பொறியாளன் [2014]

8
பொறியாளன்

 

ந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் “இங்கி பிங்கி பாங்கி” போட்டு பத்தோட பதினொன்னு அதோட இது ஒண்ணுன்னு தான் பொறியாளன் பார்க்க ஆரம்பித்தேன்.

பொறியாளன்

பொறியாளராக இருக்கும் ஹரிஷ், தான் பணி புரியும் கட்டிட நிறுவனத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாகத் தானே நிறுவனம் துவங்கி கட்டிடம் கட்டி அதை விற்பனை செய்ய முடிவெடுக்கிறார். Image Credit

நண்பர்கள் உதவியோடு இரண்டு கோடி முதல் போட்டு நிலம் வாங்கி வேலை ஆரம்பிக்கும் போது, ஒருத்தர் “இது என்னுடைய இடம்” என்று ஆதாரத்துடன் வர, திகிலாகி நிற்கிறார்கள்.

இரண்டு கோடி என்ன இரண்டு லட்சமா! சமாளிக்க? இடையில் கந்து வட்டிப் பிரச்சனை. இரண்டு நாளில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நெருக்கடி! என்ன ஆகிறது இறுதியில்..! இது தான் கதை.

இது தான் நடக்கப் போகிறது என்று இறுதிக் காட்சிவரை நம்மால் ஊகிக்க முடிகிறது ஆனால், படம் நெடுக அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தைப் பதட்டத்தைக் கொண்டு சென்றது பரபரப்பாக இருக்கும்.

ஹரிஷ்

கதாநாயகனாக நடித்து இருக்கும் ஹரிஷ் செம்ம நடிப்பு. ரொம்ப இயல்பாக, மெச்சூர்டா நடித்து இருக்கிறார். ஆள் பார்க்கவும் அம்சமாக இருக்கிறார்.

துள்ளும் இளமை வேகம் ஆனால், அதில் பதட்டப்படாத பக்குவம். ரொம்ப ரொம்பப் பிடித்தது.

நடுத்தரவர்க்கப் பையனாகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். பில்டப் எதுவும் இல்லாதது பெரும் ஆறுதல். 

“சிந்து சமவெளி” உட்பட ஐந்தாறு படங்களில் நடித்து இருக்கிறார் ஆனால், இதில் எந்தப் படமுமே நான் பார்த்தது இல்லை.

25 வயது தான் ஆகிறது, இந்த வயதுக்கே உண்டான துறுதுறுப்பு, வேகம் என்று இந்தக் கதாப்பாத்திரம் செமையாகப் பொருந்தி இருக்கிறது. 

பேசுகிறவர்களிடம் எல்லாம் அண்ணே! அக்கா!! என்று பேசி எளிதில் கலந்து விடுகிறார்.

கட்டுமானம் & ரியல் எஸ்டேட் 

ஐடி துறை பற்றிய படங்களாகப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கும் வேளையில் கட்டிட வேலை, ரியல் எஸ்டேட் என்று போகும் போது “இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் ஒருவர் சொல்வாரே.. “ஜி ப்ரெஷ்ஷா இருக்கு ஜி” என்று அது போல இருக்கு 🙂 .

நிலம் வாங்குவது, அதில் நடக்கும் ஊழல்கள், தரகு வாங்கி ஏமாற்றுவது என்று அந்தத் துறையில் நடைபெறும் பிரச்சனைகள், ஏமாற்று வேலைகள் போன்றவை மேலோட்டமாக வருகிறது, அழுத்தமான காட்சிகள் இல்லை.

இந்தத் துறை பற்றிச் சராசரி நபருக்கு தெரியாத விசயங்களையும் காட்டி இருந்தால், இன்னும் சுவாரசியமாக இருந்து இருக்கும்.

படத்தின் பெயர் “பொறியாளன்” என்றாலும் ஒரு பொறியாளர் பணியாகக் காண்பிக்கப்படும் காட்சிகள் ரொம்பக் குறைவு.

இது முழுக்க ரியல் எஸ்டேட், கந்து வட்டி அதில் நடைபெறும் பிரச்சனைகள் தொடர்பான கதை.

இப்படியா இரண்டு கோடியைக் கொடுப்பார்கள்? ஒரு கட்டிடம் கட்டி விற்பது என்ன அவ்வளவு எளிதா? கோடிக்கணக்கில் பணத்தை அடிக்கும் மோகன்ராம், அடியாள் துணை இல்லாமல் இருப்பது!! என்பது போல நிறைய லாஜிக் இடறல்கள் இருந்தாலும், படத்தின் வேகம் இவற்றை மறக்க வைக்கிறது.

வில்லன் அச்சுத குமார்

கந்து வட்டி மிரட்டி வசூல் பண்ணும் கதாப்பாத்திரத்தில் நடித்த அச்சுத குமார் தன் பங்கைச் சரியாகச் செய்து இருக்கிறார். பணம் வசூல் செய்ய எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்.

இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை ஏகத்துக்கும் பதட்டமடைய வைக்கிறார்.

என்ன நடக்குமோ? என்ன செய்து ஆரம்பிக்கப் போகிறாரோ என்ற பீதியிலேயே படம் செல்கிறது. இரவில் ஹரிஷ் வீட்டு எதிரே நிற்கும் போது என்ன ஆகுமோ! என்று திகிலாக இருக்கிறது.

இந்த இடத்தில் ஹரிஷ் வேண்டுகோள் விடுக்கும் நடிப்பு எதார்த்தம்.

இவருக்கு சீரியல் வெங்கட் டப்பிங் கொடுத்து இருக்கார்.

ஆடுகளம் நரேன், மயில்சாமி, டெல்லி கணேஷ் போன்றோர் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள்.

ஆடுகளம் நரேன் எப்படி நடித்தாலும் பிடிக்கிறது. அவர் நடித்தாலும் அது நடிப்பு போலவே தெரிவதில்லை. உங்களில் யாருக்காவது என்னைப் போலத் தோன்றி இருக்கிறதா?!

மோகன் ராம்

மகாநதியில் கமலிடம் “சார் இவனெல்லாம் பிராடு சார்.. இத்தனை கம்பெனி வைத்து இருப்பானா என்பதே சந்தேகம்! நாங்கெல்லாம் இருக்கும் போது எப்படிச் சார் இவன் கிட்ட மாட்டுறீங்க” என்று கேட்பாரே மோகன்ராம், இதில் இதற்கு அப்படியே மாற்றாக வருகிறார்.

இவருக்குச் சரியாகப் பொருந்தி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் ஏதாவது கூறி சமாளிக்கும் போது “நம்பிடாதே நம்பிடாதே” என்று நாம் வேண்ட வேண்டியதாகிறது 🙂 .

இடம் வில்லங்கம் என்று தெரியவந்து அலைந்து கொண்டு இருக்கும் நிலையில், அது வில்லங்கம் இல்லை என்று மோகன் ராம் ஆதாரத்துடன் கூற, “அப்ப பிரச்சனை எங்கே?!” என்று திரும்பப் பரபரப்பாகிறது.

நண்பர்கள்

ஹரிஷ் நண்பராக வருபவரும் இயல்பான நடிப்பு. ஹரிஷ் க்கு ஆதரவாக உடன் இருந்து அவர் உதவி செய்வது ரொம்ப நன்றாக இருக்கும்.

பணம் கேட்டவுடன் கொண்டு வந்து கொடுப்பது என்று நம் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

பணம் கொடுத்து உதவும் நண்பரும் பயத்தையும் தன் நண்பன் குடும்பம் பாதிக்கப்படப் போவதை நினைத்துப் பதறுவதும் என்று இயல்பான நடிப்பு.

ரஷிதா

“கயல்” பட நாயகி ரக்ஷிதா ஹரிஷ்க்கு ஜோடி. காதலைக் கூற வருகிறார் என்று நினைத்து ஹரிஷ் ஆர்வமாக இருக்க, இவர் வேறு ஒன்று கூறி பல்பு கொடுக்கும் போது சமாளிப்பது நன்றாக இருக்கும்.

இவருக்கு ஹரிஷை காதலிப்பது மட்டுமே வேலை, நடிக்க வேறு வாய்ப்பில்லை.

பணப் பிரச்சனை மற்றும் தாறுமாறான நெருக்கடியில் இருக்கும் போது தொண தொணன்னு பேசி ரக்ஷிதா இம்சை பண்ண, ஹரிஷ் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் சமாதானப் படுத்தவும் முடியாமல் இருக்கும் நெருக்கடியான நிலையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

இக்காட்சி பொல்லாதவனை நினைவு படுத்தியது.

ரக்ஷிதா வீட்டில் அவரது அப்பாவிடம் ஹரிஷ் பொறுப்பாகப் பேசுவது, தன்னுடைய நிலையைப் பதட்டப்படாமல் விளக்குவது என்று ஹரிஷ் கதாப்பத்திரம் என்னை ரொம்பக் கவர்ந்து விட்டது.

இசை

ஐட்டம் பாடல் “ஆட்டமா தேரோட்டமா” பாடலை நினைவுபடுத்துகிறது. மற்றவை மாண்டேஜ் பாடல்களாக வருவதால் கவனத்தைப் பெறுகிறது.

GV பிரகாஷ், சைந்தவி, சுசித்ரா, ஹரிசரண், கானா பாலா  மற்றும் இந்திரா ரமணன் பாடியிருக்கிறார்கள். அனைத்துப் பாடல்களும் நன்றாக இருக்கிறது.

3+ நிமிடப் பாடல்கள் தான். அறிமுக இசையமைப்பாளர் ஜோன்ஸ்

பின்னணி இசை நன்றாக உள்ளது ஆனால், சில இடங்களில் பொல்லாதவன் பின்னணி இசை அப்படியே வருகிறது!!

குறிப்பிட்ட ஒரு பின்னணி இசையே பரபரப்பான காட்சிகளில் வருகிறது. நன்றாக இருந்தாலும், வேறு இசையையும் முயற்சித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு

“பொல்லாதவன்” வேல்ராஜ் ஒளிப்பதிவு இரவு நேரத்தில் சில இடங்களில் இயல்பான வெளிச்சமாக இல்லாமல் செயற்கை ஒளி இருப்பது உறுத்துகிறது.

கட்டிடம், மரத்தின் பின்னாடி ஒரு பெரிய விளக்கு வெளிச்சம் வரும். இந்தப் படமட்டுமல்ல  நிறையப் படங்களில் கவனித்து இருக்கிறேன்.

இது தவிர ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக உள்ளது, முக்கியமாக Lively யாக உள்ளது.

காட்சிகள் அனைத்தும் செட்டிங்ஸ் இல்லாமல் அப்படியே எடுக்கப்பட்டுள்ளதால் செயற்கைத் தன்மை இல்லாமல் பார்க்கவே விருப்பமாக இருந்தது.

எனக்குச் செட்டிங்ஸ் போட்டு எடுக்கப்படும் படங்கள் பிடிக்காது. இந்தப் படம் என்னைக் கவர இதுவும் ஒரு காரணம்.

பெரும்பாலும் ஒப்பனை இல்லாமல் (ரஷிதா தவிர) எல்லோரும் நடித்து இருப்பது ரொம்ப இயல்பாக இருக்கிறது. ஹரிஷ்க்கு ஒப்பனையே இல்லை அல்லது தெரியவில்லை.

உடை சினிமாத்தனமாக இல்லாமல் இருப்பது படத்தின் மீதான இயல்புத் தன்மையை அதிகப்படுத்துகிறது. ஒருத்தர் விடாமல் அனைவருக்கும் உறுத்தாத உடையமைப்பு.

சில இடங்களில் டப்பிங் சரியாகப் பொருந்தவில்லை.

அப்பா

ஹரிஷ் பணம் பறிபோன மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் சரியாகப் பேசமாட்டார். வீட்டில் அவரது தந்தையிடம் இது பற்றி அம்மா புகார் வாசிக்க அதற்கு…

குடித்து, ஊர் சுத்திட்டு வெட்டியா திரிந்து இருந்தால் கேட்கலாம், அவனே வேலை டென்ஷன்ல இருக்கிறான். அவனை என்னனு கேட்பது!” ன்னு ஒரு பக்குவமான அப்பாவாகக் கேட்பது இயல்பாக இருக்கும்.

இது மட்டுமல்ல ஒரு பொறுப்பான அப்பாவாகப் படம் முழுக்க வருகிறார். ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்.

இரண்டு மணி நேரம்

படம் இரண்டு மணி நேரம் மட்டுமே! இடைவேளைக்குப் பிறகு படம் NH 47 ல் வண்டி செல்வது போலப் பரபர என்று செல்கிறது.

இறுதிக் காட்சியும் வள வளன்னு இழுக்காமல் நறுக்குன்னு முடித்து ட்வெண்டி 20 போட்டி பார்ப்பது போலக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

முடிந்த வரை படத்தைச் சுருக்கி வேகத்தைத் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

வெற்றிமாறன் மணிமாறன் தாணு குமார் 

படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் இயக்குநர் வெற்றிமாறன். மணிமாறன் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

படம் விறுவிறுப்பாகச் செல்ல இவரது நறுக் என்ற கச்சிதமான திரைக்கதையே காரணம். நம்முடைய இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்துப் படம் நெடுக மிரட்டி இருக்கிறார்.

எடிட்டிங் பங்கும் நிறைய இருக்கிறது. புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி என்று கத்திரியைப் போட்டுச் சிக்குன்னு சிறுத்தைக் குட்டி மாதிரி கொடுத்து இருக்கிறார்கள் 🙂 .

ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் இடையே தேவையே இல்லாத காட்சிகளை நீக்கி நேரடியாக அடுத்தக் காட்சிக்கு (விசயத்திற்கு) வருவது ரொம்ப நன்றாக இருக்கிறது.

இது போல நறுக்குன்னு படம் எடுங்கப்பா!

ஹரிஷ், ரஷிதா, மோகன் ராம், நரேன், மயில் சாமி, ஹரிஷ் நண்பர்கள் என்று அனைவரின் இயல்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் தாணு குமார் பாராட்டுக்குரியவர்.

Directed by Thanukumar
Produced by Vetrimaaran,A. K. Vetri Velavan, M. Devarajulu
Written by Manimaran
Starring Harish Kalyan, Rakshita, Achuta Kumar
Music by M. S. Jones
Cinematography Velraj
Edited by G. B. Venkatesh
Production company Grass Root Film Company, Ace Mass Medias
Distributed by Vendhar Movies
Release dates 5 September 2014
Country India
Language Tamil

கொசுறு

இந்தப் படம் பார்த்த பிறகு, ஏன் இந்தப் படம் பற்றி நல்லதாக எதுவுமே கண்ணுக்குத் தட்டுப்படவில்லை?! என்று மற்ற விமர்சனங்களை இணையத்தில் தேடிப் பார்வையிட்டேன்.

பெரும்பாலும் படம் திரைக்கதை மெதுவாக இருக்கிறது, படம் ஓகே என்று தான் எழுதி இருக்கிறார்கள்.  எனக்குப் படம் செம்ம வேகமாக அதோட பதட்டமாகவும் இருந்தது.

எனவே, உங்களுக்குப் பிடிக்குமா என்று தெரியாது. உங்களுக்குச் சுமாரான படமாக இருந்தால், மன்னித்தருள்க 🙂 .

நான் 0% எதிர்பார்ப்புடன் எதுவுமே தெரியாமல் பார்த்ததால் என்னை ரொம்பக் கவர்ந்து இருக்கலாம். இது வரை நான்கு முறை பார்த்து விட்டேன்.

எனவே, இதில் உள்ள குறைகளையும் மனதில் நிறுத்திப் பார்த்தால், உங்களால் ரசிக்க முடியும். அதீத எதிர்பார்ப்புப் படத்தை சப்புன்னு ஆக்கி விடும்.

இந்தப் படத்தின் இயக்குநர் தாணு குமார் அல்லது வேறு யாரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தாலும் என்னுடைய பாராட்டைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

சம்பந்தப்பட்டவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் மறக்காமல் பாராட்டியதாகத் தெரிவித்து விடுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. படம் நன்றாகத்தான் இருக்கிறது.. கிரி – இருந்தாலும் சினிமாத்தனமான சில காட்சிகள் ஆங்காங்கே இருக்கின்றன.

  அதிலும் பேங்க் மேனேஜர் அஜய் ரத்னம் லோன் செட்டில்மென்ட் ஆக பொய் சொல்வதும் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை.

  நிலம் விற்பது மிகவும் எளிது… ஏமாறுவதற்கு ஆள் கிடைத்தால்.. மூல பத்திரம் என்று நாம் கேட்டாலும் இரண்டு (விற்பனை பரிவர்த்தனைகள்) கொண்ட பத்திரம் இருந்தால் மட்டும் போதுமானது என்று நினைக்கும்போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது..

  உதாரணத்துக்கு 1960 ல் உள்ள ஒரு சொத்துக்கு (அந்தக்காலத்துல எதுங்க ரெஜிஸ்டர் ஆபீசு.. எங்க தாத்தாவெல்லாம் ஒரு பானை கள்ளுக்கே தோப்பு எழுதி வச்சவரு) வெறும் உயில் மட்டும் தான் இருக்கும்.. (அதுவே நம்பகம் இல்லாதது மாதிரி) அதற்க்கு 2010 & 2013 ல் ரெண்டு விற்பனை பரிவர்த்தனை பண்ணினால் முடிஞ்சது ஜோலி.. (இதுல பவர் ஆப் அடர்னி பிரச்சினை வேற – வேறு யாராருகேல்லாம் பவரு கொடுத்திருக்காருன்னு எந்த பவர வச்சும் நாம கண்டுபிடிக்க முடியாது)
  சர்வ சாதாரணமா வித்துட்டு போய்டலாம்.. உயிலின் மற்ற வாரிசுகள் கோர்ட்டு கேசுன்னு அலையும் போதுதான் விவரம் தெரியவரும்.

  ரெஜிஸ்டர் ஆபீஸ் எதுக்கு இருக்குன்னு கேட்டா.. நாங்க என்ன சார் பண்றது விற்பனையை பதிவு செய்து இன்னார் பேருக்கு இப்போ இருக்குன்னு கொடுக்குறது தான் எங்க வேலை.. காரு வச்சிருந்த சொ …சு யார் யார் வச்சிருந்தான்னு பாக்குறது எங்க வேலை இல்லன்னு சொல்வாங்க..

  இந்த லச்சணத்துல பெரிய இடங்கள் விற்பனை ஆகும்போது பட்டா இப்போ கிடைக்காது எல்லாரும் வாங்கின பிறகு எங்கிட்ட வாங்க பட்டா ரிலீஸ் பண்றேன்னு சொல்றாங்க..

  படத்தோட மற்றும் என்னோட மெசேஜ் – பாத்து நிலம் வாங்குங்க.. வாங்கின பிறகு எல்லைக்கு அட்லீஸ்ட் அஞ்சு அடி கல்லை (நாலரை அடிக்கு உள்ளே) நட்டு வையுங்க.. நாமளால 45000க்கு யோசிக்காம மொபைல் வாங்க தெரியும் ஆனா 100 ரூபா கவரு வாங்க ரொம்பவே யோசிக்காதீங்க.

 2. கிரி, தற்போது படம் பார்க்கும் ஆர்வம் முற்றிலும் குறைந்து விட்டது, அதிலும் மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்… சில சமயம் நண்பர்கள் சில குறிப்பிட்ட படங்களை பார்க்குமாறு சொல்லும் போது மட்டும் படங்களை பார்கிறேன்..

  சென்ற வாரம் திருடன்/போலீஸ் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..நேரம் இருப்பின் பார்க்கவும்…இன்று இரவு பொறியாளன் பார்க்க போகிறேன் கிரி.. பகிர்வுக்கு நன்றி..

 3. பொறியாளன் – தலைவர் படம் தவிர்த்து எந்தவொரு படத்தையும் இந்தளவு ரசித்துப் பார்த்தது இல்லை. நேற்றிரவு முழுப் படமும் பார்க்க முடியவில்லை. இப்போது, காலையில் மீதிப்படத்தையும் பார்த்தாச்சு.

  இந்த மாதிரி ஒரு படம் வந்ததே தெரியாது.

  படம் பற்றிய விமர்சனம் படித்த பின்னரே தெரியவந்தது.

  நன்றீஸ் டூ கிரி & HeroTalkies

 4. படம் பாத்துட்டு சொல்லுறேன் தல
  பதிவுக்கு நன்றி

  0% எதிர்பார்ப்புடன் பார்த்தது நாள லிங்கா எனக்கு ரொம்ப வே புடிச்சது

  – அருண் கோவிந்தன்

 5. @ஜோதிஜி நன்றி

  @ராஜ்குமார் ரொம்ப நாளா ஆளைக் காணோமே!

  எனக்குப் படம் ரொம்பப் பிடித்தது. நீங்க சொன்னது போல சில லாஜிக் பிரச்சனைகள் இருந்தாலும் விறுவிறுப்பாக இருந்தது.

  இடம் வாங்குவது சாதாரண விஷயமில்ல.

  @யாசின் “மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்”

  ரொம்ப சரியான முடிவு. இதுல தலைவர் படத்துக்கு மட்டும் விலக்கு கொடுத்துடுங்க 🙂

  @விஜய் & அருண் ரைட்டு

 6. வணக்கம் பாஸ். படைப்பு அருமை.. ஆனால் இந்த படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியாது.. நம்ம ஆனந்தி (படத்தோட நாயகி ) இந்த படத்துல தான் அறிமுகம் ஆனால் அவங்களுக்கு பிளாஷ் கயல் படம் …

  எனக்கு ரொம்பவும் பிடிச்ச படத்துல இதுவும் ஒன்னு ஆனா நானும் நிறைய விமர்சனங்களை தேடிப் பார்த்தேன் எல்லாமே சுமார், வேகமான திரைகதை இல்லை என்று தான் இருந்தது.

  உங்க விமர்சனம் படத்த படமா பாருங்கன்னு சொல்லி இருக்கீங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.. அப்புறம் ஒரு விஷயம் இந்த படம் எங்க ஊர் தியேட்டர் ல இறங்கவே இல்ல பாஸ்.. லோக்கல் சேனல் ல தான் பார்த்தேன்.

 7. இந்தப் படம் எனக்கு செம விறுவிறுப்பாக இருந்தது.. ஆனால், ஏன் எல்லோரும் மெதுவா இருக்குன்னு சொல்றாங்க என்று புரியலை.

  இது போல ராஜதந்திரம் படமும் ரொம்ப நன்றாக இருக்கும். இந்தப் படமும் வந்ததும் தெரியல போனதும் தெரியல 🙁 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here