நடிகனுக்கு ரசிகன் என்றாலே, இவன் உருப்படமாட்டான், வெட்டியா பொழுதைப் போக்குபவன், சண்டைப்போடுபவன், சமூகத்தைச் சீரழிப்பவன் என்ற பொதுவான கருத்து உள்ளது.
நடிகர் என்றாலே, அவரது ரசிகர்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், அவர்கள் வாழ்க்கையைச் சீரழிப்பவர்கள் என்ற எண்ணமுள்ளது.
இதை முழுவதும் மறுக்க முடியாது என்றாலும், விதிவிலக்குகளுமுள்ளன.
மாற்றியமைத்த மூன்று வழிகள்
என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவங்களைக் கற்றுக்கொண்டது / கற்றுக்கொண்டு இருப்பது மூன்று வழிகளில்.
ஒன்று அப்பாவிடம். இரண்டாவது எனக்குக் கிடைத்த அனுபவங்களில், வாங்கிய அடியில் நானாக நிறையக் கற்றுக்கொண்டேன்.
மூன்றாவது தலைவர் ரஜினி.
முதலில் அவரின் நடிப்புக்கு ரசிகன் என்றாலும், பின்னர் அவருடைய பொது வாழ்க்கை, பேட்டி, மேடைப் பேச்சுகளுக்கு மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்.
என் வாழ்க்கையில் இவர் நேரடியாக எனக்கு எதையும் சொன்னது கிடையாது, அதற்கான வாய்ப்பும் எனக்கில்லை.
ஆனால், அவருடைய பேட்டிகள், பேச்சுகள், அனுபவங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது ரொம்ப ரொம்ப அதிகம்.
அவை எப்படி என் வாழ்க்கையில் உதவியது என்று கூறுகிறேன்.
விமர்சனத்தை எதிர்கொள்வது
ஒரு மனிதனுக்கு மிக மிக அவசியமான குணங்களுள் ஒன்று விமர்சனத்தை எதிர்கொள்வது.
2006 ல் எழுத வந்து இருந்தாலும், பலருக்கு அறிமுகமானது 2008 ல் தான். இந்தச் சமயத்தில் நாகரீகமாக எழுதுவேன் என்பதைத் தவிர்த்து, செம்ம சண்டை போடுவேன்.
2008 ல் இருந்து தொடர்ச்சியாக என் தளத்தைப் படிப்பவர்களுக்கு எப்படி இருந்து எப்படி மாறி இருக்கிறேன் என்று தெரியும்.
அப்போது எதைத் தவிர்க்க வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவமில்லை. கடுமையான மன உளைச்சல் ஏற்படும்.
அப்போது காவிரி பிரச்சனையால் தமிழகம் கர்நாடகம் சண்டையாக, வழக்கம் போலத் தலைவர் தலை உருட்டப்பட்டது.
தலைவர் மன்னிப்புக் கேட்டதாகச் சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கத் தமிழ்நாடே தலைவரைத் திட்டியது.
இதில் என்ன பிரச்சனை என்றால்…
சத்யராஜ் தலைவரை மேடையில் அசிங்கமாகத் திட்டியதால், கோபமடைந்த தலைவர் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் கோபத்தில் “வன்முறை செய்தவர்களை உதைக்கணும் என்று கூறுவதற்குப் பதிலாகக் கர்நாடகா மக்களை உதைக்கணும்” என்று கூறி விட்டார்.
பின்னர் தன் தவறை உணர்ந்து, “அனைவரையும் அப்படிக் கூறியிருக்கக் கூடாது, வன்முறை செய்தவர்களைத் தான் அப்படிக் கூறியிருக்க வேண்டும்” என்று மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இதில் இவர் மன்னிப்பு கேட்டது மட்டும் பிரச்சனையாக்கப்பட்டது, எதனால் கூறினார் என்பதற்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.
அதற்குள் விசயம் கை மீறிச் சென்று, குசேலன் கர்நாடக வெளியீட்டுக்காக இவர் மன்னிப்புக் கேட்டார் என்று ஒருத்தர் விடாமல் தலைவரை ஆபாசமாகத் திட்டத் தொடங்கினார்கள்.
ஏறக்குறைய மொத்த தமிழ்நாடும் அவரைத் திட்டியது ஆனாலும், அமைதியாக இருந்தார். திரும்ப எதையும் கூறி தன் செயலை நியாயப்படுத்தவில்லை.
அப்போது இருந்த ஒரு மோசமான சூழ்நிலையில், தலைவர் நிலையில் வேறு ஒருவர் இருந்தால், என்ன ஆகி இருப்பார் என்றே என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு அமருகிறான்
இப்பிரச்சனையை மனதில் வைத்துக் கோச்சடையானில் “கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு அமருகிறான்” என்ற வசனத்தை வைத்தாரோ என்ற சந்தேகம் எனக்குள்ளது.
ஏனென்றால், சத்யராஜ் அசிங்கமாகத் திட்டி அதனால் கோபம் அடைந்து தான் அப்படியொரு வார்த்தையை விட்டார்.
அப்போது மட்டும் அவர் அமைதியாக இருந்து இருந்தால், மிகப்பெரிய பிரச்சனையைத் தவிர்த்து இருக்கலாம்.
இது எனக்குப் பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.
அலுவலகத்தில் ஒரு பிரச்சனையில் நான் கோபப்பட்டு மின்னஞ்சல் அனுப்பி அது கடுமையான பிரச்சனையாகி அதனால், எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் நட்டமாகி விட்டது.
Read: அனுபவத்திற்கு இல்லை எல்லை
கோபமாக இருக்கும் மன நிலையில் எதையும் செய்யக் கூடாது, எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று “குசேலன்” பிரச்சனை மீண்டும் ஒருமுறை வந்து நினைவு படுத்தியது.
இதன் பிறகு எந்தப் பிரச்சனை என்றாலும், அமைதியாக இருந்து விடுவேன். கோபம் அடங்கி மனம் தெளிவான பிறகு அடுத்த நடவடிக்கை எடுப்பேன்.
இதற்கு ஒரு நாள் முழுக்க எதையும் செய்யாமல் அமைதியாக இருந்து இருக்கிறேன்.
இது மிகப்பெரிய பலனையும் எனக்குத் தந்து இருக்கிறது. அதோடு அமைதியாக அவசரப்படாமல் இருந்ததால், தானாகவே அப்பிரச்சனையும் சரியாகி இருக்கிறது.
இதை தலைவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன்.
எல்லாம் கொஞ்ச காலம்
அவரவர் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட அதற்குக் காரணம் ரஜினி என்று கூறி திட்டுபவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
எனவே, எந்தப் பிரச்சனையென்றாலும், தலைவர் கையைப் பிடித்து இழுப்பது வழக்கமாகி விட்டது.
யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம், “ரஜினி தான் இதற்குப் பதில் சொல்லணும்!!” என்று போராட்டம் நடத்த கிளம்பி விடுவார்கள்.
இது போல எத்தனை பிரச்சனை வந்தாலும், தலைவர் அமைதியாகவே இருப்பார். எதற்கும் பதில் அளித்துத் தன்னை நேர்மையானவன் என்று நிரூபிக்க முயற்சிக்க மாட்டார்.
அவற்றைப் புறக்கணித்து தன்னுடைய வேலை என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துவார்.
இவர்களும் கொஞ்ச நாள் கத்துவார்கள், அவர்களுக்கான விளம்பரம் கிடைத்த பிறகு அமைதியாகி விடுவார்கள். அந்தப் பிரச்சனை என்ன ஆனது என்றும் தெரியாது.
போராட்டம் செய்தவர்களும் கவலைப்பட மாட்டார்கள்.
ஊடகங்களும் அப்போதைக்கு விற்பனை / TRP சிறப்பாக உள்ளது என்று தங்கள் பங்குக்கு ஏற்றி விடுவார்கள்.
ஊடங்கள் எப்போதும் தங்களுடைய பரபரப்புக்கு இவர் பேசும் பேச்சைத் திரித்துத் தலைப்பு வைத்து எழுதுவார்கள். படிப்பவர்கள் அனைவரும் தலைவரைத் திட்டுவார்கள்.
சொல்லாத ஒரு கருத்தைத் திரித்து ஊடகங்கள் கூறி அதை மற்றவர்கள் விமர்சித்தால், அதன் மனநிலை எப்படி இருக்கும்?!
இது இன்று வரை இவருக்கு நடந்து கொண்டு இருக்கிறது ஆனால், அனைத்தையும் அமைதியாக கடந்து செல்கிறார்.
எல்லாம் கொஞ்ச காலம்.
ஒருவரின் அனைத்துக் கருத்துகளும் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பே இல்லை
நான் எழுதிய கட்டுரைகளில், அனைத்துக் கட்டுரைகளும் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூற முடியாது, அது சாத்தியமுமில்லை.
எனவே, அவர்களுக்குப் பிடிக்காத கட்டுரை வந்தால், சிலர் கண்டபடி திட்டி இருக்கிறார்கள் ஆனால், அவை எந்த விதத்திலும் என்னைப் பாதித்ததில்லை.
என் மனசாட்சிக்கு நேர்மையாக எழுதுகிறேன். எனவே, எதற்கும் கலங்க வேண்டியதில்லை.
இது அவருடைய கருத்து, அதில் சரி என்று தோன்றுவதை எடுத்துக்கொண்டு மற்றதை தவிர்த்து விடலாம் என்று அமைதியாகவே சென்று இருக்கிறேன்.
அதோடு எந்தப் பிரச்சனை என்றாலும், கொஞ்ச நாளில் அது காணாமல் சென்று விடும். இது உண்மையாகவே வேலை செய்கிறது. நீங்கள் கவனித்துப் பாருங்கள்!
நான் பொய் கூறவில்லை.
இதுவரை எத்தனையோ பிரச்சனைகளுக்காக நீங்கள் பயந்து இருக்கலாம், அவையெல்லாவற்றையும் தாண்டித்தான் தற்போது நீங்கள் வந்து இருக்கிறீர்கள்.
நீங்கள் பயப்பட்டதால், ஏதாவது நின்று இருக்கிறதா? அல்லது மோசமாகி இருக்கிறதா?!
நடப்பது நடக்கும். எதற்குப் பயம்? கவலை! நீங்கள் நேர்மையாக, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொண்டால் போதும். அனைத்தையும் எளிதாகக் கடந்து செல்லலாம்.
இது எனக்கு மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. இதைத் தலைவரிடம் கற்றுக்கொண்டேன்.
காது கேளாத தவளை கதை
தலைவரோட குட்டிக்கதைகளுள் மிகப்பிரபலமானது தவளைக் கதை. தான் செல்லும் பாதையில் யார் கூறும் விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் சென்று இலக்கை அடையும்.
இக்கதைக்கு மிகப்பெரிய உதாரணம் தலைவர் தான். இவரைப் பற்றி என்னென்ன விமர்சனங்கள்!
தலைவர் 100% சரியானவர் என்பதல்ல என் கருத்து. அப்படி 100% சரியானவர் என்று உலகிலேயே எவரும் இருக்கவும் முடியாது ஆனால், விமர்சனங்களைத் தாண்டி பயணிக்கிறார் என்பதே நான் கூற வருவது.
தலைவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு ஒவ்வொருவரும் அவரைக் கீழே இழுக்க எவ்வளவோ வழிகளில் முயல்கிறார்கள் ஆனால், என்ன நடந்து கொண்டு இருக்கிறது?
தலைவர் நாளுக்கு நாள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறார். யாராலும் தடுக்க முடியவில்லை.
அனைவரையும் திருப்தி செய்ய முயற்சிக்காதீர்கள்
அனைவரையும் திருப்தி செய்யணும் என்று கிளம்பி இருந்தால், இன்று ஒன்றுமில்லாமல் போய் இருப்பார். அவருடைய மனசாட்சிக்கு சரியென்று படுவதைச் செய்கிறார்.
மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, எதையும் யாருக்கும் நிரூபிக்க முயற்சிப்பதில்லை.
Read: எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?
இவர் சந்திக்காத விமர்சனங்களா!! ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் புறக்கணித்துக்கொண்டே செல்கிறார்.
இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா?
நானும் தற்போது எனக்குத் தேவையில்லாத எந்த விஷயங்களிலும் தலையிடுவதில்லை. எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் படிப்பதில்லை.
படிப்பதில்லை என்பதை விட அந்தப்பக்கமே போவதில்லை. யாரையும் எதிரியாக நினைப்பதில்லை.
நீங்க சொன்னா நம்பமாட்டீங்க, இதை நான் பின்பற்ற ஆரம்பித்த பிறகு எனக்கு எந்தப் பிரச்சனையும் வருவதில்லை அல்லது பிரச்சனையாகத் தெரிவதில்லை.
தவளைக் கதை என்னுள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
முக்கியமாக நான் மனஉளைச்சல் ஆவது முற்றிலும் நின்று விட்டது.
மனைவி தான் “உங்களுக்கு எது தான் பிரச்சனையாகத் தெரியும்?!” என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார் 🙂 .
Read: எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்
யாரையும் குறை கூறாமை
நீங்க தலைவரை எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம் ஆனால், அவர் மற்றவர்களைக் குறை கூறி ஒரு பேட்டி கூடப் பார்த்து இருக்க முடியாது.
அவரை எத்தனையோ பேர் படு கேவலமாக விமர்சித்து இருக்கிறார்கள் ஆனால், அவர்களைப் பற்றி தலைவர் அநாகரீகமாக ஒருமுறை கூட கூறியது கிடையாது.
இந்தக் குணம் வருவது அவ்வளவு எளிதல்ல. இதை என்னால் முழுவதும் பின்பற்ற முடியவில்லையென்றாலும், பின்பற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
மூன்றாம் நபரிடம் நான் மற்றவரைப் பற்றி குறை கூறினால், இது நினைவுக்கு வந்து “தவறு செய்து கொண்டு இருக்கிறாய்!” என்ற குற்ற உணர்வைத் தரும்.
மறைமுக ஆசான்
இது போல நான் தலைவரிடம் கற்றுக்கொண்டது ஏராளம் இருக்கிறது. கூறினால் கூறிட்டே இருப்பேன். இத்தனையும் ஒரு “நடிகரிடம்” இருந்து தான் கற்றுக்கொண்டேன்.
தலைவரால் நிறையப் பயன் அடைந்தேன் என்று கூறுவதில் எனக்குப் பெருமையே!
முன்னரே ஒரு கட்டுரையில் கூறியுள்ளதுபடி
ஒவ்வொருவரும் எப்படி என்பது அவரவர் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறதே தவிர நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதில் இல்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
கண்ணா! நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது. ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.
தலைவரை ரசிக்கிறேன், அவருடைய பெரும்பான்மையான கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒத்த கருத்துடைய நண்பன் போல. இவர் நண்பனல்ல ஒரு மறைமுக ஆசான்.
தலைவரை எனக்குப் பிடிக்கும் என்பதால், அவர் செய்யும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வேன் என்று அர்த்தமில்லை.
பிடிக்கவில்லை என்றால், பிடிக்கலை என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.
என்னைப் போலப் பலருக்கு பல நல்ல வழிகளைக் காட்டிய தலைவர் அவர்கள் நீடுழி வாழ அவருடைய இந்தப் பிறந்த நாளில் அனைத்து ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?
ரஜினிக்கு “ரசிகனாக” இருப்பதில் என்ன தவறு?
“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, நான் எந்த நடிகர்களுக்கும் ரசிகன் கிடையாது. ஆனால் எந்த துறையிலும் சாதித்தவர்கள் மீது என்றுமே மரியாதை உண்டு. ரஜினி சாரும் அப்படிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை பிடிக்கும் மற்ற நடிகர்களை போன்றே. ஆனால் அவரின் சில கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு. பல நேரங்களில் அவரை கண்டு பிரமிப்பதும் உண்டு.
பிரபலம் என்றாலே PROBLEM என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதுவும் ரஜினி சார் போன்று உலக அளவில் பிரபலமாக இருப்பவர்களுக்கு கூற வேண்டியது இல்லை. நிறைய விஷியங்களை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் கோபம், பொறுமை, சகிப்புத்தன்மை, நன்றாக இருந்தது.
நீங்கள் கூறினால் நம்புவீர்களா என்று தெரியவில்லை, கடந்த ஒரு வாரமாக அலுவலகத்தில் புது,புது பிரச்சனைகள் (தினுசு தினுசாக கிளம்பியது) இத்தனைக்கும் 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனால் கடந்த வாரம் போல் என்றும் இருந்தது இல்லை. இருப்பினும் கோபத்தை களைந்து, மிகவும் பொறுமையாக இருந்து அதிலிருந்து இன்று மீண்டேன்.
கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு அமருகிறான் வெறும் நாலு வார்த்தை என்றாலும் அதன் பொருள் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இந்த பதிவு எனக்கே எழுதியது போல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி கிரி.
பகிர்வுக்கு நன்றி தல
என்னைக்கும் எனக்கு சூப்பர்ஸ்டார் நம்ம சொந்த காரன் மாதிரி ஒரு எண்ணம், எதனால ரஜினிய இவ்வளவு புடிக்கும் னு காரணம் சொல்ல தெரில
ரஜினி தோற்றா நான் தோற்ற மாதிரி ஒரு எண்ணம் வருது
ஜெயிச்ச நாம ஏதோ ஜெயிச்ச மாதிரி சந்தோசம்
இது தான் ரசிகனா சொல்ல தெரில
ஆனா ரஜினி நா ரொம்ப புடிக்கும்
அவர் படம் ரிலீஸ் ஆனா கண்டிப்பா ஜெயிக்கும் னு வேண்டிப்பேன்
அவர் எதுவும் பிரச்னை ல மாட்டினா ஐயோ னு மனசு பதறும்
அவர் அரசியல் கு வந்தா எனக்கு தான் டென்ஷன் அதனால வர வேண்டாம் னு எல்லாம் நினச்சு இருக்கேன்
உங்க பதிவு ஒரு ரசிகனோட மனச ப்ரீதிபலிக்குது தல
// எந்தப் பிரச்சனையென்றாலும், தலைவர் கையைப் பிடித்து இழுப்பது வழக்கமாகி விட்டது //
🙂 🙂
சமீபத்தில் 500 / 1000 ஐ வங்கியில் செலுத்த சலானை நிரப்பிக்கொண்டிருந்தேன். அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியிலும் ஒருத்தர் மோடியின் நடவடிக்கையை ஆதரித்ததாக ரஜினி விஜயை சத்தமாக திட்டிக்கொண்டிருந்தார்.
நானும் சத்தமாக சரி இனி டிவியில் ரஜினி விஜய் படம் போட்டாக்கூட பாக்க மாட்டேன்னு அப்படியே சத்தமா சொல்லுங்க, மொதல்ல உங்க கவுன்சிலர் செய்யிறத தப்ப தட்டி கேக்குற வழியைப் பாருங்க என்றி அவரிடம் கூறிவிட்டு என்னுடைய வரிசையில் போய் நின்றேன்.
@யாசின்
“கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு அமருகிறான் வெறும் நாலு வார்த்தை என்றாலும் அதன் பொருள் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று”
நம்மை சுற்றி ஏராளமான செயல்கள் சம்பவங்கள் நடைபெறுகிறது. இது அனைத்துமே நம் அனுபவம் தான். பலர் இதில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் சிலர் இதை சம்பவமாக கடந்து விடுகிறார்கள்.
@அருண் 🙂
@காத்தவராயன் ஆமா!.. இவனுக கேட்க வேண்டியவங்களை கேட்காம ரஜினியை அனைத்தும் செய்யணும் என்று எதிர்பார்ப்பார்கள்.
சிறப்பு