வசந்தபாலன் தன் திரையுலக அனுபவங்களை டூரிங் டாக்கீஸ் YouTube தளத்தில் சித்ரா லட்சுமணன் அவர்களுடனான பேட்டியில் பகிர்ந்து கொண்டார். சுவாரசியமாகவும், பலரை கவர்ந்த பேட்டியாகவும் அமைந்தது.
வார இதழ்களுக்குக் கவிதை, கதை என்று எழுதிக்கொண்டு இருந்த வசந்தபாலன் பின்னர் எப்படி இயக்குநர் ஷங்கர் உதவியாளர் ஆனார் என்பது தான் துவக்கம்.
இயக்குநர் வசந்தபாலன்
தன் துடிப்பான, ஆர்வமான செயல்களால் ஷங்கரை கவர்ந்து, ஷங்கரின் முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்தில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
இவருடைய படிக்கும், கதை ஆர்வங்கள் திரைத்துறையில் உதவியுள்ளது.
ஷங்கர் மீது வசந்தபாலன் வைத்து இருந்த மதிப்பு எவ்வளவு உண்மையானது என்பது இவர் பேசும் போதே நன்கு தெரிகிறது. இப்பேட்டி முழுக்கவே போலித்தனம் இல்லாமல் பேசியதே பலரை கவர்ந்து இருக்கக் காரணம்.
காதலன் படத்துக்கு, ‘கவர்னர் பொண்ணுக்கு பதிலாகப் பிரதமர் பொண்ணுன்னு போவோம்‘ என்று ஷங்கருக்கு ஆலோசனை கூறியது ரசிக்கும்படி இருந்தது 🙂 .
மிகப்பெரிய கமல் ரசிகரான வசந்தபாலன், ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு நடித்துக்காட்டி, கமலிடம் செம திட்டு வாங்கியது ரகளையான அனுபவம்.
அதை அவர் விவரித்த விதம் செம.
ஆல்பம்
‘ஜீன்ஸ்’ படத்தில் கிடைத்த வாய்ப்புகளால் தன் திறமையை ஷங்கருக்கு நிரூபித்துக்காட்டியுள்ளார். இதன் பிறகு தனியாகப் படத்தை இயக்கும் அளவுக்குத் திறமையுள்ளதாக ஷங்கர் கூறி படம் இயக்க முயற்சிக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பிறகு கவிதாலயா தயாரிப்பில் இயக்கிய படம் “ஆல்பம்” படு தோல்வி.
திரையரங்கில் இருந்த கொஞ்சம் பேரைப் பார்த்து நொந்து போய் உள்ளார், நண்பர்கள் பலரும் ‘நீ ஷங்கரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தியா? ஆபீஸ் பாய் வேலை பார்த்தியா?‘ என்று கேட்க வெறுத்துப்போகிறார்.
முதல் படத் தோல்வி அவரை மிகவும் பாதித்து, தன் குறைகளைக் கண்டறிந்து தன் வாழ்க்கை சம்பவங்களை வைத்தே கதையை எழுதிய படம் தான் வெயில்.
வெயில்
தோல்வியடைந்தவனின் கதை வெயில், இதை மற்றவர்கள் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று ஷங்கரிடமே தயாரிக்கக் கேட்க நினைக்கிறார்.
ஷங்கர் ஒப்புக்கொண்டால் திரையுலகில் தொடர்வது, அவர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், வேறு வேலை பார்க்கப்போவது என்று தீர்மானம் செய்து அப்பா உட்படப் பலரிடம் கூறி விட்டார்.
வெயில் படம் எடுக்கப்பட்ட அனுபவங்களை அவர் விவரிக்கும் போது, நாமே ஒரு வசந்தபாலன் ஆகி விடுவோம் 🙂 . அந்த அளவுக்கு அவரின் சிரமங்களைப் போராட்டங்களை, முடிவுகளை அட்டகாசமாக விவரித்துள்ளார்.
வெயிலின் வெற்றியும் அதற்குக் கிடைத்த விருதுகளும், தான் எந்த மாதிரியான இயக்குநர் என்பதை வசந்தபாலனுக்கு உணர்த்தி, இதன் பிறகு வந்த அங்காடித்தெரு அதை உறுதிப்படுத்தியது.
அரவான் & காவியத்தலைவன்
அரவானுக்குக் கடுமையான உழைப்பை கொடுத்தும் தோல்வி. காவியத்தலைவன் தோல்விக்கு மணிரத்னம் ‘இருவர்’ படத் தோல்விக்குக் கூறிய காரணத்தைக் குறிப்பிட்டது லாஜிக்காகவும், ஏற்றுக்கொள்ளும்படியும் இருந்தது.
காவியத்தலைவனில் சித்தார்த் பொருத்தமான கதாப்பாத்திர தேர்வு இல்லை காரணம், இக்கதைக்கு இன்னும் அனுபவமுள்ள, முதிர்ச்சியான நபராகத் தேவை.
பேட்டியைப் பார்ப்பவர்கள் நினைக்கும் கேள்விகளைக் கேட்ட சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி. மிகச்சிறப்பான பேட்டி.
தற்போது வசந்தபாலன் தன் முதல் படத்துக்கு இசையமைத்த GV பிரகாஷை நாயகனாக்கி ‘ஜெயில்’ படம் இயக்கியுள்ளார். ஜெயில் வெற்றி பெற வாழ்த்துகள் 🙂 .
Read : “டூரிங் டாக்கீஸ்” சித்ரா லட்சுமணன்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, வசந்த பாலனின் பேட்டியை நான் பார்த்தேன் .. ஒன்று ரெண்டு பகுதிகளை நேரமின்மையால் பார்க்கவில்லை .. நேரமின்மை என்ற காரணத்தை விட பணியில் கொஞ்சம் இறுக்கமான சூழல் . அதனால் பார்க்காமல் தவிர்த்தேன் .. எல்லா பகுதியும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் .. திரைத்துறையில் ஒரு இயக்குனராக சேரன் சார் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் உண்டு .. அந்த வரிசையில் அடுத்ததாக வசந்த பாலன் சேர்கிறார் ..
அரவான் வணிக ரீதியாக வெற்றி பெறாமல் இருக்கலாம் .. ஆனால் ஒரு தரமான படைப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது (திருமணமான புதிதில் மனைவியுடன் பார்த்த படம், பாதி படத்தில் மனைவிக்கு பிடிக்காமல் , வீட்டுக்கு போகலாம் என்று நச்சரிக்க , ஒன்றும் செய்ய முடியாமல் தவித்த தவிப்பு கண் முன்வந்து போகிறது , ஒரு வழியா படத்தை பார்த்து விட்டு தான் வீட்டுக்கு வந்தோம் , படம் பூஜை போட்ட நாளிலிருந்து எப்போ வரும் என்று காத்திருந்த எனக்கு சத்திய சோதனை.. பேசாம பேட்சுலரவே இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் கண் முன் ஒரு நொடி வந்து போனது ..)
இயக்குனர் சேரனின் டூரிங் டாக்கீஸ் புத்தகம் கிடைத்தால் படிக்கவும் .. பிரகாஷ் ராஜின் “சொல்லாததும் உண்மை ” இதையும் படிக்கவும் .. இரண்டுமே தரமான புத்தகம் .. பகிர்வுக்கு நன்றி ..
யாசின் முழு பேட்டியையும் பாருங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.
“பேசாம பேட்சுலரவே இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் கண் முன் ஒரு நொடி வந்து போனது”
🙂 🙂 யாசின் உங்க அனுபவமெல்லாம் செமையா இருக்கு. இசையைப் பற்றிச் சொன்னதும் செம.
இருவருக்கும் ரசனைகளில் வெவ்வேறு துருவங்கள் 🙂 . பெரும்பாலும் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கு.
“இயக்குனர் சேரனின் டூரிங் டாக்கீஸ் புத்தகம் கிடைத்தால் படிக்கவும் .. பிரகாஷ் ராஜின் “சொல்லாததும் உண்மை ” இதையும் படிக்கவும் ”
பரிந்துரைக்கு நன்றி. சொல்லாததும் உண்மை படித்து விட்டேன் என்று நினைக்கிறேன். டூரிங் டாக்கீஸ் இன்னும் படிக்கவில்லை. Kindle ல் தேடி பார்த்தேன் காணோம்.