விடியும் முன் [2013] | செம த்ரில்லர்!

8
விடியும் முன்

மிழில் நிழல் உலகப் படங்கள் வருவது மிக மிகக் குறைவு. ரொம்பப் பிடித்த நிழல் உலகப் படம் என்றால் “புதுப்பேட்டை“. பல வருடங்களுக்குப் பிறகு Clean underworld படம் விடியும் முன் தமிழில் வந்து உள்ளது.

விடியும் முன்

பாலியல் தொழிலாளி பூஜா, ஒரு பணக்கார வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டதிற்க்காக ஒரு பெண் தரகரின் நெருக்கடியால் 12 வயது சிறுமியை பணத்திற்காக ஏற்பாடு செய்கிறார்.

இந்த சிறுமியை அழைத்து செல்லும் இடத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகிறது.

இறுதியில் பூஜா மற்றும் இந்த சிறுமிக்கு என்ன ஆனது என்பதை அட்டகாசமாக கொண்டு சென்று இருக்கிறார்கள்.

த்ரில்லர் படம் என்பதால், படத்தின் கதை பற்றி இனி எதுவும் கூறும் எண்ணமில்லை.

எனவே, கதை பற்றி மேலும் எதிர்பார்த்தால், வேறு ஏதாவது விமர்சனம் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதில் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு சிறப்பாக காட்சிகளை எடுக்கக் கூடிய திறமை படைத்த இயக்குனர் பாலாஜி குமார், ஏன் சொந்தமாக ஒரு கதை யோசித்து எடுத்து இருக்கக் கூடாது!

பூஜா

கொஞ்ச மாதங்களாக (வருடங்களாக!) காணாமல் போய் இருந்த பூஜா இதில் பாலியல் தொழிலாளி வேடத்தில் வந்து இருக்கிறார்.

நம்ம நடிகைகள் திறமையானவர்களாக இருந்தாலும், பல வேடங்களை முயற்சிக்க நினைத்தாலும் சிலருக்கு மட்டுமே சில வேடங்கள் சரியாகப் பொருந்துகிறது.

நடிகைகள் நடிக்க வந்து பல காலம் ஆன பின்பு நடிக்க விரும்பும் கதாப்பாத்திரம் பாலியல் தொழிலாளி.

தமிழில் பாலியல் தொழிலாளி வேடத்தில் பலர் நடித்து இருந்தாலும், சம காலத்தில் உடனே நினைவிற்கு வருவது “புதுப்பேட்டை” சினேகா.

ஆனால், அவர் முயற்சித்து இருந்தும் அவருக்கு 50% அளவிற்கே கதாப்பாத்திரம் பொருந்தி இருந்தது. Image Credit

இதையும் மீறி அவர் கதாநாயகி என்ற பிம்பம் வந்து விடுகிறது. இதற்கு நாம் முன்பு இருந்தே அவ்வாறு பார்த்து பழகி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இதே பிரச்சனை தான் பூஜாவிற்க்கும். பாலியல் தொழிலாளிக்குண்டான உடல் மொழி, அலட்சிய மனோபாவம், பார்வையில் இருக்கும் ஒரு தெனாவெட்டு இதில் இல்லை.

முயற்சித்து இருக்கிறார் ஆனால், கொண்டு வர முடியவில்லை.

எடுத்துக்காட்டுக்கு ஆடுகளம் படத்தில் தனுஷ் எந்த இடத்திலும் தனுஷாக / கதாநாயகனாக தெரிய மாட்டார்.

பத்தோடு பதினொன்றாக சேவல் சண்டை தயார் செய்பவராக மட்டுமே அங்கே நமக்குத் தெரிவார்.

இது தான் அந்தக் கதாப்பாத்திரத்திற்கான உடல் மொழி.

பூஜா பேசும் போது “நான் கடவுள்” பூஜா தான் நினைவிற்கு வருகிறார். அதே ஸ்டைல். இதில் அவர் கொஞ்சம் மாற்றம் செய்து இருக்கலாம், மற்றபடி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

குறிப்பாக பாலியல் தொழிலாளி உடல்மொழி தேவைப்படாத காட்சிகளில்.

இதில் ஒரு காட்சியில் “தனக்கு வயதாகி விட்டது” என்று கூறும்படி ஒரு காட்சி இருக்கும். இதைக் கூறக் கூட தைரியம் வேண்டும்.

ஏனென்றால், நிஜ திரை உலக வாழ்க்கையில் இந்த வசனம் ஏற்படுத்தும் பின்விளைவுகள் அதிகம்.

மாளவிகா மணிகுட்டன்

படத்தில் பாதிக்கப்படும் சிறுமியாக நடித்து இருக்கும் மாளவிகா மணிகுட்டன் நடிப்பு அருமை. வயதிற்கு மீறிய பேச்சு / நடிப்பு தான் ஆனால், உறுத்தலாக இல்லை.

இந்த வயதில் படத்தின் கதையை உள் வாங்கி முழுமையாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, காரணம் படத்தின் கதை அப்படி.

இதை படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

பேசும் போது வெளிப்படும் முகபாவனைகள் / உடல் மொழிகள்… அட! போட வைக்கிறார். எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வர வாய்ப்புண்டு.

வசனங்கள் இவருடையது அல்ல என்றாலும், அந்த வசனத்திற்கு உயிர் கொடுப்பது இவர் தானே!

பின்னணி இசை

தமிழில் பின்னணி இசை சிறப்பாக இருப்பது வெகு சில படங்களே!

இசையமைப்பாளர்கள், பாடல்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை பின்னணி இசைக்குத் தருவதில்லை.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே படங்களின் பின்னணி இசை கவருகிறது.

இது ஏன்?

இதற்கு நாம் பழகி விட்டோமோ / ஆர்வம் இல்லையா / இசையமைப்பாளர்கள் தமிழ் இசை ரசிகர்களுக்கு இது போதும் என்று நினைத்து விட்டார்களா!

கிரிஷ் கோபால கிருஷ்ணன்

இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை பட்டையைக் கிளப்புகிறது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபால கிருஷ்ணன்.

எப்போது ஒருவர் கவர்கிறாரோ அவரைப் பற்றி விக்கியில் தேடிப் பார்ப்பது வழக்கம்.

அறிமுகமில்லாதவர் என்று தேடியதில் இவர் சிவகார்த்திகேயன் நடித்த “மெரினா” படத்திற்கு இசையமைத்து உள்ளார். ‘வணக்கம் சென்னை’ பாடல் ரொம்ப பிரபலம்.

“விடியும் முன்” இவருக்கு இரண்டாவது படம். இதில் பாடல்கள் என்று ஓரிரு நிமிடங்கள் வருகிறது.

இந்தப் படத்திற்கு பாடல்கள் அவசியமில்லை ஆனால், உறுத்தல் இல்லாமல் இருக்கிறது.

பாடல்களையும் இவரே எழுதி இருக்கிறார். படம் முழுக்க பின்னணி இசையில் அசத்தி இருக்கிறார்.

இதில் பழைய “Club” பாடலாக ஒன்று வருகிறது. இது படத்திற்காக போடப்பட்டதா அல்லது பழைய ஹிந்திப் பாடலா என்று தெரியவில்லை. இரு நிமிடங்களே வந்தாலும் அதனுடைய Base இசை அசத்துகிறது.

எந்த இடத்தில் பின்னணி இசை தேவையோ அங்கே மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது, மற்ற இடங்கள் இயல்பான ஒலிகளே. காட்சிமைப்பிற்கு ஏற்ற இசையை வழங்கி இருக்கிறார்.

குறிப்பாக அந்த Base இசை, படத்தின் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது அதோடு காட்சிக்கும் ஒரு ரிச்னஸ் கொடுக்கிறது.

கிரிஷ் கலக்கிட்டீங்க! படம் Auro 3D 11.1 surround sound system ல் வெளியாகியுள்ளது எனவே, இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ள திரையரங்கில் பார்க்கவும்.

சிவக்குமார் விஜயன்

ஒளிப்பதிவு, இசையைப் போலவே அசத்தல். ரொம்ப ரொம்ப நன்றாக உள்ளது.

படம் அதிகம் இருட்டில் தான் எடுக்கப்பட்டு உள்ளது ஆனால், இருட்டைக் கூட அழகாக காட்ட முடியும் என்று ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் எடுத்து இருக்கிறார்.

இவர் பற்றி எதையும் விக்கியில் காண முடியவில்லை, இது தான் முதல் படம் போல இருக்கிறது.

படம் முழுக்கவே ஒவ்வொரு காட்சியும் / கோணமும் வித்யாசமாக எடுக்கப்பட்டு உள்ளது.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் வெளிவந்த “நீர்ப்பறவை” க்கு பிறகு ரொம்ப ரசித்த ஒளிப்பதிவு இது தான்.

சத்யராஜ் எடிட்டிங்கும் அருமை. இவரும் புதியவர் போல இருக்கிறது. இவர் “ஆரண்ய காண்டம்” படத்தின் எடிட்டிங்கில் பணி புரிந்து இருக்கிறார்.

அமரேந்திரன்

படத்தில் பெண் தரகராக நடித்து இருக்கும் அமரேந்திரன் இதற்கு முன் வேறுபடங்களில் நடித்து இருக்கிறாரா என்று தெரியவில்லை. செமையாக நடித்து இருக்கிறார்.

இவங்க எல்லாம் இவ்வளோ நாளா எங்க இருந்தாங்க!!

இவருக்கு அப்பாவி / காமெடி கலந்த வில்லத்தனம். இவருடைய முகத்திற்கு நன்றாகப் பொருந்தி இருக்கிறது.

கடைசி காட்சி வரை நடிப்பில் நம்மை கவர்ந்து இருக்கிறார்.

இவருக்குத் துணையா

க ஜான் விஜய். இவர் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை. தன்னை சிறந்த நடிகராக ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். இதிலும் அமரேந்திரன் உடன் சேர்ந்து அலப்பரை செய்து இருக்கிறார்.

இவர்கள் இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமையாக வொர்க் அவுட் ஆகி உள்ளது. “விண்ணைத் தாண்டி வருவாயா” கணேஷ் சிம்பு போல 🙂 .

நிழல் உலக இடங்கள்

படத்தில் வரும் ஏறக்குறைய அனைத்து இடங்களுமே படத்தின் காட்சியமைப்பிற்கு பொருந்திப் போகிறது.

நிழல் உலக இடங்களாகவே இருப்பது படத்தின் காட்சியமைப்பிற்கு வலு சேர்க்கிறது.

நம்ம ஊரில் ரவுடி கதாப்பாத்திரங்களுக்கு ஆட்கள் பஞ்சம் இல்லை என்பதால் இதிலும் ஏகப்பட்ட பேர் ஆனால், அனைவருமே அளவோடு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நிழல் உலகத்தில் நடப்பதை பலர் நம்ப மறுத்தாலும் உண்மையில் உலகில் நாம் கேள்விப்படும் செய்திகளை விட மிக மோசமாகவே நடந்து கொண்டுள்ளது.

கொஞ்ச நேரமே வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அதிகம் பேசாமல் வரும் முக்கிய வில்லன் வினோத் கிஷன் [நான் மகான் அல்ல படத்தில் கல்லூரி மாணவராக வருபவர்], இவரின் உதவியாளராக வரும் முத்துக்குமார் என்று அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இதில் ஒரு காட்சியில் வினோத் கிஷன் ஒருவரை கொல்லும் காட்சி, “ஆசை” படத்தில் பிரகாஷ்ராஜ் செய்வது போல ரொம்ப எளிமை ஆனால், மிரட்டுகிறது.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா! [ஒரிஜினல் படத்தில் இந்தக் காட்சியில்லை].

London to Brighton

இதன் மூலப்படமான “London to Brighton” பார்த்தேன். ஒரிஜினலை விட இந்தப் படம் ரொம்ப நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.

திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்று அனைத்துமே அதை விட இதில் நன்றாக உள்ளது.

அதோடு த்ரில்லர் படமென்பதால் சம்பந்தமில்லாமல் நம்மை வெறுமனே பயமுறுத்தும் சப்பை காட்சிகள் அறவே இல்லை.

இந்தப் படம் தழுவல் இல்லை, படத்தில் 90% காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு கூடுதலாக தமிழுக்காக காட்சிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

அறிமுக இயக்குனராக இருக்கும் போது இத்தனை வருடத்தில் ஒரு சொந்தக் கதை கூடவா இவருக்கு தோன்றவில்லை!!

ஹாலிவுட்டில் இயக்கம் கற்றுக்கொண்டு வந்து இருக்கிறார்.

பாலாஜி

பாலாஜி, உண்மையான உழைப்பிற்கு மட்டுமே புகழ் அழியாமல் இருக்கும்.

அதோடு பின்னால் உங்கள் சொந்தக் கற்பனையில் எடுத்தால் கூட உலகம் சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கும்.

எடுத்துக்காட்டுக்கு வினோத் கிஷன் ஒருவரை கொல்லும் முறை வித்யாசமாக இருக்கிறது ஆனால், இது வேறு படத்தில் இருந்து நீங்கள் எடுத்து இருப்பீர்களோ! என்று சந்தேகம் வருகிறது.

இதைக் கூற வருத்தமாக உள்ளது.

உங்களுக்குள் ஏகப்பட்ட திறமை இருக்கிறது. உண்மையாகவே ரொம்ப நன்றாக இயக்கி இருந்தீர்கள்.

அடுத்த படம் நீங்களே சொந்தமாக கதை யோசித்து படமாக எடுங்கள். நிச்சயம் சிறப்பான திரைப்படத்தை உங்களால் கொடுக்க முடியும்.

திருட்டுப்படங்களை ஆதரிப்பதில்லை ஆனால், இதில் கதை தவிர்த்து இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்துமே நன்றாக இருந்ததால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

திருட்டுப் படங்கள் குறித்து நான் முன்பு எழுதியது.

Read: தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்! August 2011

அனைவருக்கும் ஏற்ற படமல்ல

12 வயது சிறுமி நடித்து இருந்தாலும், படத்தின் கதை இந்த வயதில் உள்ளவர்கள் பார்ப்பவர்களுக்கு உண்டானது அல்ல.

காட்சிகள் ஆபாசமாக இல்லை ஆனால், நிச்சயம் வயது வந்தோருக்கான திரைப்படம்.

த்ரில்லர் படங்களை ரசிப்பவர்கள் மற்றும் வழக்கமான காமெடி, குத்துப் பாடல்கள், நரம்பு புடைக்கும் வசனங்கள், ஹீரோயிசம் போன்றவற்றால் சலிப்படைந்தவர்கள், மன உளைச்சல் அடைந்தவர்கள் தவற விடக் கூடாத படம்.

விடியும் முன் முடிவு சிறப்பாக இருப்பதால், படம் உங்களை நிச்சயம் கவரும்.

‘விடியும் முன்’ வெகுஜன கதை இல்லை.

விரைவிலேயே திரையரங்கிலிருந்து எடுக்கப்பட வாய்ப்புள்ளதால், நல்ல திரையரங்கில் ஓடும் போதே தாமதிக்காமல் பார்த்து, ஒரு நல்ல அனுபவத்தைப் பெறுங்கள்.

குறிப்பாக Auro 3D 11.1 surround sound system உள்ள திரையரங்கில்.

சென்னை சத்யம் திரையரங்கில் “6 Degrees” ல் Auro 3D வசதியுள்ளது. எனக்கு இது போல ஒரு திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்று ரொம்ப வருத்தம்.

சரி விடுங்க.. சிங்கப்பூர்ல விடியும் முன் வெளியாகியதே பெரிய விஷயம். இங்கே வெளியானதிற்குக் காரணம் வெளியீடு PVR என்பதால் இருக்கலாம்.

Directed by Balaji K. Kumar
Produced by Javed Khayum
Starring Pooja Umashankar,Malavika Manikuttan,Vinoth Kishan
Music by Girishh Gopalakrishnan
Cinematography Sivakumar Vijayan
Editing by Sathyaraj
Distributed by PVR Pictures
Release dates November 29, 2013
Country India
Language Tamil

கொசுறு

பின் வருபவை தொலைக்காட்சியில் / இணையத்தில் தரவிறக்கம் செய்து வார இறுதி நாட்களில் பார்த்தவை. திரையரங்கில் வெளியாகாத படங்கள்.

கடந்த வாரம் “கேடி ராம்போ கில்லாடி அர்னால்ட்” படம் பார்த்தேன் :-).

படத்தில் சில காட்சிகள் நம்ப முடியவில்லை என்றாலும் வேகமான திரைக்கதையால் படம் விறுவிறுப்பாகவே இருந்தது.

ஆங்கிலத்தில் நல்ல பிரிண்ட் ல் பிறகு தரவிறக்கம் செய்து பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் Escape Plan. இதை திரையரங்கில் பார்த்து இருக்க வேண்டியது, ஏனோ போகவில்லை.

“சுட்ட கதை” என்ற படம் பார்த்தேன்.. ஸ்ஸ்ஸ் யப்பா.. முடியல. 30 நிமிடம் பார்த்து (ரொம்ப அதிகமோ) பொறுக்க முடியாமல் நிறுத்தி விட்டேன்.

“சுட சுட” என்ற ஒரு ஹாரர் + த்ரில்லர் தமிழ் படம். ரொம்ப சுமார் ஆனால், சுட்ட கதைக்கு இது எவ்வளோ பரவாயில்லை.

“Chakravyuh” என்ற ஹிந்திப் படம். நக்சல்களைப் பற்றியது, வசந்தம் தொலைக்காட்சியில் போட்டார்கள்.

நக்சல்களை அழிக்க அவர்களில் ஒருவனாக செல்லும் ஒருவர் அவர்களுடனே நிரந்தரமாக இணைந்து விடுகிறார்.

இறுதியில் என்ன ஆகிறது என்பது படம். டாக்குமெண்டரி படம் போல வர வாய்ப்பு இருந்தும் திரைக்கதையால் நன்றாக இருந்தது.

விடியும் முன் படத்தின் மூலமான “London to Brighton” பார்த்தேன். 86 நிமிட படம். கதை நன்றாக இருந்தும் தமிழ் அளவிற்கு இல்லாததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கருணாஸ் நடித்த “ரகளைபுரம்” படம். பயந்த கான்ஸ்டபிள், அதிர்ஷ்டத்தால் அவருக்கு பெயர் கிடைக்கிறது.

தனக்கு யாரும் வாய்ப்பு தராததால் தானே தயாரிப்பாளர் ஆகி எடுத்ததாக கருணாஸ் கூறி இருந்தார். ரொம்ப போர் அடித்தால் பார்க்கலாம்.

எத்தனையாவது முறை என்று நினைவில்லை திரும்ப பாக்யராஜ் நடித்த “டார்லிங் டார்லிங் டார்லிங்” படம் பார்த்தேன். வசந்தம் தொலைக்காட்சி என்று நினைக்கிறேன்.

“BA Pass” என்ற ஹிந்திப் படம். இது ஒரு அடல்ட் படம்.

கொஞ்சம் ஏமாந்தாலும் B Grade படமாகி இருக்க வேண்டியது, திரைக்கதை மற்றும் பாத்திரங்களின் நடிப்பால் அசத்தலான படமாக வந்து இருக்கிறது.

இது போல படங்கள் தமிழில் வந்தால்… நினைத்துப் பார்க்கிறேன்… இங்கே உள்ளவர்கள் எப்படியெல்லாம் குதிப்பார்கள் என்று 🙂

ஆனாலும், இது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவரப் போவதாக படித்தேன். ரீமேக் அல்ல டப்பிங்.

இத்தனை படமா பார்த்தீங்க!! என்று பயந்துடாதீங்க.. எனக்கு படம் பார்ப்பது ஒரு Passion.

நல்ல படமாக இருந்தால் வார இறுதியில் ஒரே இரவில் [விடியும் வரை] 5 படம் என்றாலும் சலிக்காமல் பார்ப்பேன் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. நண்பா கிரி
  ரொம்ப விரிவான விமர்சனம்
  மிக சிறப்பான பார்வை மற்றும் அலசல்….
  நன்று….

 2. “விடியும் முன்” திருட்டு படம் என்பதை விட. தமிழில் ரீமேக் செய்த படம் என்று கூறலாம். படம் நன்றாகவே இருந்தது.

 3. எப்படி கில்லாடி உங்களால மட்டும் முடியுது. வர்ற எல்லா படத்தையும் விடாம பார்க்குறிங்க. நெறைய பொறுமை வேணும். உங்ககிட்டே அது நெறையவே இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க ஏன் உங்க கலைத்திறமைய வச்சு ஒரு குறும்படம் எடுக்கக்கூடாது ? 🙂

 4. //இந்தப் படம் தழுவல் இல்லை, படத்தில் 90% காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு கூடுதலாக தமிழுக்காக காட்சிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அறிமுக இயக்குனராக இருக்கும் போது இத்தனை வருடத்தில் ஒரு சொந்தக் கதை கூடவா இவருக்கு தோன்றவில்லை!!//

  🙁

 5. கிரி.. தங்களின் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் உண்மையில் வியப்பை தருகிறது.. (வார இறுதியில் ஒரே இரவில் [விடியும் வரை] 5 படம் என்றாலும் சலிக்காமல் பார்ப்பேன்) SAME BLOOD … ஆனால் எனக்கு படங்களுக்கு பதில் டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்…. அதிகாலை அலாரம் வைத்து கண் விழித்து பரிட்ச்சைக்கு படித்தது கிடையாது… ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்த பல டெஸ்ட் மேட்ச் போட்டிகளை பார்த்துள்ளேன்… அந்த வழக்கம் இன்றும் உண்டு.. ஆனால் அன்று போல் இல்லை…

 6. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கௌரிஷங்கர் அப்படி சொல்லலாம்.. அதோட இந்த படத்தில் இருந்து கதையை எடுத்தோம் என்று பெயர் போடும் போது கூறினால் 🙂

  @விஜய் ஒரு வெங்காயத் திறமையும் இல்லை.. 🙂 நீங்க வேற.. எனக்கு ரசிக்கப் பிடிக்கும் அவ்வளோ தான்.. இதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் 🙂

  @யாசின் கிரிக்கெட் பிடிக்கும் ஆனால் விடிய விடிய பார்க்க விருப்பமில்லை.. வார இறுதி என்றால் அது கூட ஆட்டம் நன்றாக இருந்தால், இந்தியா ஜெயிக்கிற மாதிரி இருந்தால் பார்ப்பேன் 🙂

  @ராஜ் ரொம்ப நன்றி. நான் இந்தப் பதிவை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே ஒருவர் இதற்க்கான லிங்க் கை கொடுத்தார். நான் என்னுடைய தள ஃபேஸ்புக் பக்கத்திலும் இதைக் குறிப்பிட்டு இருக்கிறேன். முதலில் வெளியிட்ட காணொளியை நீக்கி பின் திரும்ப சேர்த்தார்கள்.

  நினைவு வைத்துக் கூறியதிற்கு நன்றி 🙂

 7. விடியும் முன் படம் dvd காக waiting தல
  நண்பர் ஒருவர் பாத்துட்டு ரொம்ப slow நு சொன்னார்

  escape plan நேத்து தான் பாத்தேன் ஒரு டைம் பாக்கலாம் ரகம்

  – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here