இந்தியா என்றைக்குமே கெத்து தான்!

6
இந்தியா

ந்தியாவிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இடம் பெயர்பவர்களைப் பற்றிய செய்தி கடந்த சில வாரங்களில் விவாதிக்கப்பட்டது.

அது குறித்த என் விமர்சனம் இது. Image Credit

புதிதாக என் தளத்தைப் படிப்பவர்களுக்குச் சிறிய அறிமுகம்.

நானும் வெளிநாட்டில் 8 ஆண்டுகள் வசித்துள்ளேன்.

இந்தியாவை வெறித்தனமாக நேசிக்கும் பல கோடிப்பேரில் நானும் ஒருவன்.

Disclaimer

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றாலும், இந்தியாவை நேசிப்பவர்களுக்கு இக்கட்டுரை பொருந்தாது.

ஏன் வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்?

இதற்கான காரணம், யாருக்கும் தெரியாத ஒன்றல்ல.

வளர்ந்த நாடுகளில் உள்ள கட்டமைப்பு, வசதிகள், ஊதியம், லஞ்சம் ஊழல் போன்றவை குறைவு, புதிய வாய்ப்புகள், திறமைக்கு ஏற்ற மரியாதை ஆகியவை.

இவற்றோடு இந்தியாவில் இருக்கும் பொறுப்புகள், கடமைகள் ஆகியவை இல்லை. சொந்தக்காரங்க பிக்கல் பிடுங்கல் இல்லை.

இவையே இந்தியாவிலிருந்து ஒருவர் வெளியேறக் காரணங்கள்.

இதில் என்ன பிரச்சனை?

இது தொடர்பாகச் சிலரின் கருத்துகளைச் சமூகத்தளங்களில் படிக்க நேர்ந்தது.

வெளிநாடுகளில் கிடைக்கும் மேற்கூறிய வாய்ப்புகளுக்காகச் சென்றேன், இவை எனக்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறி முடித்து இருந்தால் பிரச்சனையில்லை.

இடம்பெயர்ந்து பல வருடங்களாகியும், அவர்கள் பிள்ளைகள் வளர்ந்து இந்திய பண்பாட்டைப் பற்றி எதுவுமே தெரியாமல் அந்நியமாக இருப்பவர்களாக மாறிய பிறகும் இந்தியாவைக் குறை கூறிக்கொண்டு இருக்கும் போது தான் ஆத்திரமாகிறது.

இந்தியா வேண்டாம், சரியில்லை என்று சென்று விட்ட பிறகும் இந்தியாவை நொள்ளை நொட்டை சொல்வதில் என்ன நியாயம்?

வேண்டாம்னு சென்ற பிறகு எதற்கு இந்தியாவைப் பற்றிய எண்ணம்.

இந்தியாவில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அதையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் என்னைப் போலக் கோடிக்கணக்கான நபர்கள் உள்ளனர்.

எந்த நாட்டுக்குப் போனார்களோ அங்குள்ளவர்களுடனே கொஞ்சி குலாவ வேண்டியது தானே! எதுக்குத் திரும்ப இந்தியாவையே நோண்டிட்டு இருக்கனும்.

வெளிநாடு நிரந்தரமாகச் சென்றவர்கள், அக்கலாச்சாரத்துக்கு மாறியவர்கள் இந்தியாவை, இந்திய நிகழ்ச்சிகளை எதற்குக் கொண்டாட வேண்டும்? என்று நினைப்பவர்கள் இந்தியாவைப் பற்றிய மற்ற நினைப்புகளையும் விட்டு விட வேண்டியது தானே நியாயம்.

எதற்குத் திரும்ப இந்திய பிரச்சனைகளையும், அரசியலையும், பண்பாட்டையும் விமர்சித்துக் கருத்துக்கூறிக்கொண்டு இருக்க வேண்டும்!

எங்களுக்குத்தெரியும்

இந்தியாவைக் குறைத்து மதிப்பிடுபவர்கள் அனைவரும் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியைக் காணும் போது அல்லது நீங்கள் சென்ற நாட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும் போது இந்தியாவிலேயே இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் நிச்சயம் வரும்.

அப்போதும் நீங்கள் விமர்சிக்கும் இந்தியா உங்களை வரவேற்கும் நாடாகத்தான் இருக்கும்.

உங்களை வசதியாக இன்னொரு நாட்டில் இருக்க வைத்ததுக்கும், நல்ல நிலைமையில் இருப்பதற்கும் இந்தியாவும் ஒரு காரணம் என்பதை மறவாதீர்கள்.

அப்படிப்பட்ட இந்தியாவை இழிவுபடுத்துவது அம்மாவையே இழிவுபடுத்துவது போல.

ஆமாம்! இங்கே ஊழல், லஞ்சம், அரசியல், சாதி, மதப் பிரச்சனைகள் அதிகமே! அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அதைச் சமாளிக்க எங்களுக்குத்தெரியும்.

எனவே, அந்தக்கவலை, அக்கறை உங்களுக்குத் தேவையில்லை.

இந்தியாவையும், தமிழகத்தையும் தவறாக விமர்சிப்பவர்களிடம், மதிப்புக் கொடுக்காதவர்களிடம் எந்த மரியாதையும், கருணையும் எனக்கில்லை.

இந்தியாவின் வளர்ச்சி

எத்தனை லட்சம், கோடி பேர் வேறு நாட்டுக்கு இடம்பெயர்ந்தாலும், இந்தியா கெத்தாகத் தான் இருக்கும்.

பல மோசமான படையெடுப்புகள், லட்சக்கணக்கான உயிர் பலிகளையும், பல ட்ரில்லியன் கொள்ளைகளையும் தாண்டியும் இந்தியா அனைவருக்கும் சவாலான நாடாக உள்ளது, இனியும் இருக்கும்.

அப்படியொரு மோசமான படையெடுப்புகளாலையே, கொள்ளைகளாலையே ஒன்றும் ஆகாத இந்தியா, இவர்கள் வெளியேறுவதால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

இந்தியாவை விமர்சிக்கும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற முன்னாள் இந்தியர்களுக்கெல்லாம் கூறுவது ஒன்று தான், இந்தியாவின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை!

பல சாதி, மதங்கள், மொழிகள், பண்பாடு, பல்வேறு உட்பிரச்சனைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.

எனவே, இவற்றையெல்லாம் அனுசரித்து மெதுவாகத் தான் மாறும். உங்கள் அவசரத்துக்கெல்லாம் நடக்காது.

இந்தியா அவ்வளோ தான் என்று ஆருடம் கூறிச்சென்ற ரகுராம் ராஜன் இன்று இந்தியாவின் வளர்ச்சியைப் பாராட்டுகிறார். யாரை நம்பியும் இந்தியா இல்லை.

எதிர்காலத்திலும் பலர் இடம்பெயர்ந்தாலும் அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி இந்தியா தொடர்ச்சியாக வெற்றிநடை போட்டுக்கொண்டு தான் இருக்கும்.

இன்று டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னணியில் இருப்பது போல இன்னும் பல துறைகளில் எதிர்காலத்தில் முன்னணியில் இருக்கத்தான் போகிறது.

எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

எனவே, இந்தியாவை, இந்தியர்களை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, சென்ற நாட்டுக்காவது உண்மையாக இருங்கள்.

இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்.

தொடர்புடைய கட்டுரைகள்

Bye Bye சிங்கப்பூர்

இந்தியாவும் உலக நாடுகளும்

அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

வதந்திகளைப் பொய்யாக்கிய இந்தியா | Covid 19

இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்

பிரிவினைவாதிகளுக்கு செருப்படி கொடுத்த தமிழக மக்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. இந்தியாவில் மக்களின் அறியாமையை அற்புதமாய் அனைத்து அரசியல்வாதிகளும் பயன்படுத்திவிடும்படியே அரசுஅமைப்பு உள்ளது, சுதந்திரநாள் வாழ்த்துகள்🙏🏼

  2. கிரி, 13 ஆண்டுகளுக்கு மேல் அந்நிய தேசத்தில் இருக்கிறவன் நான்.. என்னை பொறுத்தவரை தாய்நாடா? வெளிநாடா? என்ற கேள்வி ஏழும் போதெல்லாம் அலிஸ் மன்றோ கூறியதை நினைத்துக்கொள்வேன். ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.

    என்னுடைய கருத்தும் இது தான்.. என்னுடைய தனிப்பட்ட சொந்த காரணத்துக்காக நான் பிழைப்பு தேடி வந்த தேசம் வேறாக இருக்கலாம் .. ஒரு வேளை நாளை, வேறு ஒரு தேசத்துக்கு செல்ல நேரலாம்.. ஆனால் எங்கு சென்றாலும் அடிப்படையில் நான் ஒரு இந்தியன் என்பதை என்றும் மறக்க மாட்டேன்..மேலும் என்னை ஒரு இந்தியனாக அடையாளப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்..என் சந்ததிகளையும் இதே மனநிலையிலியே வளர்க்க விரும்புகிறேன்.. உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் கிரி..
    ==================================================

    இன்று ஏதோ ஒரு தேசத்தில் மிக சாதாரணமாக கடந்து போகும் இந்த சுதந்திர தின நாள் , என் பள்ளி நாட்களில் ஒரு பெருநாளை, ஒரு திருவிழாவை போல் இருக்கும்.. தனிமையில் இன்று கூட அந்த நினைவுகளை அசை போடும் போது உள்ளுக்குள் ஏதோ ஒரு தவிப்பு ஏற்படுவதை உணர முடிகிறது.. வித, விதமான கொடிகள் சேகரிப்பது , இரண்டு டவுசர் பாக்கெட், சட்டை பாக்கெட் முழுவதும் விதவிதமான கலர் கலர் மிட்டாய்கள்.. நண்பர்களுக்குள் மிட்டாய்களை மாற்றி கொள்வது..

    பள்ளிகள், அரசு அலுவலகம், நூலகம், சில வீடுகள் என ஊரில் உள்ள எல்லா தெருவுக்கும் சென்று கொடி ஏற்றும் நிகழ்வுகளை காண்பது, எல்லா இடங்களிலும் “ஜனகன மன” பாடுவது.. சில இடங்களில் விடுதலைக்கு வித்திட்டவர்களின் வரலாற்றை பற்றி பேசும் போது , அவர்களை பற்றி தெரிந்து கொள்வது.. (பகத் சிங்) பற்றி நான் தெரிந்து கொண்டதும் இது போல ஒரு நிகழ்வில் தான்.. அவரை பற்றி தெரிந்து கொண்ட பின் நண்பர்கள் மத்தியில் அவர் போலவே சில நாட்கள் என் உடல்மொழியை மாற்றி கொண்டேன்.. இன்னும் பல.. கூறி கொண்டே போகலாம் கிரி..

  3. கிரி, இந்திய குடியுரிமையை விட்டு அமெரிக்க குடியுரிமையை பெறுபவர்கள் தான் அதிகம்.நான் அமெரிக்க நாட்டில் 2 வருடம் இருந்த அனுபவத்தில் கண்டது, இந்தியாவை குறைகூறுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மக்களிடம் பழகாமல் ஒரு குறுகிய வட்டத்திக்குள் வாழ்பவர்கள். அவர்களின் தனிமையை போக்கி கொள்ள இணையத்தில் வந்து இந்தியாவை இழிவுபடுத்துவதும், உணர்ச்சி கொந்தளிப்பில் அரசியல்வாதிகளை சாடுவதும்தான். 10 வருடம் அமெரிக்காவில் இருப்பவர்களிடம் பேசியது போது, அவர்களுக்கு அமெரிக்க நாட்டின் கலை,அரசியல், பண்பாடு, வசிக்கும் நகரத்தின் எளிய வரலாறு பற்றிய சிறு அறிமுகம் கூட இல்லை என்பதை கண்டேன்.அவர்களின் நண்பர்கள் வட்டம் மிக குறுகியது. 5 அல்லது 6 அமெரிக்க நாட்டு நண்பர்கள் இருப்பதே அரிது தான். அவர்களின் பிள்ளைகளின் நண்பர்கள் வேறு, இவர்களாக வேலையை தாண்டி உருவாக்கி கொள்ளும் நண்பர்கள் மிக குறைவு. பெரும்பாலோனோர்கள் சொல்வது, நான் அமெரிக்காவில் வந்தது பணம் ஈட்டுவதற்கே மட்டுமே என்பார்கள். அடுத்த சில நொடிகளிலேயே உயர்கல்வி செலவு அதிகம், இந்தியாவில் முதலீடு செய்யும் நோக்கம் இல்லை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்துவார்கள்.

    அவர்களுக்கு கருத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றே கருதுகிறேன். இளம் அல்லது மத்திய வயதில் வெளிநாடுகளுக்கு சென்று, வாழ்க்கையின் பெரும்பகுதியை வேலைக்காகவே செலவிட்டு, அந்த நாட்டு மக்களிடம் ஒட்டாமல், சொந்த நாட்டு வேர்களையும் மறந்து, 50 வயது தாண்டியதும் அந்த நாட்டிலே இருப்பதா அல்லது இந்தியா திரும்பலாமா என்றே குழப்பத்தில் வாழ்பவர்கள். இதை மறைக்க அவர்கள் இடும் வேடம் தான் புரட்சியாளன். இந்த புரட்சியாளர்கள் தான், அமெரிக்க குடியுரிமை மற்றும் Green Card வைத்துஇருப்பவர்களை ஒரு படி மேலாகவும், H1,L1 வைத்து இருப்பவர்களை கீழாக பார்ப்பார்கள்.
    குடியுரிமை பெறுவதற்கு முன்பு democrat, பெற்ற பின்பு republican. இது தான் இவர்களின் நிலைப்பாடு. அவர்கள் சென்ற போது இருந்த இந்தியாவை மனதில் வைத்து கொண்டு, கள நிலவரங்கள் தெரியாமல் கருத்து கூறிகொண்டு இருக்கிறார்கள்.

    பெரும்பான்மையான இளைஞர்களை கொண்ட நம் நாடு வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல துறைகளில் முன்னோடியாக வரத்தான் போகிறது. அது உலகுக்கும் நல்லது கூட.

  4. @Muhammad Fahim & ஆதி

    சுதந்திர தின வாழ்த்துகள்.

    Fahim நீங்க “உண்மை பேசுவது கடினமா?” என்ற கட்டுரையில் உங்கள் கருத்துக்கு யாசின் என்று நினைத்து அவருக்கு பதில் அளித்து விட்டேன். தற்போது தான் கவனித்து சரி செய்தேன்.

    @யாசின்

    “நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு”

    மிகச்சரியானது.

    “என்னை ஒரு இந்தியனாக அடையாளப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்..என் சந்ததிகளையும் இதே மனநிலையிலியே வளர்க்க விரும்புகிறேன்.”

    இதுவே என் நிலைப்பாடும்.

    “இரண்டு டவுசர் பாக்கெட், சட்டை பாக்கெட் முழுவதும் விதவிதமான கலர் கலர் மிட்டாய்கள்”

    அப்போது சுதந்திர தினம் என்றால் மிட்டாய் தான் நினைவுக்கு வரும் 😀

    காலையிலே உற்சாகமாக சென்று கொடி வணக்கம், பாடல் எல்லாம் முடித்து வீட்டுக்கு கிளம்புவது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

  5. @மணிகண்டன்

    “இந்தியாவை குறைகூறுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மக்களிடம் பழகாமல் ஒரு குறுகிய வட்டத்திக்குள் வாழ்பவர்கள்.”

    சரியா சொன்னீங்க. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். சிங்கப்பூரில் இருந்த போதும் இதே போலப் பலரை கண்டுள்ளேன்.

    “அவர்களின் தனிமையை போக்கி கொள்ள இணையத்தில் வந்து இந்தியாவை இழிவுபடுத்துவதும், உணர்ச்சி கொந்தளிப்பில் அரசியல்வாதிகளை சாடுவதும்தான். ”

    ஹா ஹா செம பாய்ண்ட்

    “10 வருடம் அமெரிக்காவில் இருப்பவர்களிடம் பேசியது போது, அவர்களுக்கு அமெரிக்க நாட்டின் கலை,அரசியல், பண்பாடு, வசிக்கும் நகரத்தின் எளிய வரலாறு பற்றிய சிறு அறிமுகம் கூட இல்லை என்பதை கண்டேன்.அவர்களின் நண்பர்கள் வட்டம் மிக குறுகியது. 5 அல்லது 6 அமெரிக்க நாட்டு நண்பர்கள் இருப்பதே அரிது தான்.”

    தற்காலிகமாக சென்றவர்கள் இது குறித்து பெரியளவில் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் அது பெரிய தாக்கமாக இருக்காது ஆனால், அங்கேயே குடியுரிமை பெறுபவர்களும் பலர் இதே போல உள்ளனர்.

    சிங்கப்பூரில் எட்டு வருடங்கள் இருந்தேன், சிங்கப்பூர் பற்றி பல தகவல்களை விருப்பமாக தெரிந்து கொண்டேன்.

    குறைந்த பட்சம் Blog எழுதுவதற்காகவே நிறைய படித்து தெரிந்து கொண்டேன்.

    ஆனால், நீங்கள் கூறியது போல எனக்கு சீன நண்பர்கள் யாருமே நெருக்கமில்லை ஆனால், வீட்டு அருகே இருந்த தமிழ் குடும்பம், அவர்களுடைய சொந்தங்கள் எனக்கு நெருக்கம்.

    “இளம் அல்லது மத்திய வயதில் வெளிநாடுகளுக்கு சென்று, வாழ்க்கையின் பெரும்பகுதியை வேலைக்காகவே செலவிட்டு, அந்த நாட்டு மக்களிடம் ஒட்டாமல், சொந்த நாட்டு வேர்களையும் மறந்து, 50 வயது தாண்டியதும் அந்த நாட்டிலே இருப்பதா அல்லது இந்தியா திரும்பலாமா என்றே குழப்பத்தில் வாழ்பவர்கள். இதை மறைக்க அவர்கள் இடும் வேடம் தான் புரட்சியாளன்.”

    உண்மையே.

    இந்தியாவை நேசிப்பவர்களும் இந்திய வழக்கங்களைப் பின்பற்றுபவர்களும் இது போல செய்வதில்லை.

    அமெரிக்காவில் நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் எப்போதும் இந்தியாக்கு மரியாதை கொடுப்பவர்கள்.

    சிலர் அங்கேயே வாழ்வதில் உறுதியாக இருப்பவர்கள் ஆனால், இந்தியாவை நேசிப்பவர்கள்.

    “அவர்கள் சென்ற போது இருந்த இந்தியாவை மனதில் வைத்து கொண்டு, கள நிலவரங்கள் தெரியாமல் கருத்து கூறிகொண்டு இருக்கிறார்கள்.”

    மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன். இது முக்கியமான பார்வையாகவும் உள்ளது.

    நியாயமாக நானே இதை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    இந்தியா சீராக மாறுகிறது ஆனால், இவர்கள் இரு வருடங்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இங்கே வந்து பார்த்து அங்கே சென்று புலம்புவார்கள் அல்லது குறை கூறுபவர்கள்.

    இதை என் சிங்கப்பூர் Return கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பேன். குறிப்பாக விலை அதிகம் என்று புலம்புவது, அத்தவறை நானே செய்துள்ளேன்.

    “பெரும்பான்மையான இளைஞர்களை கொண்ட நம் நாடு வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல துறைகளில் முன்னோடியாக வரத்தான் போகிறது.”

    இதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. இன்னும் 10 வருடங்களில் இந்தியா சிறப்பான நிலையை அடைந்து இருக்கும்.

    இதற்கு உட்கட்டமைப்பு வசதியை அதிகரிக்க வேண்டும். இது குறித்து தனிக்கட்டுரை விரைவில் எழுதுவேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here