கொரோனா வந்ததில் இருந்து இந்தியாவைப் பற்றிப் பல்வேறு வதந்திகள், செய்திகள் பரவின ஆனால், வதந்திகளைப் பொய்யாக்கிய இந்தியா, கெத்தாக வலம் வருகிறது.
வதந்திகளைப் பொய்யாக்கிய இந்தியா
இந்தியாவில் மற்ற நாடுகளைப் போலக் கொரோனா பரவாது என்று துவக்கத்தில் எண்ணினோம் ஆனால், தொடர்ச்சியாக வீரியம் அதிகரித்துப் பயமுறுத்தியது.
தொடர்ச்சியான ஊரடங்கு சூழ்நிலை, வீரியத் தொற்று எதிர்கொள்ளாத, பழக்கமில்லாத மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். Image Credit
ஊடகங்களின் கற்பனைக் கதைகள், கணிப்புகள் அதிகமாகத் துவங்கியது. கொரோனா காலம் முழுக்க எதிர்மறை செய்திகளே வலம் வந்தன.
ஆளாளுக்கு ஜூலை 2020 மாதத்துக்குள் இவ்வளவு மில்லியன் மக்கள் இந்தியாவில் இறப்பார்கள் என்று செய்தி, கணிப்புகள் என்ற பெயரில் பீதியை பரப்பினர்.
ஆனால், நடக்கவில்லை.
பின்னர் அடுத்த மாதம், இன்னும் இரு மாதங்களில் கோடிகளில் மக்கள் இறப்பர், இந்தியா மோசமான காலத்தை எதிர்கொள்ளப்போகிறது என்று கதையளந்தார்கள்.
ஸ்பெயின் நாட்டு மக்கள் சொன்னதாகச் செய்திகள் பரப்பப்பட்டன, மக்களிடையே பீதியை ஏற்படுத்தினர். பல மில்லியன் கணக்கில் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.
ஆனால், நடக்கவில்லை.
130+ கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தற்போது வரை நடந்துள்ள பாதிப்புகள், மற்ற நாடுகளை ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.
இரண்டாம் அலை
இரண்டாம் அலையில் இந்தியா தப்பிக்க வாய்ப்பில்லை. மிக மோசமாகப் பாதிக்கப்படப்போகிறது என்றார்கள்.
ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் மட்டுமே இரண்டாம் அலை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது ஆனால், இந்தியா உட்பட ஆசிய நாடுகள் பாதிப்படையவில்லை.
உருமாற்றம் அடைந்த கொரோனா
உருமாற்றம் அடைந்த கொரோனா இங்கிலாந்தில் ஆரம்பித்த போதும் பயமுறுத்தினார்கள் ஆனால், இந்தியாவில் எதிர்பார்த்த பாதிப்பு ஏற்படவில்லை.
தற்போது வரை (ஜன 2021) 200 நபர்களுக்குள்ளேயே பாதிப்பு உள்ளது, அதுவும் பயப்படும்படியில்லை.
உலகச் சுகாதார அமைப்பு (WHO)
உலகளவில் தண்டத்துக்கும் இருக்கும் ஒரு அமைப்பு என்றால், உலகச் சுகாதார அமைப்பு தான் (World Health Organization).
இன்று வரை உருப்படியான ஒரு தகவலையும் உலக மக்களுக்கு வழங்கவில்லை.
ஊடகங்கள் போலத் தொடர்ச்சியாகப் பயமுறுத்திக்கொண்டு இருந்தது மட்டுமே இவர்கள் செய்தது.
மற்ற நாடுகளின் தகவல்களைப் பகிர ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் இருக்க, அதையே திரும்பக் கூற இந்த அமைப்பு எதற்கு?
ஒவ்வொரு முறையும் எதிர்மறை செய்திகளையே கூறி, மக்களைப் பயமுறுத்தினார்கள் ஆனால், இவர்கள் கூறியதில் எதுவுமே நடக்கவில்லை.
உத்தேசமாகப் பலரும் கூறும் கணிப்புகளுக்கும், இவர்கள் கூறும் செய்திகளுக்கும் பெரிய வித்யாசமில்லை.
கேரளா
தமிழக ஊடகங்களுக்குத் தமிழகத்தைக் கேவலப்படுத்துவது என்றால், மிகப்பிடித்தமானது.
வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம், தமிழகத்தை மட்டம் தட்டுவார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போது, கேரளாவில் குறைவு. உடனே கேரளாவைப் பாருங்கள்! தமிழகம் சரியில்லை என்று ஆரம்பித்து விட்டார்கள்.
கேரளாவையும் தமிழகத்தையும் ஒப்பிடுவதே தவறு.
காரணம், கேரளாவை விடத் தமிழகம் இரு மடங்கு மக்கள் தொகை, உற்பத்தி & வியாபாரம், மக்கள் இடமாற்றம் அதிகம் உள்ள மாநிலம்.
தற்போது நிலைமையே தலைகீழாக உள்ளது.
கேரளாவே அதிகம் பாதிப்புள்ள மாநிலமாக உள்ளது. இறப்பு விகிதம் மட்டும் தமிழகத்தை விட ஒப்பீட்டளவில் குறைவு.
ஊடகங்கள் இது பற்றியே வாய் திறப்பதில்லை. போராளிகள் வழக்கம்போலக் கமுக்கமாக உள்ளார்கள்.
இந்திய மக்களின் உடல் எதிர்ப்புச் சக்தி
மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கை எடுத்தாலும், இந்திய மக்களின் உடலில் உள்ள இயல்பான எதிர்ப்பு சக்தியே கொரோனா தொற்றுப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுத்தது.
Hygienic க்காக இல்லாதது ஒரு வகையில் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்தது.
இந்தியா பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்டது, மேம்பட்ட மருத்துவ வசதிகள் குறைவு, சிறப்பான கட்டமைப்பு இல்லை ஆனாலும் இந்தியா பாதிக்கப்படவில்லை.
பலர் முகக்கவசம் அணியாமல் இருப்பது மட்டுமே கடுப்பை ஏற்படுத்துகிறது.
கெத்து காட்டும் இந்தியா
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு, இந்திய மக்களின் எதிர்ப்புச் சக்தி இந்தியாவை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லாமல் தவிர்த்துள்ளது.
ஊடகங்களின் கற்பனைக் கதைகள், கதைகளாகவே சென்று விட்டன.
இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்லும் என்று ஆருடம் கூறிய உலக, உள்ளூர் வல்லுநர்கள், தற்போது தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
கொரோனா காலத்தில் கூறப்பட்ட கட்டுக்கதைகள், ஆருடங்கள், புரளிகள், வன்மமான எதிர்பார்ப்புகள் எதுவுமே நடைபெறவில்லை.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது குறைவான சேதத்தையே இந்தியா சந்தித்துள்ளது.
தடுப்பூசி மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா வளர்ந்து உலக நாடுகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
கொரோனாவால் இழப்புகள் இருந்தாலும், இந்தியா எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பதை உலகுக்கு கெத்தாக உணர்த்தியுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
கொரோனா வைரஸ் WhatsApp புரளிகள்
கிரி, சத்தியமா இதுவரை கொரோனாவோட மாயம் எனக்கு புரியவில்லை. ஆரம்பத்தில் கொரோனா என்ற ஒன்று இருப்பதாகவே எனக்கு தோன்றவில்லை.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல எல்லா நாடுகளிலும் அதன் வீரியம் அதிகரித்த போது தான் இதன் தீவிரம் புரிந்தது.. ஒரு ஆண்டுகளை கடந்தும் எது எவ்வாறு தோன்றியது? இது தான் காரணம் என்பதை தெளிவாக கண்டுபிடிக்க முடியாதது மிகவும் வியப்பாக இருக்கிறது. விஞ்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் நாம் இன்னும் சிறு குழந்தை தான் என்பதை இயற்க்கை நிரூபித்து கொண்டே இருக்கிறது.
பாதிப்புகளை பொறுத்தவரை இந்தியாவில் குறைவு என்றாலும், அடிமட்ட, நடுத்தர மக்களின் வாழ்வு புரட்டி போட்டு விட்டது இதிலிருந்து மீண்டு வர நிச்சயம் பல ஆண்டுகள் ஆகலாம். ஏற்கனவே பல்வேறான துயரங்களில் உள்ள மக்களுக்கு கொரோன பெரிய சரிவை கொடுத்து விட்டது. தனிப்பட்ட முறையில் எனக்கு பொருளாதார நட்டம் என்றாலும் கொரோனவினால் மனதில் பல நல்ல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது..பள்ளி, கல்லூரி கொடுக்காத அனுபவத்தை கொரோன கற்று கொடுத்துள்ளது.
கொரோனா காலத்தில் கூறப்பட்ட கட்டுக்கதைகள், ஆருடங்கள், புரளிகள், வன்மமான எதிர்பார்ப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. கிளப்பி விடுவதற்கு என்றே ஒரு கூட்டம் எல்லா நிகழ்வுகளிலும் இருக்கும் கிரி. எல்லா பிரச்சனைகளும் நல்ல படியாக முடிந்து அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
As a Doctor, I am agreeing ur கட்டுரை கிரி!
@யாசின் இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைவு ஆனால், நீங்கள் கூறியது போலப் பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது.
சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குச் சென்று விட்டனர், கடனாளியாக்கி விட்டது.
ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்தியா மற்ற நாடுகளை விட பாதிப்பு குறைவு.
@கனகராஜ் பாதிக்கப்பட்டவர்களாக வருபவர்களின் எண்ணிக்கை உங்களுக்குச் சரியாகத் தெரியும்.