பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது அதிலிருந்து 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன். அதிலிருந்து 5 வது கட்டுரை. Image Credit
வாழ்க்கையில் அமைதி ஏன் முக்கியம்?
ஒவ்வொருவர் வாழ்க்கையும் பல போராட்டங்கள், துன்பங்கள், மகிழ்ச்சிகள், வெறுப்புகள் என்று கலந்தது. இதில் சில தவிர்க்க முடியாதவை, சில நாமாக வலிய சென்று வாங்கிக்கொள்பவை.
எவரொருவர் வாழ்க்கையில் அமைதி உள்ளதோ அங்கே நிம்மதி இருக்கும். அந்த இடத்தில் வன்மம், கோபம், சண்டை, பொறாமை, போட்டி இருக்காது.
நமக்கு அமைதியை பெறுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால், அதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒரு சேவையைப் பெறுவதால், ஒரு பொருளை வாங்குவதால் நமக்கு அமைதி இருக்காது என்றால், அதை வாங்கக் கூடாது, பெறக் கூடாது.
திட்டமிடல்
விலை உயர்வான பொருளைக் கடன் பெற்று வாங்குகிறோம் என்றால், அப்பொருளால் துவக்கத்தில் மகிழ்ச்சி இருக்கும் ஆனால், கடனைக் கட்ட வேண்டுமே என்ற துன்பம் நிம்மதியை குலைத்து விடும்.
சொந்த வீடு என்பது விருப்பமாக இருக்கும் ஆனால், அதற்கான முன்னேற்பாடுகளை, எதிர்காலத் திட்டமிடுதல்களைச் செய்யாமல் பெற்றால், வீட்டைப் பெற்றோம் என்ற மகிழ்ச்சி இருக்கும் ஆனால், கடன் அமைதியை குலைத்து விடும்.
வாழ்க்கை துணையைத் தேடுபவர் அழகாக இருக்கிறாரா என்பதை விட அமைதியாக இருக்கிறாரா, புரிந்து நடந்து கொள்வாரா என்பதே முக்கியம்.
அழகாக உள்ளார் என்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து, ஒருவேளை அவர் குணத்தில் எதிர்மாறாக இருந்தால், வாழ்க்கையே நிம்மதியற்று போய் விடும்.
அழகு அதிகபட்சம் 10 வருடங்களுக்கு இருக்கும் ஆனால் அமைதி, வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியது.
அமைதி கிடைக்குமா?
ஒரு பொருளை வாங்குவது, ஒரு நபரை நட்பாக்குவது, ஒரு சேவையைத் தொடர்வது உங்கள் அமைதியை அபகரிக்குமா? என்பதை யோசியுங்கள்.
அபகரிக்கும் என்றால், அதிலிருந்து விலகி இருங்கள்.
அதே அமைதியை கொடுக்கும் என்றால் அப்பொருளை, சேவையை, நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எளிமையாகப் புரிந்து கொள்ள, ஒரு WhatsApp குழுவில் உள்ளீர்கள், அதில் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளை அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத தகவல்களைப் பகிர்கிறார்கள் என்றால், அக்குழுவிலிருந்து விலகி இருப்பதே நல்லது.
இதுவே உங்களுக்கு அமைதியைக் கொடுக்கும். மனதை தெளிவாக வைத்துக்கொள்ள உதவும். இதுவே நமது நோக்கமாகவும் இருக்க வேண்டும்.
மனம் அமைதியை பெற விரும்பினால் அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது.
இதற்கெல்லாம் அடிப்படை நேர்மறை எண்ணங்கள். நேர்மறை எண்ணங்களைக் கொண்டு இருந்தால், அமைதி, அன்பு அனைத்துமே நம்மைத் தேடி வரும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.