மெட்ரோ [2016] | மிரட்டல்

4
மெட்ரோ Metro Tamil Movie Poster

மெட்ரோ” திரைப்படம் பார்த்ததும் நான் நினைத்தது “அடடா! வாய்ப்பிருந்தும் படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் விட்டுவிட்டேனே!” என்று தான்.

சமீப நாட்களில் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த படம். Image Credit

படத்தின் கதைக்காக மட்டுமல்ல, இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, உருவாக்கம் (Making) முக்கியமாகப் படத்தின் ஒப்பனை இல்லாத இயல்பு தன்மை.

மெட்ரோ

செயின் திருடர்களைப் பற்றிய கதை என்றாலும், இதிலும் அன்பான குடும்பம், உறவுகள் என்று அனைவரும் விரும்பும் இன்னொரு அழகான பக்கமும் உள்ளது.

நடுத்தர மக்களுக்கே உரித்தான குணம் ஒன்றுள்ளது. அடுத்தவனைப் பார்த்து நாமும் அதே போல வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பது.

முடியாவிட்டால் அதை நினைத்து புலம்புவது.

சிலர் ஆசை இருந்தாலும் குடும்பச் சூழ்நிலை உணர்ந்து மனதினுள் போட்டு பூட்டி விடுகிறார்கள். சிலர் அதை அடைய எண்ணி தவறான வழிகளில் சென்று வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.

அப்படி ஒரு கதை தான் “மெட்ரோ”. அதோட மற்ற தகவல்களும் விரிவாக வந்துள்ளன.

ஒரு நடுத்தரக் குடும்பம், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, அம்மா, மூத்த மகன் பத்திரிகையில் வேலை, இரண்டாவது மகன் கல்லூரியில் படிக்கிறான்.

கல்லூரி படிக்கும் மகனுக்கு வழக்கமாகத் தற்போதைய பசங்களுக்கு இருக்கும் KTM பைக், iPhone, iPad ஆசைகள்.

அப்பா குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கண்டிக்க, தவறான சகவாசத்தால் எடுக்கும் முடிவு தான் செயின் திருட்டு.

முதல் மகன் ஷிரிஷ் பொறுப்பான மகன் / அண்ணன். ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கே உரிய கதாபாத்திரம், அசத்தலாகப் பொருந்துகிறார்.

இவருடைய நட்பான அப்பா (பெயர் நினைவில்லை) அம்மா துளசி பொருத்தமான தேர்வு.

அப்படியே ஒரு நடுத்தரக் குடும்பத்தைப் பிரதிபதிலிக்கிறார்கள்.

பொறுப்பான அப்பா

ஷிரிஷ் அப்பா நட்பானவர் அதோட நடைமுறை எதார்த்தத்தை உணர்ந்தவர். பாசத்தில் அம்மா கூறும் போது அதற்கு அப்பா “பசங்களோட ஆசையை நிறைவேற்றி வைக்கலாம் ஆனால், பேராசையை அல்ல.

அது அவர்களைக் கெடுப்பது போல ஆகி விடும்” என்று கூறுவார்.

தம்பிக்காகப் பைக் வாங்க அலுவலகத்தில் ஷிரிஷ் கடன் வாங்குவதாகக் கூறும் போது, “கடனெல்லாம் வேண்டாம், கடன் வாங்கினா வாழ்க்கையில் நிம்மதி போய்டும். கடன்காரன் வீட்டுக்கு வருவான்” என்று கூறுவது பொறுப்பான அப்பாவுக்கான உதாரணம்.

கடனால் நான் பட்ட சிரமம் கண் முன்னால் வந்து சென்றது.

செயின் பறிப்பு குறித்த தெளிவான ஆய்வு

இயக்குநர் செயின் திருட்டுக் குறித்துச் செம்ம ஆராய்ச்சி செய்து இருப்பார் போல. தகவல்கள் படு கலக்கலாக உள்ளது.

திருட்டு எப்படி நடைபெறுகிறது? எப்படிச் செய்கிறார்கள்? அடித்த நகையை என்ன செய்கிறார்கள்? அதில் கிடைக்கும் பங்கு எவ்வளவு?

இதில் உள்ள தொடர்புகள் என்ன? தனி நபராகச் செய்யப்படுகிறதா அல்லது குழுவா? இவர்களின் கொள்கைகள் என்ன? இவர்களுக்கும் காவல் துறைக்கும் உள்ள தொடர்பு என்று பிரிச்சு மேஞ்சு இருக்காங்க.

சும்மா செயின் திருட்டு என்று மட்டும் மேலோட்டமாகக் காட்டாமல், அதில் உள்ள பின்னணியையும் காட்டுவதே படத்தை வேறு கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.

பாபி சிம்ஹா

செயின் திருடர்கள் குழு தலைவராகப் பாபி சிம்ஹா குணா என்ற பெயரில்.

படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் குணா என்ற பெயரை நம் மனதில் பதிக்க வைத்து விட்டார்.

சத்யாவிடம் திருட்டுக்கும் கொள்ளைக்கும் வித்யாசம் கேட்கும் இடம் அதகளம் 🙂 .

பாபி சிம்ஹா போடுகிற திட்டங்களும், அவரிடம் செயின் பறிக்க ஆள் கேட்டு வேறு மாநிலத்தில் இருந்து வருபவரிடம் அவர் பேசும் முறையும் செமையாக இருக்கிறது.

இவருடன் “சீனியர்” என்ற முறையில் இருக்கும் ஒரு கதாப்பாத்திரம் சுவாரசியமான கதாப்பாத்திரம் 🙂 .

பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் புதுசு. ரொம்ப நன்றாக நடித்துள்ளார்கள்.

செயின் பறிப்புக் குழுவில் வருகிறவர்கள் ஒவ்வொருவரையும் உண்மையாகவே அங்கே இருந்து அழைத்து வந்து விட்டார்களோ! என்று நினைக்கும்படி உள்ளது.

சத்யா

புதுமுகம் சத்யாபணத்தாசையின் வெறியில் இருப்பதும், அதையொட்டி வேகமாகச் சிந்திப்பதும் திட்டமிடுவதும் என்று மிரட்டல் நடிப்பு.

குரலும் உயரமும் மட்டும் குறையாகத் தோன்றியது. “ஓட்ட பஸ், காலேஜ் எல்லாம் எனக்குப் பிடிக்கல இது தான் (திருட்டு , பணம்) பிடிச்சுருக்கு” என்று கூறுவான்.

இடைவேளை காட்சியில் பையன் பின்னி இருக்கான். மிரட்டலாக இருந்தது.

ஷிரிஷ்

புதுமுகம் ஷிரிஷ் பொறுப்பான மகன் கதாப்பாத்திரத்துக்கு அம்சமாகப் பொருந்துகிறார் ஆனால், அவர் எளிதாக மற்றவர்களை அடிப்பதும், சமாளிப்பதும், அனுபவம் உள்ள நபர் போலச் சண்டை போடுவது எதார்த்தத்தை மீறியுள்ளது.

அதோடு இவர்கள் கும்பலில் உள்ளவர்களிடம் செல்வதும் அவர்களைத் தூக்குவதும், அடிதடி போடுவதும் நம்புகிற மாதிரி இல்லை.

எப்படி ஒருத்தனை தூக்குகிறார்கள், அவனை எப்படி அங்கே வைத்து இருக்க முடியும்? என்பது போன்ற லாஜிக்கல் கேள்விகள் வருகின்றன.

சென்றாயன்

ஷிரிஷ் நண்பனாக “சென்றாயன்”. கொஞ்சம் மிகை நடிப்புத் தெரிந்தாலும், இறுதிச் சண்டை உட்பட சில காட்சிகளில் சிறப்பான நடிப்பு.

துளசியிடம் பாசமாக இருப்பதும், அவரின் அன்புக்காகவே அனைத்தும் செய்யத் துணிவதும் பொருத்தமான சித்தரிப்பு.

மாயா

ஷிரிஷ் ஜோடியாக மாயா நடித்துள்ளார்.

சில காட்சிகளில் மட்டுமே வருகிறார், டூயட் இல்லை. இயக்குநர் கதைக்குத் தேவையான காட்சிகளை மட்டுமே வைத்தாக கூறியிருந்தார், மிகச் சரி.

மற்ற திரைப்படங்கள் போல சம்பந்தமில்லாமல் வராமல் அலுவலகத் தோழியாக வருவது இயல்பாக நம்பும்படியுள்ளது.

கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே மாயா பயன்படுத்தப்பட்டுள்ளார்.

படத்துக்கு மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும்

படத்தின் ஒளிப்பதிவு அவ்வளவு அசத்தலாக இருக்கிறது. நீர்ப்பறவை, விடியும் முன் படத்துக்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த ஒளிப்பதிவு.

படத்தில் இருட்டு அதிகளவில் வருகிறது. இருட்டை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார் உதயகுமார்.

Read: “நீர்ப்பறவை” – அசத்தலான ஒளிப்பதிவு

Read: விடியும் முன் [2013] – செம த்ரில்லர்!

படம் இரண்டு மணி நேரம். பெரும்பாலான காட்சிகள் Slow Motion ல் உள்ளது. இதைச் சாதாரணமாக எடுத்து இருந்தால்,  25 நிமிடங்கள் குறைந்து இருக்கும் 🙂 .

படத்துக்குக் கூடுதல் பலம் இவ்வகை Slow Motion காட்சிகள் என்பது என் கருத்து. நான் ரொம்ப ரசித்தேன். படத்துக்கு ஒரு Richness கொடுத்தது.

அதோட படத்தை ஸ்டைலிஷாகவும், த்ரில்லாக வைத்து இருக்கவும் ஒரு பயத்தைக் கொடுக்கவும் உதவி இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியின் கோணமும் ரசிக்கும் படி இருந்தது. வழக்கமாக எல்லோரும் வைக்கும் கோணமாக இல்லாமல் வேறு விதமாக இருந்தது.

சென்னையைக் கழுகுப் பார்வையில் காட்டும் போதும், தூரத்தில் உள்ள இடத்தை Zoom செய்து காட்டுவதும் கலக்கல்.

சென்னையே எதோ வெளிநாடு போல உள்ளது.

நிறையக் காட்சிகள் ஹெலிகேம் பயன்படுத்தி எடுத்து இருக்கிறார்கள்.

எப்படி இவ்வளோ உயரம் க்ரேன் வைத்தார்கள் என்று குழம்பினேன் 🙂 . ஹெலிகேமில் சென்னையைப் பார்க்கும் போது கலக்கலாக இருக்கிறது.

படத்தொகுப்பு (Editing)

அனாவசியக் காட்சிகள் என்று எதுவுமே இல்லை. கச்சிதமாக படத்தொகுப்பு  செய்து இருக்கிறார் ரமேஷ் பாரதி.

திரைப்படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், படத்தொகுப்பு சரியில்லை என்றால் மொத்தமும் காலி.

மிரட்டும் பின்னணி இசை

ஒளிப்பதிவு அசத்தல் என்றால் அதை மேலும் ஒரு படி தூக்கிக் காட்டியிருக்கிறது பின்னணி இசை.

ஒரு த்ரில் படத்துக்குப் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியிருக்கிறது. இரவு காட்சிகள், துரத்தல் காட்சிகள் என்று ஒவ்வொரு இடத்திலும் மிரட்டி இருக்கிறார் ஜோகன்.

குறிப்பிட்ட  ஒரு பின்னணி இசை மட்டும் “புதுப்பேட்டை” பின்னணி இசையை நினைவுபடுத்தியது.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கலக்கலான இசை. இரு மான்டேஜ் பாடல்கள் அதிலும் ஒன்று சிறியது.

உருவாக்கம், ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசைக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன், திரும்பவும் பார்ப்பேன்.

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்

ஒரு படம் ரொம்பப் பிடித்தால், பலருக்குப் படம் குறித்து அதிகம் அறிமுகம் இல்லாமல் இருந்தால், அந்தப் படம் குறித்துத் தேடி தகவல்கள் பெறுவது வழக்கம்.

ராஜீவ் கண்டல்வால் நடிப்பில் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் வெளிவந்த இந்தி படம் “Aamir”. இப்படத்தைத் தமிழில் “ஆள்” படமாக மறு உருவாக்கம் செய்தது தான் ஆனந்த கிருஷ்ணனின் முதல் படம்.

இதற்கும் இசை ஜோகன், ஒளிப்பதிவு உதயகுமார், படத்தொகுப்பு ரமேஷ் பாரதி.

இப்படம் உருவாக்கம் சிறப்பாக இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இப்படம் இதனோட இயல்பு தன்மைக்காகப் பிடித்தது ஆனால், படம் கவரவில்லை.

தடை போட்ட தமிழக தணிக்கைக் குழு

“மெட்ரோ” படத்துக்காக இயக்குநர் தமிழ்நாடு தணிக்கை குழுவிடம் படாதபாடு பட்டு இருக்கிறார்.

இப்படம் கண்டிப்பாக U கிடைக்காது என்பதால் U/A வாவது கிடைக்கும் அதிகபட்சம் A கொடுத்து விடுவார்கள் என்று கதைக்குப் பொருத்தமாக “மெட்ரோ” என்று வைத்து இருக்கிறார். U/A, A க்குத் தமிழில் வரிவிலக்குக் கிடையாது.

எவ்வளவோ முயன்றும் படத்துக்கு A கூடக் கொடுக்காமல் தடை செய்து விட்டார்கள்.

பின் பாம்பே தணிக்கை குழுவிடம் மறு முறையீடு செய்து ஒரு காட்சி கூட நீக்கப்படாமல் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

செயின் பறிப்பதை விளக்கமாகக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத் தவிரத் தடை செய்யப் படத்தில் குறை கூறும் ஒரு விசயம் கூட இல்லை, போதை மருந்து தவிர்த்து.

ஒரு படத்தை ஒவ்வொருவரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியம்.

இப்படத்தைச் செயின் பறிப்பதை சொல்லித்தரும் படமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒவ்வொருவரும் இப்படத்தைப் பார்த்து குறிப்பாகப் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம் என்று உணரலாம்.

இப்படத்தைப் பார்த்து செயின் திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று செய்திகளில் வந்தது.

இதே போல எதைச் செய்யக் கூடாது என்று பலர் எச்சரிக்கையாகி இருக்கலாம் என்பது செய்திகளில் வராத விசயமாக இருக்கலாம்.

தலைவர் “கபாலி படம் நியாயமாக U/A தான் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால், U கொடுத்தார்கள்.

இதில் செயின் பறிப்பு போன்றதை சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் வன்முறை இருந்தது. இதுவே தணிக்கைக் குழுவின் பாரபட்சம்.

A சான்றிதழ் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதைத் தணிக்கை குழு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

மக்களுக்குச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

நியாயமான கோரிக்கை. இதைத் தனிநபராகச் செய்ய முடியாது, தணிக்கை குழு தான் செய்ய வேண்டும்.

A  என்றாலே பிட்டு படம்

A சான்றிதழ் கிடைத்த பிறகு பலர் இது “பிட்டு” படமா என்று கேட்டார்களாம். இவர் வீட்டிலேயே கேட்டு இருக்கிறார்கள். வருத்தமாக இருந்தது.

A சான்றிதழ் இதற்கு மட்டுமே கொடுக்கப்படுவதில்லை. வன்முறை, போதை, ஹாரர் உட்படப் பல்வேறு காரணங்களுக்காகக் கொடுக்கப்படுவது.

பழைய ஆங்கில, மலையாளத் திரைப்படங்கள் “A” என்றாலே பிட்டுப் படம் என்று நினைக்க வைத்து விட்டது.

இசையும், ஒளிப்பதிவும், உருவாக்கத்தையும் திரையரங்கில் பார்த்து இருந்தால், அனுபவமே வேறாக இருந்து இருக்கும்.

வாய்ப்பு இருந்தும், “மெட்ரோ” படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் இருந்து விட்டேனே என்று ஏமாற்றமாக இருக்கிறது 🙁 .

சிலர் படத்துக்குக் கொடுக்கும் பில்டப் பார்த்தால், படத்தை மிரட்டலாக எடுத்து இருப்பார்கள் என்ற எண்ணம் தரும். சென்று பார்த்தால், படு கேவலமாக இருக்கும்.

இது போல நிறைய ஏமாந்ததால் இதைத் தவற விட்டுட்டேன். புலி வருகிறது கதையாகி விட்டது.

பொய்யான பில்டப்புகளால் “மெட்ரோ” போன்ற உண்மையாகவே சில நல்ல படங்களும் பாதிப்படைந்து விடுகிறது.

சிரமப்பட்டு எடுத்து பலரின் கவனத்திற்குப் போகாமல் இருக்கும் போது தான் இதனுடைய வலி தெரியும். இருப்பினும் “மெட்ரோ” ஓரளவு நன்றாகவே ஓடியது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததும் படம் எனக்கு ரொம்பப் பிடித்தற்கான காரணங்களுள் ஒன்று என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தணிக்கை துறை விரைவில் தணிக்கை முறையை மாற்றப் போகிறதாம்.

இனி எந்தக் வெட்டும் கொடுக்காமல், 13+ 15+ 18+ போலத் தணிக்கை கொடுக்கப் போகிறார்களாம். ஒரு வகையில் நல்லது ஒரு வகையில் சர்ச்சையைக் கொண்டு வரும். பார்ப்போம் என்ன ஆகிறது என்று.

படத்தை அனைவரும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

குறிப்பாக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும். தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

“மெட்ரோ” குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் 🙂 .

Directed by Ananda Krishnan
Produced by Jaya Krishnan, Anandakrishnan
Written by Anandakrishnan
Starring Shirish, Bobby Simha, Sendrayan, Nishanth
Music by Johan
Cinematography N. S. Uthaya Kumar
Edited by M. Ramesh Baarathi
Production company E5 Entertainments, Metro Productions
Release dates 24 June 2016
Running time 119 minutes
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. தெளிவான விமர்சனம் கிரி. திரையில் பார்த்தால் படம் பட்டாசாக இருக்கும் என நினைக்கிறேன்.. இதுபோல படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு குறைவாக இருப்பதால், பெரிய படங்களுடன் போட்டி போட முடியவில்லை.. நல்ல கலைஞர்கள் சிறிது நாட்களுக்கு பின் காணாமல் போகி விடுகின்றனர்.. படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.

 2. ஏற்கனவே பார்த்து விட்டாலும், உங்கள் விமர்சனம் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டுகிறது. Tentkotta இருக்க கவலை ஏன் ? 🙂

  நீர்ப்பறவை – அசத்தலான ஒளிப்பதிவு என்று நீங்கள் குறிப்பிட்டதற்காகவே பார்த்தேன். ஏமாற்றவில்லை 🙂

  திரை விமர்சனத்தில் கில்லாடி ஆகி விட்டீர்கள் :-))

 3. @யாசின் அவசியம் பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.

  @ஸ்ரீநிவாசன் அவசியம் இன்னொரு முறை பாருங்க.. ரசிக்க நிறைய காட்சிகள் உள்ளன.

  நீர்ப்பறவை HD Print க்காக காத்துட்டு இருக்கிறேன். திரும்ப ஒரு முறை பார்க்கணும்.

  எனக்கு திரை விமர்சனம் சரியா எழுதத் தெரியாது ஸ்ரீநிவாசன் (தன்னடக்கமல்ல) . எனக்குப் பிடித்த திரைப்படங்களை மட்டும் இது போல விளக்கமாக எழுதுவேன் அவ்வளவே 🙂

 4. இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இன்னமும் பார்க்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here