தாரைத் தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம் | சிங்கப்பூர்

9
தாரைத் தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம்

தைப்பூசம் தமிழ்நாட்டை விட வெளிநாடான மலேசியாவில் தான் மிகச் சிறப்பாக நடைபெறும். தைப்பூசத்திற்கு பொது விடுமுறை என்பதிலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர்.

இதைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் கூடுவர். நான் ஒருமுறையாவது மலேசியா தைப்பூசத்தை வாழ்வில் பார்த்து விடுவது என்பதை விறுப்பாக வைத்து உள்ளேன்.

சிங்கப்பூரில் இருந்து செல்வது எளிது என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. இருந்தாலும் வருடாவருடம் சிங்கப்பூரில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வேன்.

தாரைத் தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம்

ஏழு வருடமாக இங்கே இருந்தாலும் 2009 ம் ஆண்டு தைப்பூசம் தான் நான் ரொம்ப ரசித்துப் பார்த்த நாள்.

இந்தச் சமயத்தில் எனக்கு விடுமுறையாக இருந்ததால் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் இருந்து பார்த்து வந்தேன்.

இந்தப் பதிவிலேயே ஏறக்குறைய அனைத்தையும் கூறி விட்டதால், அடுத்த வருடங்களில் என்ன கூறுவது என்று  அதிகம் எழுதவில்லை.

Read: சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் – 2009 (படங்கள்)

இந்த முறை அலுவலக நாள் என்பதால் மாலை சீக்கிரமாகக் கிளம்பி கோவில் சென்று விட்டேன், அதோடு தாமதமாகச் சென்றால் நிழல் படம் எடுக்கும் போது இருட்டாக இருக்கும், தெளிவாக இருக்காது என்பதும் ஒரு காரணம்.

கடந்த வருடம் வெயில் அதிகம் இருந்ததால் காவடி எடுத்து வருபவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இந்த வருடம் குளுமையான வானிலை நிலவியது.

முந்தைய வருடங்களில் [2009 க்கு பிறகு] மேள சத்தத்திற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்தது.

இது என்னைப் போன்ற மேளத்தை ரசிப்பவர்களுக்கு மற்றும் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இதுகுறித்து சர்ச்சை கூட ஆனது காரணம், சீனர்கள் பண்டிகையின் போது அனுமதிக்கிறார்கள் நமக்கு அனுமதிக்கவில்லை என்று புகார் சென்றது.

ஒலி கட்டுப்பாடுகள்

இந்த முறையும் கோவிலில் ஒலி எழுப்பவதற்கு கட்டுப்பாடுகள் என்ற அறிவிப்பால் தைப்பூச காவடி ஊர்வலம் பார்க்கும் ஆர்வமே குறைந்து போனது.

லிட்டில் இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து, டோபி காட் என்ற இடத்தில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்து வருவார்கள்.

காவடி எடுத்து வருவதற்கென்றே தனிப் பாதை அமைத்து இருப்பார்கள். அதில் தான் அனைவரும் காவடி எடுத்து வர வேண்டும்.

மேளச்சத்தம் கேட்கும் இடத்தில் சென்று நின்றால், அங்கே சத்தம் நின்று வேறு பக்கம் ஆரம்பித்து விடும்.

சரி என்று அங்கே சென்றால் ஒரு நிமிடத்தில் நின்று மற்ற பக்கம் ஆரம்பித்து விடும். இப்படியே சென்று கொண்டு இருந்ததால் கடுப்பாகி விட்டது.

இப்படியே ஓரமாக வந்து கொண்டு இருந்த போது Little India Selegie சாலையில் தூரத்திலேயே மேளச்சத்தம் பட்டையக் கிளப்பிக்கொண்டு இருந்தது.

ஆஹா! கிரி கிளம்புடா அங்கே என்று வேக வேகமாக நடந்து சென்றேன்.

ட்ரம்ஸ்

அங்கே இரு குழுவாக ட்ரம்ஸ் அடித்துத் தூள் கிளப்பிகொண்டு இருந்தார்கள். அங்கே சென்று நின்றவன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கேயே தான் இருந்தேன்.

காவடி எடுத்து வருபவருடன் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் உடன் வருவார்கள். இதில் ஒரு சிலருக்கு உடன் அவருடைய நண்பர்கள் மேளம் அடித்துக் கொண்டு வருவார்கள்.

பார்த்தாலே பரவசமாக இருக்கும் ஆனால், இந்தக் குழுவினர் எந்தத் தனிப்பட்ட நபருக்கும் அடித்தது போலத் தெரியவில்லை.

ஒரு இடத்தில் கும்பலாக நின்று கொண்டு அங்கே வரிசையாக வரும் அனைத்து காவடி எடுத்து வருபவர்களையும் மேளம் அடித்து உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். செமையாக இருந்தது.

இரண்டு மணி நேரம் இவர்கள் நொறுக்கியதை கேட்டுக்கொண்டு இருக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

இதில் இவர்கள் அடித்ததில் தாரைத் தப்பட்டைகள் கிழியவில்லை என்றாலும் அவர்கள் அடித்த அடியில் குச்சி உடைந்து விட்டது 🙂 .

மிரட்டிய பெண்கள்

இதில் வயதான ஒரு பெண் (பாட்டி) என்னா குத்து குத்தினாங்க… அடேங்கப்பா! சளைக்காமல் ஆடிக்கொண்டே இருந்தார்.

இதில் எனக்குப் பெரிய விஷயம், இரு பெண்கள் மேளத்தில் காட்டிய ஆர்வம் தான்.

இதில் இருவருமே மேளத்தை பிடித்துக்கொள்ள பசங்க அதில் அடி தூள் கிளப்பினார்கள். நான் ரொம்ப ரசித்தேன்.

பசங்களே இது போலச் செய்யத் தயக்கம் காட்டும் போது பெண்கள் ஆர்வமாகப் பசங்களுக்கு சமமாக வெளுத்து வாங்கியது பார்க்கவே உற்சாகமாக இருந்தது.

இவர்கள் அனைவருமே உள்ளூர் தமிழ் மக்கள் மற்றும் மலாய் தமிழர்கள். இதைப் பார்த்துக்கொண்டு இருந்த நம்ம ஊர் தமிழ் பசங்க செம குஷியாக விசில் அடித்துக்கொண்டு இருந்தார்கள்.

இதில் இரு பெண்கள் ட்ரம்ஸ் பிடித்துக்கொண்டு, மேளம் அடிக்க உதவியதை காணொளி எடுத்து என்னுடைய Blog YouTube ல் அந்த இரவே ஏற்றி இருந்தேன்.

அடுத்த நாள் மதியம் வரை 500 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்து இருந்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு பெண் என் Blog facebook page ல் தொடர்பு கொண்டு காணொளியை நீக்கி விடுமாறு வேண்டுகோள் விடுத்ததால், நீக்கி விட்டேன்.

அதற்குள் எப்படி பரவி விடுகிறது!!

அந்தக் காணொளி ரொம்ப நன்றாக இருந்தது ஆனால், சம்பந்தப்பட்டவர் கேட்கும் போது எப்படி மறுக்க முடியும்?

அங்கு மேளம் அடித்த நபர்கள் அனைவரும் சளைக்காமல் அடித்துக்கொண்டு இருந்தனர். திகட்ட திகட்ட கேட்டு விட்டேன் 🙂 .

கிறுகிறுக்க வைத்த ஆட்டம்

மேளம் அடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. காவடி எடுத்து வந்த ஒருவர் மேளச் சத்தத்திற்கு சுத்து சுத்துன்னு சுத்தினார் பாருங்க…!

தாறுமாறு.

பார்த்த எனக்கே தலை சுற்றி விட்டது ஆடிய அவருக்கு எப்படி இருந்ததோ! இந்த முறை பேட்டரி ஒளியில் விளக்கு வைத்து நிறையக் காவடி காண முடிந்தது.

உருமி மேளம் போல வைத்து இருந்த இருவர், தோல் பகுதியில் வெளிச்சம் வர வைத்து இருந்தார்கள் அதாவது, தோல் பகுதி உள்ளே விளக்கு வைத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Technology has very much improved 🙂 .

இரண்டு மணி நேரம் மேலே ஒரே மாதிரி நிலையில் நின்று இடுப்பு வலி ஆகி விட்டது அதனால், கிளம்ப வேண்டியதாகி விட்டது.

கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஒருவரின் காவடி ஆட்டத்திற்கு இரு பொண்ணுக குத்தாட்டம் போட்டாங்க பாருங்க..! அட அட என்னா ஆட்டம் 🙂 .

இவர்கள் இருவர் ஆட்டத்திற்கு தமிழ் தொழிலாளர்களிடையே பலத்த வரவேற்பு.

தாரைத் தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம் என்பது மிகைப்படுத்தப்படாதது.

கூட்டம் குறைவு

சில நாட்கள் முன்பு தான் கலவரம் நடந்து ஓய்ந்து இருப்பதால், தற்போது நம்முடைய கூட்டத்தைப் பார்த்தவர்கள் கொஞ்சம் மிரண்டு தான் போய் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

காலையில் ஆரம்பித்த காவடி ஊர்வலம் இரவு 9.30 வரை மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தார்கள்.

இருப்பினும் இந்த முறை கூட்டம் குறைவு அதற்குச் சமீபத்தில் நடந்த கலவரம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்கள்.

நம்முடைய கலாச்சாரத்தையும், தமிழன் என்ற அடையாளத்தையும் உலகிற்கு உணர்த்திக் கொண்டு இருப்பது தைப்பூசம் திருவிழா.

உலகம் முழுக்க அனைவரின் கவனிப்பையும், அட! என்னப்பா பண்ணுறாங்க? யார் இவங்க? என்று அனைவரையும் கேட்க வைப்பதும் தைப்பூசம் திருவிழா தான்.

இந்து மதத்தின் கொண்டாட்டம் என்பதை விடத் தமிழரின் கொண்டாட்டம் என்கிற அளவில் தான் இதைக் காண்கிறேன்.

ஏனென்றால் தமிழரைத் தவிர வேறு யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நாளுக்கு நாள் தைப்பூசக் கொண்டாட்டங்கள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது, கொஞ்சம் கூடக் குறையவில்லை.

அதுவும் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

நம் நாட்டில் எத்தனையோ மாநிலங்கள், மொழிகள், கொண்டாட்டங்கள் இருக்கின்றன ஆனால், உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொண்டாட்டம் தமிழ் கடவுளான முருகனின் தைப்பூசக் கொண்டாட்டம் தான்.

இதெல்லாம் இருக்கும் வரை தமிழையும் தமிழரையும் எவரும் அழிக்க முடியாது.

தைப்பூசக் கொண்டாட்டத்தைக் காணும் போது “தமிழன்டா!” என்ற பெருமை வந்து செல்கிறது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. கடல் கடந்து எந்த தேசத்திற்கு சென்றாலும், வானை கிழித்து விண்வெளிக்கு சென்றாலும் நமது உணர்வுகளையும், தமிழன் என்ற அங்கீகாரத்தையும் என்றுமே மாற்ற முடியாது. (மாற்றவும் கூடாது) என்பது எனது எண்ணம். நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டு, முன்னோர்கள் வாழ்க்கை முறைகள் இவைகள் என்றுமே வியப்பை தருகின்ற ஒன்று.

    வேறு எந்த நாட்டவருக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷங்கள் அவைகள். இவைகள் என் பாட்டன், முப்பாட்டன் சொத்துகள், அவைகளை காப்பதும், நமது சந்ததிகளுக்கு கற்று கொடுப்பதும் நமது முதற் கடமை. (தைப்பூசக் கொண்டாட்டத்தைக் காணும் போது “தமிழன்டா!” என்ற பெருமை வந்து செல்கிறது). என் குருதியும் சிவப்பு தான் கிரி. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  2. அருமையான விரிவான பதிவு. நேரில் பார்க்க முடிய வில்லை. தமிழகம் சென்று விட்டேன். உங்கள் பதிவைப் படித்தாலே பார்த்த உணர்வு வந்து விட்டது.

  3. கிரி,மிகவும் அருமையான பதிவு அதிவும் அந்த கடைசி வரி படிக்கும் பொது என் உடம்பு எல்லாம் புல்லரிக்குது.உங்களுக்கு தெரியுமா? கோவையை சுற்றி உள்ள கிராமம் அனைத்திலும் நீங்கள் இதை பார்க்கலாம் .

  4. தமிழ் கடவுளின் விழா பற்றிய பகிர்வுக்கு நன்றி கிரி உங்களின் உற்சாகம் எங்களுக்கும்

  5. @யாசின் தமிழர்களின் கலாச்சாரங்கள் மறைந்து வருவதாகக் கூறப்படும் நேரங்களில் இது போல விஷயங்கள் தான் ஆறுதல் தருகிறது. உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது.

    @பனசை நடராஜன் தமிழகத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு நேரம் இருந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

    @கமலக்கண்ணன் செம 🙂 சண்டை போட்ட இவங்க இரண்டு பேரையும் நேற்று கைது செய்து விட்டார்கள். ஒரு வருட சிறை அல்லது 5000$ அபராதம் அல்லது இரண்டும்.

    @சிவா மேளத்தை சொல்றீங்களா?

    @சரவணன் ரைட்டு 🙂

  6. நல்லா கொடுத்த வச்சவர் அண்ணா நீங்க
    இங்க எங்க ஊர்ல இப்படி எதுவும் இல்லாம எளிமையாக? நடத்தி முடித்துவிட்டார்கள் ,, கொடுமை கொடுமை ,,,,

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூச விழா கொண்டாடினார்கள் ,, கொஞ்சம் பார்க்க சுவாரசியமாக இருந்தது இதற்கு முழுக்காரணம் நம்ம டிரம்ஸ் மணி மனுஷன் பிச்சி எடுத்துட்டார் …

    அடுத்த வருடம் பழனி போய் காவடி ஆட்டத்தை நிச்சயம் பார்ப்பேன்

  7. பாருங்க உங்களுக்கு டிரம்ஸ் மணி இசை கேட்க வாய்ப்பு கிடைத்து இருக்கு.. 🙂 எனக்கு ரொம்ப நாளா இவர் டிரம்ஸ் கேட்க ஆசை.

    ஆமா! இந்தக் கோவிலில் இந்த சக்தி ஒலி தானே கேட்கும்.. இங்கே எங்கே வந்தாரு டிரம்ஸ் மணி. அம்மா க்கு அடுத்த அம்மா அவர் பையன் வந்துட்டாரு போல 🙂 வாழ்க மக்கள்.

    கார்த்திகேயன் அடுத்த முறை பழனி போறீங்க.. போயிட்டு வந்து என்கிட்டே சொல்றீங்க 🙂

  8. சரியா சொன்னிங்க அண்ணா .. அடிகளாருக்கு அடுத்த அடிகளாராக அவரின் இரண்டாவது மகன் செந்தில்குமாரை கொண்டுவந்து விட்டார்கள் ,,

    அவரின் தொண்டர்கள் இப்போதே இவரை அம்மா என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் ..

    கடந்த இரண்டு முறையாக நான் டிரம்ஸ் மணியின் கச்சேரியை இந்த ஜோதி விழாவில் நான் பாக்கிறேன் (ஒரு வேலை இவர் அடிகளாரின் பக்தர் என நினைக்கிறேன் )

    இந்த ஜோதி விழாவின் பொது பல வி வி ஐ பி கள் இங்கு வராங்க அண்ணா

    நிச்சயம் பழனி போயிட்டு வந்து உங்களுக்கு சொல்றேன் அண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here