Bachelor (2021) | Living Together வாழ்க்கை

2
Bachelor

Bachelor படம் தாமதாகத் தான் பார்க்க முடிந்தது. Image Credit

Bachelor

ஜிவி பிரகாஷுடன் Living Together வாழ்க்கை நடத்தும் திவ்யா பாரதி கர்ப்பமாகி விடுகிறார். கருவைக் கலைக்க மறுத்ததால், இருவருக்கும் சண்டை வந்து விடுகிறது.

நீதிமன்றம் வரை சென்று களேபரமாகி, இறுதியில் என்ன ஆனது என்பதே Bachelor.

இயக்குநர் சதிஷ் செல்வகுமார்

இப்படம் அடல்ட் கதை என்பதால் பலரால் விமர்சனத்துக்குள்ளானது. ஏற்கனவே ஜிவி பிரகாஷ் இதுபோலப் படத்தில் நடித்து இருந்ததால், பார்க்கும் ஆர்வம் இல்லை.

யாரோ ஒரு திரைபிரபலம் இப்படத்தைப் பாராட்டி இருந்தார், அதோடு பிரபல நடிகர் ஒருவரை இப்பட இயக்குநர் இயக்குவதாகச் செய்தியில் படித்ததும் அப்படியென்ன இயக்கி இருக்கிறார்! என்று தோன்றியது.

படம் அடல்ட் கதை என்பதால் விமர்சிக்கப்பட்டு இருந்தாலும், இதன் திரைக்கதை மற்றும் இயக்கம் மிகச்சிறப்பாக உள்ளது.

நண்பர்களோடு பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்து இதில் வரும் சண்டைகள், பிரச்சனைகள், உதவிகள் அனைத்தையும் எதிர்கொண்டு இருப்பதால், அனைத்துமே உணர முடிந்தது.

கோயமுத்தூர் நபரான ஜிவி பிரகாஷ் வீட்டில் கிரிக்கெட் விளையாடி அம்மாவிடம் திட்டு விழுவது, பிரச்சனையாவது என்று இயல்பான காட்சியமைப்புகள்.

கிரிமினல் வழக்கறிஞர்

கிரிமினல் வழக்கறிஞரான திவ்யா பாரதி அக்கா கணவரை யார் என்று தெரியாமல் ஜிவி பிரகாஷ் சீண்டி விட, அவர் தனது முழுப் பலத்தையும் காட்டும் இடம் மிரட்டல்.

இவர் நடிப்பு செம்ம. இவர் வைத்த செக் மேட்டால் ஜிவி பிரகாஷ் குடும்பமே கதி கலங்கி விடுவது பயங்கரமான உயிரோட்டமான காட்சியமைப்புகள்.

த்தா! என்கிட்டையாடா சவால் விட்டேன்னு ஜிவி பிரகாஷை அவர் கதற விடுவது மிரட்டல் ரகம். கிரிமினல் வழக்கறிஞரைச் சீண்டினால் என்ன ஆகும் என்று அனைவருக்கும் புரிய வைக்கும் காட்சி.

காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடுவதில் உள்ள சிரமம், அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்று எதார்த்தமான காட்சிகள்.

ஒரு சராசரி குடும்பம் வழக்கால் பாதிக்கப்படும் சூழ்நிலையை, நடைமுறை சிக்கல்களை மிகைப்படுத்தல் இல்லாமல் காட்டியுள்ளார்கள்.

பொறுமையாக பேசி இருந்தால், இவ்வளவு பிரச்சனைகள் ஆகி இருக்காது ஆனால், அவசரம், ஈகோ, பதட்டம் மோசமான விளைவுகளைக் கொண்டு வந்து விடும்.

ஜிவி பிரகாஷ் வழக்கறிஞருக்குத் திவ்யா பாரதி கர்ப்பமானதே தெரியவில்லை என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை ஆனால், நெருக்கடியைச் சமாளிக்க அவர் கூறும் யோசனை திகில் ரகம்.

நண்பர்கள்

நண்பன் நண்பிக்குப் பிரச்சனை என்றால், அவர்களுக்கு உதவும் உடன் வரும் நண்பர்கள் என்று பலருக்கு அவரவர் கடந்த, நிகழ்காலத்தை நினைவு படுத்தியிருக்கும்.

இரு நண்பர்கள் குழுவுக்குள் தெருவில் நடக்கும் சண்டை ரொம்ப இயல்பாக இருந்தது. இதைவிடச் சிறப்பாக இக்காட்சியை எடுத்து இருக்க முடியாது என்றே தோன்றியது.

ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் ஒரு சீனியர் இருப்பார், இதில் பக்ஸ் வருகிறார். மிகப்பொருத்தமான தேர்வு.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

கதாப்பாத்திரங்கள்

இதில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பான தேர்வு. திவ்யா பாரதி, முனீஸ்காந்த், வழக்கறிஞர் மற்றும் ஜிவி பிரகாஷ் நண்பர்கள் அசத்தல் நடிப்பு.

ஜிவி பிரகாஷ் எப்போதும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு நடிக்கிறார், இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

திவ்யா பாரதி அறிமுகமாக இருந்தாலும், மிகச்சிறப்பான நடிப்பை வழங்கி இருந்தார். குறிப்பாக ஜிவி பிரகாஷ் கருவைக் கலைக்கக் கூறியதற்குப் பின்னரான அவரது நடிப்பு அபாரம்.

இப்படத்திலேயே சம்பந்தமே இல்லாமல் ஓவர் பில்டப்புடன் வருவது மிஷ்கின் தான்.

இறுதியில் படத்தை எப்படி முடிக்கப்போகிறார்கள்? சிக்கலுக்கு மேல் சிக்கலாகி செல்கிறதே! என்ன ஆகுமோ என்ற திகிலில், தரமான முடிவை வைத்து இருக்கிறார் இயக்குநர்.

முடிவைக் கூறுவதிலும் சில நொடிகள் ட்விஸ்ட் வைத்து ஏமாற்றிப் பின்னர் சுருக்குனு கூறுவது அட்டகாசம்.

கடினமான ஆனால், சரியான முடிவு.

யார் பார்க்கலாம்?

படம் அடல்ட் வகையைச் சார்ந்தது. எனவே, பல ஏடாகூடக் காட்சிகள் உள்ளதால், குடும்பத்துடன் பார்க்க முடியாது.

அடல்ட் என்ற ஒரு வாதத்தை வைத்து மட்டுமே இப்படத்தை ஒதுக்கி விட முடியாது காரணம், இதன் சிறப்பான திரைக்கதை மற்றும் உருவாக்கம்.

பேச்சலராக 10 வருடங்கள் சென்னையில் இருந்தவன் என்ற முறையில் இதில் வரும் காட்சிகளை என்னால் என் நண்பர்களுடன் பொருத்திப் பார்க்க முடிந்தது.

எனவே, அடல்ட் படம் என்று குறுகிய கண்ணோட்டத்தில் இப்படத்தைப் புறந்தள்ளி விடாமல், இதன் உருவாக்கம், திரைக்கதைக்காகப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

என்னமோ என்று நினைத்துப் பார்த்துப் பின்னர் அட! என்று வியக்க வைத்த திரைப்படங்களில் Bachelor நிச்சயம் ஒரு படமாக இருக்கும்.

SonyLive ல் காணலாம்.

Directed by Sathish Selvakumar
Written by Sathish Selvakumar
Produced by G. Dilli Babu
Starring Divya Bharathi, G. V. Prakash Kumar
Cinematography Theni Eswar
Edited by San Lokesh
Music by
Score: Siddhu Kumar
Songs: Siddhu Kumar, Dhibu Ninan Thomas, A. H. Kaashif, G. V. Prakash Kumar
Distributed by Sony LIV
Release date 3 December 2021 (India)
Running time 175 minutes (Theatrical), 158 minutes (Digital)
Country India
Language Tamil

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Ishq (2019 மலையாளம்) | காதலர்களுக்கு எச்சரிக்கை!

Kappela (2020 மலையாளம்) | காதலும் த்ரில்லரும்

Kumbalangi Nights (2019 மலையாளம்) | God’s Own Country

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, படம் எனக்கும் பிடித்து இருந்தது.. குறிப்பாக பல காட்சிகள் நம் வாழ்வில் நடந்த, சந்தித்த அனுபவங்கள் தான்.. படத்தின் காட்சியமைப்பு உயிரோட்டமாக சென்றது.. ஜிவி பிரகாஷின் நடிப்பில் ஏதோ மிஸ்ஸிங்..

    Bachelor வாழ்க்கை கோவையை முழுவதுமாக நினைவுக்கு கொண்டு வந்தது.. ஆனால் IT கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறை, சத்தியமா எனக்கு அனுபவம் இல்லை என்பதால் புரியவில்லை.. படத்தை பார்க்கும் நடுத்தர வகுப்பை சேர்ந்த பெற்றோர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என யூகிக்க முடியவில்லை..

    இயக்குநர் சதிஷ் செல்வகுமார் : படம் அடல்ட் கதை என்பதால் விமர்சிக்கப்பட்டு இருந்தாலும், இதன் திரைக்கதை மற்றும் இயக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. உண்மை கிரி..

    கிரிமினல் வழக்கறிஞர் : மரண ஆக்ட்டிங்.. இவரது பகுதி இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்.. அவரின் உடல் மொழி அற்புதம்.. ரவுடியா இருந்து வழக்கறிஞர் படிப்பு படித்தாரா?? வழக்கறிஞர் ரௌடியாக மாறி விட்டாரா?? என்பது போல் இருந்து.. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.. எதிர்தரப்பு வழக்கறிஞர்ம் தன் பங்கை சிறப்பாக செய்து இருந்தார்.. முனிஷ் காந்தின் வசனங்கள் சிரிப்பலையை வர வைத்தது..

    தெருவில் நடக்கும் சண்டை : மிக சிறப்பான காட்சியமைப்பு.. சம்பந்த பட்ட இருவரும் பேசாமல், இவர்களின் பிரச்சனைக்கு யார், யாரோ பேசுகின்றார் என்பது தான் கொடுமை.. யதார்த்த வாழ்விலும் இது போல் தான் நாம் பிரச்சனைகளை நாம் மட்டுமே கையாள வேண்டும்.. நம் பிரச்சனைக்கு யாரோ ஒருவர் தீர்வு காண்பது கொடுமையானது.. நடைமுறை வாழ்க்கையில் இது தான் பரவலாக நடந்து கொண்டு இருக்கிறது..

    பள்ளி பருவத்தில் என்னுடைய நண்பன் ஒருவன், அவனது நண்பனின் காதலுக்கு உதவ போய் போலீஸ் ஸ்டேஷன்ல் அடி வாங்கிய அனுபவம் அவன் ஆயுசுக்கும் மறக்காது.. காரணம் காதலி (போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்த்த ஏட்டு ஓட பொண்ணு)… பின்பு ஒரு வழியா திருமணம் முடிந்து அந்த பெண்ணுடன் தான் தற்போது வாழ்ந்து வருகிறார்..

    திவ்யா பாரதி : சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.. உடல்மொழிக்கு தகுந்தது போல ஒப்பனைகளும் மிக சிறப்பாக இருந்தது.. ஆரம்ப காட்சிகளில் இவருடன் ஒரு மெல்லிய புன்னகை ஒட்டி கொண்டே இருந்து.. நேரம் ஆக, ஆக சூழ்நிலைக்கு தகுந்தது போல் புன்னகை காணாமலே போகி விட்டது..

    என்னமோ என்று நினைத்துப் பார்த்துப் பின்னர் அட! என்று வியக்க வைத்த திரைப்படங்களில் Bachelor நிச்சயம் ஒரு படமாக இருக்கும் : எனக்கு அந்த பீலிங் வரல.. ஆனால் படத்தை கண்டிப்பா பார்க்கலாம்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “படத்தை பார்க்கும் நடுத்தர வகுப்பை சேர்ந்த பெற்றோர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என யூகிக்க முடியவில்லை..”

    🙂 பகீர் என்று இருக்கும்.

    “இவரது பகுதி இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்.. அவரின் உடல் மொழி அற்புதம்.”

    அட்டகாசமாக நடித்து இருந்தார். எனக்கு ரொம்ப பிடித்தது.

    “வுடியா இருந்து வழக்கறிஞர் படிப்பு படித்தாரா?? வழக்கறிஞர் ரௌடியாக மாறி விட்டாரா?? என்பது போல் இருந்து.. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்”

    🙂 🙂 🙂 ஆமாம். மனுஷன் பட்டைய கிளப்பி இருக்கிறார்.

    “நம் பிரச்சனைக்கு யாரோ ஒருவர் தீர்வு காண்பது கொடுமையானது.. நடைமுறை வாழ்க்கையில் இது தான் பரவலாக நடந்து கொண்டு இருக்கிறது.”

    நண்பர்கள் இருந்தால், அவர்களின் பங்கு இல்லாமல் இருக்காது. சிலருக்கு நண்பர்களால் நன்மை சிலருக்கு நண்பர்களால் பெரும் பிரச்சனைகள்.

    “அவனது நண்பனின் காதலுக்கு உதவ போய் போலீஸ் ஸ்டேஷன்ல் அடி வாங்கிய அனுபவம் அவன் ஆயுசுக்கும் மறக்காது.. காரணம் காதலி”

    நல்லவேளை நீங்க தப்பித்தீங்க யாசின் 😀

    “திவ்யா பாரதி : சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்”

    ரொம்ப நல்லா நடித்து இருந்தார். நீதிமன்ற காட்சிகளில், ஜிவி பிரகாஷ் கூட சண்டை போடும் போது என்று சூப்பர் நடிப்பு.

    “ஆரம்ப காட்சிகளில் இவருடன் ஒரு மெல்லிய புன்னகை ஒட்டி கொண்டே இருந்து.. நேரம் ஆக, ஆக சூழ்நிலைக்கு தகுந்தது போல் புன்னகை காணாமலே போகி விட்டது.”

    🙂 நல்லா கவனித்து இருக்கீங்க.

    ” எனக்கு அந்த பீலிங் வரல.. ஆனால் படத்தை கண்டிப்பா பார்க்கலாம்..”

    உங்களுக்கு படம் பிடித்தது மகிழ்ச்சி 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!