திரைப்படத்தைப் பார்ப்பது எப்படி?

4
திரைப்படத்தைப் பார்ப்பது எப்படி?

திரைப்படங்களைப் பார்க்கச் சரியான சூழ்நிலை அமைந்தாலே திரைப்படங்களை ரசிக்க முடியும். இல்லையென்றால் நல்ல படங்கள் கூட மோசமான படங்களாகத் தோன்றும். திரைப்படத்தைப் பார்ப்பது எப்படி? என்று காண்போம்.

கொண்டாட்டமான திரைப்படங்கள்

நகைச்சுவை, பரபரப்பான திரைக்கதை படங்களைத் திரையரங்கில் கூட்டமுள்ள போது பார்த்தால், கூடுதலாக ரசிக்க முடியும். Image Credit

நகைச்சுவைப் படங்களைப் பேரமைதியான திரையரங்கில் பார்த்தால், யாராவது “படத்தில் நகைச்சுவை எப்படி?” என்று கேட்டால், “படத்தில் நகைச்சுவை அப்படியொன்றும் இல்லை” என்பதாகத் தான் இருக்கும்.

விருப்ப நடிகர், இயக்குநர் படமென்றால், முதல் நாள் அல்லது ரசிகர்கள் அதிகமுள்ள காட்சியில் பார்த்தால், அதில் கிடைக்கும் கொண்டாட்ட மனநிலையே வேறு.

இதற்குப் படமும் நன்றாக இருக்க வேண்டும், அது முக்கியம் 🙂 .

எந்தச் சூழ்நிலையில் படம் பார்க்கிறோம் என்பது மிக முக்கியமானது என்பதை சந்திரமுகி அனுபவம் எனக்கு உணர்த்தியது.

எழுதப்படும் விமர்சனங்களும் இந்த மனநிலையை பிரதிபலிக்கும்.

உடன் இருப்பவர்களின் ரசனை முக்கியம் 

உங்களுடன் படம் பார்ப்பவர்களை உங்கள் ரசனைக்கு ஏற்றவர்களாகத் தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், நீங்கள் ரசிக்கும் படத்தைக் கூட அதை இதைக் கூறி படத்தோடு ஒன்ற முடியாமல் செய்து விடுவார்கள்.

இதனால் உங்களுக்கே உங்கள் ரசனை மீது சந்தேகம் வந்துவிடும்.

ஹாரர் த்ரில்லர் & பேய் படங்கள்

பேய் படங்கள் என்றால், நம்ம ஊரில் நகைச்சுவைப் படம் என்று மாற்றி விட்டார்கள், காஞ்சனா படத்துக்குப் பிறகு. எனவே, இவை பேய் படங்கள் பிரிவில் வராது.

யாவரும் நலம், ஈரம், டிமாண்ட்டி காலனி, அவள் போன்ற படங்கள் தான் பேய் படங்கள் என்று கூறப்படத் தகுதியானவை.

இது போன்ற படங்கள் நன்றாக உள்ளது என்ற விமர்சனம் கேள்விப்பட்டால், உடனே சென்று விடாதீர்கள். ஏனென்றால்,  பேய் வரும் சமயங்களில் கிண்டல் செய்து, கத்தி படத்தையே கொடுமையாக்கி விடுவார்கள் சில பைத்தியங்கள்.

சென்னை தேவி திரையரங்கில் வெளியான Evil Dead படத்துக்கு, படம் பார்க்க வந்தவர்கள் கிண்டல் செய்து படத்தை நாசம் செய்து விட்டனர்.

கிண்டலடிக்கும் போது சிலர் சிரிப்பதால், அவர்கள் உற்சாகமாகி இன்னும் அதிகமாகக் கிண்டல் என்ற பெயரில் மொக்கை போட்டு நம் திரைப்பட அனுபவத்தைக் கொலை செய்து விடுவார்கள்.

எனவே, ஒரு வாரம் கழித்தே செல்லுங்கள்.

ஒலி அமைப்பு

இது போலப் படங்களுக்கு ஒலி அமைப்பு முக்கியமானது. எந்தத் திரையரங்கில் ஒலி நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பார்த்து அதன் படி முன்பதிவு செய்யுங்கள்.

நாம் மிகப் பயந்த படங்களை மற்றவர் “அப்படியொன்றும் பயமாக இல்லையே!” என்று கூறினால் அவர் படத்தைப் பார்த்த சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கு, Hostel படம் யாருமே இல்லாத இடத்தில் இரவில் பார்த்து, அதிகாலை தனியாகச் செல்ல வேண்டிய நிலை வந்த போது யாரோ பின்தொடர்வது போலவே தோன்றிப் பயந்தது இன்றும் நினைவில் உள்ளது.

இதற்கு நான் படம் பார்த்த சூழ்நிலையே காரணம்.

I Saw The Devil படம் பார்த்துப் பயந்து ஒரு பெண் இடையிலேயே ஓட்டம் பிடித்து விட்டார். தொலைக்காட்சியில் பார்த்தாலே திகிலாக இருக்கும், திரையரங்கில் பார்த்தால் இதயத்துடிப்பை தாறுமாறாக அதிகரித்து விடும்.

இதுபோல் நெஞ்சுவலி வரவைக்கும் அளவுக்கு இருந்த சீரிஸ் Prison Break.

வீட்டில் படம் பார்க்கிறீர்களா?

வீட்டில் பார்க்கிறீர்கள் என்றால், யாருடைய தொந்தரவும் இருக்கக் கூடாது. இடையில் பேசுவதோ, வேறு இடையூறோ இருந்தால், படத்தை முழுமையாக ரசிக்க முடியாது.

முக்கியமாக மொபைல் நோண்டிக்கொண்டு பார்க்கக்கூடாது.

இதையொட்டியே உங்கள் விமர்சனமும் அமையும்.

2.30 மணி நேரத்தை ஓட்டி 1.30 மணி நேர படமாகப் பார்த்தால், படம் பார்ததாகாது. இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.

திரையரங்கில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்ப்பதற்கும் வீட்டில் பல்வேறு கவனச் சிதறல்களுக்கு இடையே படம் பார்ப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

இது போலப் படத்தைப் பார்த்து, எளிதாகப் படம் மொக்கை சொத்தை என்று சமூகத்தளங்களில் கருத்திடுகிறார்கள்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், என் நண்பர்களே பலர் பார்த்து விட்டு மொக்கை படங்கள் என்று கூறியவற்றை, நான் காட்சிகளை, இசையை, ஒளிப்பதிவை விளக்கியதும், திரும்பப் பார்த்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டு, மெட்ரோ, பொறியாளன்விடியும் முன்.

வீட்டில் தரமான ஒலியமைப்பில் பார்த்தால், சாதாரணப் படம் கூட முழுமையாகப் பார்க்க வைக்கும். என் அனுபவத்தில் கண்டது.

சரவண பவனில் ஆட்டுக்கால் பாயா

சரவணபவனில் சென்று ஆட்டுக்கால் பாயா கேட்காதீர்கள்.

ஒரு படம் என்ன மாதிரியான படம் என்று தெரிந்து செல்கிறீர்கள், அந்த மனநிலையுடன் படத்தைப் பார்க்க வேண்டும்.

ஹாரர் / வன்முறைப் படங்களுக்குச் சென்று “என்ன ஒரே ரத்தம், வெட்டுக்குத்து, கொலையா இருக்கு?!” என்றால், வேறு என்ன இருக்கும்?!

பேய் படத்தில் பேய்க்கு லாஜிக் தேடாதீர்கள், அதே போல “A படங்களுக்குச் சென்று “என்ன ஆபாசமா இருக்கு?” என்றால், வேறு எப்படி இருக்கும்?!

A சான்றிதழ் வன்முறை, ஆபாசம் இருந்தால் கொடுக்கப்படுவது. தெரிந்தே சென்று குறை கூறுவது நியாயமல்ல. எடுத்துக்காட்டு வடசென்னை.

சூழ்நிலை

திரைப்பட அனுபவத்தைத் தீர்மானிப்பது படத்தின் கதையும், திரைக்கதையும் மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமேயல்ல! படம் பார்க்கும் சூழ்நிலையும் தான்.

திரையரங்கில் பார்த்தால் மட்டுமே நன்றாக இருக்கும் படங்கள் என்று சில உள்ளன. அவற்றைத் திரையரங்கில் பார்த்தால் மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும்.

எடுத்துக்காட்டு, பாகுபலி, 2.0, KGF.

“மெட்ரோ, உறியடி” படங்களை வாய்ப்புக்கிடைத்தும் திரையரங்கில் பார்க்காமல் விட்டேனே! என்ற வருத்தம் இன்றும் உள்ளது 🙁 .

எனவே, படத்தை ஏனோதானோவென்று பார்க்காமல், அதற்கான மனநிலை, சூழ்நிலையோடு பாருங்கள் திரைப்படங்களைப் பற்றிய உங்கள் எண்ணமும் மாறும்.

சில படங்களை எப்படிப் பார்த்தாலும் சுமாராகத் தான் இருக்கும் 😀 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. எனக்கு மிகவும் புடிச்ச தலைப்பு…well done ji…

  ஜி, நீங்க சொல்றது முழுக்க சரி தான்… ரொம்ப நன்றி…The Pleasure is always mine.

  நான் சில romance / love movies தனியா பாத்துலதான் எனக்கு ரொம்ப சந்தோசம் (effect 😉 For e.g. Vinnai Thaandi Varuvayaa, 96, Sairat…

  முக்கியமா, comedy படங்கள் நண்பர்களுடன் பாக்குறதுதான் best peeling… 🙂 களவாணி, வருத்தபடாத வாலிபர் சங்கம், படங்கள் எனக்கு ஆகா சிறந்த அனுபவம்…

  தொடர்ந்து எழுதவும்…

 2. யாவரும் நலம், டிமாண்ட்டி காலனி படங்கள் இரவில் பார்த்து பயந்த அனுபவம் நிறைய இருகிறது.

  ஈரம் பேய்ப்படம்தான் என்றாலும் பயமுறுத்தவில்லை ஆனால் திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
  இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் பார்ப்பேன்

  அவள் இது பேய்ப்படமா திரையரங்கத்தில் இரவில் 9;30 க்கு சென்று பார்த்தபடம் அன்று திரையரங்கில் இருந்ததே 15 பேர் தான்
  வந்த படங்களிலேயே முகம் சுழிக்க வைக்கும் ஆபாசம் அதிகம் நிறைந்த படம். விளங்குது கிரி தோழா A சான்றிதழ்தான் நானும் ஆர்வமாக போய்ப்பார்த்தேன்.
  ஏமாந்ததே மிச்சம்.

  ராட்சசன் எம்மாடி இசையாலே பயமுறுத்திய மிக மிக சிறந்த படம்.

  நீங்கள் பரிந்துரைத்த Hostel 1 ,2 ,3,ஆங்கிலப்படம் மிக நன்றாக இருந்தது மிக்க நன்றி

 3. கிரி..திரைப்படம் பார்ப்பதே ஒரு இனிமையான சுகமான அனுபவம்!!! அதுவும் நமக்கு பிடித்த துணை (காதலியோ, நண்பனோ, மனைவியோ) பக்கத்தில் இருந்தால் அந்த சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. என்னை பொறுத்தவரை காதலியுடன் படம் பார்த்தது இல்லை, மனைவியின் ரசனையும், என் ரசனையும் வேறு, அதனால் இருவரும் சேர்ந்து படம் பார்த்தாலும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில்லை..

  அன்றும், இன்றும், என்றும் என் நண்பன் சக்தி மட்டும் தான்.. எனக்கான துணை.. இருவரின் விருப்பமும் அந்த அளவுக்கு ஒத்துப்போகும்.. சொல்ல போனால் என்வாழ்க்கையில் நான் அதிகம் படம் பார்த்ததே கோவையில் பணிபுரிந்த நாட்களில் தான்!!! கல்லுரி பருவத்தில் வெறும் 5 / 10 படங்கள் மட்டுமே திரையில் கண்டு இருக்கிறேன்.. (இரவு காட்சிக்கு சென்றதே கிடையாது) கோவை சென்ற பின் நிலை தலைகீழ்.. அதிகம் இரவு காட்சிகள் தான்!!! வாரவிடுமுறையில் பகல் காட்சிகள்.. 90 % சாப்பாட்டிற்கும், திரை கட்டணத்திற்கும், பேருந்திற்கும் செலவு செய்தது சக்தி தான்!!! (இன்நாள் வரை ஒரு நன்றி கூட சக்திக்கு கூறியது கிடையாது..எதிர்பார்க்கவும் மாட்டார்)..

  சக்தியுடன் படம் பார்ப்பதே ஒரு அலாதி இன்பம்.. நான் வெளிநாடு வந்த பின் இருவரும் சேர்ந்து வெறும் சொற்ப படங்கள் மட்டுமே பார்த்துளோம்.. மேட்டுப்பாளையத்தில் தவமாய் தவமிருந்து படத்தை பார்த்த அனுபவத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது..படம் ஓடிக்கொண்டிருக்கும் போது மயான அமைதி!!!! பாதிப்பேருக்கு மேல் இடைவேளையில் வெளியில் செல்லவில்லை, (நாங்களும் கூட).. அறை நண்பன் கஜினி படத்தை பார்த்து படம் மொக்கை என்று சொல்லிவிட்டான்.. ஆதனால் இருவரும் படத்திற்கு போகவில்லை.. ஒரு மாதம் சென்ற பின் தான் படத்தை பார்த்தோம்.. அதற்கு பின் யாருடைய கருத்தை கேட்டு படம் பார்ப்பதில்லை..

  சம்திங், சம்திங், சண்டைக்கோழி, சில்லுனு ஒரு காதல், தலைநகரம்..etc என பல நல்ல படங்களை அன்று பார்த்து மகிழ்த்தோம்.. ரசனைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.. என்னை பொறுத்தவரை எதிர்பார்ப்பில்லாமல் பார்த்த படங்களே என்னை பிரமிக்க வைத்து இருக்கிறது..

  உதாரணம் : நெடுஞ்சாலை, துருவங்கள் 16 , மெட்ரோ, எட்டு தோட்டாக்கள்..etc பெரிய நடிகர்கள் படங்களை பார்த்து பல வருடங்கள் ஆகிறது.. சமீபத்தில் பார்த்த படங்களில் ராட்சசன் பின்னணி இசை பிரமிக்கவைத்து விட்டது.. இமைக்க நொடிகள் படத்தின் வில்லனின் நடிப்பும் மிரளவைத்து விட்டது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 4. @பாபு ஜி நாம் பார்த்ததில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம் & சுறா” மறக்க முடியாத படங்கள் ஜி 😀

  @பிரதீபன் Hostel 1 & 2 மட்டுமே ஒரே இயக்குநர். மூன்றாவது பாகம் வேறு ஒருவர்.. எனக்கு பிடிக்கவில்லை.

  முதல் இரு பாகங்களை அசிங்கப்படுத்தியது போல எடுத்து வைத்து இருந்தார்.

  @யாசின் உங்க நண்பர் சக்தி.. உங்களை போல ஒரு நண்பர் கிடைக்க குடுத்து வைத்து இருக்கணும் 🙂 .

  ராட்சசன் பின்னணி இசை நான் அடிக்கடி கேட்கும் இசை. செமையா இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here