சஷ்டி விரதம் ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள்

3
murugan-goddess-valli-deivayanai சஷ்டி விரதம் ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள் தாரை தப்பட்டைகள் கிழிந்த தைப்பூசம்

ப்போதுமே ஒரு விசயத்தைப் பற்றிய தேடல் அதிகரிக்கும் போது அது தொடர்பான தகவல்கள் நம்மைத் தேடி வரும். அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியது.

WhatsApp ல் வந்த தகவலே இது! சில நேரங்களில் பயனுள்ளதாகவும் 🙂 .

இதில் கூறப்பட்டுள்ளது அனைத்தும் எழுதியவரின் சொந்தக் கருத்தே, நான் இதில் இருந்த டெங்கு & 2017 வருட சஷ்டி விரதத் தேதி தகவல்களை மட்டும் நீக்கியுள்ளேன்.

எழுதிய ஹீலர். இரா.மதிவாணன் அவர்களுக்கு நன்றி. இதில் தளம் எதுவும் குறிப்பிடவில்லை, எனவே, பின்னர் எவரும் குறிப்பிட்டால் சேர்த்து விடுகிறேன்.

நல்ல தகவல்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைத்தே இதைப் பகிர்வதால், திருடிவிட்டதாக நினைக்க மாட்டார் என்று கருதுகிறேன்.

“சஷ்டி விரதம்” எப்போது துவங்குகிறது?

சஷ்டி விரதம் தீபாவளிக்கு அடுத்த நாள் துவங்குகிறது.

தீபாவளி வந்தால், சஷ்டி விரதம் துவங்குகிறது என்பதை நினைவில் கொண்டால், மறக்காது.

இனி தொடர்வது “சஷ்டி விரதம்” குறித்த கட்டுரை

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்குச் சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். Image Credit

நமது உடலை இயக்கும் ‘உயிர்சக்தி’ மூன்று சக்திகளாகப் பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதைத் துல்லியமாகச் செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி

  1. செரிமான சக்தி
  2. இயக்கச் சக்தி
  3. நோய் எதிர்ப்புச் சக்தி

இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்குப் பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது.

காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்கச் சக்தியைக் குறைத்துக்கொள்ளும்.

எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா? முடியாதல்லவா!

உடல் இயக்கம் சக்தியைக் குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்புச் சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்கச் சக்தியையும் குறைத்துக்கொள்வோம்.

இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்கச் சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடமிருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்குக் கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும்.

ஏனென்றால் வெளியிலிருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்துச் சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்கச் சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும்.

இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துப் பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் ‘கந்த சஷ்டி விழா’.

கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது ‘சஷ்டி விரதம்’ தான்.

உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.

நோய் எதிர்ப்புச் சக்தி

‘செரிமான சக்தி’ தான் ‘முருகனின் தாய்’. ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ தான் ‘முருகன்’. ‘நோய்’ தான் ‘அரக்கன்’.

வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.

இந்த விழாவில் எப்படி ‘முருகப்பெருமான்’ தனது தாயிடமிருந்து சக்தி பெற்று அசுரனை வதம் செய்கிறாறோ, அதே போல நமது உடலில் உள்ள ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ தனது தாயான செரிமான சக்தியிடமிருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

வெளியில் முருகனுக்கும், அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது.

இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.

எப்படி ஒவ்வொரு நாளும் ‘முருகன்’ சக்தி பெற்று ஆறாவது நாள் அசுரனை வதம் செய்கிறாரோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது ‘நோய் எதிர்ப்பு சக்தி’ வலிமையடைந்து ‘வைரஸ் கிருமிகள், நோய்கள்’ இருந்தாலும் வதம் செய்துவிடும்.

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்குச் சூட்சமமாகச் சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் ‘உண்ணா நோன்புடன்’ அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.

சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?

  • உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.
  • சமய முறைப்படி இருக்கலாம்.
  • ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
  • ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
  • ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.

இதில் உங்களுக்குப் பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.

பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்பப் பசித்தால் திரும்பத் தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.

இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்குப் பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும்.

அப்பொழுது உங்களுக்குப் பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள். திரும்பப் பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்துச் சாப்பிடலாம்.

வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.

இறைவன் சூரிய அடுப்பைக் கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.

வேலைக்குச் செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம்.

பழங்கள், இளநீர், நாட்டுக் காய்கனிகள், தேங்காய், வேர்கடலையெனப் பச்சையாகச் சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.

உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பின் போது என்ன நடக்கலாம் ?

  • ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.
  • சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.
  • மலம் கருப்பாக வெளியேறலாம்.
  • சளி வெளியேறலாம்.
  • உடல் ஓய்வு கேட்கலாம்.
  • காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)
  • வலிகளை உணரலாம்.

என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?

  • அதிக உடல் எடை சீராகும்
  • முகம் பொலிவு பெறும்
  • கண்ணில் ஒளி வீசும்
  • சுறுசுறுப்பு அதிகரிக்கும்
  • இரத்தம் தூய்மை பெறும்
  • தோலின் நிறம் சீராகும்
  • மன உளைச்சல் குறையும்
  • கவலை, பயம், கோபம் குறையும்
  • புத்துணர்வு கிடைக்கும்
  • உடல் பலம் பெறும்
  • மன அமைதி பெறும்
  • ஆழ்ந்த தூக்கம் வரும்

ஆக மொத்தத்தில் உடலில் ஆரோக்கியமும்! எண்ணத்தில் அழகும்! மனதில் நிம்மதியும்! கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.

கந்தன், அரக்கனை அழிப்பது போல் உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிப்பிணைந்தவை, பிணைக்கப்பட்டவை .

உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்துத் தந்த நமது முன்னோர்களுக்குக் கோடி நன்றிகளைச் சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

உலகில் மிகச்சிறந்த மருந்துவர் – உங்கள் உடல்.

உலகில் மிகச்சிறந்த மருத்துவம் – உண்னா நோன்பு.

உண்ணா நோன்பு இருப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்

நன்றிஹீலர்.இரா.மதிவாணன்.

கட்டுரையோடு அவரின் ஆங்கிலம் கலக்காத தமிழுக்கு சிறப்பு நன்றி 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

சஷ்டி விரதம் நம்பிக்கைகள்

அழகன் முருகன்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. //எப்போதுமே ஒரு விசயத்தைப் பற்றிய தேடல் அதிகரிக்கும் போது அது தொடர்பான தகவல்கள் நம்மைத் தேடி வரும். அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியது.//

    அடடே இது எனக்கும் நடந்திருக்கிறது.

  2. அருமையான விளக்கம்..மிக்க நன்றி தங்களுக்கும் திரு ஹீலர்.இரா.மதிவாணன்.அவர்களுக்கும்…..

  3. கிரி, நாம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை நாம் முற்றிலும் பின்பற்றினாலே நம்முடைய வாழ்வில் எல்லா வளமும் நிறைவாக கிடைக்கும் என்பது என் எண்ணம். முன்னோர்களது சில பழக்க வழக்கங்கள் இன்று நமக்கு பைத்தியக்காரத்தனமாக தெரிந்தாலும், அதன் ஆழமான உண்மை பல அறிவியல் ஆய்வுக்கு பின் இன்று நிரூபணமாகிறது..

    வீட்டில் கோலம் போடுவது ஒரு சிறிய நிகழ்வு.. ஆனால் அதற்கு பின் இருக்கின்ற அறிவியல் உண்மை.. எந்த வெளிநாட்டிலும், எந்த மக்களுக்கும் கிடைக்காத அற்புதமானவைகள் .. இணையத்தில் வருகின்ற அத்தனை தகவல்களும் உண்மை என நம்ப தயாராக இருக்கும் நாம் தான்.. முன்னோர்களின் வார்த்தைகளையும், பழக்கவழக்கத்தையும் ஏற்க தயாரக இல்லை.. விரதம் பற்றி தெளிவாக பகிர்ந்துளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!