கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க பரவி வருவதை வைத்துப் பொதுமக்களை SICK Mind அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மேலும் பயமுறுத்தி வருகின்றனர்.
இக்கட்டுரை SICK Mind எண்ணங்களைக் கொண்டு செயல்படுபவர்களை மட்டும் விமர்சிக்கிறது. Image Credit
ஊடகங்கள்
தமிழக, இந்திய ஊடகங்கள் மீது எள்ளளவும் மரியாதை கிடையாது.
ஒவ்வொரு மோசமான சூழ்நிலையிலும் தங்கள் பொறுப்பைப் புறக்கணித்து மக்களுக்கு எதிர்மறை செய்திகளையே கொடுத்துப் பீதியாக்கி வருகின்றன.
இவை சூழ்நிலைகளை மேலும் சிக்கலாக்கி பதட்டத்தை, கவலையை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் மோடி, பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருப்பவை.
இதனால், இவர்களை விமர்சிப்பதாக, சிறுமைப்படுத்துவதாக நினைத்து, மக்களைக் குழப்பி, பயமுறுத்தி வருகின்றன.
மத்திய அரசு மீது தவறு என்றால், விமர்சிக்கலாம், அதற்காக அனைத்திலும் குற்றம் கண்டுபிடித்துப் பேசிக்கொண்டு இருப்பது சரியானது அல்ல.
விவேக் சர்ச்சை
விவேக் இறப்பை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி மக்கள் அனைவரையும் பீதிக்குள்ளாக்கி விட்டார்கள்.
தடுப்பூசி போடும் எண்ணத்தில் இருந்தவர்கள் கூட யோசிக்க, மறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சர்ச்சையாக்கிய அரசியல்வாதிகள் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் ஆனால், மக்கள் எப்போதும் பீதியில், பயந்து சாக வேண்டும்.
தடுப்பூசி போடுவது முக்கியமானது என்று தெரிந்தும் கேவலம் அரசியலுக்காக, TRP க்காகத் தொடர்ந்து பயமுறுத்தும் செய்திகளையே பேசுவது என்ன மாதிரியான அரசியல், ஊடக தர்மம்?
எதிர்மறை செய்திகள்
தமிழக ஊடகங்களைப் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இன்னமும் மனசிதைவுக்கு ஆளாகாமல் இருப்பதே பெரிய விஷயம்.
தொடர்ந்து இதே வேலையாக 24 மணி நேரமும் எதிர்மறை செய்திகளையே கொடுக்கும் ஊடகத்தினர் தினசரி சிந்தனைகள் எப்படி இருக்கும்?
நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக உள்ளது. SICK Mind.
இவர்கள் கூறுவது பெரும்பான்மை பொய், மிகைப்படுத்தப்பட்டவை, கொஞ்சம் உண்மை. ஊடகங்களுக்கு அனைத்துமே Breaking News தான்.
செய்திகளைச் செய்திகளாகவே ஊடகங்கள் கொடுத்தால் பிரச்சனையில்லை ஆனால், அவற்றைத் தங்கள் கருத்தோடு திணிப்பதே இங்கே பிரச்சனை.
செய்திகளைக் குறிப்பாகத் தொலைக்காட்சி, ஃபேஸ்புக் செய்திகளைத் தவிருங்கள்.
தேர்தல் கூட்டங்களால் அதிகரித்த கொரோனா
இரண்டாம் அலை மற்ற நாடுகளில் துவங்கிய போது இந்தியாவில் பாதிப்பில்லை ஆனால், உருமாற்றம் பெற்ற கொரோனா வந்த பிறகு அதிகரித்து விட்டது.
இதற்கு மிக முக்கியக் காரணமாகத் தேர்தல் பரப்புரைகள் அமைந்து விட்டன.
தினமும் பல ஆயிரக்கணக்காக மக்கள் கூடியது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை போல ஆனது.
கொரோனா குறைந்து வந்த வேளையில் தேர்தல் கூட்டங்கள் அதைத் திரும்ப உயிர்ப்பித்து விட்டன.
தடுப்பூசி கட்டாயம்
தடுப்பூசி போடுவது கட்டாயம். யார் கூறுவதையும் கேட்டுக் குழம்ப வேண்டாம். தடுப்பூசி மட்டுமே உங்களைத் தொற்றில் இருந்து காப்பாற்றும்.
உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தாரையும், நண்பர்களையும், பொதுமக்களையும்.
தடுப்பூசி போட்ட பிறகு 0.03 % பேருக்கே கொரோனா வந்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது, அதுவும் உயிருக்குப் பாதிப்பில்லை.
தடுப்பூசியைப் போடாமல் தடுப்பது, தவிர்ப்பது மறைமுகமாக மற்றவருக்குத் தொற்றைப் பரப்பத் துணை புரிகிறீர்கள் என்றே அர்த்தம்.
நம் தவறால் மறைமுகமாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
உடலில் பிரச்சனையுள்ளவர்கள் தடுப்பூசி போடும் முன் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது கட்டாயம்.
அனைவருக்கும் பொறுப்புள்ளது
முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள்.
அதிகரிக்கும் எண்ணிக்கை நாடு முழுமைக்கான ஊரடங்கை தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குக் கொண்டு செல்லும், வேறு வழியில்லை.
முகக்கவசத்தை தாடைக்கு அணிவது, தலைக்கவசம் அணிந்தும் பாதுகாப்புப் பட்டை (Helmet Strap) அணியாமல் செல்வதுக்கு ஒப்பானது.
இது போல அணிபவர்களை கண்டாலே எரிச்சலாக வருகிறது.
அனைத்துக்கும் அரசையே குறை கூறிக்கொண்டு இல்லாமல், நமக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும்.
எதிர்மறை பேச்சுகள், எண்ணங்கள் தீர்வைத் தராமல் மன உளைச்சலையும் மேலும் பிரச்சனைகளையும் மட்டுமே கொடுக்கும்.
இந்நிலையை இந்தியா நிச்சயம் கடந்து செல்லும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பு அவசியம்.
தொடர்புடைய கட்டுரை
தடுப்பூசி போடுவது கட்டாயமா? | COVID-19
சேமிப்பின் அவசியம் உணர்த்தும் கொரோனா
கொசுறு
வாட்சப், சமூகத்தளங்கள், ஊடகங்களைத் தற்காலிகமாகத் தவிர்த்தால், மன உளைச்சல் இருக்காது.
ஃபேஸ்புக் / ட்விட்டரில் எதிர்மறை எண்ணங்களைத் தருபவற்றை Unlike / Unfollow செய்து விடுங்கள். குறைந்த பட்சம் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு.
தொடர்ச்சியான எதிர்மறை செய்திகளையே படித்து / பார்த்துக்கொண்டு இருந்தால், நம் எண்ணங்களே நம்மை உடல் பலமிழக்க செய்து விடும்.
எனவே, எதிர்மறை செய்திகளைக் கொடுப்பவற்றில் இருந்து விலகியிருங்கள்.
செய்திகள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.. நெருங்கிய வட்டத்திலும் அறிவுறுத்தி இருக்கிறேன்.. (எதிர்மறை பேச்சுகள், எண்ணங்கள் தீர்வைத் தராமல் மன உளைச்சலையும் மேலும் பிரச்சனைகளையும் மட்டுமே கொடுக்கும்.) இதை நானே உணர்வுப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.. நிச்சயம் சத்தியமான வரிகள்.. (வாட்சப், சமூகத்தளங்கள், ஊடகங்களைத் தற்காலிகமாகத் தவிர்த்தால், மன உளைச்சல் இருக்காது.) கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
செய்திகளை, குறிப்பாகத் தொலைக்காட்சி ஊடகங்களைத் தவிர்த்தாலே போதுமானது.