மெட்ராஸ் [2014]

19
மெட்ராஸ்

சென்னை சென்னை என்று கூறிக் கொண்டு இருந்து திடீரென்று “மெட்ராஸ்” என்று கூறும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் வருகிறது. உங்களுக்கு இப்படித் தோன்றுகின்றதா?

பெயர் மாறியவுடன் எல்லோரும் சென்னை என்று கூற கூச்சப்பட்டார்கள், எனக்கும் அந்தக் கூச்சம் இருந்தது.

நாளடைவில் செய்திகள், பேச்சு வழக்கு என்று மாறிச் சென்னை என்று கூறுவது இயல்பானது. தற்போது வெகு சிலரே மெட்ராஸ் என்று கூறுகிறார்கள்.

“மெட்ராஸ் டே” கொண்டாடப்படும் போது மெட்ராஸ் என்பது ஒரு Emotion சென்னை   நகரம் என்று ஒப்பிட்டு வரும்.

சொன்னா நம்புங்க.. இந்தப் படம் பார்த்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு “மெட்ராஸ்” என்ற பெயர் மீது முன்பு இருந்த பாசம் திரும்ப வந்து விட்டது.

அதற்கு நிச்சயம் இயக்குநர் ரஞ்சித் மட்டுமே காரணம். இனி படத்தைப் பார்ப்போம். Image Credit

மெட்ராஸ்

வட சென்னையில் இரு அரசியல் தலைவர்களுக்கு இடையே நடந்த சண்டை தலைமுறையாகத் தொடர்கிறது. இதில் ஒரு பகுதியில் உள்ள ஒரு சுவர் மற்ற பகுதி அரசியல்வாதியின் கவுரவச் சின்னமாக இருக்கிறது.

இந்தச் சுவரை வைத்து மொத்த அரசியலின் பலமும் அடங்கி இருக்கிறது. இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.

என்னது வெறும் சுவரை வைத்து ஒரு கதையா?! என்று நிச்சயம் உங்களுக்குத் தோன்றும் ஆனால், படம் பார்த்தால் ஒரு சுவரை வைத்துக்கூட ஒரு படத்தைக் கொடுக்க முடியுமா?! என்று வாயடைக்க வைத்து விடுவார்கள்.

ஜீவா

இந்தப் படத்தின் கதை ஜீவாக்கு கூறப்பட்டது ஆனால், தனக்கு முக்கியத்துவம் குறைவதாகக் கூறி நடிக்க மறுத்து விடவே கார்த்தி இதில் தான் நடிப்பதாகக் கூறி நடித்து பெயரைத் தட்டிச் சென்று விட்டார்.

உண்மையில் இந்தக் கதாப்பாத்திரம் ஜீவாக்கு அம்சமாகப் பொருந்தும்.

தற்போது இருக்கும் தலைமுறை நடிகர்களில் சென்னைத் தமிழை பேசுவதில் ஜீவாவை யாரும் அடித்துக்கவே முடியாது.

செம உடல்மொழி, வேகம் என்று தூள் கிளப்பி இருக்கலாம். இவருடைய “சிவா மனசுல சக்தி” படத்தைப் பார்த்தவர்கள் இதை உணர்ந்து இருக்கலாம்.

ஜீவா! ஒரு அருமையான கதையை, உங்களுக்காகவே இருந்த கதையை இப்படி அநியாயமா கோட்டை விட்டுட்டீங்களே!

கார்த்தி இந்தக் கதாப்பாத்திரத்தில் ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார் இருந்தும் ஜீவா தான் மனதிற்கு வருகிறார்.

வட சென்னை என்றால் முதலில் எவருக்கும் நினைவிற்கு வருவது அவர்கள் பேசும் தமிழ் மற்றும் அவர்களது அசால்ட்டான உடல் மொழி.

இதில் கார்த்தி சறுக்கி விடுகிறார்.

எங்குமே ஒரு கதாநாயகனாக தெரியவில்லை. இது பெரிய விசயம். இதில் சொதப்பி இருந்தால், படமே மனதில் ஒட்டாமல் சென்று இருக்கும்.

இயக்குனர் ரஞ்சித் தான் இதற்கு முழுக் காரணமாக இருக்க வேண்டும்.

வட சென்னை

வட சென்னை உடல்மொழி, தமிழ் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்குப் புரிய வேண்டும் என்றால், சிறந்த உதாரணம் “பொல்லாதவன்” படத்தில் சென்ராயன் (தனுஷ் பைக் திருடுபவர்) பேசுவாரே..! அது தான் வட சென்னை. பிரிச்சு மேஞ்சு இருப்பாரு.

வட சென்னை படங்களுக்கெல்லாம் தகப்பன் என்றால் என்னைப் பொருத்தவரை “புதுப்பேட்டை” தான்.

இன்றுவரை இதை அடித்துக்கொள்ள இன்னும் படம் வரவில்லை. இதை ஓரளவு தொட்டது என்றால் “பொல்லாதவன்” அதன் பிறகு தற்போது “மெட்ராஸ்”.

இந்தப் படத்தில் “ஆடுகளம்” படத்தில் நடித்த ஜெயபாலன் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம். இவர் படம் தான் சுவரில் இருக்கும், இதை வைத்துத் தான் மொத்தப்படமே! “ஆடுகளம்” படத்தில் ஜெயபாலனுக்கு குரல் ராதாரவி.

முதல் முறை கேட்டதாலோ என்னவோ இதில் இருந்த ஒரு திருப்தி / பொருத்தம் மெட்ராஸ் குரலில் இல்லை.

எதோ டப்பிங் படம் மாதிரி தான் இருந்தது ஆனால், நல்லவேளை கொஞ்ச காட்சிகளே வருகிறார் அதனால், பெரிய உறுத்தல் இல்லை.

கார்த்தி

கார்த்தி கதாப்பாத்திரம் சில காட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எதிர்காலத்தை நினைத்துப் பயப்படும் சராசரி நபராகவும் இருக்கிறார் அதே சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று கோபப்பட்டு எவரையும் அடிக்கும் நபராகவும் இருக்கிறார்.

இதில் இயக்குநர் இன்னும் கவனமெடுத்து இருந்தால், அருமையாக இருந்து இருக்கும்.

இதே கோபம் தான் இரண்டாம் பாதியில் படத்தின் காட்சிகளை நியாயப்படுத்தவும் உதவி இருக்கிறது.

சில காட்சிகள் உறுத்தாமல் இருக்கக் காரணம் இவரின் அந்தக் கோபமும் யோசிக்காமல் நடந்து கொள்ளும் அவரின் குணமும் தான்.

அன்பு

கார்த்தி நண்பராக வரும் கதாப்பாத்திரம் தான் அன்பு. இதற்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்துத் தான் ஜீவா நடிக்க மறுத்ததாகப் படித்தேன்.

ஜீவா பயந்தது என்னவோ உண்மை தான் என்பது போல அன்பு நடித்து இருக்கிறார்.

படத்தில் பட்டையைக் கிளப்பும் கதாப்பாத்திரங்களில் இவரது ரொம்ப முக்கியம். கார்த்தி அவசரப்பட்டு கை நீட்டும் சமயங்களிலும் ஆபத்து காலத்தில் காப்பாற்ற உதவும் போதும் நடிப்பில் மிளிர்கிறார்.

நமக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அன்பு மற்றும் அவரது மனைவி அன்யோன்யம். அருமை அருமை.

உண்மையாகவே இவர்களது காட்சிகள் அவ்வளவு ரசனையாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

கோபித்துக் கொள்வதும் அன்பால் கசிந்துருகுவதும் என்று இருவரும் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கிறார்கள். அன்பு மனைவியாக வருபவர் பெயர் ரித்விகா என்று படித்தேன்.

இவ்வளோ நாளா இவங்க எல்லாம் எங்கே இருந்தாங்க?!

வடசென்னை தமிழ்

எனக்கு இவர்கள் பேசும் வட சென்னை தமிழில் திருப்தி இல்லை. இன்னும் சிறப்பாக எதிர்பார்த்தேன்.

ஒருவேளை  எனக்கு அளவுகோலாக “புதுப்பேட்டை” “பொல்லாதவன்” படங்கள் அமைந்து விட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

கார்த்தி அம்மா, கேத்தரின் (கதாநாயகி) அம்மா மற்றும் பலரின் பேச்சு வட சென்னையை பிரதிபலிக்கவில்லை.

சென்னையில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் இருந்து இருக்கிறேன். ஃபீல்ட் வேலையில் பணி புரிந்து இருக்கிறேன்.

எனவே, இவர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

இதில் லோக்கல் பசங்களாக வருபவர்கள் மற்றும் அடியாட்களாக வருபவர்கள் சரியாகப் பேசி இருக்கிறார்கள்.

தமிழ்ப் படங்களில் கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது எப்பாவது நடக்கும் அதிசயம் ஆகி விட்டது. அந்த அதிசயம் திரும்ப மெட்ராஸ் படத்தில் கேத்தரினுக்கு கிடைத்து இருக்கிறது.

இயல்பான காதல்

கோபக்காரப் பெண்ணாக வரும் இவர் கார்த்தியுடன் காதல் என்று போவது பின் சண்டை சமாதானம் என்று நொறுக்கித் தள்ளி இருக்கிறார்.

நம்புறீங்களோ இல்லையோ “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்திற்குப் பிறகு ஒரு இயல்பான காதலை இந்தப் படத்தில் தான் பார்த்தேன்.

கோபம், குறும்பு, சண்டை, வாக்குவாதம், அழுகை, நக்கல் என்று இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.

இவர்கள் காதல் ஒரு கவிதை மாதிரி இருக்கிறது. எத்தனை நாள் ஆச்சு இது போல ஒரு காதலைப் பார்த்து! ஒரு காதலில் என்னென்னெல்லாம் நடக்குமோ அத்தனையும் இதில் வருகிறது.

என்னுடையது ஒரு தலைக் காதல் தான் அதனால் அனுபவமில்லை இருப்பினும் இது தான் காதல் என்று உணர முடிகிறது.

இயக்குநர் ரஞ்சித்திற்கு காதல் அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த அளவிற்கு ரசித்து எடுத்து இருக்க முடியாது.

படத்தில் அரசியல் தலைவராக வரும் மாரியாக நடித்து இருப்பவர் ரொம்பப் பொருத்தம். இவரின் செயல்கள் முன்னரே ஊகிக்க முடிந்ததாக இருக்கிறது.

இவர் மட்டுமல்ல பல காட்சிகள் முன்னரே ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டிப் படம் நெடுக ஒரு பயத்தையும் என்ன நடக்குமோ என்ற பீதியும் தொடர்வது தான் இந்தப் படத்தின் வெற்றி.

எடுத்துக்காட்டுக்குஅந்தச் சுவரைக் கார்த்தி பார்த்துக் கொஞ்சம் திடுக்கென்று பயக்கும் நேரத்தில் உடன் நாமும் பயமாவது.

பின்னணி இசை

இதற்கு பெரும் துணை புரிந்து இருப்பது பின்னணி இசை. என்னய்யா அநியாயமா இருக்கு ஒரு சுவரை வைத்து படம் முழுக்க மிரட்டி விட்டார்களே!

இதில் ஓர் பெரிய குறை இருக்கிறது. அது அன்பு உடன் இருக்கும் பசங்கள். அன்பிற்கும் வயது குறைவு தான் அதனாலோ என்னவோ அவருடன் இருப்பவர்களும் சின்ன பசங்களாக இருக்கிறார்கள்.

எதிர்தரப்பில் பெரிய தலைகளாக இருக்கும் போது இந்த சின்ன பசங்களை வைத்து திட்டமிடுவதும் சவால் விடுவதும் பொருத்தமாக இல்லை.

அன்பு தரப்பு கதாப்பாத்திர தேர்வு சரியில்லை. இன்னும் கொஞ்சம் முரட்டு நபர்களாக இருந்து இருக்க வேண்டும்.

இருப்பதிலேயே கார்த்தி தான் கொஞ்சம் பெரிய நபராக இருக்கிறார் என்றால் நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்.

இவர்களை வைத்துக்கொண்டு எதிர்தரப்பை எதிர்ப்பதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை.

சந்தோஷ் நாராயணன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கிறார்.

பாடல்களை ஏற்கனவே கேட்டுக்கொண்டு இருந்ததால் படத்தில் பார்க்க ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது.

அனைத்துப் பாடல்களுமே அருமை அதிலும் “ஆகாயம்” பாடல் எடுக்கப்பட்ட விதம் பாடலை ஒரு படி மேலே தூக்கி விட்டது.

இரவு நேரத்தில் வரும் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது என்றால் மிகையில்லை.

குறிப்பாக நான் மேலே கூறிய கார்த்தி சுவரைப் பார்த்து பயப்படும் ஒரு காட்சியில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.

இது ஒரு எடுத்துக்காட்டுக்கு கூறினேன்.. படமுழுக்க பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். இது போன்ற படங்களுக்கு பின்னணி இசை தான் கெத்தே!

கானா பாலா பாடலில் மரணப் பாடலாக வரும் பாடலை கேட்கும் போது எரிச்சலாக இருந்தது ஆனால், படத்தில் பார்க்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கிறது.

இந்தக் காட்சியில் ரித்விகாவின் நடிப்பு அசத்தல். எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் கலங்க வைத்து விட்டார்.

சந்தோஷ் நாராயணன் மனுஷன் பின்னி எடுக்கிறார். படத்தில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி ரொம்ப அருமை. இந்தப் பாடல்கள் பெரும்பாலும் மாண்டேஜ் பாடல்களாக வருவது பாடலின் தரத்தை இன்னும் உயர்த்துகிறது.

பாடல் எடுக்கப்பட்ட விதம் பாடலை எங்கேயோ கொண்டு போகிறது.

இது போன்ற காட்சியில் மிகை நடிப்பு நடித்து எரிச்சல் ஊட்டுபவர்கள், இதைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளட்டும்.

பின்னணி இசைக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். அந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.

சத்யம் போன்ற திரையரங்கில் பார்த்தால்.. அவசியம் நல்ல திரையரங்கில் பாருங்கள்.

ஜானி

இதில் ஜானி என்ற ஒரு கதாப்பாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்டவராக வருகிறார். படம் நெடுக அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

இவர் பேசுவது நிறைய எனக்குப் புரியவில்லை. பண்பலையில் பாலாஜி பேசுவது போல வேகமாக பேசுகிறார்.

இவரைக் காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து அவர் ஏன் இப்படி இருக்கிறார்? அவரின் முக்கியத்துவம் என்ன என்பதையும் விளக்கி அவருக்கும் மற்றவர்கள் மரியாதை கொடுக்கும் படி செய்து இருப்பது சிறப்பு.

இவர் ஏதாவது திருப்பு முனையாகச் செய்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு முரளி என்பவர். இவர் இதற்கு முன் எந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்? வட சென்னையை அதன் இயல்பு கெடாமல் அப்படியே கொண்டு வந்து இருக்கிறார்.

எங்கேயுமே செட்டிங்ஸ் இல்லாமல் அனைத்துமே இயல்பான இடங்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

சில காட்சிகள் எப்படி எடுத்து இருப்பார்கள் என்று படம் முழுக்க யோசனையாக இருந்தது. ஏனென்றால் வட சென்னை கூட்டம் எப்படி என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

இதில் படப்பிடிப்பை மக்கள் பார்ப்பது போல எந்தக் காட்சிகளும் இல்லாமல் ஒளிப்பதிவு செய்வது என்பது எவ்வளவு சிரமம்! இரவு நேரக் காட்சிகள் எல்லாம் அசத்தலாக இருக்கிறது.

ஜெயபாலன் இருக்கும் சுவர் ஒரு கதாப்பாத்திரம் போல நமக்கு மனதில் பதிய முக்கியக் காரணமே ஒளிப்பதிவு தான்.

வட சென்னை படமென்றால் இரவுக் காட்சி வராமல் இருக்க வாய்ப்பே இல்லை. அதை அழகாகவும், மிரட்டலாகவும், திகிலாகவும் காட்டி அசத்தி இருக்கிறார்.

வட சென்னை விளையாட்டுகள், போட்டிகள், சண்டைகள், நடனம், சிகையலங்காரம் என்று பல விசயங்களை அப்படியே கண் முன் நிறுத்தி இருக்கிறார் ரஞ்சித்.

அட்டகத்தியில் புறநகர் சென்னையை நம் கண் முன் நிறுத்தியவர் இதில் வட சென்னையை கொண்டு வந்து இருக்கிறார்.

இரண்டாவது படம் எவருக்குமே அக்னிப் பரிட்சை தான். அதில் ரஞ்சித் கலக்கலாக வெற்றி பெற்று இருக்கிறார்.

எனக்கு இன்னும் படத்தில் நிறைய கூற இருக்கிறது ஆனால், இதுவே ரொம்ப பெரியதாக வந்து விட்டது.

காளி

இந்தப் படத்திற்கு முதலில் ரஜினி படப் பெயரான “காளி” (கார்த்தி கதாப்பாத்திரத்தின் பெயர்) என்ற பெயர் வைப்பதாக இருந்தது.

ஆனால், காளி என்ற பெயர் வைத்ததாலோ என்னவோ ரஜினி படத்திற்கு பல தடங்கல்கள் வந்ததாகவும் அதனால் சென்டிமென்ட்டாக வேண்டாம் என்று முடிவு செய்து மெட்ராஸ் என்று வைத்து விட்டார்கள். இது தான்  பொருத்தமாக இருக்கிறது.

எனக்கு பெரிய வருத்தம் இவ்வளவு நல்ல படம் “ஜெ” கைதில் நடந்த கலவரத்தில் வசூல் அடி வாங்கி விட்டதே! என்பது தான்.

இந்தப் படம் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழக் கூடிய படமல்ல ஆனால், கணவன் மனைவி, காதலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் குறிப்பாக இதில் உள்ள காதலுக்காக.

மாற்றுப் படங்களை ரசிப்பவர்கள் தவறவே விடக் கூடாத படம்.

இது போன்ற படங்களை இயக்கி தமிழர்கள் பெயரை உயர்த்துங்கள் இயக்குநர்களே! நம்மிடமே ஆயிரம் கதை இது போல இருக்க நமக்கு எதற்கு கொரியன் / ஆங்கிலப் படங்களின் நகல்கள்!

Directed by Pa. Ranjith
Produced by K. E. Gnanavel Raja, S. R. Prakashbabu, S. R. Prabhu
Written by Pa. Ranjith
Starring Karthi, Catherine Tresa
Music by Santhosh Narayanan
Cinematography G. Murali
Edited by Praveen K. L.
Production company Studio Green
Distributed by Dream Factory, Studio Green
Release dates 26 September 2014
Running time 156 minutes
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

  1. //அன்பு மனைவியாக வருபவர் பெயர் ரித்விகா என்று படித்தேன். இவ்வளோ நாளா இவங்க எல்லாம் எங்கே இருந்தாங்க?!//

    இவர் பரதேசி படத்தில் நடித்துள்ளார்

  2. அசத்தலான விமர்சனம் கிரி.. இறுதியில் கூறிய விஷயம் நச்..

  3. இதில் நடித்த ரித்விகா ஏற்கெனவே பாலாவின் பரதேசி படத்தில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர்

  4. கார்த்தி கதாப்பாத்திரம் சில காட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தை நினைத்துப் பயப்படும் சராசரி நபராகவும் இருக்கிறார் அதே சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று கோபப்பட்டு எவரையும் அடிக்கும் நபராகவும் இருக்கிறார். இதில் இயக்குநர் இன்னும் கவனமெடுத்து இருந்தால், அருமையாக இருந்து இருக்கும்.
    ——————————————————–
    இதில் ஜானி என்ற ஒரு கதாப்பாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்டவராக வருகிறார். படம் நெடுக அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இவர் பேசுவது நிறைய எனக்குப் புரியவில்லை.
    —————————————————————————–
    தமிழ்ப் படங்களில் கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது எப்பாவது நடக்கும் அதிசயங்கள் ஆகி விட்டது. அந்த அதிசயம் திரும்ப மெட்ராஸ் படத்தில் கேத்தரினுக்கு கிடைத்து இருக்கிறது. கோபக்காரப் பெண்ணாக வரும் இவர் கார்த்தியுடன் காதல் என்று போவது பின் சண்டை சமாதானம் என்று நொறுக்கித் தள்ளி இருக்கிறார். நீங்க நம்புறீங்களோ இல்லையோ “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்திற்குப் பிறகு ஒரு இயல்பான காதலை இந்தப் படத்தில் தான் பார்த்தேன். கோபம், குறும்பு, சண்டை, வாக்குவாதம், அழுகை, நக்கல் என்று இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். இவர்கள் காதல் ஒரு கவிதை மாதிரி இருக்கிறது. எத்தனை நாள் ஆச்சு இது போல ஒரு காதலைப் பார்த்து! ஒரு காதலில் என்னென்னெல்லாம் நடக்குமோ அத்தனையும் இதில் வருகிறது

    ———————————
    நான் நினைத்ததை அப்படியே எழுதி இருக்கீங்க….. நைஸ்.

  5. சூப்பர் விமர்சனம்

    ரஞ்சித் காதல் திருமணம் செய்தவர் , ஒரு குட்டி பொண்ணுக்கு அப்பா கூட 🙂

  6. நான் இன்று தான் படம் பார்த்தேன் கிரி. படம் பார்த்து விட்டு வந்து தான் உங்கள் விமர்சனம் படித்தேன். நான் நினைத்ததை எழுதியுள்ளீர்கள். கண்டிப்பாக இது ரஞ்சித் க்கு பெயர் சொல்லும் படம்

  7. trailer எனக்கு புடிக்கல .. எத்தன படம் வந்தாலும் புதுபேட்டை தான் gangster ஸ்டோரி ல பெஸ்ட்..
    உங்க விமர்சனம் பாத்தா படம் பாகனும் நு தோணுது
    இங்க திருட்டு vcd தான் அதுக்காக wait பண்ணுறேன்

    “இது போன்ற படங்களை இயக்கி தமிழர்கள் பெயரை உயர்த்துங்கள் இயக்குநர்களே! நம்மிடமே ஆயிரம் கதை இது போல இருக்க நமக்கு எதற்கு கொரியன் / ஆங்கிலப் படங்களின் நகல்கள்!”
    – இந்த விசயத்துல எனக்கு மாற்று கருத்து உண்டு தல
    இந்த மாதிரி படங்கள் நிச்சயம் வேணும்..
    அதே சமயம் “கொரியன் / ஆங்கிலப் படங்களின் நகல்கள்” அந்த மாதிரி படங்கள் பார்க்க முடியாத மக்களுக்கு ரசிக்க கூடியதா இருக்கலாமே?
    “proper credit” original டைரக்டர் கு கொடுக்கணும் நா அது வேற விஷயம்

    உதரணத்துக்கு மலையாளம் த்ரிஷ்யம் நகல் தான் கமல் பாபநாசம்
    இருந்தாலும் கதை நல்லா இருந்தா பார்க்க தான போறோம்?

    மேலும் “தமிழர்கள் பெயரை உயர்த்துங்கள்” – எந்த விதத்துல இந்த படம் நம்ம பெயர வெளி இடங்கள் ல உயர்த்தும் நு நினைக்குறீங்க?
    குதர்க்கமா கேக்கல ஆனா தெரிஞ்சுக்க ஆசை பட்டு கேக்குறேன்

    – அருண்

  8. @தமிழ்செல்வன் & பிரகதீஸ் தகவலுக்கு நன்றி

    @சரத் நன்றி

    @ராஜேஷ் & சரவணன் ரைட்டு

    @தமிழ் ஓகே ஓகே 🙂 அது தான் இப்படி எடுத்து இருக்காரு.

    @அருண்

    நீங்க நம்புறீங்களோ இல்லையோ இந்த ட்ரைலர் படம் பார்க்கும் முன்பு என்னை கவரவில்லை. இரு முறை மட்டுமே பார்த்தேன். படம் பார்த்து முடித்த அன்று மட்டும் கிட்டத்தட்ட 10 முறை பார்த்தேன்.

    “எத்தன படம் வந்தாலும் புதுபேட்டை தான் gangster ஸ்டோரி ல பெஸ்ட்..”

    அருண் எப்போதுமே எந்தப் படத்தையும் பார்க்காமலே விமர்சிக்கக் கூடாது. படம் பார்த்து பிடிக்கவில்லை என்று விமர்சித்தால் அது வேறு. இது Gangster படம் கிடையாது. இரு அரசியல் தலைவர்களுக்கு இடையே நடைபெறும் அதிகார மோதல். புதுப்பேட்டை பக்கா Gangster படம், பின்னணி அரசியல்.

    ““proper credit” original டைரக்டர் கு கொடுக்கணும் நா அது வேற விஷயம்”

    அது வேற விசயமில்லை அருண். அது தான் விசயமே! இது போல எடுக்கப்படும் திருட்டுப் படங்களால் தமிழ் படங்களுக்கு மிகவும் கெட்ட பெயர். நான் அனுமதி பெற்று எடுக்கப்படும் ரீமேக் படங்களுக்கு எதிரானவன் அல்ல. இது பற்றி ஏற்கனவே விரிவாக கூறி இருக்கிறேன். இது வரை வெளிவந்த கொரியன் ஆங்கிலப் படங்களுக்கு ஏதாவது ஒன்றிக்காகவது க்ரிடிட் கொடுத்து இருக்கிறார்களா? ஆடுகளம் மட்டும் தான் கொடுத்து இருக்கிறது.

    https://www.giriblog.com/tamil-movies-in-wrong-way/

    https://www.giriblog.com/a-dirty-carnival-movie-review/

    ஆனால் திருடி எடுக்கப்படும் படங்களால் நமக்குத் தான் கெட்ட பெயர். நல்ல படங்களை ரீமேக் மூலம் கொடுத்தால் அனைவரும் நல்ல படங்களை பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை ஆனால், நம்மிடையே கூறப்படாத கதைகள் மெட்ராஸ் போல ஏராளம் இருக்கிறது.

    “உதரணத்துக்கு மலையாளம் த்ரிஷ்யம் நகல் தான் கமல் பாபநாசம் இருந்தாலும் கதை நல்லா இருந்தா பார்க்க தான போறோம்?”

    இது அனுமதி பெற்று அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் படம். இது பற்றி நான் எதுவும் கூறவில்லை. இது போல படங்களை நாமே சொந்தமாக எடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். நம்முடைய படங்கள் அதிகம் ரீமேக் செய்யப்பட்டால் தான் நமக்குப் பெருமை. இவற்றால் நமக்கு என்ன பெருமை?

    அவ்வை சண்முகி, அன்பே சிவம், மகளிர் மட்டும், தெனாலி, பஞ்சதந்திரம் என்ற நல்ல படங்கள் நமக்குக் கிடைத்தாலும், காலம் இருக்கும் வரை இவை திருட்டுப் படங்கள் என்றே அழைக்கப்படும். இதே “மகாநதி” படத்தால் நமக்குப் பெருமை.

    https://www.giriblog.com/mahanadi-movie-review/

    “மேலும் “தமிழர்கள் பெயரை உயர்த்துங்கள்” – எந்த விதத்துல இந்த படம் நம்ம பெயர வெளி இடங்கள் ல உயர்த்தும் நு நினைக்குறீங்க?”

    நேரடியாகக் கேட்கிறேன் வெளிமாநில / வெளிநாட்டு மக்கள் அலெக்ஸ்பாண்டியன் / மெட்ராஸ் (நீங்க பார்க்கல அதனால் நீங்க பார்த்த ஒரு நல்ல (ஒரிஜினல் தமிழ்) படத்தை இதோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்) இரு படங்களையும் பார்த்தால், எதைப் பாராட்டுவார்கள். எந்தப் படத்தால் நமக்கு பெருமை கிடைக்கும்? ஒரு கொரியன் படத்தை காபி எடுத்து எடுக்கப்பட்ட படத்தை வெளி மாநிலத்தினர் / நாட்டினர் இது பற்றி தெரிந்து பார்த்தால் தமிழ்ப் படங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

    BTW இது போல மாற்றுக் கருத்துகளை உங்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

  9. “அருண் எப்போதுமே எந்தப் படத்தையும் பார்க்காமலே விமர்சிக்கக் கூடாது. படம் பார்த்து பிடிக்கவில்லை என்று விமர்சித்தால் அது வேறு. இது Gangster படம் கிடையாது.”
    – இது என்னடா வம்பா போச்சு
    நீங்க புதுபேட்டை நல்லா வட சென்னை பத்தி சொல்லுது நு சொன்னதுக்கு நாமளும் அந்த படத்த பத்தி சொல்லுவோம் நு gangster படத்துல புதுபேட்டை சூப்பர் நு சொன்னேன் மத்தபடி மெட்ராஸ் படத்த இதோட ஒப்பிடவே இல்லை

    moreover மெட்ராஸ் படம் இன்னும் நான் பாக்கவே இல்லை
    எனக்கு எப்பவும் trailer புடிச்ச தான் படம் பாக்கவே செய்வேன்
    இருந்தாலும் நீங்க நல்லா இருக்குன்னு சொல்லுறது நாள பாக்கணும் நு தோணுது

    தமிழ் படங்கள் பத்தின கேள்விக்கு உங்க பதில் ல எனக்கு மாற்று கருத்து உண்டு… தமிழ் கலாச்சாரம் சார்ந்த படைப்புகள் பெரிய அளவு ல வெளிமாநில மக்கள் ல கவர முடியாது (என்னோட கருத்து ) … மண் சார்ந்த படைப்புகள் தவிர மற்ற பாராட்ட கூடிய படைப்புகள் அந்த மாநில மொழி ல தனியா எடுதுபாங்க (example – கஜினி ).. இதுல தமிழ் மற்றும் தமிழர் இனத்துக்கு என்ன பெருமை வந்துட முடியும் நு எனக்கு புரியல? இங்க கஜினி பத்தி பேச்சு வந்தப்ப ஆமிர் கான் தான் அந்த வட நாட்டு மக்கள் கு தெரியுது … அது ஒன்னும் ஆச்சர்யம் இல்லை….

    புதுபேட்டை, 3, நாடோடிகள், பரதேசி, பொல்லாதவன், 7g ரெயின்போ காலனி – இப்படி எத்தனையோ நல்ல படங்கள் தமிழகம் தாண்டி அதோட reach எந்த அளவு இருந்துது நு சொல்லுங்க.. தமிழ் நாட்டுக்குள்ள இந்த படங்கள் பெருமை தான் ஆனா கேள்வியே தமிழர் இல்லாத நாடுகள் பத்தி தான்…

    again இதை நான் வீம்புக்கு எழுதல நெசமாவே தமிழர் கு பெருமை தர கூடிய படம் நு நெறைய பேரு சொல்லுராங்க அதை தெரிஞ்சுக்க விரும்புறேன்

    பின் குறிப்பு – மெட்ராஸ் படம் இன்னும் 2 நாள் ல பாத்துடுவேன்

    – அருண் கோவிந்தன்

  10. “நீங்க புதுபேட்டை நல்லா வட சென்னை பத்தி சொல்லுது நு சொன்னதுக்கு நாமளும் அந்த படத்த பத்தி சொல்லுவோம் நு gangster படத்துல புதுபேட்டை சூப்பர் நு சொன்னேன் ”

    அருண் நீங்க சொன்னதை திரும்ப ஒரு முறை பாருங்க 🙂 எத்தன படம் வந்தாலும் “புதுபேட்டை தான் gangster” ஸ்டோரி ல பெஸ்ட்..

    இதனால் தான் சொன்னேன்.. நீங்க எத்தனை படம் வந்தாலும் புதுப்பேட்டை தான் வட சென்னை படங்களில் பெஸ்ட் என்று கூறி இருந்தால் இதைக் கூறி இருக்க மாட்டேன்.

    “மெட்ராஸ் படம் இன்னும் நான் பாக்கவே இல்லை”

    இனி பார்த்தாலும் உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை 🙂 இதன் பிறகு ஒரு மனநிலை செட் ஆகி இருக்கும்.

    “எனக்கு எப்பவும் trailer புடிச்ச தான் படம் பாக்கவே செய்வேன்”

    இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க. ட்ரைலர் பார்த்து நான் ஏமாந்த படங்கள் நிறைய இருக்கு. மரியான் படம் ட்ரைலர் பார்த்து சென்று படத்தைப் பார்த்து நொந்து போனது எனக்குத் தான் தெரியும். இரண்டாம் உலகமும் கிட்டத்தட்ட இதே தான் ஆனால், இதாவது கொஞ்சம் எச்சரிக்கை இருந்தது.

    ட்ரைலர் சுமார் என்று போய் படம் பார்த்த வாயப் பொளந்த படங்கள் நிறைய உண்டு. மெட்ராஸ் கூட ட்ரைலர் எனக்கு அவ்வளவா பிடிக்கல அதனால தான் இரண்டாவது வாரம் பார்த்தேன். எனவே எந்தப் படத்தையும் ட்ரைலர் பார்த்து முடிவு செய்யாதீங்க.

    “தமிழ் கலாச்சாரம் சார்ந்த படைப்புகள் பெரிய அளவு ல வெளிமாநில மக்கள் ல கவர முடியாது ”

    உண்மை தான். படங்களில் இரு வகை இருக்கு. உள்ளூர் படம், உலகப் படம். உள்ளூர் படங்கள் உள்ளூர் மக்களால் மட்டுமே ரசிக்க முடியும். உலகப்படம் என்றால் எந்த நாட்டு மக்களும் ரசிக்க முடியும்.

    தமிழர்க்கு பெருமை தருவது என்றால் என்ன மாதிரி படங்களை அனுப்ப முடியும். தற்போது நார்வே படவிழாவில் தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் இது போன்ற விழாக்களுக்கு தமிழ் சார்பாக மெட்ராஸ் போன்ற படங்கள் சென்றால் பெருமையாக இருக்கும். அலெக்ஸ் பாண்டியனை அனுப்ப முடியுமா?

    “தமிழ் நாட்டுக்குள்ள இந்த படங்கள் பெருமை தான் ஆனா கேள்வியே தமிழர் இல்லாத நாடுகள் பத்தி தான்…”

    அருண் தமிழர்கள் இல்லாத நாட்டில் மட்டும் தான் பெருமையடைய முடியுமா? ஏன் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மாநில மக்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா? 🙂

    இவர்கள் படங்கள் இடையே நம்ம படம் நல்லா இருந்தா மற்ற மாநில மக்களால் பாராட்டப்பட்டால் நமக்கு பெருமை தானே! இப்ப த்ரிஷ்யம் படம் நல்லா இருக்கு தமிழ்ல வந்தால் நல்லதுன்னு சொல்றீங்க.. இது மலையாள மக்களுக்கு பெருமை தானே!

    உங்கள் தமிழ் படம் செமையா எடுக்கறாங்கப்பா என்று மற்ற மாநில நண்பர் உங்களிடம் கூறினால் உங்களுக்கு பெருமையாக இருக்காதா? எனக்கு நிச்சயம் இருக்கும்.

  11. அருண் சொல்ல மறந்துட்டேன்.. நம்ம தலைவர் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித்திடம் கூறியது

    “எப்படி இவ்வளவு லைவ்வா படம் எடுத்தீங்க. எப்படி கண்ணா இப்படி ஷுட் பண்ண.? சூப்பரா பண்ணியிருக்கீங்க. கலக்கீட்டீங்க. அதுவும் கேமிரா வொர்க் எல்லாம் அற்புதமாக இருந்தது. வாழ்த்துகள்!”

    🙂

  12. “உங்கள் தமிழ் படம் செமையா எடுக்கறாங்கப்பா என்று மற்ற மாநில நண்பர் உங்களிடம் கூறினால் உங்களுக்கு பெருமையாக இருக்காதா? எனக்கு நிச்சயம் இருக்கும்.”
    – அவன் நேர்மையா இருந்தா பெருமையா இருக்கும். ஆனா மத்த மாநில நண்பர்கள் என்னோட அனுபவத்துல தமிழன், தமிழன் சார்ந்த ந படைப்ப கேலி மட்டும் தான் செஞ்சு இருக்கான் குறிப்பா வடா மற்றும் தெலுங்கு மக்கள். எவளவோ நல்ல படங்கள் தமிழ் ல வந்தத கேலி தான் செஞ்சு இருகாங்க. 1980 ல தமிழ் படைப்பு நா ஒரு மரியாதை வெச்சு இருந்தாங்க குறிப்பா வடா தோசா பசங்க இப்ப பாருங்க மசாலா, குண்டா heroine ஆயிட்டா தமிழ் கு போனா popular ஆகலாம், ரஜினி காமெடி இப்படி கிண்டல் பண்ண தான் லாயக்கு அவங்க எல்லாம்… நம்ம மேல உள்ள ஒரு காழ்புணர்ச்சி தான் காரணம்.. நம்ம மட்டம் தட்டுறவன் என்ன மாதிரி படைப்பு வந்தாலும் மனசார சொல்ல மாட்டான் அதனால தான் அவன நான் கணக்கு ல எடுதுகவே இல்லை…

    இன்னும் ஒரு சந்தேகம் – பொல்லாதவன், புதுபேட்டை, மெட்ராஸ் (நீங்க சொன்ன த வெச்சு இந்த மெட்ராஸ் படத்த சேத்து இருக்கேன், ஒரு முன் எச்சரிக்கை தான் 🙂 ) மாதிரி யான படங்கள் என்னிக்குமே ஒரு national award கு nominate ஆன மாதிரி தெரிலையே.. எதனால? national award கு nominate ஆகாத ஒரு படம் வடா தோசா மாதிரியான பசங்க கிட்ட எப்படி சென்று அடையும்? மேலும் இந்த மாதிரி சென்று அடையாத படங்கள் எப்படி தமிழர் கு பெருமை படைக்கும்? நீங்க IT மக்கள், இன்டர்நெட் ல படம் பாக்குற குரூப் மட்டும் கணக்கு ல எடுத்து பதில் தர வேண்டாம்.. எந்த படமும் அந்த மாநில common man ந reach பண்ணனும்…

    என்ன பொறுத்த வரைக்கும் படம் எனபது ரெண்டு வகை
    1. entertain பண்ணும்
    2. சிந்திக்க வெச்சு மனசுல ஒரு விஷயம் சார்ந்து மாற்று கருத்த உருவாக்கும் (entertain நும் செய்யலாம்)

    என் கருத்து படி, மேல சொன்னதுல #1 வகை தமிழர் வெளி இடங்கள் ல பெருமை படுத்தாது
    #2 நிச்சயம் பெருமை படுத்தும்

    “இனி பார்த்தாலும் உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை”
    – இப்பவும் எனக்கு மெட்ராஸ் படம் பார்க்கும் போது புடிக்கலாம் தல.. நடிகர் விஜய் பர்சனல் கேரக்டர் எனக்கு புடிக்கல ஆனா அவரோட லேட்டஸ்ட் படங்கள் எல்லாமே எனக்கு புடிச்சுது.. என்கிட்ட இருக்குற ஒரே நல்ல விஷயம் படம் பார்க்கும் போது எந்த ஒரு தனி விருப்பு வெறுப்பு மனசு ல வெச்சுட்டு பாக்குறது இல்லை.. அதனால மெட்ராஸ் பாத்துட்டு சொலுறேன்

    ஆனா மெட்ராஸ் பார்த்த பிறகு படம் சூப்பர் ஆனா தமிழர் பெருமை எங்க நு நான் மறுபடியும் முதல்ல இருந்து (பரோட்டா காமெடி மாதிரி) நான் வரலாம் .. அப்போ அந்த பஞ்சாயத்த நீங்க தான் தீர்க்கணும்

    – அருண்

  13. “நம்ம மட்டம் தட்டுறவன் என்ன மாதிரி படைப்பு வந்தாலும் மனசார சொல்ல மாட்டான் அதனால தான் அவன நான் கணக்கு ல எடுதுகவே இல்லை…”

    அவங்களை விடுங்க.. நம்ம சக தென்னிந்திய ரசிகர்கள் நல்ல படம் என்றால் நம்மை பாராட்ட / ஆதரிக்க தவறுவதில்லை.

    இந்திக்காரங்க மட்டுமே இந்தியர்கள் அல்ல அருண். நம் படங்களின் தரத்தை அவர்கள் யார் மதிப்பிட? அவர்களே விழாவை நடத்துவார்கள் அவர்களே விருதும் கொடுத்துப்பார்கள்.. கேட்டால் இந்திய விழா என்பார்கள். இவர்களை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை ஆனால், அனைவரையும் அப்படி கூற முடியாது. நியாயமாக கூறுபவர்களும் சிலர் இருக்கிறார்கள்.

    “ஆனா மெட்ராஸ் பார்த்த பிறகு படம் சூப்பர் ஆனா தமிழர் பெருமை எங்க நு நான் மறுபடியும் முதல்ல இருந்து (பரோட்டா காமெடி மாதிரி) நான் வரலாம் .. அப்போ அந்த பஞ்சாயத்த நீங்க தான் தீர்க்கணும்”

    பஞ்சாயத்துக்கு நான் வரல.. சிம்பிள்.. என் கருத்து எனக்கு உங்க கருத்து உங்களுக்கு 🙂 .

  14. “பஞ்சாயத்துக்கு நான் வரல.. சிம்பிள்.. என் கருத்து எனக்கு உங்க கருத்து உங்களுக்கு”
    – ரைட்டு.. இந்த விவாதத்துக்கு காரணமே உங்க கருத்த எந்த basis ல நீங்க சொல்லுறீங்க நு தெரிஞ்சுக்க ஆசை பட்டேன்.. குறிப்பா தமிழர் கு பெருமை அதனால கேட்டேன்

    மெட்ராஸ் படம் பாத்துட்டு சொல்லுறேன் எனக்கு புடிச்சுதா இல்லையா நு

    பதிவிற்கும், விவாததிற்கும் நன்றி தல

    – அருண்

  15. கிரி தல ,
    மெட்ராஸ் படம் பாத்துட்டேன்
    நிச்சயம் ஒரு டைம் பார்க்க கூடிய படம் தான்.. நல்ல டைம் பாஸ் படம்

    சில இடங்கள் கொஞ்சும் slow வா இருக்கு.. படத்துல எல்லா கேரக்டர் ரும் நல்லா நடிச்சு இருக்காங்க.. கிளைமாக்ஸ் கு முன்னாடி உள்ள ட்விஸ்ட் மட்டும் படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல guess பண்ண முடிஞ்சது.. இந்த மாதிரி ஒரு சின்ன storyline ல 2 1/2 மணி நேரம் உக்கார வெச்சது பெரிய விஷயம் தான்

    – அருண்

  16. தமிழன், தமிழன் சார்ந்த படைப்புகளை கேலி செய்வது தமிழன் தான். பிற மாநிலத்தவர் அல்ல. காரணம் hero worshipping என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறினது. ஜெயா கைது போராட்டங்களில் கூட இதை புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நடிகனை மட்டுமே ரசிப்பான் தமிழன். அந்த குறிப்பிட்ட நடிகரின் போட்டியாக யாரையாவது அவன் நினைத்து விட்டால் அந்த நடிகனை எவ்வளவு தாக்கி எழுத முடியுமோ அவ்வளவு தாக்கி விமர்சிப்பான். அவரிடம் இருக்கும் திறமை அல்லது சிறப்பை பாராட்ட அவனால் கண்டிப்பாக முடியாது. facebook , ட்விட்டர் பக்கங்களில் தமிழனின் இந்த அரிய குண நலனை எல்லோரும் புரிந்து கொள்ளலாம். quality work என்பது, நடு நிலைமையான மனம், பிறரின் திறமைகளை பாராட்டும் பரந்த மனம் கொண்டவர்களால் மட்டுமே கொடுக்க முடிந்த ஒரு விஷயம். அது தமிழர்களால் முடியாதது. ஒரு சினிமா விமர்சனத்தில் கூட படத்தை விமர்சிக்காமல் கதாநாயகனை விமர்சிப்பது தான் தமிழன். அதனால் பிற மாநிலத்தவரை குறை கூறுவது ஏற்று கொள்ள முடியவில்லை. முதலில் hero worshipping என்ற குறுகிய வட்டத்திலிருந்து தமிழன் வெளியே வரட்டும். அதன்பின் தரமான படங்களை கொடுப்பதை பற்றி விவாதிக்கலாம்.

  17. Mr. arun.. ஒரு நடிகரோட personal character பிடிக்கலனு சொல்றது ஆச்சரியமா இருக்கு. ஒருத்தரோட personal character ஐ அவர் கூட நெருக்கமாக பழகுறவங்க கூட முழுமையாக தெரிஞ்சுக்க முடியாது. ஒரு ரசிகரான நீங்க எப்படி முடிவு பண்ணினீங்க?

  18. @அருண் ஒரு முறை பார்க்கக் கூடிய படமா! ஓகே ரைட்டு 🙂

    இந்தப் படத்தின் கதை இன்னொரு பட இயக்குனரின் கதை என்று புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அவர் “கறுப்பர் நகரம்” என்ற படத்தை எடுத்து வருபவராம். இன்னும் கொஞ்ச நாள் சென்றால் மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.

    @Guest நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், அனைவரையும் அப்படியே கூறி விட முடியாது. நல்ல படங்கள் வரும் போது ஆதரிப்பதும் இதே மக்கள் தானே! Hero Worship என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்லாது.. உலகம் முழுக்க உள்ளது. இங்கே அதிகமாக உள்ளது அது தான் பிரச்சனை. பின்னாளில் மாறலாம்.

    @சரத் அருண் “ஒரு நடிகர் பொது இடத்தில் பேசும் நடந்து கொள்ளும் முறையை கூறுகிறார்” என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு சிலருக்கு ரஜினியை நடிப்பில் பிடிக்கும் சிலருக்கு அவர் நடந்து கொள்ளும் முறையால் பிடிக்கும்.. அது போல. மற்றபடி நீங்கள் சொன்னது போல அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் அவர்கள் வீட்டினருக்கே முழுமையாகத் தெரியாது.

  19. “@அருண் ஒரு முறை பார்க்கக் கூடிய படமா! ஓகே ரைட்டு” – படம் நல்லா இருக்கு தல என்னோட கமெண்ட் தப்பா புரிஞ்சுக்க வேண்டாம் … படத்தோட சோகம் என்னை ஒரு டைம் கு மேல பார்க்க விடாது
    அதனால சொன்னேன்

    @சரத் – நீங்க சொல்லுறது கரெக்ட் தான். “personal character” நான் சொல்ல முடியாது.. அவர் பொது இடங்கள் ல நடந்துக்குற முறையை தான் சொன்னேன்

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here