக்கொண்டு வந்துள்ளது.

மணிகண்டனுக்கு இப்படம் OTT அல்லாமல் திரையரங்கில் வெளிவர விஜய் சேதுபதி உதவியிருக்கிறார், இதற்கு பெரிய மனது வேண்டும். இவரும் ஒரு தயாரிப்பாளர்.

மக்களை ஏன் பரவலாக சென்றடையவில்லை, எதனால் திரையுலகினர், ஊடகங்கள் இப்படத்தை மக்களிடையே பிரபலப்படுத்தவில்லை என்று புரியவில்லை.

குப்பை படங்களை எல்லாம் ஊடகங்கள் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தும் போது இதைக் கண்டுகொள்ளாமல் விட்டது கடுப்பாக உள்ளது.

SonyLIV ல் காணலாம்.

Directed by M. Manikandan
Written by M. Manikandan
Produced by M. Manikandan
Starring Nallandi, Vijay Sethupathi, Yogi Babu, Muneeshwaran, Raichal Rabecca Philip
Cinematography M. Manikandan
Edited by B. Ajithkumar
Music by Santhosh Narayanan Richard Harvey
Distributed by Vijay Sethupathi Productions, 7Cs Entertainment
Release date 11 February 2022
Country India
Language Tamil

கொசுறு

இப்படம் 2018 லியே முடிக்கப்பட்டு, கொரோனா மற்றும் பணப்பிரச்சனை காரணமாக வெளியீடு தள்ளிச் சென்று விட்டது.

படம் முடிந்த அடுத்த வருடம் பெரியவர் நல்லாண்டி காலமாகி விட்டார். தான் நடித்த படத்தை பார்க்காமலே சென்றது வருத்தம் அளித்தது.

பெரியவர் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்டவர் தலைவர் ரஜினி.

ஆனால், முன்னரே இரு படங்கள் இருந்ததாலும், அப்போது அரசியல் முன்னெடுக்கப்பட்டு இருந்ததாலும் நேரமில்லாததால் ரஜினியால் நடிக்க முடியவில்லை என்று இயக்குநர் மணிகண்டன் கூறி இருந்தார்.

நல்லாண்டி பெரியவர் நடிப்புக்கு புதியவர் என்பதால், அதற்கு தகுந்த மாதிரி காட்சிகள் மாற்ற வேண்டியது இருந்தது என்று மணிகண்டன் விளக்கி இருந்தார்.

தலைவர் அல்ல வேறு எந்த நடிகர் நடித்து இருந்தாலும், இது போல உயிரோட்டமான திரைப்படத்தைக் கொடுத்து இருக்க முடியாது.

ஏனென்றால், ஏற்கனவே உள்ள நடிகர்களுக்கு ஒவ்வொரு பிம்பம் உள்ளது. அது இக்கதாப்பாத்திரத்தின் உயிரோட்டத்துக்கு தடையாக இருக்கும்.

நல்லாண்டி பெரியவர் நடிக்கவில்லை, வாழ்ந்து சென்று விட்டார்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. Super ji…What to say…ennaanu solrathu…A true film…
    Manikandan ku oru oscar parcel, Antha periyarvarkku oru oscar parcel…
    I enjoyed every single scene in that movie…

  2. கிரி, இந்த படத்தை நான் பார்க்கவில்லை.. உண்மைய சொல்ல போனால் இதற்கு முன்பு விவசாயத்தை மையப்படுத்தி வந்த திரைப்படங்கள் எல்லாம் எனக்கு பெரிய ஏமாற்றமே!!! இந்த காரணத்தால் கடைசி விவசாயியும் அப்படி தான் இருக்கும் என எண்ணி நான் பார்க்க முயற்சிக்கவே இல்லை.. அதிலும் சமீபத்தில் வந்த விஜய் சேதுபதியின் படங்களும் என்னை பெரிய அளவில் கவரவில்லை.. பிடித்த நடிகர், ஆனால் அவரது தற்போதைய படங்கள் கதை களம் என்னை ஈர்க்க வில்லை.. நான் அவர் தான் படத்தின் நாயகன் என்று படத்தை பார்க்கவில்லை.. உங்கள் பதிவை படித்த பின் தான் படத்தை தவற விட்டுவிட்டோம் என புரிகிறது.. வாய்ப்பு கிடைக்கும் போது படத்தை நிச்சயம் பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @பாபு செம படம் ஜி 🙂 . பெரியவர் நடிப்பு அட்டகாசம்.

    @யாசின்

    “இதற்கு முன்பு விவசாயத்தை மையப்படுத்தி வந்த திரைப்படங்கள் எல்லாம் எனக்கு பெரிய ஏமாற்றமே!”

    உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்.

    “இந்த காரணத்தால் கடைசி விவசாயியும் அப்படி தான் இருக்கும் என எண்ணி நான் பார்க்க முயற்சிக்கவே இல்லை”

    பலர் இப்படி தான் நினைத்து விட்டார்கள்.. எனக்கும் சந்தேகம் இருந்தது.

    “சமீபத்தில் வந்த விஜய் சேதுபதியின் படங்களும் என்னை பெரிய அளவில் கவரவில்லை.”

    விஜய் சேதுபதி போராளியாக மாறியதால் வந்த வினை.

    “நான் அவர் தான் படத்தின் நாயகன் என்று படத்தை பார்க்கவில்லை.. உங்கள் பதிவை படித்த பின் தான் படத்தை தவற விட்டுவிட்டோம் என புரிகிறது”

    விஜய் சேதுபதி கேமியோ பாத்திரம் தான். சில காட்சிகள் மட்டுமே வருவார்.

    “வாய்ப்பு கிடைக்கும் போது படத்தை நிச்சயம் பார்க்கிறேன்.”

    வாய்ப்பை ஏற்படுத்தி பாருங்க யாசின் 🙂 . நல்ல படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!