கலை இயக்குநர் ராமலிங்கம் அட்டகத்தி பீட்சா, மெட்ராஸ், கபாலி, காலா, ஓ மை கடவுளே, கர்ணன் உட்பட பல படங்களில் அற்புதமாகப் பணி புரிந்துள்ளார்.
கலை இயக்குநர் ராமலிங்கம்
இரண்டாம் ஆண்டுக் கல்லூரி படிக்கும் போதே கலை இயக்குநர் வாய்ப்பு தேடிச் சென்று பெற்றும் இருக்கிறார். Image Credit
இவருடைய அனுபவங்கள் குறிப்பாக அறிமுகக் காலத்தில் இவர் பட்ட சிரமங்களை டூரிங் டாக்கீஸ் பேட்டியில் கூறியது மிகச் சுவாரசியம்.
கடினமான சூழ்நிலையையும், எதிர் கொண்ட அவமானங்களையும் கூட மிக எளிதாக எடுத்துக்கொண்டு பேசியது அருமை.
அப்போது சிரமப்பட்டு இருந்தாலும், அதைச் சோகக்கதையாகக் கூறாமல் சுவாரசியமாகக் குறிப்பிட்டதே கவனிக்க வைத்தது.
இவர் கூறியிருந்த இரு எடுத்துக்காட்டுகள் சிறப்பு.
நடிகனின் ரசிகன்
நடிகனின் ரசிகனாக இருந்தால், அவன் உருப்படாதவன், குடும்பத்தைக் கவனிக்காதவன் என்ற பொதுப்புத்தி உள்ளது.
சிலர் அவ்வாறு இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் பெரும்பான்மையல்ல.
மற்ற இடங்களில் இருப்பது போல இங்கேயும் தவறுகள் உள்ளன, அவ்வளவே!
நடிகனுக்கு ரசிகனாக இருப்பதால் மட்டுமே அவன் மோசமானவனும், யாருக்கும் ரசிகனாக இல்லாதவன் பொறுப்புள்ளவன் என்பதும் அர்த்தமாகாது.
சாதாரண ரஜினி ரசிகனாக இருந்து, படிப்படியாக உயர்ந்து அவர் படத்துக்கே கலை இயக்குநராக வந்தது தன்னம்பிக்கையைக் கொடுப்பதாக இருந்தது.
ஆப்பிள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம் இருக்கும்.
ஒருவருக்கு ஆப்பிள் சாப்பிடுவது கூட இலட்சியமாக இருக்கலாம் என்று அது பற்றி அவர் விளக்கியது அட்டகாசம்.
ஒரு ஆப்பிளுக்குள் இவ்வளவு விஷயம் இருக்கா! என்று வியக்க வைத்து விட்டார்.
தொழில் அனுபவங்கள்
புதிதாகப் பணிக்குச் சேர்பவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இவர் கூறிய விதம் சுவாரசியம். இவரைப்போல அனுபவங்கள் பலருக்கு இருக்கும்.
இவருடைய அனைத்து படங்களும் பிடிக்கும் என்றாலும், காலா படத்தின் தாராவி அரங்க அமைப்பு மிகச் சிறப்பு. உண்மையான இடம் போலவே இருக்கும்.
பீட்சா படத்தில் இவர் செய்த சிறு சிறு மாற்றங்களைக் கூறியபோது திரும்பப் பீட்சா பார்த்தால், கவனிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
மெட்ராஸில் இயல்புத்தன்மை இருக்கும், எதுவுமே செயற்கையாகத் தெரியாது. இது போல இவரது உழைப்பு அபாரம்.
தவிர்க்க முடியாத சோகம்
சிறப்பாக வடிவமைத்தால் அது காண்போருக்கு தெரியாமலே போய்விடும் என்பது கலை இயக்குநர்களுக்கே உள்ள பரிதாப சூழ்நிலை.
அதாவது, அது வடிவமைக்கப்பட்டது என்பதே தெரியாமல் உண்மையானது போலவே இருந்தால், கலை இயக்குநரின் உழைப்பு பார்ப்பவர்களுக்குத் தெரியாது.
இதுவே ஒரு கலை இயக்குநருக்குக் கிடைக்கும் பாராட்டு என்றாலும், நன்றாகச் செய்து இருந்தும் மக்களுக்குத் தெரியவில்லையே என்ற வருத்தம் இருக்கும்.
பின்னாளில் இது போலப் பேட்டிகள் வரும் போது தான் ‘அட! அப்படியா! நான் உண்மை என்றே நினைத்து இருந்தேன்‘ என்று நினைப்போம்.
சிரிப்புக்கு உத்தரவாதம் 😀
இவருடைய சீனியர்களுடனான உரையாடல், அனுபவங்கள், சண்டை ஆகியவற்றைக் கேட்கும் போது சிரிக்காமல் இருக்கவே முடியாது.
மன்மதன் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள், சிரிப்பு ரணகளம்.
ராமலிங்கம் அவருக்கே உண்டான உடல்மொழியுடன் அதை விளக்கிச் சிரிக்கும் போது நம்மாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.
அவர் கூறுவதை நிச்சயம் கற்பனை செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
பேட்டி எடுத்த நபரும் ராமலிங்கத்தை இடைமறிக்காமல் பேச விட்டது சிறப்பு.
ரஜினி பற்றி இவர் கூறுவதைக் கேட்கவே துவக்கத்தில் பார்க்க ஆரம்பித்தேன் ஆனால், இவர் அனுபவங்கள் அனைத்து பாகங்களையும் பார்க்க வைத்து விட்டது.
கலை இயக்குநர் ராமலிங்கம் பேட்டி நிச்சயம் உங்களை ஏமாற்றாது. அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்கவும் 🙂 .
தொடர்புடைய கட்டுரை
வசந்தபாலன் | வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, இது போல நேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக chai with chitra வின் ரசிகன் நான்.. நிறைய காணொளிகளை கண்டு இருக்கிறேன்.. சமீபத்தில் திரு.தசரதன் என்பவரின் பேட்டியை பார்த்து விட்டு மிரண்டு விட்டேன்.. 80 / 85 வயதில் என்ன நினைவாற்றல் .. அவர் தமிழ் சினிமாவின் ஆரம்ப நிலையை விவரித்து எல்லாம் கண்ணுக்குள்ளே இருக்கிறது.. நிறைய பேரின் பேட்டிகளை விரும்பி பார்த்து இருக்கிறேன்..
ராமலிங்கம் அவரது உரையாடலையும் பார்த்து விட்டு பின்பு என் கருத்தை கூறுகிறேன்.. மிகவும் சிறு வயதிலே எனக்கு ART DIRECTION மீது ஆர்வம் உண்டு.. காரணம் TR பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.. அதுவும் அந்த பருவத்தில் பார்க்கும் போது வித்தியாசமாக தோன்றும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களைக் கண்டாலே பொறாமையாக இருக்கும்.. 🙂 எனக்கு நினைவாற்றல் குறைவு.
இது பாருங்க.. ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ராமலிங்கம் சிரிப்பே அழகு.