டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன்

5
டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் Chitra Latchumanan

ற்போது Vlog எனப்படும் காணொளி பிரபலமாக உள்ள காலம். படிப்பதை விடப் பார்ப்பதையே பலரும் விரும்புகிறார்கள்.

பலர் YouTube ல் காணொளியை வெளியிட்டு வந்தாலும், பார்க்க ஆர்வமில்லை.

ஏனென்றால், பெரும்பாலும் அடுத்தவரை வரைமுறையின்றி விமர்சிப்பதும், கிண்டல் செய்வதும், பொய்யான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றுவதும் என்றே உள்ளன.

டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன்

தற்போது மேற்கூறியதில் இருந்து மாற்றமாக என்னை ஈர்த்து இருப்பது திரு சித்ரா லட்சுமணன் அவர்களின் YouTube சேனல் “டூரிங் டாக்கீஸ்

தயாரிப்பாளர், நடிகர், ஒருங்கிணைப்பாளர் என்று பல முகங்கள் உண்டு. பல காலமாகத் திரைத்துறையில் இருப்பதால், அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார்.

இவர் பேட்டி காணும் போது யாரும் ஏதும் கூறினால், அதற்கான விளக்கத்தைக் கூறும் அளவுக்கு அனைத்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார்.

எனவே, நுனிப்புல் மேய்பவராக இல்லை.

முன்பு ராஜ் டிவியில் ‘வெள்ளித்திரை‘ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவங்கள், YouTube நடத்த உதவியாக இருந்துள்ளது.

YouTube சேனல்கள்

இதை எதற்குக் கூறுகிறேன் என்றால், தற்போதுள்ள YouTube சேனல்கள் பெரும்பாலும் இளவட்டங்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு முழு விவரங்களும் தெரிவதில்லை.

தெரிந்த ஓரிரு அரைகுறை விஷயங்களை வைத்துக் கொண்டு பேசும் போது எரிச்சலாக வருகிறது.

ஒருவரை முழுமையாகத் தெரியாமல் விமர்சிப்பது, தன் காழ்ப்புணர்வை கொட்டுவது என்று இருப்பதால், இவர்கள் காணொளிகளைப் பார்க்கவே பிடிப்பதில்லை.

பெரும்பாலும் தங்கள் கருத்தைத் திணிப்பவர்களாகவே உள்ளனர்.

பேட்டி எடுப்பவரைப் பேச விடுவதில்லை, தாங்கள் நினைப்பதை பேட்டி கொடுப்பவரும் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பேட்டிகள், விவாதங்கள் எதிர்மறையாகவே இருக்கும்.

அபிஷேக் போன்றவர்கள் விதிவிலக்கு.

சுவாரசியமான பேட்டிகள்

ஆனால், சித்ரா லட்சுமணன் அவர்கள் பேட்டி பேட்டி காண்பவரை பேச விட்டு, அவர் போக்கிலேயே சென்று அவருக்குத் தேவையான தகவல்களை எடுத்துக்கொடுத்து, அவர் மனது கோணாமல் மிகச் சிறப்பாகப் பேட்டி எடுக்கிறார்.

இவருடைய முதல் காணொளி நான் பார்த்தது, ரஜினி சம்பந்தப்பட்டது.

“ஜெ” வை மேடையில் வைத்துக்கொண்டே நடிகர் திலகம் செவாலியே விருது நிகழ்ச்சியில் “ஜெ” வை ரஜினி விமர்சித்தது இக்காலத் தலைமுறையினர் அறியாதது.

அதை ரொம்ப அழகாக விளக்கி இருந்தார்.

சன் டிவி அழித்த காணொளிகள்

அப்போது எல்லாமே சன் டிவி என்பதால், ஆதாரமாக இருந்த காணொளிகளை நீக்கி விட்டார்கள். எனவே, என்னைப் போன்ற ரசிகர்களுக்கு அது பெரும் இழப்பு.

தற்போது போல YouTube சேனல்கள், மொபைல் இல்லாததால், அது பற்றிய காணொளி எங்கும் கிடைக்கவில்லை.

இது போல ஏராளமான காணொளிகளைச் சன் டிவி அழித்து விட்டது. எனவே, இவர் அந்நிகழ்வை தத்ரூபமாகக் கூறியது மகிழ்ச்சியளித்தது.

திரும்ப இவரே YouTube ல் எதோ ஒரு காணொளியில் கண்ணில் பட, பிறகு தான் தெரிந்தது இவர் ஒரு சேனல் தொடங்கி நடத்துகிறார் என்று.

அதன் பிறகு அவரது சேனலில் பல நேர்முகப் பேட்டிகளைப் பார்த்துள்ளேன். ஒவ்வொன்றும் அவ்வளவு சிறப்பாக உள்ளது.

இவருக்கு விஷயம் தெரிவதால், எதிரில் உள்ளவரிடம் இருந்து அனைத்து விஷயங்களையும் பெற்று விடுகிறார். எதிரில் உள்ளவர்கள் ரொம்ப வசதியாக உணருகிறார்கள்.

ரஜினி பேட்டி

தலைவர் ரஜினியை  முந்தைய வருடங்களில் பேட்டி எடுத்த விஜயசாரதி, விவேக் இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார்கள்.

அர்ச்சனா வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்.

சித்ரா லட்சுமணன் அவர்கள் தலைவரைப் பேட்டி எடுத்தால், சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். நீண்ட காலம் திரைத்துறையில் இருவருமே உள்ளார்கள்.

எனவே, சித்ரா லட்சுமணன் அவர்கள் நமக்குத் தெரியாத பல தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது.

அடுத்தவரை எரிச்சல்படுத்தும்படி இல்லாத இவரது அணுகுமுறை மிக நன்றாக உள்ளது. எனவே, இவர் ஒரு பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

சீமான் பேட்டி

சீமான் பேட்டியெல்லாம் என்னால் சகிக்கவே முடியாது.

நரம்பு புடைக்கக் கத்திட்டு இருப்பார். இதுவரை சீமான் பேட்டி பார்த்தது என்றால், ரங்கராஜ் பாண்டே மற்றும் இன்னொரு ஏதோ ஒரு பேட்டி அவ்வளவு தான்.

சித்ராலட்சுமணன் அவர்கள் சீமானை அசத்தலாகப் பேட்டி எடுத்துள்ளார்.

கண்டிப்பாகப் பாருங்க, இவரது பேட்டி மிகச் சிறப்பு. சீமான் பாட்டெல்லாம் பாடி அதிர்ச்சி கொடுத்தார். சீமானை ஆக்ரோஷமாகவே பார்த்தவர்களுக்கு அவருடைய மென்மையான இன்னொரு முகம் இதில் காணலாம்.

இப்படியொரு திறமையான சித்ரா லட்சுமணன் அவர்கள் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாக இந்த YouTube உள்ளது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இவருடைய கதாப்பாத்திரம், தற்போது பார்த்தால், இவர் அதில் நடிக்காமலே இருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

குறைகள்

இவருடைய சேனலில் ஒரு காணொளி முடிந்தால், அடுத்தப் பாகம் தொடர்ச்சியாக வருகிறது, ஒரு சிலதில் வருவதில்லை. அடுத்தப் பாகத்துக்கான இணைப்பும் இல்லை.

அதனால், அடுத்தப் பாகத்தைக் கண்டு பிடிப்பது கடினமாக உள்ளது.

இதை அவர்கள் சரி செய்ய வேண்டும்.

இவரும் வெங்கட் என்பவரும் இணைந்து கூறும் சில திரைத் தகவல்கள் மற்ற சேனல்களைப் போலப் பொய்யாக / மிகையாக இருப்பது தெரிந்தாலும், அதனால் மன வருத்தம் ஏற்படுவதில்லை என்பதால், மன்னிக்கப்படுகிறது.

சித்ரா லட்சுமணன்

சித்ரா லட்சுமணன் அவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம், பழைய சம்பவங்களை, அறியாத தகவல்களை மிக எளிமையாகவும், சுவாரசியமாகவும் கொடுக்கிறார்.

பேட்டியைச் சுவாரசியமாகவும், அடுத்தவர் மனதை நோகடிக்காமலும் நடத்துகிறார்.

சித்ராலட்சுமணன் அவர்கள் இன்னும் பல செய்திகளை நமக்குத் தர வேண்டும், பல பேட்டிகளை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கால மாற்றத்தில் ஹிட்ஸ்க்காகவும், விளம்பரத்துக்காகவும் மற்ற சேனல்களைப் போல மாறி விடக் கூடாது என்றும் வேண்டுகிறேன்.

இவர்கள் சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கிரி,

    அமர்க்களமாக அத்தனையையும் உள்ளடக்கி
    எழுதி இருக்கிறீர்கள். அருமையான கட்டுரை.
    வாழ்த்துகள்.

    .
    – காவிரிமைந்தன்

  2. அருமை கில்லாடி. நீங்கள் சொல்வது போல் நெறைய channels அவங்க இஷ்டத்துக்கு அவர்களுடைய கருத்தை திணிக்கிறாங்க. நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கிட்டு போகவேண்டியது தான் 🙂

    Subscribe பண்ணிக்கலாம் அப்போ தான் லேட்டஸ்ட் videos notifications வரும். நன்றி

  3. கிரி, கடந்த இரண்டு மாதங்களாக நானும் சில பிடித்த காணொளிகளை பார்த்து வருகிறேன்.. மிகவும் பிடித்து இருக்கிறது.. சினிமா குறித்த 50 / 60 ஆண்டுகளில் நடந்த பல நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வருவது இவரது சிறப்பு!!! இவரின் தற்போது சினிமா குறித்த செய்திகளை நான் விரும்பி பார்ப்பதில்லை..

    இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து, பின்பு மண் வாசனை படம் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார்.. பல அரிய தகவல்கள் இவரிடம் கொட்டி கிடக்கிறது.. நான் பொதுவாக சினிமா குறித்த பல தகவல்களை இயக்குனர் பாக்யராஜ் மூலம் தெரிந்து கொண்டேன்.. அதற்கு பின் இவர்தான்..

    சமீபத்தில் ஒரு பழைய கடிதம் (இயக்குனர் மனோபாலா) 40 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு எழுதியது.. அந்த ஒரு கடிதத்தில் மனோபாலா அவரின் வலிகள் அனைத்தையும் விவரித்து எழுதி இருப்பார்.. தற்போது அந்த கடிதத்தை (மனோபாலாவிடம் அனுமதி பெற்று) தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிந்து இருப்பார்..

    https://www.youtube.com/watch?v=ZCAsO_9G4lY&list=PL-FA09I1o2QtLQy1NBFjVMC-nZhTuVHV1&index=1

    நேரம் இருப்பின் இந்த கடிதத்தை படிக்கவும்.. நீங்கள் சித்ரா லட்சுமணனின் தகவல்களை விரும்பி கேட்டிருப்பதால் வாலி சாரின் தகவல்களை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.. “Kavignar Vaaliyin” Vaali 1000 Chat Show இதை வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சி..

    நிறைய சினிமா பிரபலங்கள் இவருடன் நேர்காணல் காணும் நிகழ்ச்சி.. இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்த பின் வாலியின் மீது 100 மடங்கு மரியாதை கூடியது.. MSV யுடன் நேர்காணலை பார்க்கவும்..நேரம் இருப்பின் நிகழ்ச்சி முழுவதும் பார்க்கவும்..

    https://www.youtube.com/watch?v=13-yt1HFZVo

    கவிஞர் ஜெயந்தா வாலி சாரை குறித்து பேசியுள்ள காணொளி மிகவும் சுவாரசியம்..

    https://www.youtube.com/watch?v=iikGRHxeQ4M

    நேரம் இருப்பின் இதையும் பார்க்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. எனக்கும் you tube சேனல்களை பொறுத்தவரை உங்களின் நிலைப்பாடே தான். சித்ரா லட்சுமணனின் இந்த சேனல் பார்க்க நிஜமாகவே சுவாரஸ்யமாக உள்ளது. இதன் காரணம் என்ன என்பதை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

  5. @காவிரிமைந்தன் நன்றி சார்.

    @விஜய் ரொம்ப நல்லா இருக்கு… பாருங்க.

    @யாசின் சுட்டிகளுக்கு நன்றி, பார்க்கிறேன்.

    @சரவணன் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!