ஐடி துறை | 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

8
ஐடி துறை

க்கட்டுரையை ஐடி துறை ஊழியர்களை மனதில் வைத்து எழுதியுள்ளேன் குறிப்பாக 35 – 40 வயதில் உள்ளவர்களுக்கு.

இதற்கு முந்தைய வயதினர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம் பிந்தைய வயதினர் தற்போது நாம் எங்கே இருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ளலாம்.

ஐடி துறை : 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

ஐடி துறையின் பொற்காலம் என்றால் 1997 – 2005 வரை மட்டுமே! (இதிலும் 2001 ல் ஆட்குறைப்பு நடந்தது) இந்தக் காலங்களில் சம்பாதித்தவர்கள் தான் அதிகளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்கள்.

இதன் பிறகு நிலை முற்றிலும் மாறி விட்டது குறிப்பாக 2009 ல் வந்த ஆட்குறைப்புக்குப் பிறகு. Image Credit

ஐடி துறை என்றாலே பணம் கொழிக்கும் இடம், அதிகச் சம்பளம், வெளிநாட்டுப்பயணம் என்ற பொதுவான கருத்துள்ளது.

இதில் உண்மையும் உள்ளது அதோடு சில விசயங்களையும் புதியவர்கள் / அறியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தேனிலவு காலம்

தற்போது ஐடி துறையின் தேனிலவு காலம் என்றால் வேலைக்குச் சேர்ந்த முதல் நான்கு / ஐந்து வருடங்கள் மட்டுமே அல்லது அதிகப் பட்சம் 26 – 27 வயது.

இந்த வயது வரை பெரியளவில் பொறுப்புகள் இருக்காது. எனவே, வாழ்க்கை எந்தப் பயமும் நெருக்கடியும் இல்லாமல் சென்று கொண்டு இருக்கும்.

திருமணம் நடக்கும் போது வயது 28 / 29 / 30 என்று நகரும் போது தான் வாழ்க்கையில் மட்டுமல்ல அலுவலகத்திலும் நெருக்கடிகள் அதிகரிக்கும்.

அப்படியும் தக்கி முக்கி 35 வயது வரை ஓட்டிக்கொண்டு வந்த பிறகு நமக்குத் திடீர் என்று ஞானோதயம் வரும்.

நாம் எங்கே இருக்கோம்? நிலை என்ன? எதிர்காலம் என்ன? அடுத்தது என்னவாக இருக்கப் போகிறோம்? என்ற கேள்விகள் துளைக்கும்.

பயம் எட்டிப்பார்க்கும், மனக் குழப்பங்கள் அதிகரிக்கும்.

35 – 40 வயது மிக முக்கியமான காலம் 

ஐடி துறை மட்டுமல்ல எந்தத் துறைக்கும் 35 – 40 வயது என்பது  முக்கியமான வயது.

இந்த வயதில் நம் நிலையை / எதிர்காலத்தைத் தீர்மானிக்கவில்லை என்றால் வருங்காலம் சிரமமாக இருக்கும்.

எந்த ஒரு நபரும் வாழ்க்கையில் மேலே செல்லத் தான் நினைப்பார்களே தவிரக் கீழே செல்ல அல்ல ஆனால், நடைமுறை எதார்த்தம் நினைத்த படி இருக்க விடுவதில்லை.

ஜூனியராக இருக்கும் நபர் பின்னர் சீனியர், Team Lead அதன் பின்னர் ப்ராஜக்ட் மேனேஜர், மேனேஜர் என்று போக வேண்டும் ஆனால், நிலைமை வேறு.

ஒரு குழுவில் ஜூனியராக வேலை பார்ப்பவர்கள் 50 பேர் இருந்தால் Team Lead ஆக ஒருத்தர் தான் இருப்பார்.

இந்த 50 பேரும் அடுத்த நிலைக்கு வரும் போது அத்தனை பேரும் Team Lead ஆகும் வாய்ப்புக் குறைவு.

திறமை இருப்பவர் ஆகலாம் மற்றவர்கள் தனக்கு இணையாகப் பணி புரிந்த நபரின் கீழ் பணி புரிய வேண்டிய நிலை வரும்.

தன்னை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள் நிலை இன்னும் பரிதாபம். 30 வயது நபர் மேனேஜர்!! ஆக இருப்பார் அவரிடம் 40 வயது நபர் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

இது தான் எதார்த்தம்.

துவக்கத்தில் இவற்றை முக்கியமாகக் கருதவில்லையென்றாலும், ஏதாவது ஒரு தருணத்தில் இளையவர் அலுவலகப் பிரச்சனையில் கடிந்து கொள்ளும் போது “இவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டி இருக்குதே!” என்ற கழிவிரக்கம் ஏற்படும்.

40 தாண்டும் போது ஏற்படும் நெருக்கடி

35 – 40 வயதில் சரியான நிலையை அடையாதவர்கள் 40 தாண்டும் போது கடும் நெருக்கடியை எதிர்கொள்வார்கள்.

இவர்களுக்குச் சம்பளமும் அதிகம் இருக்கும் ஆனால், சம்பளத்துக்கான நிறுவனத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பார்கள்.

2005 க்கு முன்பு ஐடி துறையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலை தற்போது 40+ க்கே வந்து விட்டது.

எதிர்காலத்தில் 35+ க்கே வரலாம்..

“கூம்பு” அடிப்படை

ஐடி துறை என்று இல்லாமல் அனைத்து துறையிலும் வேலை வாய்ப்பு என்பது “கூம்பு” அடிப்படையில் தான் இருக்கும்.

துவக்கத்தில் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால், வயது ஏற ஏற வாய்ப்புகள் குறையத் துவங்கும் காரணம், பதவிகளுக்கான எண்ணிக்கை குறைவதால்.

முன்னரே கூறியபடி ஒரு குழுவில் 50 பேர் இருந்தால் மேனேஜர் ஒருவர் தான்.

இந்த 50 பேருக்கும் தற்போது பிரச்சனை இருக்காது ஆனால், அவர்கள் 35 – 40 வயது வரும் போது இதே போல நிலை இருக்காது, வாய்ப்புகள் மிகக் குறைந்து விடும்.

ஒரு குழுவில் 50 ஜூனியர் இருக்கலாம். 50 Team Lead / ப்ராஜெக்ட் மேனேஜர் / மேனேஜர் இருக்க முடியுமா? முடியாது.

இது தான் வயது ஆக ஆக ஏற்படும் பிரச்சனை. இங்கே தான் நம் நிலை என்னவென்று புரியாத குழப்பம் ஏற்படும்.

இளையவர்களுடன் (அதே பணியை) பணி புரிய நேர்ந்தால் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

வெளிநாடுகளில் இது சகஜம் என்றாலும் இந்தியா போன்ற நாடுகளில் இது ஈகோ பிரச்சனை.

அதிக அனுபவம் / சம்பளம் / வயது

வேலை மாற்றல் முயற்சித்தால் வயது ரொம்ப அதிகம் என்று புறக்கணிக்கப்படுவார்கள், சம்பளமும் ஒரு காரணம்.

இவருக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கு 3 பேரை வேலைக்கு எடுத்தால், இளைஞர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள் என்று நிறுவனம் நினைக்கும்.

அனுபவம் அதிகம் என்பதால் “Over Qualified” என்று ஒதுக்கப்படுவார்கள்.

துவக்கத்தில் (24 / 26 வயது) கூடுதல் போலி அனுபவம் போட்டுப் பணிக்குச் சேருபவர்கள், பின்னாளில் (38 – 45 வயது) அனுபவ வயதை குறைப்பது எப்படி என்று மண்டை காய்வார்கள்.

பணியில் இணைந்த முதல் ஐந்து வருடங்களில் நிறுவனம் மாறிக்கொண்டே இருக்கலாம் காரணம் வாய்ப்புகள் ஏராளம் இருக்கும்.

ஆனால், வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்து, இருக்கும் வேலையே சிக்கலில் இருக்கும்.

ப்ராஜக்ட் இல்லையென்றால் எக்கணமும் தூக்கப்படலாம் என்ற நிலை வரும். 43 / 45 வயதுக்கு மேல் வேலை தேடுவதெல்லாம் அனைவருக்கும் எளிதான காரியமல்ல.

70 / 80 ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் டிப்ளோமோ தான் படித்து இருப்பார்கள். சிலர் அஞ்சல் வழிக் கல்வி.

எனவே, இவையெல்லாம் நந்தி மாதிரி முன்னாடி நின்று நம்மை நிறுவனத்தின் வடிகட்டலில் பயமுறுத்தும்.

மேம்படுத்திக்கொள்ளவில்லை என்றால் சிக்கலே!

35 – 40 ல் சரியான பொசிசனுக்கு வரவில்லை, மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், நினைப்பது போல எதிர்காலம் இனிதாக இருக்காது.

நிறுவனம் என்றைக்கு வேண்டும் என்றாலும் “இன்றே உங்களுக்கு இறுதி நாள்” என்று சொல்லத் தயங்காது.

ஏனென்றால், உங்கள் வேலையை வேறொரு வயது குறைந்தவர் செய்ய முடியும்.

அப்படி இருக்கும் போது நிறுவனம் எதற்கு உங்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்?!

உங்களின் தேவை இருக்கும் வரையே நிறுவனம் உங்களை எதிர்பார்த்து இருக்கும். தேவை அவசியமில்லை என்றால் எப்போது வேண்டும் என்றாலும் துரத்தத் தயங்காது.

எனவே, நம் தேவையின் அவசியத்தை நிறுவனம் உணரும் படி நம் நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் நேர்மையாக உழைத்து இருந்தாலும் அவை பயன் தரா.

எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அடுத்தது என்னவாகப் போகிறோம்? என்ற கேள்விகளைப் புறந்தள்ளி வந்தால், எதிர்காலம் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது.

பணியைக் காதலியுங்கள் நிறுவனத்தை அல்ல

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் கூறியது போல “உங்கள் பணியைக் காதலியுங்கள் உங்கள் நிறுவனத்தை அல்ல“.

ஏனென்றால், நீங்கள் காதலித்த நிறுவனம் கொஞ்சமும் கருணை இல்லாமல் ஆட்குறைப்பில் நீக்கலாம். அவர்களைக் கூறித் தவறில்லை காரணம் இது “தொழில்”.

நீங்களே ஒரு நிறுவனத்தின் முதலாளியாக இருந்தால், இதைத் தான் செய்வீர்கள். எனவே. உணர்ச்சிவசப்படுவதில் அர்த்தமில்லை.

நடைமுறை எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நகர்ந்து விட வேண்டியது தான். அப்படி நகர வேண்டும் என்றால், உங்களை மேம்படுத்தியிருக்க வேண்டும்.

ஆடம்பரச் செலவுகள்

அனாவசிய செலவுகளைத் தவிர்த்து எதிர்காலப் பாதுகாப்புக்கு சேமித்து வையுங்கள்.

நாளையே நம்மை வேலையை விட்டுத் தூக்குகிறார்கள் என்றால் அடுத்த வேலை கிடைக்கும் வரையாவது சமாளிக்கத் திறன் வேண்டும்.

ஆடம்பர செலவுகளைச் செய்து ஏகப்பட்ட EMI யைச்சேர்த்துக்கொண்டே சென்றால், வேலை இல்லையென்றால் மோசமான நாட்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.

வேலை இல்லை, சம்பளம் இல்லை எனும் போது EMI மாதம் 30,000 / 40,000 கட்ட வேண்டி வந்தால், என்ன செய்வீர்கள்?

இதோடு மற்ற குடும்பச் செலவுகள் / பள்ளிக் கட்டணங்கள் என்று ஏராளம் இருக்கும்.

பணிச்சூழல் வெளிநாடு இந்தியா இரண்டிலும் வேறு

சிங்கப்பூரில் பணி புரிந்து கொண்டு சென்னைக்கு மாற்றல் கேட்டு வந்தேன்.

அப்போது எழுதிய கட்டுரையில் இதற்கான ஒரு காரணத்தைப் பின்னர் கூறுகிறேன் என்று கூறி இருந்தேன், அந்தக் காரணம் இது தான்.

ReadBye Bye சிங்கப்பூர்

அதாவது வெளிநாட்டில் எப்படி வேண்டும் என்றாலும் பணி புரியலாம். அங்குள்ள பணி சூழ்நிலையே முற்றிலும் வேறு ஆனால், இந்தியாவில் அப்படியல்ல.

நான் இந்தியாக்கு வருவது என்பது 100% முடிவு செய்யப்பட்ட ஒன்று. எனவே, காலம் தாழ்த்தி வந்தால் இங்கே என் நிலை என்ன என்பதே புரியாது.

ஏனென்றால், சிங்கப்பூரில் எனக்கு இருந்த பணி சூழ்நிலை வேறு அதே நான் இந்தியா வந்தால் இருக்கும் சூழ்நிலை வேறு.

இதை ஐடி துறையில் உள்ள சப்போர்ட் பிரிவை மனதில் வைத்துக் கூறியிருக்கிறேன். பிரிவுக்குப் பிரிவு மாறுபடலாம்.

தற்போதும் என் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளது.

இக்கட்டுரையின் சுருக்கம்

இக்கட்டுரையின் சுருக்கம் என்னவென்றால், ஐடி துறையில் தேனிலவு காலம் நான்கு / ஐந்து வருடங்கள் மட்டுமே!

இதன் பிறகு குதிரைப் பந்தயம் போல வாழ்க்கை மாறி விடும்.

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். திறமையான / வலுவான குதிரை தொடர்ந்து போட்டியில் இருக்கும், வயதான / வலு குறைந்த குதிரை புறக்கணிக்கப்படும்.

35 – 40 வயதுக்குள் நாம் என்னவாகப்போகிறோம் என்பதைத் தீர்மானித்து அதற்கான வழியில் பயணப்பட வேண்டும்.

IT கட்டமைப்பு (Infrastructure) நிலைத் தன்மை (Stable) ஆகிக் கொண்டே வருவதால், பணி புரிபவர்களின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைக்கிறது.

Cloud தொழில்நுட்பம் காரணமாக, எதிர்காலத்தில் Data Center எண்ணிக்கையின் அளவு குறைந்து கொண்டே வரும்.

நான் இருக்கும் சப்போர்ட் பிரிவில் முன்பெல்லாம் Hardware பிரச்சனைகள் சர்வசாதாரணம் ஆனால், தற்போது பிரச்சனைகள் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதனால் ஒருவர் வேலையை விட்டுச் சென்றாலும் மற்றவர்களை வைத்துச் சமாளிக்க முடியும் என்ற நிலை அதோடு நிறுவனமும் வேறு நபரை எடுக்க முயல்வதில்லை.

எச்சரிக்கையாக வேண்டிய தருணம்

எனவே, உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால், போட்டி மிகுந்த உலகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம்.

35 – 40 வயதுக்குள் இருக்கிறீர்கள் என்றால், எச்சரிக்கையாக வேண்டிய தருணம்.

தொடர்புடைய கட்டுரை

ஐடி சப்போர்ட் துறை எதிர்காலம் எப்படியுள்ளது?

8 COMMENTS

 1. கிரி,

  நறுக்குத்தெரித்தார் போல என்பார்களே அப்படி ஒரு இடுகை.
  ஒத்த எண்ண அலை ஓட்டம் – என் அளவில் இப்படியோர் எண்ணம் ஒரு 3-4 ஆண்டுகள் முன்னர் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்பட்டது – கண் முன் கண்டவற்றால்.

  https://www.linkedin.com/pulse/longer-lines-than-apple-launch-yet-store-makes-only-6-sriraman-k

 2. அருமையான பதிவு. நான் அனுபவத்தில் கண்கூடாக கண்டது. பொதுவாக எம் என் சி , நிரந்தரமான வேலை , அது இது என்று கற்பிதம் செய்து கொள்ளாமல் , என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று கிடைத்த வேலையை செவ்வன செய்தால் போதும். நாமெல்லாம் சினிமா துறை யில் இருப்பவரைப் போன்றே , ஆடும் வரை ஆட்டம் , பின் மார்கெட் போன பின் , கருத்தாக இருந்து கொண்டாலே போதும். மாற்றம் ஒன்றே மாறாதது . தலைவர் கண்ணதாசன் போல , ‘எங்கே வாழ்கை தொடங்கும் , அது எங்கே எவ்விதம் முடியும் என்று யாருக்கும் தெரியாது…பாதையெல்லாம் மாறி வரும் , பயணம் முடிந்து விடும் , “மாறுவதைப்” புரிந்து கொண்டால் “மயக்கம்” தெளிந்து விடும்.

 3. IT துறை பற்றிய விவரங்கள் அவ்வளவாக எனக்கு தெரியாது. ஏனெனில் நான் அத்துறையில் இல்லை. இருந்தாலும் அட்குறைப்பு பற்றி செய்திகள் வழியாக அறிந்துள்ளேன். இது போன்ற நிலை மற்ற துறைகளிலும் உள்ளது. என் உறவினர் ஒருவருக்கு IT அல்லாத துறையில் வந்தது. ஆனால் அவரின் வேலை மேல் உள்ள நேசமே அவரை காப்பாற்றியது. ஆகையால் எத்துறையில் இருந்தாலும் இன்றைய நிலையில் நீங்கள் கூறுவது போல் ஆடம்பர செலவுகளே நம் முதல் எதிரி. மொத்தத்தில் அருமையான கட்டுரை.

 4. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @iK way பலருக்கும் இந்த எண்ணம் மனதில் வந்து சென்று இருக்கும் 🙂

  @ilayadhasan தனியார் என்று வந்தாலே நிரந்த வேலை என்பதை மறந்து விட வேண்டியது தான்.

  @பிரகாஷ் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பதற்கான காரணம் நம்முடைய தேவைகளை கூட்டிக்கொண்டே செல்வது தான்.

 5. இந்த கட்டுரையில் என் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போல் ஒரு உணர்வு உள்ளது கிரி. 2005 ஆண்டுகளின் தொடக்கத்தில் மாதம் 2500 ரூபாய் சம்பளம் வாங்கி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வாக வாழ்ந்த தருணம் அது. அந்த சம்பளத்தை காட்டிலும் பல மடங்கு இன்று அதிகம் வாங்கினாலும் ” மன நிறைவு” சத்தியமாக ஏற்படவில்லை. பல தருணங்களில் மிகவும் வருத்தமாக இருக்கும் கிரி.

  (எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பதற்கான காரணம் நம்முடைய தேவைகளை கூட்டிக்கொண்டே செல்வது தான்.) சத்தியமாக வார்த்தைகள் கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here