ஒவ்வொருவருக்கும் Responsibility என்பது மிக முக்கியம். தைரியமானவர்களே Responsibility எடுத்துக்கொள்ள முயல்வார்கள், மற்றவர்கள் தயங்குவார்கள்.
Responsibility (பொறுப்பு) என்றால் என்ன?
வழங்கப்படும் பணியைத் தயங்காமல் எடுத்துக்கொள்வது, பணி கொடுக்கப்பட்டால் அதைப் பொறுப்புடன் முடிப்பது. Image Credit
ஒருவரிடம் ஒரு பணியைப் பெற்றால், நாம் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கையை அளிப்பது.
Responsibility ஏன் முக்கியம்?
பலரிடையே உள்ள பிரச்சனை, பொறுப்பை எடுத்துக்கொள்ளத் தயங்குவது. மற்றவர்கள் எடுத்துக்கொள்ளட்டுமே! நாம் ஏன் செய்ய வேண்டும்?! என்ற எண்ணம்.
ஒரு வேலையை அலுவலகத்தில் கூறினால், அடுத்தவர் செய்யட்டும் என்று அமைதியாக இருக்கக் கூடாது. நான் செய்கிறேன் என்று பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எப்போது பொறுப்பை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அப்போது தான் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற முடியும்.
பொறுப்பைத் தட்டிக்கழித்தால், போட்டியில் பின்தங்கி விடுவோம்
அனைவருக்கும் பொதுவான ஒரு அறிவிப்பு வந்து, விருப்பப்படுகிறவர்கள் இப்பணியை எடுத்துக்கலாம் என்றால், பெரும்பாலும் பலர் அதைப் புறக்கணிப்பவர்களாகவே இருப்பர்.
யாரோ எடுக்கட்டும் நமக்கேன் தேவையில்லாத வேலை? என்று பலர் அமைதியாக இருப்பார்கள்.
ஆனால், அதைச் சிலர் நான் செய்கிறேன் என்று தேர்வு செய்வார்கள். அவர்களைக் கவனித்தீர்கள் என்றால், மற்றவர்களை விடப் பல படி முன்னேறி இருப்பார்கள்.
அது பதவியாகவும் இருக்கலாம், ஊதியமாகவும் இருக்கலாம். நிறுவனத்தில் அவர்களுக்கான முக்கியத்துவம் மிக அதிகமாக இருக்கும்.
35 வயது வரை மிக முக்கியம்
படிப்பை முடித்து முதன் முதலாகப் பணியில் இணைபவர்கள் குறைந்தது 35 வயது வரை கூடுதல் வேலை செய்வதற்குத் தயங்கவே கூடாது.
இந்த வயது கற்றுக்கொள்ளும் காலம், எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காலம்.
இக்காலத்தில் தெரிந்து கொள்வது, பெறும் வளர்ச்சிகள் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும்.
இக்காலங்களில் தவறு செய்தால் 40 வயதுக்கு மேல் ஒரு சரியான இடத்தில் இருக்க முடியாமல், அலைபாய வேண்டியதாக இருக்கும். நமக்கான மதிப்பு இருக்காது.
எனவே, இக்காலங்களில் சோம்பேறித்தனமாக, சொகுசாக இருக்க நினைக்காமல் ஆர்வமாக அவ்வளவையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு அடிப்படையான விஷயம் Responsibility.
எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
எந்தப் புதிய பொறுப்புக் கொடுக்கப்பட்டாலும், ஆர்வமாகத் தைரியமாக எடுத்து அதை முடிக்க முயற்சிக்க வேண்டும்.
முக்கியமாக, எந்த வேலை நமக்குத் தெரியவில்லையோ அதைத்தான் முதல் ஆளாகத் தேர்வு செய்ய வேண்டும்.
தெரியவில்லை என்றால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. அவ்வாறு புறக்கணித்தால் நம்மால் என்றுமே புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாது.
35 வயது வரை உள்ள வயது மிக முக்கியமானது.
எனவே, இக்காலங்களில் அதிகளவில் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும், அதை விட முக்கியம் அதைக் கடுமையான உழைப்பில் முடிப்பது.
தெரியாத வேலையை வேறு யாரிடமாவது கேட்கலாம், இணையத்தில் தேடலாம், கூடுதல் நேரம் செலவழித்து அப்பணியை முடிக்கலாம்.
அவ்வாறு முடிக்கும் போது கிடைக்கும் திருப்தி அளவிட முடியாதது.
பயம்
சோம்பேறித்தனம், கூடுதல் Responsibility என்று புறக்கணிக்கக் காரணங்கள் இருந்தாலும், பலருக்கு புதிய பொறுப்புகளை எடுக்கக் காரணம் பயம்.
பொறுப்புகளை எடுக்கப் பயப்படாதீர்கள்.
கூடுதல் வேலையைக் கொடுக்கும் என்பது உண்மை என்றாலும், நம்மை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவுவது இந்தப் பொறுப்புகள் தான்.
பொறுப்பை எடுப்பவர்கள் மீது உயர் அதிகாரிகளுக்குக் கூடுதல் மதிப்பு இருக்கும். எனவே, வளர்ச்சியும் அதிக அளவில் இருக்கும்.
பொறுப்பை எடுப்பது துவக்கத்தில் பயமாக இருக்கலாம் ஆனால், நாளடைவில் சுவாரசியமாகி விடும். எந்தப்பணியையும் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை அளிக்கும்.
எனவே, வாழ்க்கையில் முன்னேற Responsibility எடுக்கத் தயங்காதீர்கள்.
யார் இப்பணியைச் செய்கிறீர்கள் என்று கேட்டால், “நான் செய்கிறேன்” என்று கையை உயர்த்த தவறாதீர்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஐடி துறை | 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!
ஆங்கில எழுத்து இலக்கணப் பிழை தவிர்க்க Grammarly
ஐடி சப்போர்ட் துறை எதிர்காலம் எப்படியுள்ளது?
அலுவலகத்தில் எப்படி நடந்து கொண்டால் முன்னேறலாம்?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, கட்டுரையை எனக்காகவே எழுதியது போல் தோன்றுகிறது.. கட்டுரையை படித்த பின் நான், என்னுடைய ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தேன்.. முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்வு ரிசல்ட் வரும் முன்பே கொரியர் நிறுவனத்தில் சென்னையில் வேலை கிடைத்து விட்டது.. ஏனோ காரணத்தால் 3 மாதம் இப்போ / அப்போனு சொல்லி கடைசியில் வேலை கைநழுவி போய்விட்டது.
அதற்கு பின்பு தீவிர வேலை தேடும் முயற்சியில் இறங்கி பல தோல்விகளுக்கு பின் கோவையில் வேலை கிடைத்தது.. கோவையில் வேலைக்கான ஆர்டர் கிடைத்த அதே தினம் சொந்த ஊரில் வங்கியில் வேலை கிடைத்தது) வங்கி வேலையை விட்டுவிட்டு கோவையின் மீது காதல் கொண்டு பயணத்தை மேற்கொண்டேன்.. இந்த பயணம் தான் காலத்திற்கும் இனிமையான ஒரு நண்பனை (சக்தி) அறிமுகம் செய்து வைத்தது..
ஒரு வருடம் & 8 மாதம் வேலை பார்த்தேன்.. வேலையை அவ்வளவு நேசித்தேன்.. அந்த சமயத்தில் நிறுவனத்தில் நான் ஒரு கடைநிலை ஊழியன் … ஆனால் கம்பெனியில் மேலாளருக்கு தெரியாத விஷியங்கள் எல்லாம் எனக்கு தெரியும்.. வேலை அலுவலகத்தில் தான், ஆனால் எப்போதும் PRODUCTION PLANT இல் தான் இருப்பேன்..10,11 மணி நேரம் நிறுவனத்தில் இருப்பேன்..
சக்தி QC இல் இருந்ததால் அவருக்கும் குடைச்சல் (அது என்ன, இது என்ன) என்று கேட்டு எல்லாவற்றையும் கற்று கொண்டேன்.. தற்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும்.. அங்கு வேலை பார்த்த ஒவ்வொரு நாட்களும் வசந்த நாட்கள்..என்னுடைய உயரதிகாரி (சொக்க தங்கம்) மாற்றப்பட்டு, புதிய அதிகாரி (தகரம்) வந்த போது இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்.. சிறிது நாட்களிலே வேலையை விட முடிவு செய்து, வேறு வேலை கிடைத்தவுடன் வேலையை விட்டு விட்டேன்..
பின்பு திருப்பூரில் வேலை கிடைத்து, பயிற்சிக்காக ஒரு மாதம் சத்தியமங்கலதிற்கு சென்றேன்.. அதை முடித்த பின், திண்டுக்கல் கிளைக்கு செல்ல சொன்னார்கள்.. அந்த நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன்.. (உலகத்தில் இருக்கிற மொத்த பஞ்சாயத்துக்கள் எல்லாமே இங்கு தான் இருக்கும்) அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அரை / குறை.. நிறுவன சூழல் மிகவும் வித்தியாசமானது..பெண்களுக்கு அதிகாரம் கூடுதலாக இருந்தது..
அட்மின் (TIME OFFICE) துறையில் வேலை பார்த்த இரண்டு பெண்கள் மட்டுமே லட்ச ரூபாய்க்கு மேல் சுருட்டியிருந்தார்கள் என்றால் நிலைமையை பார்த்து கொள்ளுங்கள்.. ஏதேனும் கடினமான பணி வந்தால் எல்லோரும் நழுவி விடுவார்கள்.. நான் மட்டும் ஒத்தையாளாக எடுத்து செய்வேன்.. அதில் ஒரு சவாலும் மன திருப்தியும் இருக்கும்.. 5 வருடங்களுக்கு மேல் முடிக்காமல் இருந்த பல பஞ்சாயத்துக்களை சம்பத்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தேவையான ரிப்போர்ட் எல்லாம் தயார் செய்து 80% பிரச்சனையை முடித்து விட்டு வெளியேறினேன்..
போக வேண்டாம் என்று பொது மேலாளர் எவ்வளவோ சொல்லியும்,வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்தேன்..வெளிநாட்டில் இந்தனை ஆண்டுகளில் கிடைக்காத மன திருப்தி ஒரே ஆண்டில் எனக்கு திண்டுக்கல்லில் கிடைத்தது..
நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் வெவ்வேறு நாட்டினர் இருந்தாலும், சேட்டாக்களின் குடைச்சல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.. (யார் இப்பணியைச் செய்கிறீர்கள் என்று கேட்டால், “நான் செய்கிறேன்” என்று கையை உயர்த்த தவறாதீர்கள்.) இந்த மாதிரி கையை உயர்த்தி, உயர்த்தி தான் கிரி கை இப்போது முற்றிலும் வலுவிழந்து விட்டது.. (மனைவி கூட சமயத்தில் என்ன?? பொழைக்க தெரியாதவர் போல இருக்குக்கீங்க!!! னு வருத்தப்படுவார்..) இந்த பழக்கம் எல்லாம் கூடவே பொறந்தது, அதனால் எப்பவும் மாறாது என்பது போல மெல்லிய புன்னகையுடன் கடந்து விடுவேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
” 5 வருடங்களுக்கு மேல் முடிக்காமல் இருந்த பல பஞ்சாயத்துக்களை சம்பத்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தேவையான ரிப்போர்ட் எல்லாம் தயார் செய்து 80% பிரச்சனையை முடித்து விட்டு வெளியேறினேன்..”
நீங்கள் இதற்காக கூடுதல் வேலை செய்து இருக்கலாம் ஆனால், கற்றுக்கொண்டது அதிகமாக இருக்கும்.
நிச்சயம் அடுத்த பணிகளில் உங்களுக்கு உதவியாக இருந்து இருக்கும்.
“நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் வெவ்வேறு நாட்டினர் இருந்தாலும், சேட்டாக்களின் குடைச்சல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.”
இவர்கள் மாநில ஆட்களை உடன் இணைத்துக் கொள்வார்கள் என்பது நான் அறிந்தது. அதைத் தவிர வேறு என்ன செய்கிறார்கள்?
மலையாளிகளிடம், தெலுங்கர்களிடம் உள்ள ஒற்றுமை, அவர்கள் மாநில மக்களுக்கு உதவும் குணம்.
தமிழர்களிடம் இது கிடையாது. மற்றவர்களை தூக்கி விட மாட்டார்கள். உதவ மாட்டார்கள். அனைவருக்கும் பொருந்தாது என்றாலும் பெரும்பான்மை இது தான்.
இதை வெளிநாடுகளில் அதிகம் காணலாம்.
“இந்த மாதிரி கையை உயர்த்தி, உயர்த்தி தான் கிரி கை இப்போது முற்றிலும் வலுவிழந்து விட்டது.. (மனைவி கூட சமயத்தில் என்ன?? பொழைக்க தெரியாதவர் போல இருக்குக்கீங்க!!! னு வருத்தப்படுவார்..)”
இதற்குத்தான் https://www.giriblog.com/importance-of-promoting-our-job/ பதில் அளித்து இருப்பேன்.
வேலை செய்தால் மட்டும் போதாது அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்வதும் ஒரு கலையே. இல்லையென்றால் வேலை மட்டும் செய்துகொண்டு இருப்போம், பலன் கிடைக்காது.
எனவே, உங்கள் மனைவி என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை ஆனால், இதனால் நீங்கள் முன்னேற்றம் அடைந்து இருக்க வேண்டும்.
இல்லையென்றால், நம் பக்கம் எதோ தவறு உள்ளது என்று அர்த்தம்.
“இந்த பழக்கம் எல்லாம் கூடவே பொறந்தது, அதனால் எப்பவும் மாறாது என்பது போல மெல்லிய புன்னகையுடன் கடந்து விடுவேன்”
உண்மை. இதெல்லாம் நாமே நினைத்தாலும் மாற்ற முடியாதது.
இது தொடர்பான இன்னொரு எடுத்துக்காட்டு கூற வேண்டும் என்றால், வாழ்க்கையில் கஷ்டப்பட்டதால் தேவையற்ற செலவு செய்ய மாட்டேன்.
எனவே, பணம் இருந்தாலும் அவசியமற்று ஒன்றை செய்ய மனசு வராது.
இதெல்லாம் முன்பு இருந்தே பழகி விட்டது. பழகியதை மாற்ற மனசு வராது அதுவும் அதனால் நல்லது தான் எனும் போது மாற்ற தேவையில்லையே.
கிரி, என்னை பொறுத்தவரை என் மன திருப்திகாகத்தான் வேலை பார்க்கிறேன்.. (பதவி உயர்வு, சம்பளம் இதை பற்றி கவலையில்லை..) ஏனென்றால் என் வாழ்நாளில் நான் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அதை கடந்து அடுத்த நிலையை எட்டி விட்டேன்..
தமிழ் மக்கள் : நம்மவரை பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.. பல தருணங்களில் நான் அனுபவப்பூர்வமாக இது போன்ற நிகழ்வுகளை சந்தித்து இருக்கிறேன்.. இதில் கொடுமையான தருணம் (நான் தமிழ் என்று தெரிந்தும் என்னிடம் அரைகுறை ஹிந்தியில் பேசிய ஒரு தமிழ் சகோதரரை (அவரும் தமிழ் என்று தெரியும்) என் வாழ்நாளிலும் மறக்க முடியாது..
“என்னை பொறுத்தவரை என் மன திருப்திகாகத்தான் வேலை பார்க்கிறேன்.. (பதவி உயர்வு, சம்பளம் இதை பற்றி கவலையில்லை..)”
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க? 🙂
ஒருவேளை கடந்த காலத்தில் கடந்த வந்த பாதைகள் உங்களுக்குப் போதும் என்ற மனநிலையை கொடுத்து விட்டதோ!
மனதளவில் களைப்படைந்து விட்டீர்களா?