வட சென்னை பெரிய தலை ராஜன் அவரோட கையாள்கள் செந்தில் குணா.
இவரைக் கொன்று அடுத்தக் கட்டத்துக்கு வரும் இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக்க, நடுவில் சம்பந்தமே இல்லாமல் விதிவசத்தால் வந்து மாட்டுபவன் அன்பு. Image Credit
இவர்களுடன் பயணிக்கும் அன்பு இறுதியில் என்ன ஆகிறான் என்பது தான் வடசென்னை.
இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் “நான் இக்கதையை உருவாக்கிய போது ஒரு படமாக நினைத்துத் தான் உருவாக்கினேன்.
ஆனால், அதனுடைய கிளைக்கதைகள், கதாப்பாத்திரங்களைப் பற்றி விவரிக்கும் போது என்னால் ஒரு படத்தில் அடக்க முடியவில்லை.
எனவே, இதைப் பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டோம். முதல் பாகத்தின் வரவேற்பை பொறுத்து மற்ற பாகங்களைத் தொடரலாமா என்பதை முடிவு செய்வோம்” என்று கூறியிருந்தார்.
இவர் கூறியது போலப் படத்தில் கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை, அவர்கள் எப்படி வளர்கிறார்கள் என்பதை ஒரு படத்தில் நிச்சயம் விளக்க முடியாது என்பது புரிகிறது.
சிறைச்சாலையும் கதாப்பாத்திரங்கள் எண்ணிக்கையும்
படத்தின் முதல் பாதிப் பெரும்பாலும் சிறைச்சாலை பின்னணியிலேயே செல்கிறது.
இங்கே இருந்து ஒவ்வொருவரின் பகுதியும் விளக்கப்படுகிறது. சுருக்கமாக முதல் பாகம் முழுக்கக் கதாப்பாத்திரங்களை விவரிப்பதில் தான் செல்கிறது.
கதாப்பாத்திரங்கள் அதிகம் என்பதால், யார் யார் பெயரைக் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தது.
படம் துவங்கி ரொம்ப நேரம் கழித்தே எனக்கு யார் யார் என்னென்ன என்று புரிந்தது.
மூன்று கால கட்டங்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமே ஒரு ரணகளம் 😀 .
வட சென்னை உடல்மொழியை அசால்ட்டாகக் கொண்டு வந்து இருக்கிறார். “என்னடா தம்பி!” என்று கேட்டு ஜெர்க்காக்கி ஆரம்பிக்கிறார்.
தனுஷ் பைனாகுலர் வழியாகப் பார்த்து விட்டு, அவருடைய நண்பனை “உனக்கு ஏதாவது தெரியுதா?” என்று கேட்டுவிட்டு அவர் ஒன்றும் தெரியலை என்றதும் தனுஷ் கூறும் பதிலுக்குத் திரையரங்கில் சிரிப்பலை 🙂 .
தனுஷ் மூன்று காலக் கட்டங்களில் வருகிறார். மூன்றுக்கும் ஒவ்வொருவிதமான உடல் மொழி, முக உடல் அமைப்பு என்று கலக்கியிருக்கிறார்.
சின்ன வயதை விடப் பெரியாளானதும் அவருடைய முகபாவனைகள் பேச்சு அசத்தல்.
சென்னைத்தமிழ்
தனுஷ் திறமை என்னவென்றால், சென்னை மதுரை மொழி வழக்கை அப்படியே பேசுவார் என்பது. மிகச் சிறந்த உதாரணம் புதுப்பேட்டை, ஆடுகளம்.
எனக்கு எப்போதுமே தனுஷ் திறமை மீது வியப்பு தான்.
ஆனால், புதுப்பேட்டையில் இருந்த சென்னை வழக்கு மொழி, உடல் மொழி இதில் ஒப்பீட்டளவில் குறைவு தான்.
புதுப்பேட்டையில் எங்கேயோ இருப்பார். நான் இதில் இன்னும் சிறப்பாக எதிர்பார்த்தேன், சிறிது ஏமாற்றம் தான் ஆனால், நடிப்பில் குறை வைக்கவில்லை.
சிறைச்சாலை காட்சிகளே பாதிப்படத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன.
இதை வெற்றிமாறன் நியாயப்படுத்தினாலும் இதைச் சுருக்கி இருக்கலாம் என்ற எண்ணம் வந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை ஆனால், சிறையில் நடப்பதை புட்டு புட்டு வைத்து இருக்கிறார்.
கிஷோர் சமுத்திரக்கனி பவன்
கிஷோர் இது போன்ற கதாப்பாத்திரத்துக்கு என்றே உருவானவர் போல அப்படியே பொருந்துகிறார். பொல்லாதவனிலேயே தன்னை நிரூபித்து விட்டார்.
சமுத்திரக்கனி, பவன் போன்றோரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள். அமீருக்கு குறைந்த நேரமே என்றாலும், தன்னுடைய இருப்பை நியாயப்படுத்தி இருக்கிறார்.
இத்தனை கதாபாத்திரங்களை வைத்து, பெரிய கதையை எடுக்கும் போது ஒரு பாகத்தில் முடிக்க முடியாது என்பது போல, பல பாகங்களாக எடுக்கும் போது சில காட்சிகள் கூடுதலாக வந்து விடும் என்பதும் உண்மையோ!
அரங்கமைப்பு
படத்தில் அரங்கமைப்பு இன்னும் சிறப்பாக இருந்து இருக்க வேண்டும் என்று கருதுகிறேன், குறிப்பாகச் சிறைச்சாலை காட்சிகள். சில இடங்கள் இயல்புத்தன்மை இல்லாதது தெரிகிறது.
இதை உண்மையான இடத்தில் எடுக்கும் போது உள்ள சிக்கல்களும் புரிகிறது.
பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் நாமே அங்கே உலவுவது போல இருக்கும். இதற்குக் காரணம், அதில் பெரும்பாலும் Live Locations.
ஆன்ட்ரியாக்கு முக்கியமான கதாப்பாத்திரம் ஆனால், அவரால் சிலவற்றைக் குணாக்குத் தெரியாமல் செய்ய முடியுமா? என்ற கேள்விகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ரணகளமான வில்லனாகவே பார்த்துப் பழகிய டேனியல் பாலாஜியை வேறு மாதிரி சுற்ற வைத்து விட்டார்கள்.
சுருக்கமாக, படம் வழக்கமான பழிவாங்கல் கதை தான் அதை விரிவாகக் கூறி இருக்கிறார்கள்.
பின்னணி இசையில் குறிப்பிட்ட சில இடங்களில் வரும் இசையில் மட்டும் சந்தோஷ் நாராயணன் கவர்கிறார். படம் முழுக்க என்றால், நான் சிறப்பாக உணரவில்லை.
அடித்தளம் மட்டுமே!
சிறுவர் சிறுமிகளுடன் படத்தைப் பார்த்து விடாதீர்கள் (A சான்றிதழ் என்பதால் முடியாது).
வன்முறை காட்சிகளுக்காகக் கூறவில்லை, கெட்ட வார்த்தைகளுக்காக. பார்த்தால், இவர்களும் விளையாட்டாகப் பேசும் வாய்ப்புள்ளது.
இப்படம் முழுக்கப் பின்னால் வரப்போகும் பாகங்களுக்கான அடித்தளம் மட்டுமே!
எனவே, இக்கண்ணோட்டத்தில் படம் பார்க்க வேண்டும். சிறு சிறு சுவாரசியங்களாகப் படம் முழுக்க நம்மை இணைத்துக் கொண்டு செல்கிறார்கள்.
அடுத்த பாகத்தை எதிர்பார்த்து இருக்கிறேன் 🙂 .
கொசுறு
“புதுப்பேட்டை” படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்பது என்னுடைய பல வருட விருப்பம்.
ஏதோ சூழ்நிலைகளால் தள்ளிப்போய்க்கொண்டே உள்ளது. வட சென்னை பார்த்ததும், மீண்டும் புதுப்பேட்டை நினைவுகள். விரைவில் எழுத வேண்டும் 🙂 .
பிற்சேர்க்கை – புதுப்பேட்டை [2006] “The King Of Gangster Movies”
கிரி, வழக்கம் போல இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை.. பார்த்த நண்பர்கள் எல்லோரும் நீங்கள் குறிப்பிட்டது போல் கெட்ட வார்த்தைகள் அதிகம் இருப்பதாகவும், படமும் பக்காவாக இருப்பதாகவும் சொன்னார்கள்.. படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்ல முடியாததால் தற்போது பார்ப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.. படம் இரண்டாம், மூன்றாம் பாகம் வரும் என நண்பர்கள் கூறினார்கள்…
நடிகர் தனுஷின் வளர்ச்சி நிச்சயம் அபரிதமான ஒன்று.. மிக திறமையான நடிகர்.. திறமையை நன்றாக வளர்த்து கொண்ட நடிகர்.. நடிகர் என்று மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு என மற்ற துறைகளிலும் அவரின் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது.. (இத்தனைக்கும் தனுஷ் எனக்கு பிடிக்காத நடிகர்).. சம காலங்களில் இவருடன் பயணித்த சிம்புவை விட தனுஷ் பல அடிதூரம் உயரம் சென்று விட்டதாக நான் கருதுகிறேன்.. வாழ்த்துக்கள் தனுஷ்.. மேலும் பல உயரங்கள் தொட!!!!
கிரிக்கெட்டில் எனக்கு குமார சங்கக்கார பிடிக்காத வீரர்.. ஆனால் அவரின் விக்கெட் கீப்பிங் ரொம்ப பிடிக்கும்.. (தோனிக்கு மேல.. ) அதை விட அவரது பேட்டிங்.. சொல்லவே வேண்டாம்.. மிகவும் சிறப்பாக இருக்கும்.. ஒரு நாள் / T20 போட்டியை விட டெஸ்ட் போட்டிகளில் பார்த்து கொண்டே இருக்கலாம்.. அந்த COVER DRIVE கண்ணுக்குள்ளே இருக்கிறது.. அவர பிடிக்கல, ஆனால் அவரோட ஆட்டத்தை பிடிச்சிருக்கு!!! இதற்குயெல்லாம் காரணம் தெரியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின் சங்ககாரா பிடிக்கலையா..! வியப்பா இருக்கு! 🙂
எனக்கு இந்தியா இலங்கை உலகக்கோப்பை போட்டி இறுதியில் நம்மிடம் தோற்ற பிறகும் புன்னகை மாறாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தது இன்னும் கண்ணுக்குள்ளே உள்ளது.
எப்போதுமே கூலாக இருப்பார்.